• வளைந்து 
    நெளிந்து
    ஏறும்
    படிகள்.

    சுற்றியிருக்கும் கட்டிடங்களின்
    நிழல்களை
    இழுத்து
    தின்று கொண்டிருக்கிறது
    இருள்.

    யாருமற்ற
    அடுக்கு மாடி கட்டிடத்தில்
    மனிதர்களின்
    கடும் வாடை.

    பழுப்பேறிய கதவுகளுக்குப்
    பின்னால்
    ஒளிந்திருக்கின்றன
    வீடுகள்
    ஒவ்வொரு தளத்திலும்.

    மங்குகிறது
    பார்வை.
    பலவீனமாகிறது
    இருதயம்.
    பிசையும் வலி
    எலும்பு இணைப்புகளிலெல்லாம்.

    எங்கோ ...
    காதலர்களின் சண்டை.
    பூனையின் முணுமுணுப்பு.
    சிணுங்கும் விளக்கின் ஓசை.
    ... பிரமையா?

    எதோ ஒரு தளத்தில்
    எதோ ஒரு கதவிற்குப் பின்னால்
    கேட்டேன்
    விசும்பல்
    சத்தம்.

    புகை விலகிய பார்வையோடு
    குதித்து ஆடும் இருதயத்தோடு
    மூச்சை இழுத்துப் பிடித்துத்
    தட்டுகிறேன்,
    தட்டி கொண்டே
    இருக்கிறேன்.

    நான் எழுப்பும்
    ஒவ்வொரு சத்தத்திற்கு
    இடையிலும்
    வலிமையுடன்
    உறுமுகிறது
    மௌனம்.

  • புரியவில்லை!

    ... நான் எங்கே இருக்கிறேன்?
    ... பக்கத்தில் படுத்திருப்பவள் யார்?
    … ஏன் குளிர்கிறது?
    ... என்ன துர்நாற்றம்?
    ... ஏன் இத்தனை அமைதி?
    ... என் துணிகள் எங்கே?
    ... விளக்கின் சுவிட்ச் எங்கே?

    இருட்டில் …
    … துணிகளைத் தேடும் போது
    வருகிறது
    --→ மண்டைக்குள் அந்தப் புழு.

    இருளும் பார்வை
    காதிற்குள் இரைச்சல்
    திணறும் மூச்சு
    முளைக்கும் விஷ முட்கள்
    எலும்பிற்குள் குத்தும் குண்டூசிகள்
    வழியும் இரத்தம்

    துணிகளைக் கண்டெடுக்கும் போது
    உணர்கிறேன்
    --→ முதுகுத் தண்டிற்குள் அந்த மற்றொரு புழு.

    ஜன்னலைத் திறக்கிறேன்
    ... எந்தத் தளம் இது? பத்து? பதினைந்து?

    ... புழுக்கள் நெளியும் வரை காத்திருக்கிறேன் ...

    --→ குதிக்கிறேன்!

  • ஒவ்வொரு முறையும்
    ஒரே மாதிரி தான்
    நிகழ்கிறது.

    அவனிடமிருந்து விலகி
    நான் தேடும் துண்டு
    எப்போதும்
    அருகில் இருப்பதில்லை.

    காமம் வழிந்தோடிய பிறகான
    நிர்வாணம்
    ஒவ்வொரு முறையும்
    அசௌகரியமே.

    குளியலறைக்கு ஓடும்
    எல்லாச் சமயங்களிலும்
    என்னை விடாமல்
    துரத்தும்
    அவனது பார்வை.

    தரையில் இருந்து துணிகளை
    இன்னும் எவ்வளவு என
    ஆயாசமில்லாமல்
    அணிந்ததில்லை
    நாங்கள்.

    மஞ்சள் வெளிச்சம்
    வெக்கையின் மணம்
    ஹாரன் சத்தம்
    அவசரத்தின் நடுக்கம்
    வறண்டுப் போன நா
    இவையே எப்போதும்
    இறுதி இசை.

    தீவிரத் தாளத்தோடு
    இசை அறுபடும்
    இறுதி நொடியில்
    தவறாமல்
    நடுக்கத்தோடு பார்ப்பேன்
    ... உருகி
    என் கால்களுக்கு இடையே ஓடி
    கரையும்

    படுக்கை!


  • கடவுளின்
    அலைப்பேசி
    அணைக்கப்பட்டிருக்கிறது.
    எடுக்கப்பட வேண்டும்
    முடிவுகள்.
    வந்தாக வேண்டும்
    அவர்.

    கணவனின்
    அலைப்பேசியில் இருந்து
    தொடர் அழைப்புகள்.
    கிளம்ப வேண்டும்
    வீட்டிற்கு.

    முள்ளாய் குத்தும்
    முதுகெலும்பை
    அசுவாசப்படுத்த
    இங்கும்
    அங்கும்
    நடக்கிறேன்
    பத்தாவது தளத்தில்.

    இன்றைக்குள் முடிக்க வேண்டிய
    என் பணிகளை
    வெள்ளைப் பலகையில்
    வரிசை கட்டி
    இன்னும்
    எழுதி கொண்டே
    இருக்கின்றன
    கறுப்பு எறும்புகள்.

    மடிக் கணினியிலிருந்து சிதறிய
    மின்னஞ்சல்கள்
    குப்பையாய்
    தரையெங்கும்.

    ஜன்னலுக்கு
    வெளியே
    அசுரத்தனமாய்
    என்னையே
    பார்க்கிறது
    பருந்து.

    மூச்சில் காய்ச்சலோடு
    முட்களின் சீண்டலைப்
    பற்களைக் கடித்து
    உணர்ந்தபடி
    உச்சந்தரையில்
    எதிரோலிக்கும்
    இருதயத் துடிப்புகளோடு
    ... நடந்தபடி இருக்கிறேன் ...

    சிணுங்குகிறது
    அலைப்பேசி.
    கணவனிடமோ
    மற்றொரு கோபக்கார வாடகையாளனிடமோ
    பேசும் சக்தி எனக்கில்லை.
    இது கடவுளாகவே இருக்க வேண்டும்

  • தூறல் தொடங்கியதும்
    துடிக்கிறது
    வேகமாய்
    இருதயம்.

    கையால்
    பொத்தி கொள்கிறேன்
    காகிதமிருக்கும்
    சட்டைப் பையை.

    சடசடவென வேகமெடுப்பதும்
    நிதானிப்பதுமாய்
    விகாரமாய் சிரிக்கிறது
    மழை.

    மீண்டும்
    மீண்டும்
    தடவுகிறேன்
    காகிதத்தை.
    ஈரமாக இருக்கிறதா?
    ... உணர முடியவில்லை.

    காகிதம்
    கட்டாயம்
    கை மாறியேயாக வேண்டும்
    இருட்டுவதற்கு முன்
    நகரத்தில்.

    பாதைகளற்ற வனத்தில்
    என்
    பின்னால்
    யார்?
    ... பிரமையா?

    கூட்டுகிறேன்
    நடையின் வேகத்தை.
    தடுமாறுகின்றன
    கால்கள்.

    மூச்சை
    இழுத்து
    பிடித்து ...
    ... மெதுவாய் விடுகிறேன்.
    சில்லிடுகிறது
    முதுகு.

    பழுப்பும் பச்சையும்
    பார்வையில் நிறைந்திருக்க
    சிவந்த மண்ணின்
    வாசம்
    உதிரத்தைச் சூடாக்க ...

    ... தெரியாமல் குழம்புகிறேன் ...
    திசை


  • வானமெங்கும்
    மேகங்களின் போராட்டம்
    கலையாத கனவாய் ...
    ... நீள்கின்றன ...

    விழிக்கும்போதே
    இருட்டை நம்ப மறுத்து
    குதித்து
    எழுந்து
    வெளியேற
    யத்தனிக்கிறேன்.

    வாசலை மறித்தவாறு
    காத்திருக்கிறது
    ஒரு வேட்டை நாய்.

    சாந்தமான கண்கள்.
    காற்றிலே சலசலக்கும் கறுப்புக் கேசம்.
    உதிர மணம்.
    அச்சுறுத்தும் பற்கள்.

    மெல்ல ...
    ... தடுமாறி ...
    மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு
    அதைக் கடந்து
    ஓடுகிறேன்.

    இன்றாவது சிவந்து விடாதா?


  • காலபைரவனின் முடிவுறா நடனத்தின் ஊடாக 
    பிளேட்டோவின் தேசத்தைக் குலைத்து
    மறுதலிக்கப்பட்ட பழத்தைத் தின்று
    சிலுவையில் அறையப்பட்டு
    விஷத்தை அருந்த தண்டிக்கப்பட்டு
    கண்கள் ஏங்கி உடல் மெலிந்து
    மற்றவர்களின் எள்ளலுக்கு ஆளாகி
    பதில் பெறா வலியோடு வாழும் அவர்களை
    இன்றும் பார்க்கலாம் - காது அறுந்தவர்களை!

    [முற்றும்]

  • தெற்குக் கோபுரத்திலே கருணையும் குரூரமுமாய்
    உறைந்து இருக்கிறார் பிரமிள்
    காலபைரவனாய்.
    காலிலே வெள்ளித் தாடிகளாய் இறகுகள்.
    கால்களுக்குப் பின் நாயாய் உறுமுகிறது
    மரணம்.

    காதறுந்த ஓவியன் அவரைப் பார்க்கையிலே
    இருவர் பார்வையும் ஒன்றிணைகையிலே
    யார் யார் என்பது மறந்து
    எது எது என்பது குழம்பி
    எல்லாம் ஒன்றாகி
    அந்த ஒன்றின் முகத்திலே காலத்தின்
    புரியொணாப் புன்னகை!

    வானம் பொய்த்ததா? மரணம் வென்றதா?
    துப்பாக்கியால் சுட்டுக் கொண்டேன் என்னை!

  • அரியணையில் அமர்ந்திருந்த அரசர் பிளேட்டோ
    அறுந்த காதினைப் பார்த்து சினந்தபடி
    அம்பலத்தில் செங்கோலிட்டு வழங்கினார் தீர்ப்பை.

    ஞானமற்ற ஓவியமும் கவிதையும் உணர்ச்சிகளைப்
    பிரதியெடுக்கும் இரண்டாம்கட்ட நகல்கள் மட்டுமே.
    கலைஞர்களைக் கடத்துங்கள் நாட்டை விட்டே.

  • ஆதவன் மறைவதற்கு முன் 
    நிழல் உருவமாய் மாறும் கருத்த மலை போல
    நின்று இருந்தது கஜேந்திரன் எனும் யானை.
    சேறும் சுழலுமாய் ஏரி நீரோட்டம்.
    காலைக் கடிக்கும் முதலை.
    தீராத வலியோடு ஏரிக் கரையைப் பார்த்தபடி தத்தளித்தது.
    பெருமாள் தோன்றவே இல்லை.

    சந்தேகம், அச்சம், பக்தி.
    உயிர் போகும் என உணரும் கணத்தில்
    கஜேந்திரன் தன் காதை அறுத்து வானத்தை நோக்கி எறிந்தது.