என்னைப் பற்றி

Sairam Sivakumar

என் பெயர் சாய்ராம். தந்தைப் பெயர் சிவகுமார். இரண்டையும் கலந்து சாய்ராம் சிவகுமார் என்கிற பெயரில் கவிதை/ கதை/ வலைப்பதிவு எழுதி வருகிறேன். சொந்த ஊர் தர்மபுரி. தற்போது வாழ்வது சென்னையில்.

சென்னைக் கிருத்துவ கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியமும் பிறகு இதழியியல் பட்டய படிப்பும் பயின்றேன். பல காலமாய் தொலைக்காட்சி ஊடகங்களில் படைப்பாக்க துறையில் பணிபுரிந்து வருகிறேன். தற்போது பணிபுரிவது ஜீ தமிழ் தொலைக்காட்சியில்.

வெறுமை இருத்தலை பயமுறுத்துகிறது

– இழான் பவுல் சார்த்தர்

வாழ்க்கையின் நோக்கமும், அந்த நோக்கத்தினைப் பற்றி சிந்திக்கும் போது வருகிற பதற்றமும் அயர்ச்சியும் வெறுமையும் தான் என்னை படைப்புலகிற்குள் இழுத்து வருகிறது. படைப்புலகின் சுவாரஸ்யமும் உருவகங்களால் தெளிக்கபடும் உணர்வுகளும் என்னை எப்போதும் வசீகரிக்கின்றன.

குழந்தைப் பருவத்தில் வாசித்த காமிக்ஸ் தொடங்கி இன்று வாசித்த ஜப்பானிய எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி வரை அனைவருமே என்னை எங்கோ பாதித்திருக்கிறார்கள். காதலினால் மரணத்தைத் தழுவிய ஆதித்த கரிகாலன் மற்றும் சிட்னி கார்டன்; சிறு வயதில் இருந்தே தூங்கும் போது தன் ஒரு கையை இன்னொரு கையால் இறுக்க பற்றி தூங்கும், மிலன் குந்தேராவின் நாவலில் வரும் தெரசா கதாபாத்திரம்; எத்தனை பெண்களுடன் படுத்தாலும் தூங்கும் போது தனியே படுக்கவே விரும்பும் தாமஸிற்கு தெரசாவிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை. அவனது கை அவளது கையில் அகப்பட்டு இருக்கிறது. சிறு வயதில் இருந்தே அவள் பழகிய பிடி வலிமையானது. பிடித்து இருக்கும் தெரசா, விலக எண்ணும் தாமஸ்; விலகி சென்ற காதலிக்காக மூப்பு காலம் வரை காத்திருந்த, மார்க்வெஸ்ஸின் ஃபூளோரன்டினோ; பாலத்தின் மீது நின்று தன் உணர்வுகளின் பாரத்தைப் பெருங்குரலெடுத்து அலறிய எட்வர்ட் முனிச்; காட்டில் காதல்வயபட்ட ஜெயமோகன்; நீதிமன்றத்தில் நின்றிருக்கும் காஃப்கா; லாந்தர் விளக்கோடு தன்னையே தேடி திரியும் எமிலி டிக்கின்ஸன்; செய்த குற்றத்திற்குத் தண்டனையாக தன்னையே வருத்தி கொள்ளும் ரஸ்கல்நிகாவ்; உலகம் முழுவதும் மழையையும் பூனைகளையும் நிரப்ப யத்தனித்த புகோவ்ஸ்கி; தன் காதினையே அறுத்து அதன் இரத்தத்தை என் மீது வீசி சென்ற ஓவியன் – என் வாழ்வில் நிரம்பி இருக்கிறார்கள்.

பகலில் ஒரு வாழ்க்கையும் இரவில் ஒரு வாழ்க்கையும் வாழும் குடிக்காரன் போல, எப்போதும் சூதாட்டத்தை மனக்கண்ணில் கொண்டு சுற்றி கொண்டு இருக்கும் சூதாடி போல பாதி கிழிந்து போன ஓவியமாய் மீதியைக் கற்பனைச் செய்து கொண்டு ஓடுகிறது என் வாழ்க்கை.

பாலகுமாரன் பாக்கெட் நாவல் பஸ் ஸ்டாண்ட் கடையில் கிடைக்கும், இன்னிக்கு வந்துருக்கும்னு நினைக்கிறேன், எனக்கு ஒண்ணு வாங்கிட்டு வாடா என சொன்ன அக்காமார்கள்; எப்போதும் கையில் ‘ஜேஜே சில குறிப்புகள்’ புத்தகத்தைத் தூக்கி கொண்டு திரியும், தொண்ணூறுகளின் இலக்கிய விரும்பிகள்; கவிதையிலிருந்து ஒவ்வொரு வார்த்தையாக கழட்டி எடுத்து இறுதியில் வெற்றுத் தாளினைக் கவிதை என கொடுத்தனுப்பிய பித்தன்; வாழ்க்கையின் ஆர்ப்பரிப்புகளும் மனக்குழப்பத்தின் அலைச்சுழிப்புகளும் ஏராளம். என் படைப்புகள் அதன் ஏழாவது கட்ட வடிசலில் இருந்து வந்த கழிசல்.

2008 தொடங்கி இந்த வலைப்பதிவினை நடத்தி வருகிறேன். நூற்றுக்கணக்கான கவிதைகளும் சில கட்டுரைகளும் மிக சில கதைகளும் இதில் எழுதியிருக்கிறேன்.

நான் சந்தித்த மனிதர்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சியாக மனிதர்கள் என ஒரு தொடரினை இந்த வலைப்பதிவில் எழுதினேன். 2014-ம் ஆண்டு மனிதர்கள் என்கிற பெயரில் இந்தத் தொடர் ஒரு மின்நூலாக வெளியானது.

மூளையைச் சாப்பிட முயல்கிறது என்கிற என் கவிதைத் தொகுப்பு வாசக சாலை வெளியீடாக 2021-ம் ஆண்டு பிரசுரமாகியிருக்கிறது.

நன்றி!