• உங்கள் கண்காணிப்பில்
    நல்ல மனிதனாக வாழ்வதை விட
    சுதந்திரமாக
    கெட்ட மனிதனாக மாறி விட்டு போகிறேன்!
    அட போங்க அப்பால!


  • கவிதை என்பது
    கவிதை புத்தகங்களில் மட்டும்;
    ஓவியம் என்பது
    கலைக்கூடங்களில் மட்டும்
    இருக்குமென நீங்கள் நினைத்தால்
    உங்களுக்கு
    என் ஆழ்ந்த அனுதாபங்கள்!
    பின் குறிப்பு: இது கவிதையல்ல.


  • வலைச்சரம் என்கிற வலைப்பதிவினை நீங்கள் அறிந்திருக்கலாம். வார வாரம் ஒரு வலைப்பதிவர் அதில் ஆசிரியர் பொறுப்பேற்று தனக்கு பிடித்த அல்லது தான் பரிந்துரைக்க நினைத்த வலைப்பதிவுகளை தொடர்ச்சியாக அந்த வாரம் முழுவதும் பதிவிட்டு அறிமுகப்படுத்துவார். அதில் இந்த வாரம் நான் ஆசிரியர் பொறுப்பேற்று பதிவுகள் எழுதி வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்த போகிறேன். நேரம் இருக்கிறவர்கள் வலைச்சரத்தில் எனது பதிவுகளைப் படித்து கருத்து சொல்லுங்கள். நன்றி.


  • யூனிவர்சிட்டியின் பிரம்மாண்டமான கட்டிடத்தை வெறித்தவாறு அந்த மரத்தடி பெஞ்சில் அமர்ந்திருந்தேன். படித்து முடித்தாயிற்று. இப்போதும் இங்கு தான் சுற்றி கொண்டிருக்கிறேன். மெள்ள மெள்ள இந்த இடத்திலிருந்து அதோ அந்தச் சுவரினைத் தாண்டியிருக்கும் நெரிசல் மிகுந்த நகரத்தில் ஐக்கியமாகி விடுவேன் என்பது மட்டும் உறுதி. வெளியே நகரத்தின் நெரிசலுக்கும் வெயிலுக்கும் உள்ளே தவழ்ந்து கிடக்கிற அமைதிக்கும் பச்சைபரப்பிற்கும் எத்தனை வித்தியாசம். ஒரு சுவர் தான் இரண்டையும் பிரிக்கின்றன.

    நான் அமர்ந்திருந்த மரத்தடியோர பெஞ்சிற்குப் பின்புறம் இருந்தது யூனிவர்சிட்டி கேண்டீன். சில மாணவர்களைத் தவிர அங்கு வேறு யாருமில்லை. எனக்கு வர வேண்டிய டீ வந்தது. கண்ணாடி டம்பளரைப் பிடித்து அதன் சூட்டினை கைகளுக்குள் உணர்ந்தவாறு அமர்ந்திருந்தேன். தூரத்தில் காவியா என்னை நோக்கி வருவதைப் பார்த்தேன். கடந்த ஒரு மணி நேரத்தில் எந்தப் பெண்ணைத் தூரத்தில் பார்த்தாலும் அது காவியா தானா என்று பார்த்து பார்த்து அலுத்து போன காரணத்தினால் இதுவும் வேறு பெண்ணா என்று சந்தேகம் தோன்றியது.… …மேலும் வாசிக்க


  • தூக்கம் வராத இரவுகள் வேதனையானவை. கல்லூரி நாட்களில் படுத்தவுடனே தூங்கியதெல்லாம் எதோ கனவு மாதிரி இப்ப தோன்றுகிறது. தூக்கம் வந்து விடாதா என்று கண்களை மூடி படுத்திருப்பேன். இர்ர்ம் என்று ஃபேன் சுற்றி கொண்டிருக்கும் சத்தம் பெரிதாகி கொண்டே இருக்கும். அதுவே ஓர் இசைக்கருவி போல ஒரே லயத்துடன் அதன் இசை வளரும். அப்படி வளரும் இசை எதோ ஒரு கணத்தில் என்னுடைய சிந்தனைகளில் மூழ்கி அமிழ்ந்து போகும். சிந்தனைகளில் மூழ்கி போன என்னை எதோ ஒரு சத்தம் திடுக்கிட வைக்கும். தெருவில் நாய்கள் குரைக்கும் சத்தம், யாராவது குடிக்காரன் தள்ளாடி தள்ளாடி நடந்து போகும் ஓசை இப்படியாக பல நிமிடங்கள் கழிந்த பின்னர் இன்னும் தூங்கவில்லையே என்பதே பெரும் அசதியாக இருக்கும். எழுந்து போய் தண்ணீர் குடிப்பேன். ஜன்னலைத் திறந்து பார்ப்பேன்.

    இரண்டாவது மாடியில் இருந்து பார்ப்பதற்கு இந்தச் சின்ன சந்து எதோ குழந்தை விளையாடி கலைத்து போட்ட பொம்மை மாதிரி குலைந்து மஞ்சள் நிறத்தில் தெரியும்.… …மேலும் வாசிக்க


  • நடுங்கும் மெலிந்த கால்களில்
    எப்போதும்
    கொலுசுவின் பல்வரிசையில்
    பொய் முத்துகள் சில
    காணாமல் போயிருக்கும்.

    தேய்ந்த செருப்பினுள்
    ஒளிந்திருக்கும்
    கருத்த பாதத்தில்
    நகங்கள்
    ரத்த சோகையில்
    வெளிறி போயிருக்கும்.

    வண்ண நிறத்தில்
    செருப்பு அணிந்திருக்கும்
    யுவதியின் காலில்
    நெயில் பாலீஸ்
    பாதி மறைந்து மீதி பளிச்சிடும்.

    செருப்பு அணியாதவனின்
    கால் நகங்கள்
    அடிப்பட்டு
    உள்நகம் முளைத்து
    பெருத்து போயிருக்கும்.

    எப்போதும்
    இருபத்தி ஐந்து ரூபாய்
    பேட்டா செருப்பு
    மறைக்கும்
    பாத வெடிப்புகளை.

    கதைகள் சொல்கின்றன
    கால்கள்.
    சிதறிய முத்துகள் போல
    வழியெங்கும் கால்களின் தடங்கள்.


  • எங்கள் வீட்டு ஜன்னலில் இருந்து பார்த்தால்
    சாலைக்கு அப்பால்
    சுவரில் பிரகாசிக்கும்
    ஊரில் உள்ள ஒற்றை தியேட்டரின்
    சினிமா போஸ்டர்.

    முதலில் வண்ணங்கள் ஜொலிக்கும்.
    சில மணி நேரங்களில்
    வரிகளும் கசங்கல்களும்
    மனப்பாடமாகும்.

    வண்ணம் மனதில் தோய்ந்து தோய்ந்து
    அடுத்த போஸ்டர் எப்போது எப்போது என
    மனம் அலைபாய தொடங்கும்.
    யுகங்களாய் காத்திருத்தல் தொடரும்.
    என்னென்ன வண்ணங்கள்
    என்னென்ன முகங்கள்
    என கற்பனைகள் விரியும்.

    ஒரு நாள் பளிச்சென அடுத்த போஸ்டர்
    பிரகாசிக்க தொடங்கும்.


  • ஓடி கொண்டிருக்கிறேன்
    தூரத்தில்
    மரங்களால் ஆன குகைக்குள்
    தார் சாலையில்
    பயணிக்கும்
    பேருந்தினை நோக்கி.

    என் கணவர் விழித்து கொள்ளலாம்.
    குழந்தை அழது அவர் விழித்து கொள்ளக்கூடும்.
    பக்கத்து இருக்கையில் இருப்பவர்கள்
    நான் இல்லாததை அவருக்குச் சொல்லக்கூடும்.
    இதோ என்னை நோக்கி
    திரும்பும் என நினைத்தபடி
    கரும்புகையை நோக்கி
    ஓடுகிறேன்.

    பதின்பருவத்திற்குப் பிறகு
    இப்படி ஓடியதாய்
    எனக்கு நினைவே இல்லை.

    நின்றால்
    அப்படியே ஒடிந்து விடுவேன்
    என்பதாய்
    அத்தனை சக்தியையும்
    விரயமாக்கி
    ஓடி கொண்டிருக்கிறேன்.

    என்னையும்
    புகையினையும்
    மறந்து
    சிறிதாகி கொண்டே
    இதோ மறைந்து விட
    போகிறது
    அந்த வாகனம்.


  • முட்கள் முளைப்பது

    முள்செடிக்கும் வலிக்கும் என்பது

    என் உடலில் முட்கள் முளைத்த போது தான்

    புரிந்தது.

    முட்செடியாய் இருப்பது

    அதற்கு விருப்பமில்லை என்பதும்.


  • ஷோரூமில் பார்ப்பதற்கும்
    வாங்கி இரண்டொரு நாள் கழித்து பார்ப்பதற்கும்
    சட்டைகள் வித்தியாசமாக தான்
    காட்சியளிக்கின்றன.

    பொருந்துமென நினைத்தது
    பொருந்தாமல் போவதும்
    பிடிக்காத சட்டை
    பிறகு பிடித்தமானதாக மாறுவதுமென
    முதல் பார்வை சரியானதாகவே இருப்பதில்லை.

    இந்த வகை தான் பிடிக்கும் என்கிற தீர்மானங்கள்
    நிலைப்பதும் இல்லை.

    ஒரு பொழுதை தன் முதுகில்
    ஏற்றி செல்லும் வலிமையுண்டு
    சட்டைகளுக்கு.
    அது எந்தச் சட்டை என அறியும்
    நுட்பமில்லை மனிதர்களுக்கு.

    ஒருவேளை சட்டைகளுக்கு…?