• நான் அழ வேண்டிய தருணங்களில்
    அழுவதில்லை.
    சாவு வீடுகளில் கூட.
    என்றோ எதோ ஓர் அர்த்தமற்ற சினிமா காட்சிக்காக
    சட்டென அழுகை வருகிறது.
     
    அழாத போது குற்றவுணர்வும்
    அழுது முடிக்கும் போது சலிப்பும்
    சிலுவையைச் சுமக்க வைக்கின்றன
    எப்போதும்.

  • என் தெரு
    விரியும் சுருங்கும்
    என் மனநிலைக்கு ஏற்ப.

    வீட்டு கடிகாரம்
    முள் வேகத்தை
    குறைக்கும் கூட்டும்
    என் முகத்தைப் பார்த்து.

    என்னுள்
    காலமும் தூரமும்.


  • ஓர் அசைப்படம்
    அந்தப் பெரிய கட்டிடத்தின்
    சுவரில்
    சாலையில் செல்லும் வாகனங்களின் ஒளியால்.

    நானே இருவராய்
    அதை கவனித்தபடி.

    எனக்குள்/எங்களுக்குள்
    தர்க்கம்.
    சிலசமயம் வசை.
    பலசமயம் வெற்று வார்த்தைகள்.

    கவனம் குவித்து
    புறம் மறந்து
    வாழ்கிறோம்/வாழ்கிறேன்.


  • இன்று புத்தக அலமாரியில் இருந்த XIII இரத்தப் படலம் காமிக்ஸ் முழு தொகுப்பினை மீண்டும் புரட்டி கொண்டிருந்தேன். 858 பக்கங்கள், ஏ4 சைஸினை விட பெரிய அளவு, 18 பாகங்களாக நீளும் ஒரே கதை; இந்தப் புத்தகத்தினை வாங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது. மூன்று முறைகளாவது முழு காமிக்ஸையும் வாசித்து இருப்பேன். அவ்வபோது எடுத்து புரட்டி பார்த்து இருக்கிறேன். எப்போது புரட்டினாலும் வாசித்தாலும் இன்னும் சுவாரஸ்யம் குன்றாமல் இருக்கிறது இரத்தப் படலம்.

    இரத்தப் படலம் முழு தொகுப்பு

    இரத்தப் படலம் காமிக்ஸ்இரண்டு ஆண்டுகளுக்கு முன் தீபாவளிக்குப் பிறகு ஒரு நாள். இந்த காமிக்ஸ் 18 பாகங்களும் சேர்ந்து ஒரு முழு தொகுப்பாக லயன் காமிக்ஸில் வெளிவந்து இருக்கிறது என்று இணையத்தில் படித்தேன். தெரிந்த புத்தக விற்பனை கடைகளில் எல்லாம் விசாரித்த போது இப்போது லயன் காமிக்ஸ் கிடைப்பதில்லை என்று சொல்லி விட்டார்கள். நண்பர்களிடம் தெரிந்தவர்களிடம் எல்லாம் கேட்டும் இந்தப் புத்தகத்தை வாங்கும் வழி தெரியாமல் இருந்தது.… …மேலும் வாசிக்க


  • ஒரு மழைத்துளி
    காற்றின் அலைகளை மீறி
    கம்பியாய் தடமிழுத்து
    குழியில் திரண்டு நின்ற நீரில்
    விழுந்து
    மேற்பரப்பில் அதிர்வலைகளை உருவாக்கி
    கீழ்நோக்கி பாய்ந்து
    சற்று கலைந்து
    கலந்தது.

    நன்றி
    ஓவியம்: சிகப்பு முத்தம்
    ஓவியர்: ஐமெரிக் நோவா


  • மதுக்கடைகள் நிரம்பிய அந்தச் சாலைக்கு
    நீங்கள் என்றாவது போயிருந்தால்
    அவனைப் பார்த்திருப்பீர்கள்.
    புழுதி பறக்கும் சாலையோரம்
    தன் பை முழுக்க சாவிகளோடு
    ஒன்றுக்கொன்று பேசும் உலோக சப்தத்தோடு
    தன் வாழ்வைச் சுமையென சுமந்து
    நடந்து கொண்டிருப்பான்.

    அரிதாக அவன் உட்கார்ந்து இருக்கும் போது
    எதேனும் சாவியை உருவாக்கி கொண்டிருப்பான்.
    அல்லது துடைத்து கொண்டிருப்பான்.
    அல்லது அப்படியாக பாவனை செய்து கொண்டிருப்பான்.

    அவனிடம் யாரும் சாவி வாங்கியதில்லை.
    தொலைந்து போன சாவிக்கு மாற்று ஒன்றை
    உருவாக்க கேட்டதில்லை.
    என்றாலும் சாவிகளுடன் தான்
    அவன் வாழ்க்கை.

    மழை பொழியும் நாள் ஒன்றில்
    மரத்திற்குக் கீழே
    அவன் குந்தி அமர்ந்திருக்கும் காட்சியினைக் கண்டால்
    அவன் யாருக்கோ காத்திருக்கிறான் என தோன்றும்.
    சாவிகளை ஒப்படைக்க
    காலம் காலமாக அவன் காத்திருக்கிறான் என
    நினைப்பீர்கள்.

    மழை நின்ற பிறகு
    அவன் தன்னை உதறி கொண்டு கிளம்புவான்.
    அவன் வெறும் பிம்பம் தானா?
    நம் பிரதிபலிப்பா?
    மனம் கட்டமைத்த கற்பனை உருவமா?…மேலும் வாசிக்க


  • ஆடு தாண்டி விடும் ஓடை.
    சன்னமாய் ஓடுகிறது.
    நீரைக் கையில் ஏந்தி பார்க்கிறேன்.
    ஒளியினைத் தின்றபடி பிரகாசிக்கிறது.

    பருகினால் மதுவின் சுவை.
    கால் வைத்து இறங்கினால்
    நீருக்கடியில்
    மலை உயர ஆழம்.

    மூச்சிறைத்து பிழைத்து வந்தால்
    மேலெல்லாம் மதுவின் வாசம்.


  • நான் மத அடிப்படைவாதி அல்ல. காருண்யத்தைப் போதிப்பவனும் இல்லை. இந்தியா ஜனநாயக பாதையில் மேலும் மேம்பட வேண்டும் என நினைப்பவன். எதிரிகளை அடித்து கொல்வதும், குற்றவாளிகளின் முதுகை உரிப்பதும், கழு ஏற்றுவதுமாய் இருந்த சமூகம் இன்று நீதிமன்றம், அரசமைப்பு சட்டம் என மாறி வந்து இருக்கிறது. அடுத்து நாம் பயணிக்க வேண்டிய திசை எது? மக்களின் நல்லாட்சி என்பது சிவில் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், மனித உரிமைகளை முன்னிறுத்துகிற ஆட்சியாகவும் இருக்க வேண்டும். உலகமெங்கும் பெரும்பாலான மனித உரிமை ஆர்வலர்கள் மரண தண்டனை ஒழிக்கபட வேண்டுமென குரல் எழுப்புபவர்களாகவே இருக்கிறார்கள்.

    அஜ்மல் கசாப் கொடூரமான கொலைகளைச் செய்த தீவிரவாதி. ஒரு நாட்டின் மீது பயங்கரவாதத்தையும் அதன் விளைவாய் மக்களிடையே பெரும் பீதியையும் உருவாக்கிய அணியில் முக்கிய நபர். ஒன்பது பயங்கரவாதிகளுடன் சேர்ந்து மும்பையில் 166 பேரை கொன்ற சம்பவத்திற்குக் காரணமான நபர். கசாப் செய்த குற்றங்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்திலே இப்போது தண்டனை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.… …மேலும் வாசிக்க


  • மலை உச்சியில் பெருங்கூட்டம்.
    எல்லாரும் முண்டியடிக்கிறார்கள்
    பள்ளத்தாக்கில்
    அனல்கங்குகளைச் சுமந்து ஓடும்
    ஆற்றினைக் காண.

    பெருத்த முலைகளையும்
    முட்டும் தொப்பைகளையும்
    தள்ளியபடி
    முரட்டு யானைகள் போன்ற பெண்கள் கூட்டமொன்றில்
    அரைபட்டு முன்னேறி கொண்டு இருக்கிறேன் நான்.

    கூட்ட நெரிசல்,
    வியர்வை வாசம்,
    காலை யார் யாரோ மிதிக்கிறார்கள்.
    இரை விழுங்கிய பாம்பினைப் போல
    பிதுங்கி நெளிந்து
    கூட்டம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

    யாரோ ஒருவர் மலை மேலிருந்து
    ஆற்றில் விழுகிறார்.
    பிறகு மற்றொருவர்.
    அடுத்தடுத்து யாராவது விழுந்து கொண்டே இருக்கிறார்கள்.

    யாரேனும் விழும் போதெல்லாம்
    சாட்டையை விசிறினாற் போல சத்தம்.
    தொப் என அது முடிவடைவதற்குள்
    அலை அலையாய் மக்களிடையே பரவுகிறது
    ஆரவாரமும் கேலி பெரும் சிரிப்பும்.

    கூட்டத்தில் எனக்கு முன்னால்
    ஒரு குண்டான பெண்
    மற்றவர்களால்
    உயர்த்தப்பட்டு
    தலைகளுக்கு மேலாக உருட்டி செல்லப்பட்டாள்.
    மீண்டும் எழுந்தது பெரும் ஆரவாரம்.

    என் முலையில்
    ஓர் அன்னியனின் கையினை உணர்ந்தேன்.
    தொடர்ந்து முளைத்தன
    பல கைகள்.…மேலும் வாசிக்க


  • தடதடவென ரயில் அதிர்ந்து ஓட
    பாலத்தின் கீழே சாலையில்
    வாகனங்கள்
    அதிர்வலையில் மிதந்து செல்லும்.

    ரயிலோ இல்லையோ
    பாலத்தின் எதோ ஓரிடத்தில் இருந்து
    ரத்தத் துளிகள் விழுந்தபடியே இருந்தன
    சாலையில்
    வருவோர் போவோர் வெகு சிலர் மீது.

    அதை உணராமலோ
    மழைதுளியென எண்ணியோ
    போய் விடுவார்கள் பலர்.

    ரத்தத்தைக் கண்டு திகைத்தவர்கள்
    வேறு பாதைக்கு
    மாறி விட்டார்கள்.

    எங்கிருந்து ரத்தம் சொட்டுகிறது என
    அறிய முற்பட்டவர்கள்
    பலியானார்கள்
    ரயிலின்
    தடதடக்கும் சக்கரங்களுக்கு.