• என் கவிதை புரியவில்லை என
    தொலைபேசியிடும் நண்பர்களே
    உங்களையும்
    என்னால் புரிந்து கொள்ள முடிந்தது இல்லையென என்றாவது 
    நான் புகார் சொன்னது உண்டா?

  • என்றோ ஒரு நாள்
    யாரோ ஒருவர்
    மரத்தின் மீது எறிந்துச் சென்ற
    கருநீல நெடிய வயர் ஒன்று 
    மரத்தோடுப் பிணைந்து 
    தண்டோடுச் சுற்றி
    பட்டைகளோடுக் கலந்து
    பழுப்பாகி போனது.
    
    இளவேனில்காலத்தின் தொடக்க நாளொன்றில்
    அந்த வயரினுள் இருந்து
    முளைத்தது
    ஓர் இலை.

  • பரபரப்பான நகர தெருவில்
    அழுக்கான டீக்கடையில்
    பிளாஸ்டிக் கோப்பையில் தேநீர்
    நரம்பினுள் செலுத்துகிறது
    அத்தேயிலைச் செடி வளர்ந்த மண்ணின் வாசத்தையும்
    அம்மலையின் சக்தியையும்.


  • தன் மரணம்
    நிகழுமிடம் அறிந்தான்.
    நிகழும் விதம் தெரியும்.
    இரண்டு நிமிடத்திலா?
    இரண்டு வருடங்களிலா?
    எப்போது என தெரியவில்லை!
    
    சதுரங்க ஆட்டக்காரனின் கவனத்தோடு
    தன் நேரத்தை நகர்த்தி நகர்த்தி விளையாடுகிறான்.
    விளையாட்டின் சுவாரஸ்யம் நிரம்பி ஓடி
    மரண பயத்தைக் கூட சற்றே மூடியிருக்கிறது.
    வாய் விட்டு சிரிக்கிறான்
    அவனுக்கு எதிரில் அரூபமாய் விளையாடுபவன்!

  •  மனதிற்குள் ஒரு காட்சி
    உருவானது.
    ...உருவாக்கினேன்.


    அறை.
    ...நெடிய அறை.
    எதிர்பக்க சுவர் விலகி  செல்கிறது.


    வெள்ளை சுவர்?
    ...சிகப்பு?
    வெண்மஞ்சள்!


    ஜன்னல்.
    கரும்பழுப்பு.
    துரு பிடித்த கம்பிகள்.


    "வெண்மஞ்சள் சுவரில் 
    தன் வேர்களைப் படர விட்டு 
    நிற்கும் 
    கரும்பழுப்பு ஜன்னல்."

  • புல் பூண்டற்ற பாலையில்

    திசைகளற்ற அந்தச் சமவெளியில்

    நடந்து கொண்டே இருக்கிறேன்

    நகர மறுக்கும் நிலம் மீது.


  • அது 
    என் மூளையைச் சாப்பிட முயல்கிறது.
    
    அதை என்னால் உணர முடியும்.
    அதன் சாத்தான் தன்மையை .
    
    அதை சாத்தான் போல என்று
    யாரும் யூகித்து விட முடியாது.
    ஏனெனில் அது
    ஒரு தேவதையின் உடல் மொழியை
    கொண்டிருக்கிறது.
    
    ஆனால் எனக்கு அதை தெரியும்.
    சிறு வயதில் இருந்தே.
    
    யாரும் ஒப்பு கொள்ள மாட்டார்கள்.
    நான் அவமான பட தான் வேண்டும்
    அதன் சுய ௹பத்தை நிரூபிக்க நினைத்தால்.
    
    அது
    என் மூளையைச் சாப்பிட முயல்கிறது.
    
    நான் அதை உன்னிப்பாக
    கவனிக்க வேண்டும்.
    
    இத்தனை காலம்
    அதை மீறி வாழ்ந்தாயிற்று.
    இனியும்.
    
    உஷ்!
    அதை கவனிக்க வேண்டும்
    உன்னிப்பாக.

  • என் கண்களை

    உற்று பார்த்து

    நீ பேசியது…

    சுவரேறிய பல்லி

    என்னைப் பார்த்த போது

    ஏன்

    நினைவிற்கு வந்தது?

    மின்விசிறியின் நிழல்

    சுவரில் தடுமாறுவதைப் பார்க்கும் போது

    படபடக்கும் உன் இமைகள்

    ஏன் நினைவிற்கு வந்தது?

    எது எதுவோ

    எதை எதையோ

    இழுத்து வந்து போடுகிறது.

    என் மனம்

    உன் நினைவுகளை

    மட்டும்

    கோர்த்து கோர்த்து

    அர்த்தம் கற்பிக்க முயன்று

    தோற்று போகிறது.

    கலைந்த சேற்றில்

    ஓர் ஓவியம்

    பாவித்து கொண்டு

    கலைந்த மேகங்களை

    ஒரு சித்திரமாக

    மனத்திரையில் தீட்டி கொண்டு

    சுவற்றில் அடித்த சிறுநீரின்

    தடமோன்று தீட்டிய கதை வாசித்து

    மறந்து போன உன் முகத்தை

    மறக்காத உன் நினைவுகளை

    பற்றி கொண்டு மட்டும்

    வாழ்கிறது

    ஒரு மனம்.


  • ஓர் அரக்கன் இங்கு வசிக்கிறான்.
    அவ்வபோது அவன் தலைக்காட்டும் போதெல்லாம்
    அராஜகம் தலைவிரித்தாடுகிறது.

    பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீரோடு நொந்து இருக்கிறார்கள்.
    சிலர் ஆயதங்களோடு அவன் திரும்பி வர காத்திருக்கிறார்கள்.
    சிலர் இடத்தைக் காலி செய்து விட்டார்கள்.

    அவன் வந்து சென்ற தடங்களில்
    நடந்தபடி இருக்கிறேன்.
    அவன் விட்டு சென்ற அழிவுகளில்
    சிதறி கிடக்கும் பொருட்களில்
    மீட்பிற்கான அறிகுறிகள் எதுவுமில்லை.

    நாட்கள் செல்ல செல்ல
    அவனது தொல்லைக் குறையுமென நினைத்திருந்தேன்.
    மாறாக அது அதிகரித்தபடி இருக்கிறது.

    அவன் வந்து சென்ற பிறகு
    ஒவ்வொரு முறையும்
    என்னுள் பிறீடுகிறது
    அளவற்ற குற்றவுணர்ச்சியின் வலி.

    ஓர் அரக்கன் என்னுள் வசிக்கிறான்.
    அவ்வபோது அவன் தலைக்காட்டும் போதெல்லாம்
    அராஜகம் தலைவிரித்தாடுகிறது.


  • என்னுள் ஒரு குரல் எப்போதும்!

    யாவருக்கும் அது அப்படித் தானென நினைத்திருந்தேன்!

    சில சமயம் இரண்டாவது குரலொன்று!

    யாரிடமாவது பேசும் போதும்

    பேசுவதற்கு முன்பும்

    அந்தக் குரல் பதில் சொல்லியிருக்கும் உள்ளுக்குள்!

    அதைப் பிரதி எடுத்தாற் போல்

    பெரும்பாலும் நான் பேசுவதில்லை!

    பூச்சு பூசி தான் பேச வேண்டும்!

    ஒரு நாள் வனத்தை அசைத்திடும் பெருமழைப் போல

    தடதடவென விடாது பெய்து தீர்த்தாற் போல்

    பேசி தீர்த்தது அக்குரல்!

    பிறகு அமைதி

    அமைதி

    அமைதி!

    பிறகு அக்குரல் ஒலிக்கவே இல்லை என்னுள்!

    யார் பேசினாலும் நானாக பேச வேண்டியதிருக்கிறது.  

    இப்போது என்னைப் பைத்தியம் என்கிறார்கள்!