• “காலம் மாறிடுச்சு, இப்ப சாதியெல்லாம் யார் சார் பாக்குறாங்க?” மத்திய வர்க்கத்தினர் உரையாடல்களில் தவறாமல் யாராவது ஒருவர் இப்படி சொல்வதுண்டு. நகரங்ளிலும் தொடர்ந்து தலைவிரித்தாடும் சாதி வெறி, கிராமத்தில் இன்னும் தொடரும் அடக்குமுறை அவலம் என சாதி மனோநிலை இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை சமூக ஆர்வலர்கள் ஆதாரங்களுடன் சுட்டி காட்டினாலும் அது பெரிதாக விவாதங்களுக்கு வந்து சேர்வதில்லை.

    “இப்போ அங்காங்கே நடக்கிறதை வைச்சு சாதி வெறி சாதி வெறின்னு சொல்லாதீங்க சார். இண்டர்நெட், செல்போன் காலத்துல அடுத்த தலைமுறையில சாதி உணர்வெல்லாம் சுத்தமா இருக்காது சார்.” இதுவும் அந்த உரையாடலின் போது சொல்லப்படுவது தான். அடுத்த தலைமுறையில் சாதி உணர்வு குறைந்து இருக்குமா? இந்தக் கேள்விக்குப் பதிலைத் தேடும் போது நிறைய அதிர்ச்சி தகவல்கள் தான் கிடைக்கின்றன.

    தலித் மாணவர்களைத் தாக்கும் சக மாணவர்கள்

    இந்த மாதம் மட்டும் தலித் மாணவர்கள் சக பள்ளிக்கூடத்து மாணவர்களாலே தாக்கப்படும் சம்பவங்கள் மூன்று நடந்துள்ளன. மதுரை அருகே உசிலம்பட்டி அருகே பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் சாதி மோதலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். வெளியாட்களும் இந்த மோதலில் வந்து பங்கேற்றார்களாம். கடைசியில் போலீஸ் வந்த போது, போலீஸாரைப் பார்த்து கல் எறிந்து இருக்கிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக பிறகு ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

    இந்த மாதம் மதுரையருகே நடந்த மற்றொரு சம்பவத்தில் ஒரு பதினெழு வயது தலித் மாணவன், கிராமத்தில் தலித் மக்கள் உலவ தடை விதிக்கப்பட்ட ஓர் இடத்தில் (?) உட்கார்ந்து இருந்த காரணத்தினால் கடுமையாக தாக்கப்பட்டான். இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது ஆகியிருக்கிறார்கள். கைதானவர்களில் ஒருவன் பதினெழு வயதேயான பள்ளிக்கூட மாணவன்.

    இந்த மாதம் நடந்த இன்னொரு சம்பவத்தில் தலித் மாணவர்கள் அம்பேத்கர் வாழ்த்து பாடல்களைப் பாடியதால் கோபமுற்ற சாதி இந்து மாணவர்கள் அவர்களைத் தாக்கி இருக்கிறார்கள். பஸ்ஸில் பயணித்து கொண்டிருந்தவர்களை பஸ்ஸில் வைத்தே அடித்து காயப்படுத்தி இருக்கிறார்கள். இதிலும் கைதானவர்களில் இருவர் பதினெட்டு வயதிற்கு உட்பட்டவர்கள்.

    மாணவர்களிடையே சாதி உணர்வு அதிகரிக்கிறது

    மதுரையில் எவிடென்ஸ் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தும் கதிர் என்பவர் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்குக் கொடுத்திருக்கும் பேட்டியில் சிவகங்கை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை பகுதிகளில் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் தலித் மாணவர்களைத் தாக்கும் போக்கு அதிகரிக்கிறது என சொல்லி இருக்கிறார்.

    பொதுவாக இந்த வகை தாக்குதல்கள் உள்ளூரிலே பஞ்சாய்த்து செய்யப்பட்டு பெரும்பாலும் தலித் மக்களுக்கு விரோதமாக முடிவெடுக்கப்பட்டு வெளியுலகுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டு விடும். மீறி வெளியுலகுக்குத் தெரியும் சம்பவங்களே அதிர்ச்சி ஏற்படுத்துகின்றன என்றால் மறைக்கப்பட்டவை வெளியில் வந்தால் பேரதிர்ச்சியினை ஏற்படுத்தும் என்பது தான் உண்மை.

    பள்ளிக்கூடமும் கல்வியும்

    ஒவ்வொரு பாடப்புத்தகத்திலும் தீண்டாமை ஒழிப்பு வாசகங்கள் முதல் பக்கத்தில் இடம் பெற்று இருக்கின்றன. ஆனால் அதைத் தவிர சாதி ஒழிப்பு பற்றி விரிவான கல்வி பள்ளியில் இருப்பதில்லை. இன்றும் சாதி உணர்வு எப்படி எல்லாம் தலைவிரித்தாடுகிறது என்கிற உண்மைகளைப் பள்ளிக்கூட மாணவர்களுக்கு எடுத்து சொல்லி அதை வகுப்புகளில் விவாதிக்க வேண்டும் என்கிறார்கள் மாற்று கல்வியை முன்வைப்பவர்கள். ஆசிரியர்கள் மத்தியில் சாதி உணர்வு இருப்பதை எப்படி தவிர்ப்பது என்று அடுத்த கேள்வி எழுகிறது.

    சாதி உணர்விற்கு எதிரான பெரிய விழிப்புணர்வு பிரச்சாரம் தேவைப்படும் நேரமிது. ஆனால் உரையாடல்களில், “காலம் மாறிடுச்சு, இப்ப எல்லாம் யார் சார் சாதியைப் பாக்குறாங்க,” என்று தான் பேசுகிறார்கள்.

    பிரச்சனைக்கான தீர்வு முதலில் அந்தப் பிரச்சனை உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை அனைவரும் ஒப்பு கொள்வதிலே தொடங்குகிறது.


  • குறிப்பு: பதிவில் நிர்வாண பெண்ணுடல் புகைப்படங்கள்/ஓவியங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

    அவர் ஒரு புகைப்பட கலைஞர். பாரீஸ் நகரத்தில் அந்தப் பெண்ணைச் சந்தித்தார். அந்தப் பெண் புகழ் பெற்ற ஓவியர்களுக்கு நிர்வாணமாக காட்சி கொடுத்து புகழ் பெற்றவர். பல புகழ்ப் பெற்ற ஓவியங்களில் அந்தப் பெண்ணைக் காண முடியும்.

    “உங்களைப் புகைப்படம் எடுக்க விரும்புகிறேன்,” என்றார் அவர்.

    “புகைப்படங்களுக்குப் போஸ் கொடுப்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை. அது வெறும் யதார்த்தத்தினைச் சித்தரிக்கிறது. ஓவியங்கள் அப்படியில்லை,” என்று பதில் சொன்னார் அந்தப் பெண்.

    “என்னுடைய புகைப்படங்கள் அப்படி இல்லை. ஓர் ஓவியர் எப்படி ஒரு காட்சியைத் தன் கலாபூர்வ நோக்கங்களுக்காக மாற்றுகிறாரோ அப்படி என்னுடைய புகைப்படங்களை நான் ஓவியம் போல தான் எடுக்கிறேன்,” என்றார் அவர்.

    இந்த உரையாடல் இன்று மீ-யதார்த்தம் (சர்ரியலிசம்) பற்றிய விவாதங்களில் முக்கியமானது. காரணம் அந்தப் புகைப்பட கலைஞர் தான் சொன்னதைப் பிறகு செய்தும் காட்டினார். அவர் அந்தப் பெண்ணை வைத்து எடுத்த புகைப்படம் ‘Violon d’Ingres.’ அது இன்றும் புகழ் பெற்ற புகைப்படமாகவும் அதே சமயம் சிறந்த கலைப்படைப்பாகவும் போற்றப்படுகிறது.

    கலைஞர்களின் தலைநகரம்

    மாண்ட்பார்னாஸ் (தமிழ் உச்சரிப்பு தவறாக இருக்கலாம் – Montparnasse) என்பது பாரீஸ் நகரத்தில் சியன் நதிக்கரையோரமாக அமைந்திருக்கும் ஒரு பகுதி. கலைக்கும் அறிவியலுக்கும் போற்றப்படுகிற ஒன்பது கிரேக்க தேவதைகள் வசித்த மவுண்ட் பார்ணாஸ் என்கிற கிரேக்க மலைப்பகுதியின் பெயரில் இருந்து இந்தப் பெயர் உருவானதாக சொல்வார்கள்.கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் மாண்ட்பார்னாஸ் பகுதி அறிவுஜீவிகளுக்கும் கலைஞர்களுக்கும் தாயகமாக மாறியது. பித்து பிடித்த காலக்கட்டம் என்று அக்காலக்கட்டத்தை இன்றும் சொல்வார்கள். உலகத்தில் மிக முக்கியமாக போற்றப்படும் பல அறிவுஜீவிகளும் கலைஞர்களும் இந்தப் பகுதியில் அக்காலக்கட்டத்தில் வசித்து இருக்கிறார்கள். உலகமெங்கும் இருந்து எழுத்தாளர்களும், ஓவியர்களும், கலைஞர்களும், அறிவுஜீவிகளும் இங்கு குழும தொடங்கினார்கள். தடாயிசம், சர்ரியலிசம், கியூபிசம் என அக்காலக்கட்டதின் அத்தனை கலைப்போக்குகளிலும் இப்பகுதி அதிக தாக்கம் செலுத்தியிருக்கிறது.

    ஜப்பானில் பிரபல ஓவியரான போஜிட்டோ இங்கு தனது மூட்டை முடிச்சுகளோடு வந்த போது அவருக்கு இங்கு யாரையுமே தெரியாது. ஆனால் ஒரே இரவில் அவர் மற்ற புகழ் பெற்ற ஓவியர்களுடன் நட்பு கொண்டு விட்டார். இந்த நட்பு பட்டியலில் பிக்காஸோவும் அடக்கம். பெரும்பாலும் வறுமையில் உழன்று கொண்டிருந்த கலைஞர்களுக்கு மிக குறைந்த வாடகையில் இப்பகுதியில் வீடுகள் கிடைத்தன.

    இப்பகுதியில் இருந்த கபேக்களும் பார்களும் எப்பொழுதும் அறிவு மற்றும் கலை சார்ந்த விவாதங்களால் நிரம்பி இருக்கும். மிக குறைந்த கட்டணம் செலுத்தி இங்கு கலைஞர்கள் பல மணி நேரங்கள் உட்கார்ந்து இருப்பார்கள். அவர்கள் அப்படியே அங்கேயே உறங்கினாலும் சர்வர்கள் அவர்களை எழுப்ப மாட்டார்கள். அங்கே வாய் சண்டைகளும் அதிகம் நடக்கும். சில சமயம் அடித்து கொள்வதும் உண்டு. ஆனால் யாரும் காவல்துறையினருக்குத் தகவல் சொல்ல மாட்டார்கள். சில ஓவியர்கள் பணத்தைக் கொடுக்க முடியாமல் அதற்கு பதிலாக கபேக்களின் சுவர்களில் தங்களது ஓவியங்களை இலவசமாக வரைந்து விட்டு போவார்கள். அன்று இருந்த இந்த கபேக்களிலும் பார்களிலும் பெரும்பான்மையானவை இன்றும் இருக்கின்றன. அக்காலக்கட்டத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் இன்றும் அவற்றின் சுவர்களில் பாதுகாக்கப்படுகின்றன. உலகின் சிறந்த மியூசியம்கள் கூட இந்தச் சுவர்களைப் பார்த்து பொறாமைப்படும்.

    பாரீஸ்-கபே
    மாண்ட்பார்னாஸ் கபே

    மாண்ட்பார்னாஸின் ராணி

    கிக்கி
    கிக்கி

    அலைஸ் இர்னஸ்டின் பிர்ன். இது தான் அவளுடைய பெயர். ஆனால் தன்னை அவள் கிக்கி என்று தான் அழைத்து கொண்டாள், மற்றவர்களிடமும் அப்படியே அறிமுகப்படுத்தி கொண்டாள். அவளை எல்லாரும் மாண்ட்பார்னாஸின் ராணி என்று அழைத்தார்கள்.

    திருமணமல்லாத உறவில் பிறந்த அவள் தன் பனிரெண்டு வயது வரை ஒரு ஃபிரெஞ்சு கிராமத்தில் தன் பாட்டியுடன் வறுமையோடு போராடியபடி வாழ்ந்தாள். பிறகு பாரீஸ் நகரத்தில் தன் தாயுடன் வாழ தொடங்கினாள். கடைகளிலும் பேக்கரிகளிலும் பணிப்புரிந்தாள். பதினான்கு வயதில் அவள் ஓவியர்களுக்கு நிர்வாணமாக போஸ் கொடுக்க தொடங்கி விட்டாள். இதன்காரணமாக அவள் தன் தாயிடமிருந்து மனகசப்புடன் பிரிய வேண்டியதாயிற்று. நைட் கிளப் பாடகியாகவும் நடிகையாகவும் மாடலாகவும் இருந்த கிக்கி ஓவியங்களையும் வரைய தொடங்கினாள். விரைவிலே மாண்ட்பார்னாஸில் இருந்த அறிவுஜீவிகளுக்கும் கலைஞர்களுக்கும் மத்தியில் மிக பிரபலமான நபராக மாறி போனாள். பனிரெண்டிற்கும் மேலான பிரபல ஓவியர்களுக்குக்கு கிக்கி போஸ் கொடுத்து இருக்கிறாள். பிறகு அவள் எழுதிய சுயசரிதத்திற்கு முன்னுரை எழுதியவர்களில் ஒருவர் பிரபல எழுத்தாளர் ஹெமிங்வே.

    “தன் அழகான முகத்தில் தொடங்கி தன்னையே கலையாக மாற்றி கொண்டவர் கிக்கி. விக்டோரியன் காலக்கட்டத்தை விக்டோரிய மகாராணி எந்தளவு ஆதிக்கம் செலுத்தினாரோ அதை விட அதிகமாக மாண்ட்பார்னாஸின் காலக்கட்டத்தைக் கிக்கி ஆதிக்கம் செலுத்தினார்,” என்று எழுதினார் ஹெமிங்வே. கிக்கியின் சுயசரிதை அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.

    “ஓர் இரவு நைட் கிளப்பில் நாங்கள் நிறைய பேர் கிக்கியுடன் மது அருந்தி கொண்டிருந்தோம். போதை அதிகமானவுடன் கிக்கி அசிங்கமான அர்த்தம் கொண்ட பாடல்களைப் பாடத் தொடங்கினாள். ஒரு கட்டத்தில் கூட்டத்தினர் பக்கம் திரும்பி தனது ஸ்கர்ட் துணியை மேலே உயர்த்தி போஸ் கொடுத்து அதிர்வலைகளை ஏற்படுத்தினாள்,” என்று ஒரு எழுத்தாளர் தனது டைரி குறிப்பில் எழுதி இருக்கிறார்.

    பல கலாபூர்வமான முக்கிய நிகழ்வுகளையும் மனிதர்களையும் உருவாக்கிய மாண்ட்பார்னாஸின் பித்து பிடித்த காலக்கட்டத்தின் பிரதிபலிப்பாக இன்று கிக்கியை கொண்டாடுகிறார்கள் கலை விமர்சகர்கள். பாரீஸில் திளைத்து எழுந்த சுதந்திர உணர்வின் முக்கிய அடையாளமாக கிக்கியைச் சொல்கிறார்கள்.

    மாண்ட்பார்னாஸிற்கு வந்து குவிந்த பல கலைஞர்களில் ஒருவர் மான் ரே. 1921-ம் ஆண்டு ஜுலை மாதம் மான் ரே அமெரிக்காவில் இருந்து இங்கு குடிமாறினார். 20-ம் நூற்றாண்டின் சிறந்த இருபது கலைஞர்களில் ஒருவர் என மான் ரே-யினை ஏ.ஆர்.டி நியூஸ் இதழ் புகழ்கிறது. புகைப்பட கலை மட்டும் அல்லாது ஓவியம், சிற்பம் என பல துறைகளில் தனது புதிய உத்திகளால் புத்துணர்ச்சியையும் தாக்கத்தையும் ஏற்படுத்தினார் ரே. அவர் மாண்ட்பார்னாஸில் தங்கிய முதல் பத்து வருடங்கள் அவரும் கிக்கியும் உறவு கொண்டிருந்தனர். மான் ரேயின் பல புகைப்படங்களுக்கு கிக்கி போஸ் கொடுத்து இருக்கிறார். அதோடு ரே பரிசோதனை முயற்சியாக எடுத்த புது வகை வீடியோக்களிலும் கிக்கி நடித்து இருக்கிறார். எனினும் உலகப்புகழ் பெற்ற புகைப்படம் ரே கிக்கியை வைத்து எடுத்த ‘Violon d’Ingres’ என்கிற புகைப்படம் தான்.

    இன்கிரிஸின் வயலின்

    மான்-ரே
    மான் ரே

    இன்கிரிஸ் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஃபரெஞ்சு ஓவியர். சரியாக சொல்வது என்றால் 1780-ம் ஆண்டில் இருந்து 1867-ம் ஆண்டு வரை வாழ்ந்தவர். இவருடைய ஓவியங்கள் சர்வதேச அளவில் புகழ் பெற்றவை. இன்கிரிஸிற்கு வயலின் மீது தீராத காதல் உண்டு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் வயலின் வாசிக்க உட்கார்ந்து விடுவார். வயலின் அவருடைய நேரத்தை எல்லாம் தின்று கொண்டிருந்தது. இன்றும் ஃபிரெஞ்சு மொழியில் ஒரு சொல்வடை உண்டு. யாருக்காவது ஒரு பொழுதுபோக்கு விஷயத்தில் அதீத ஆர்வம் இருந்து அதிலே அவர்கள் மூழ்கி கிடந்தால் அதை அவர்கள் ‘இன்கிரிஸின் வயலினை வைத்திருப்பது போல’ என்று சொல்வார்கள். இந்த ஃபிரெஞ்சு சொல்வடை தான் ரே கிக்கியை எடுத்த புகைப்படத்தின் தலைப்பு ‘Violon d’Ingres.’

    violon
    violon d’ingres

    புகைப்படத்தில் கிக்கி நிர்வாணமாய் தன் முதுகை காட்டியபடி அமர்ந்திருக்கிறாள். அவளது தலைமுடி முற்றிலுமாய் ஒரு தலைப்பாகைக்குள் இருக்கிறது. முகம் லேசாய் திரும்பியிருக்கிறது. கைகளை முன்னால் வைத்திருப்பதினால் அது பார்வையிலே இல்லை. செதுக்கப்பட்ட சிலை போல அவளது உடல்வளைவுகள். கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கிக்கி கிழக்கத்திய நாட்டு பெண் போல தோற்றம் கொள்கிறாள். பென்சில் மற்றும் இந்தியன் இங்க் பயன்படுத்தி ரே இந்தப் புகைப்படத்தின் மீது இரண்டு f-களைக் கிக்கியின் முதுகில் வரைந்திருக்கிறார். அந்த இரண்டு f-கள் மிகச் சரியாக வயலினில் உள்ள இரண்டு ஓட்டைகளைப் பிரதிபலிக்கிறது. இப்போது புகைப்படத்தில் தெரியும் ஒரு பெண்ணின் நிர்வாண உடல் வயலினாகவும் மாறி நிற்கிறது. ‘இன்கிரிஸின் வயிலினை வைத்திருப்பது போல’ எனக்கு எப்போதுமே கிக்கியின் உடல் மீது விளையாடுவது பிடிக்கும் என்று மான் ரே சொல்கிறார் என நிறைய பேர் இப்புகைப்படத்தின் உள் அர்த்தத்தினை விளக்குகிறார்கள். உள் அர்த்தங்களைத் தாண்டி உலகெங்கும் எண்ணற்ற பேர் இந்தப் புகைப்படத்தில் இருந்து அவரவர்களுக்குத் தோன்றிய உணர்வலைகளைப் பெற்றபடி தான் இருக்கிறார்கள். இன்றும் முதுகில் இப்படி f பச்சை குத்தி கொள்தல் பேஷனாக கூட இருக்கிறது. இன்று இந்தப் புகைப்படம் கலை பற்றிய விவாதங்களில் முக்கியமாக மீ-யதார்த்தவாதம் (சர்ரியலிசம்) பற்றிய விவாதங்களில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது.

    பிரெஞ்சு-ஓவியம்
    The Valpincon Bather

    ஓவியர் இன்கிரிஸ் வரைந்த ஓவியங்களில் ஒன்று பாதர் (The Valpincon Bather.) இதிலே அவர் வரைந்திருந்த அழகிய நிர்வாண பெண் உடல் மிக பிரபலம். இன்கிரிஸ் பிறகு ஒரு முறை வரைந்த துருக்கி குளியல் என்கிற ஓவியத்தில் இடது பக்கம் அமர்ந்திருக்கிற முதல் பெண்மணி மீண்டும் அதே (the valpincon bather ஓவியத்தில் இருக்கிற) பெண்மணியாக இருக்கிறாள். இந்த ஓவியங்களின் தாக்கம் தான் ரேயின் புகைப்படத்திற்குக் காரணம் என்றும் சொல்லப்படுவதுண்டு. காரணம் புகைப்படத்திலும் ஓவியத்திலும் உள்ள பெண்ணுடல்களில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

     

    பிரெஞ்சு-ஓவியம்-02
    துருக்கி குளியல்

    வாழ்வும் மரணமும்

    வறுமையில் உழன்று புகழின் உச்சிக்குப் போன கிக்கி மீண்டும் அதே வறுமையில் உழன்று இறந்து போனார். பத்தாண்டுகளுக்கும் மேலாக கிக்கியுடன் உறவு கொண்டிருந்த மான் ரே ஒரு கட்டத்தில் விலக வேண்டியதாக இருந்தது. அவர்கள் இருவரும் ஒரு பாரில் மது அருந்தி விட்டு திரும்பிய போது கிக்கி ஒரு போலீஸ்காரரை அடித்து விட்டாள். கிக்கி மதுவிற்கும் போதை மருந்திற்கும் அடிமையாகி காப்ரே நடன பெண்ணாகி பல காதலர்களுடன் சுற்றி திரிந்தாள். இரண்டாம் உலகப்போரில் நாஜி படை பாரீஸை ஆக்ரமித்த போது மாண்ட்பார்னாஸின் பித்து பிடித்த காலக்கட்டம் முடிவிற்கு வந்தது. நாஜி படையினர் சுதந்திர கலை முயற்சிகளை வெறுப்பவர்கள் என்பதால் மாண்ட்பார்னாஸில் இருந்த அத்தனை பேரும் ஊரைக் காலி செய்தார்கள். கிக்கி வறுமையில் உழன்று கிராமத்தில் தன் 51-வது வயதில் இறந்தாள்.

    கிக்கியின் இறுதி காலக்கட்டத்தில் மான் ரே அவளுக்கு உதவ முன் வந்ததாகவும் அதற்கு கிக்கி, “எனக்கு வெங்காயமும், பிரெட்டும், சிகப்பு வைனும் போதும்,” என்று சொன்னதாகவும் சொல்கிறார்கள். ரே வலுக்கட்டாயமாக அவளது கைகளில் பணத்தைத் திணித்த போது அவள் அந்தப் பணம் அத்தனையையும் அங்கிருந்த ஒரு பிச்சைக்காரனுக்கு கொடுத்து விட்டாளாம்.

    “கிக்கி, மாண்ட்பார்டனாஸின் ராணி, இந்த ஆணாதிக்க உலகத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணல்ல, அதே சமயம் பெண்ணுரிமை எழுச்சியின் அடையாளமும் அல்ல. பாலியல் சுதந்திரம் கொண்ட பெண்ணாக விளங்கிய கிக்கி தன்னை வதைத்த காதலர்களை மன்னிக்கும் பெண்ணாகவும் இருந்தாள். ஓவியம், இசை, நடனம், உணவு என வாழ்வின் ஆனந்தத்தினை அனுபவிக்க முற்பட்டவளாக ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் மதுபழக்கத்திலும் போதை மருந்து பழக்கத்திலும் உழன்று மீளா முடியாத நிலையிலும் வாழ்ந்தாள். இருபெரு துருவங்களிலும் உழன்று திரிந்த ஒரு பெண்ணாகவே கிக்கியின் வாழ்க்கை அவளை மாற்றி போட்டது,” என சொல்கிறது சமீபத்தில் வெளியான கிக்கியைப் பற்றிய ஒரு வாழ்க்கைச் சரிதம்.

    படங்கள்: விக்கிபீடியா

    உலகப் புகழ் பெற்ற புகைப்படங்களின் பின்னணியில் உள்ள உணர்ச்சிமிகு உண்மை கதைகள் அனைத்தையும் வாசியுங்கள்.


  • அமெரிக்காவிற்கு எதிரான போராட்டம்

    அமெரிக்க பொருட்களை வாங்காதீர்கள் என கோஷமிட்டப்படி செல்கிறார்கள் புத்த துறவிகள். எதுவெல்லாம் அமெரிக்க பொருட்கள் என்று பட்டியலிடுகிற நோட்டீஸை மக்களுக்கு வினியோகிக்கிறார்கள். இன்று செய்திதாள்களில் அந்தப் புத்த துறவிகளின் ஆர்ப்பாட்டத்தினைப் புகைப்படங்களாய் பார்க்கும் போது ஆச்சரியமாக தான் இருக்கிறது. அகிம்சையைப் போதிக்கிற புத்த மதத்தில் போர் குற்றம் செய்த அரசினை ஆதரிக்கிற புத்த துறவிகள் எப்படி உருவானார்கள்?

    ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான சபையில் இலங்கையினைப் போர் குற்றவாளியாக அமெரிக்கா சித்தரித்து விட்டது என்கிற கோபத்தில் புத்த துறவிகள் அமெரிக்காவிற்கு எதிரான போராட்டத்தினை நடத்துகிறார்கள் என்கின்றன செய்திகள். இல்லையில்லை, இந்தப் புகைப்படமே இலங்கை அரசின் யுக்தி தான் என்கிறார்கள் சிலர். அமெரிக்க வர்த்தகத்தின் மீது கண்ணிற்கு தெரியாத தாக்குதல் நடத்தினால் அமெரிக்க அரசு பணிந்து போகும் என்பதால் நடத்தப்படும் நாடகம் இது எனவும் சொல்கிறார்கள்.

    இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான துவேஷத்தை நூறு ஆண்டு காலமாய் வளர்த்ததில் புத்த துறவிகளுக்கு கணிசமான பங்குண்டு என்கிறார்கள் இலங்கை வரலாற்றை அறிந்தவர்கள். அரசாட்சியில் மட்டுமல்லாமல் சமூக அளவில் தங்களுக்கான அதிகாரத்தினைத் தக்க வைப்பதற்காக புத்த துறவிகள் இந்த ‘வெறுப்பு’ மறைமுக அரசியலைப் பல காலமாய் நடத்துகிறார்கள், அதில் வன்முறையை ஏவி விடுதலும் ஒன்று என்கிறார்கள்.

    புத்த துறவிகளின் இந்தப் போராட்டத்தைப் பார்க்கும் போது போர் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டியது ராஜ பக்ஷே மட்டும் தானா என்கிற கேள்வி எழுகிறது. சமீபத்தில் இலங்கையில் நடந்த பொது தேர்தலில் ராஜ பக்ஷேவை மீண்டும் தேர்ந்தெடுத்த சிங்கள மக்களின் பெரும்பான்மையோர் இந்தப் போர் குற்றத்தினை ஆமோதித்து அல்லவா வோட்டினைக் குத்தியிருக்கிறார்கள். குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட பிறகு மீண்டும் நரேந்திர மோடி தேர்தலில் வென்றார். குஜராத்திய மத்திய வர்க்கத்தினர் மனதில் முஸ்லீம்களுக்கு எதிரான துவேஷம் கொட்டி கிடப்பது தான் மோடியின் வெற்றிக்குக் காரணம் என்றார்கள் அங்குள்ள அரசியலை அறிந்தவர்கள்.

    சமூகத்தில் பெரும்பான்மையோனார் இப்படியான குற்றங்களை ஆமோதிப்பதை, மறைமுக காரணமாக விளங்குவதை எப்படிப் புரிந்து கொள்வது? இலங்கையில் தமிழ் வணிகர்களைக் கண்டாலே மனதினுள் கறுவி கொள்ளும் சிங்கள வணிகன், தனது பாதைக்குச் சற்றும் ஒவ்வாத தமிழனை வெறுப்பதோடு அந்த வெறுப்பை வைத்து தனது அரசியலை வென்று எடுக்கும் புத்த துறவி, பக்கத்து வீட்டு முஸ்லீம் குடும்பத்தினை என்றும் அசிங்கமாக பார்க்கும் குஜராத்திய மத்திய வர்க்க குடும்ப தலைவி, பள்ளிக்கூடத்தில் முஸ்லீம் மாணவனை வெறுக்கும் இந்து மாணவர்கள் இப்படி ‘வெறுப்பு’ பட்டியல் நீள்கிறது.

    நமது வாழ்க்கைமுறையில் இருந்து வித்தியாசப்பட்ட மனிதர்களை ஏற்று கொள்ளும் மன பக்குவத்தினை நம் சமூகத்தில் முக்கியமாக நம் குழந்தைகள் மத்தியில் உண்டாக்க வேண்டும். காலம் காலமாக நம் சமூகத்தில் இருக்கும் பகை உணர்வினையும் ‘மேல் * கீழ்’ ‘நாம் * அவர்கள்’ போன்ற ஆபத்தான எண்ணவோட்டங்களைக் களைந்து எறிய வேண்டும். இதற்கு கல்வி தான் முக்கிய பங்கு ஆற்ற வேண்டும். இந்த ‘வெறுப்பு’ இலங்கையில் உள்ள புத்த துறவிகள் பற்றியது மட்டுமல்ல. இன்றும் தமிழக கிராமங்களில், பள்ளிக்கூடத்திற்குப் போகும் மகனிடம், “அந்தச் சாதி பையனோட பழகாத,” என்று சொல்லியனுப்பும் தாய்மார்களைப் பற்றிய விஷயமாகவும் பார்க்க வேண்டும்.


  • கூடங்குளத்தில் எதிர்பார்த்தது போலவே அரசு தன் முழு வலிமையையும் காட்டி அணுமின் உலைக்குத் திறப்பு விழா நடத்தி விட்டது. அணுமின் உலைகளைக் கட்டும் போது முதலில் சொல்லப்படும் விஷயமே அங்குள்ள மக்கள் அதற்கு அனுமதி தந்து விட்டார்கள் என்பது தான். ஆனால் 144 தடையுத்தரவைப் போட்டு நடந்திருக்கும் இந்த திறப்பு விழா விதிமுறைகளை மீறிய செயல். குவிந்திருக்கும் போலீசார், வாகனங்களுக்கு/மக்களுக்கு அனுமதி மறுத்தல் போன்றவை மனித உரிமை மீறல் மட்டுமல்ல சட்ட புறம்பானதும் கூட.

    இடைதேர்தல் வரை காத்திருந்து இந்தச் செயலைச் செய்திருக்கும் அரசு கூடவே கோடி ரூபாய் செலவில் அங்குள்ள மக்களுக்கு நலபணி திட்டம் அறிவித்து எலும்பு துண்டினை எறிந்து இருக்கிறது. மக்களைப் பற்றி அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருப்பவர்களுக்கும், அவர்களுக்கு ஆலோசனை சொல்பவர்களுக்கும் மக்கள் எலும்பு துண்டுகளைக் கவ்வி கொண்டு நிற்கும் நாய்கள் போல தெரிவார்கள் போல.

    மாற்று கருத்தினை எதிர்கொள்ள துளியும் இஷ்டமின்றி, அடக்குமுறைகளை ஏவி போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர துடிக்கும் அதிகாரம் கண்டனத்திற்குரியது.


  • அவனை எனக்கு முதலில் அடையாளமே தெரியவில்லை. தாடியும் சிவந்த கண்களும் அழுக்கேறிய வெள்ளைச் சட்டையும் அவனை வேறு யார் போலவோ எனக்குக் காட்டியது. அவன் ஜியாவுதீன். அவனிடம் நெருங்கி பழகியதில்லை என்றாலும் முந்தைய மூன்று சந்திப்புகளுமே போதும் அவனை நான் மறக்காமல் இருக்க. அப்படி ஒரு வித்தியாசமான குணாதிசயமுடையவனாக இருந்தான். சில வருடங்களுக்கு முன்பு ஒரு கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தான் அவனைச் சந்தித்தேன். என் நண்பன் ஒருவன் அவனைப் பற்றி மிக உயர்வாக சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தான்.

    சிவந்த நிறம். போலீஸ் போல கிராப். துறுதுறுவென சுறுசுறுப்பு. சத்தமாய் பேசும் பாங்கு. அவன் அப்போது ஓர் இளம் கம்யூனிஸ்ட். பொதுவான அந்தச் சந்திப்பிற்கு பிறகு சில நாட்களிலே ஒரு புத்தக அறிமுக விழா கூட்டத்தில் மீண்டும் சந்தித்தோம். சில சம்பிரதாய் பேச்சுகளுக்குப் பிறகு அவனுடைய குடும்பம் பற்றி பேச்சு மாறியது.

    “எங்க வீட்ல இப்போ என்னை நாத்திகன்னு திட்டுறாங்க. ஒரு முஸ்லீம் பையன் இப்படிக் கெட்டு போகலாமா அப்படின்னு கவலைப்படறாங்க.”

    குடும்பத்தைப் பற்றி அபூர்வமாய் சொன்னது தவிர அவனது பேச்சில் மற்றதெல்லாம் கொள்கைகள் பற்றி தான். பேச்சில் அறிவுமிடுக்கு இருந்தது. கம்யூனிச சிந்தாந்தத்தின் மீது மிகுந்த ஆவலுடன் நிறைய புத்தகங்களைத் தேடி தேடி படித்து கொண்டு இருக்கிறான் என புரிந்தது. நான்கு பேர் நிற்கும் இடத்தில் அவன் பேசுகிற பாணியே தனிதன்மையானது. குரலை உயர்த்தி பேசுவான். சட்டென கோபப்படுவான். கட்டி கொள்வான். அழுவான். உணர்வுகளை ஒளிக்காமல் வெளிப்படுத்தும் அவனிடம் புதுசாய் அறிமுகமாகிறவர்கள் சற்று மிரண்டு தான் போவார்கள். ஆனால் தன்னுடைய கொள்கைகளுக்கு விரோதமான விவாதம் என்றால் முதலிலே எதாவது திட்டி விட்டு அங்கிருந்து நகர்ந்து விடுவான். அவனிடம் பொறுமையாக சற்று பணிந்து நின்றால் தான் அவனுடைய உரையினை முழுமையாக கேட்க இயலும். சுற்றியிருப்பவர்கள் அமைதியாக அவனைப் பேச்சை செவிமடுக்கிறார்கள் என்றால் நீண்ட உரையாற்றி விடுவான். அவனுடைய வித்தியாசமான குணாதிசயம் காரணமாகவே மூன்று சந்திப்புகளுமே எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது.

    நடுவில் பல வருடங்கள் உருண்டோடின. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜியாவுதீனைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டிய போது அவனது உருவ மாற்றத்தினைக் கண்டு அதிர்ச்சியானேன். இப்போது அவனுடைய ஆவேசம் தணிந்து இருந்தது. மற்றவர்கள் பேச்சினைக் கண்களைச் சுருக்கி கேட்டு கொண்டிருக்க பழகியிருக்கிறான். கம்யூனிச கொள்கையினைக் கைவிட்டு முழு முஸ்லீமாக மாறியிருந்தான். ஏன் அப்படி என்று நான் அவனிடம் கேட்கவில்லை. அவனாகவே பேசுவான் என்று காத்திருந்தால் அவன் முன் போல வெடித்து பேசுபவனாக இல்லை. நான் அப்போது தங்கியிருந்த இடமும் அவனது வீடும் ஒரே பகுதியில் இருக்கின்றன என அறிந்தேன். சந்திப்புகள் தொடர்ந்தன.

    மதத்தின் மீது இப்போது தீராத பற்று கொண்டிருந்தான். மதம் சம்பந்தப்பட்ட பல புத்தகங்களைப் படிப்பதோடு மட்டுமல்லாமல் இணையத்தில் மதப் பிரச்சாரத்திற்கான ஒரு தளத்தில் அவ்வபோது சேவையாற்றி கொண்டிருந்தான். என்னைப் பற்றி அவன் அறிந்திருந்தப்படியால் நாங்கள் பேசிய பெரும்பாலான நேரம் அவன் தனது மதம் எப்படி அறிவியலோடு ஒத்து போகிறது என்பதையே விளக்கி கொண்டு இருந்தான். பல தகவல்கள் ஆச்சரியமூட்டின. நாங்கள் பழகிய அந்தக் குறுகிய காலக்கட்டத்தில் அவன் ஜெர்மனிய நாஜி படைகள் பற்றிய வரலாற்றினைத் தேடி தேடி படித்து கொண்டு இருந்தான். இந்தச் சரித்திரம் தவறாக எழுதப்பட்டு இருக்கலாம், இரண்டாம் உலகப் போரில் தோற்றதால் தான் ஹிட்லர் கொடுங்கோலானாய் சித்தரிக்கப்படுகிறான் என்பது அவனுடைய வாதம். ஒருவேளை போரில் வென்றிருந்தால் உண்மை சரித்திரம் வேறுவிதமாய் இருந்திருக்கும் என சொன்னான்.

    ஒரு நாள் அவனுடைய வீட்டிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அவனது குடும்பத்தினர் நான் நினைத்தது போலவே இல்லை. அவர்கள் செல்வசெழிப்புடன் தான் இருந்தார்கள். நகரத்தின் நெரிசலான தெருவில் கிராமத்தில் இருந்து இப்போது தான் வந்தவர்கள் போல நன்றாக பழகினார்கள். கூட்டுக்குடும்பம்; நிறைய பேர் அவன் வீட்டில். பழைய தினசரிகளும் தூசும் பத்திரிக்கைகளும் புத்தகங்களும் ஒரு பழைய கம்யூட்டரும் இருந்த அவனது அறையினைப் பார்த்தாலே அவன் தன்னை எப்படி சுருக்கி கொண்டு விட்டான் என ஆச்சரியமாய் இருந்தது.

    “எப்ப பார்த்தாலும் புஸ்தகமும் கையுமா இருக்கான். வயசு பையன் இப்படியா இருக்கணும்? நீங்களாவது சொல்ல கூடாதா?” என்றாள் அவனது தாய்.

    மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.


  • ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கை போர் குற்றம் தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் பெரும் விவாதத்தினை உண்டு செய்திருக்கிறது. இச்சூழலில் சேனல் 4 வெளியிட்ட வீடியோக்கள் இலங்கைக்கு எதிரான வாதத்திற்கு வலு சேர்த்தன. இந்நிலையில் சர்வதேச அளவில் புகழ் பெற்ற மனித உரிமை அமைப்பான ஆம்னிஸ்டி தற்போது இலங்கையில் இன்னும் அரசு உதவியோடு தமிழர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் எதிராக தொடரும் கைது, கடத்தல், துன்புறுத்தல், கொலைகள் பற்றி 63 பக்க ‘locked away’ என்கிற ரிப்போர்ட்டினை வெளியிட்டு இருக்கிறது.

    “விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகும் இன்றும் தீவிரவாத தடுப்பு சட்டம் இலங்கையில் நடைமுறையில் இருக்கிறது. இச்சட்டத்தின் அடிப்படையில் அதிகாரிகள் எந்தவித சாட்சியமும் இல்லாமல் ஒருவரைக் கைது செய்ய முடியும், நீண்ட காலத்திற்கு அவர் மீது வழக்கு பதியாமலே காவலில் வைத்திருக்க முடியும். தீவிரவாத அமைப்பினர் என்று அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய குடும்பத்தினர், நண்பர்கள் கூட இந்த வகையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அரசின் மனித உரிமை மீறலைக் கண்டித்து பேசும் நபர்களும், பத்திரிக்கையாளர்களும் கூட இந்த வகையில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். போலீசார், ராணுவம் மட்டுமல்லாமல் அரசிற்கு ஆதரவான தனி படையினரும் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். கைது செய்யப்படுபவர்கள் சிறையிலோ அல்லது மறுவாழ்வு மையங்களிலோ அல்லது யாருக்கும் தெரியாத இடங்களிலோ வைக்கப்படுகிறார்கள். கைது செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர், அவர்கள் எங்கு எங்கு வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது போன்ற தகவல்களை அரசு பதிவு செய்வதாக தெரியவில்லை. நூற்றுக்கணக்கானோர் இப்படி கடத்தப்பட்டிருக்கிறார்கள். பலர் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு இருக்கிறார்கள். சிலர் சட்ட விரோதமாக கொல்லப்பட்டு இருக்கிறார்கள். சர்வதேச விசாரணைகள் மட்டுமே இத்தகைய அரசு பயங்கரவாதத்தினை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதோடு மேலும் நடக்காமல் தடுக்கும்,” என்று 63 பக்க ரிப்போர்ட் பல சாட்சியங்களை முன்வைத்து பேசுகிறது.


  • வலிமையான மிருகம் போல் நின்று கொண்டு இருக்கிறது அந்தப் பீரங்கி டாங்கி. அதன் துப்பாக்கி குழல் தவிர அதன் பிரம்மாண்ட அளவே பயமூட்டுவதாக இருக்கிறது. அது தவிர ரோட்டைத் தடதடக்க செய்கிற சத்தம் வேறு. ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக டாங்கிகள் சாலையை அதிர வைத்தபடி வருகின்றன. வெள்ளை சட்டை கறுப்பு பேண்ட் அணிந்த இளைஞன் அவன். கையில் ஒரு பை. கல்லூரி முடிந்தவுடன் ஷாப்பிங் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்புகிறவன் போல ஒரு தோற்றம். முதலாவதாக வரும் பீரங்கி டாங்கிக்கு முன்னால் அதன் வழியை மறித்தபடி நிற்கிறான். தூரத்தில் இருந்து பார்க்கும் போது அவன் அந்த டாங்கியைப் பார்த்து எதோ சொல்கிறான் என புரிந்து கொள்ள முடிகிறது. அவனது செயலைக் கண்டு பீரங்கி டாங்கி குழம்பி போய் சற்று நேரம் நின்று பிறகு மீண்டும் அவனைத் தவிர்த்து சற்று திரும்பி தன் வழியில் செல்ல எத்தனிக்கிறது. ஆனால் அந்த இளைஞனோ மீண்டும் மீண்டும் அந்த மிருகத்திற்கு முன்னால் போய் நிற்கிறான். ஒரு கட்டம் வரை போராடி பார்த்து அந்த அகிம்சை போராட்டத்தால் பயந்து அந்த டாங்கியின் இன்ஜின் அணைக்கப்பட்டது. அந்த இளைஞன் டாங்கியின் மீது ஏறி உள்ளே இருப்பவர்களிடம் எதோ பேசுகிறான். பிறகு மீண்டும் கீழே இறங்குகிறான். இப்போது டாங்கி தன் வழியில் செல்ல முனைகிறது. மீண்டும் அந்த இளைஞன் டாங்கியின் முன்னால் வந்து நிற்கிறான். இந்த முறை நீலநிறை உடையில் இருக்கிற சிலர் பக்கவாட்டில் இருந்து ஓடி வந்து அந்த இளைஞனை அங்கிருந்து இழுத்து கொண்டு போகிறார்கள். அவர்கள் பக்கத்தில் கூட்டத்தோடு கூட்டமாய் மறைந்து போன பிறகு டாங்குகள் ஒன்றன்பின் ஒன்றாய் மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்குகின்றன. நடந்து கொண்டு இருக்கும் சம்பவத்தைத் தூரத்தில் சில கேமராக்கள் படமெடுத்து கொண்டு இருக்கின்றன.

    சீனாவில் கம்யூனிசம்

    மாவோ
    மாவோ

    1949-ம் ஆண்டு மாவோவின் தலைமையில் சீனாவில் கம்யூனிச அரசாங்கம் உருவானது. புதிய சிந்தாந்தம், புதிய அரசு கொள்கைகள், புதிய கட்டளைகள் என மாவோவின் ஆட்சி புதுமைகளுக்கே உரியதான தொடக்க கால பிரச்சனைகள் பலவற்றை கொண்டிருந்தது. கம்யூனிச ஆட்சி சர்வதிகாரமாய் மாறியது. அங்கே மாற்றுகருத்துகளுக்கோ போராட்டக்காரர்களுக்கோ இடமில்லை என்கிற அளவு கட்டுப்பாடுகள் அதிகரித்தன. இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த மாவோ 1976-ம் ஆண்டு இறந்தார். அவரது இறப்பிற்குப் பிறகு இனி இதே பாணியில் அரசை நடத்தி செல்ல முடியாது என சீன கம்யூனிஸ்ட்கள் விவாதிக்க தொடங்கினர். மாவோவின் இறப்பிற்குப் பிறகு டெங் சீயோபிங் என்பவர் ஆட்சியைத் தனது கட்டுபாட்டிற்கு கொண்டு வந்தார். அதிகாரப்பூர்வமாக டெங் எந்த தலைமை பொறுப்பிலும் இல்லாவிட்டாலும் சீனாவின் தலைமை அதிகாரத்தைப் பிறகு 1992-ம் ஆண்டு வரை அவர் தான் இயக்கி கொண்டு இருந்தார்.

    அரசியலிலும் பொருளாதாரத்திலும் பல மாற்றங்களையும், ஏற்கெனவே உள்ள கடுமையான கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளைக் கொண்டு வருவதில் டெங் முக்கிய பங்காற்றினார். டெங்கின் நம்பிக்கை பெற்ற ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் ஹு யோபாங். டெங் பல பதவிகளை ஹுவிற்கு அளித்தார். 1982-ம் ஆண்டு தொடங்கி 1987-ம் ஆண்டு வரை ஹு கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் பொது செயலாளராக பதவி வகித்தார். தன்னுடைய கருத்துகளை வெளிப்படையாக பேசுவதிலும், அரசாங்கத்தினுள் வெளிப்படைத்தன்மை வேண்டும் என சொல்வதிலும் புகழ் பெற்றிருந்த ஹு யோபாங் மீது மற்ற மூத்த கம்யூனிஸ்ட்கள் கோபத்தில் இருந்தனர். மாவோ பாணி சஃபாரி உடைகள் அணிவதை முதலில் துறந்தவர் ஹு தான். ஒருமுறை அவரிடம் நவீன சீனாவிற்கு மாவோவின் எந்தச் சிந்தனைகள் இன்றும் பொருந்தும் என்கிற கேள்வி கேட்கப்பட்டது. மாவோவின் எந்தச் சிந்தனையும் இன்றைய சீனாவிற்கு உதவாது என்று பதில் அளித்தார் ஹு. 1987-ம் ஆண்டு அரசிற்கு எதிராக நடந்த மாணவர் போராட்டத்தைக் கடுமையான முறையில் முறியடிக்கவில்லை என ஹு மீது கம்யூனிஸ்ட தலைவர்கள் குற்றம் சாட்டினர். இதன் நீட்சியாக ஹுவின் மீது டெங்கும் மனகசப்பில் இருந்தார். தொடர்ச்சியாக ஹு தான் வகித்து வந்த பொது செயலாளர் பதவியைத் துறக்க வேண்டியதாயிற்று. அரசியலில் பிறகு தனிமைப்படுத்தபட்ட ஹு மீது பொதுமக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு மிகுந்த நல்லெண்ணம் இருந்தது.

    உலகமெங்கும் கம்யூனிசத்திற்கு சரிவு

    1980-91 ஆண்டு வரை உலகம் முழுக்க பல கம்யூனிச நாடுகள் முக்கியமான மாற்றங்களைச் சந்தித்தன. சோவியத் யூனியனில் அரசாங்கத்தில் பல புதுமையான மாற்றங்களைச் செய்ய தொடங்கினார் கோர்ப்பசேவ். பிறகு சோவியத் யூனியன் பல துண்டுகளாய் உடைந்தது. ஜெர்மனியை இரண்டு நாடாக பிரித்து வைத்திருந்த பெர்லின் சுவர் உடைக்கப்பட்டது. ஜெர்மனி ஒரே நாடாக ஒன்றிணைக்கப்பட்டது. போலாந்து, செக்ஸ்லோவாக்கியா, ரோமானியா ஆகிய நாடுகளில் கம்யூனிச அரசாங்க அமைப்பு தூக்கி எறியப்பட்டு மாற்று அரசாங்கங்கள் பதவியேற்றன. உலகமெங்கும் நடந்த மாற்றங்கள் சீன மக்களிடத்திலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் வலிமையான தாக்கத்தினை ஏற்படுத்தி இருந்தன.

    சீனாவில் மாற்றங்கள்

    உலகம் எங்கும் கம்யூனிச நாடுகள் பெரும் மாற்றத்தினைச் சந்தித்த வேளையில் டெங் சீனாவில் பொருளாதார அளவில் பல மாற்றங்களை உருவாக்க முனைந்தார். சந்தைகளை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கி சுதந்திரமாக்கினார். எனினும் தொடக்க காலக்கட்டத்தில் இந்த மாற்றங்கள் தோல்வியைச் சந்தித்தன. 88-ம் ஆண்டு டெங் சீனாவில் பெரும்பாலான பொருட்கள் சந்தை விலைக்கு விற்கப்படும் என்று அறிவித்தார். அதுவரையில் அமுலில் இருந்த குறைவான விலை, வேலைவாய்ப்பிற்கான உத்தரவாதம் மேலும் பல சமூக மேம்பாடு திட்டங்கள் எல்லாம் இனி இருக்க போவதில்லை என பீதி கிளம்பியது. இதைத் தொடர்ந்து பலரும் பணத்தைப் பதுக்க தொடங்கினார்கள். பொருளாதாரம் சரிய தொடங்கியது. அரசாங்கம் தனது திட்டத்தை அப்போதைக்குக் கைவிட்டது. ஆனாலும் பொருளாதார மாற்றங்கள் பலவித விளைவுகளை உண்டு செய்தது. பட்டதாரி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு குறையத் தொடங்கியது. நல்ல அரசாங்க வேலை வேண்டும் என்றால் லஞ்சம் கொடுக்க வேண்டும் அல்லது அதிகார மட்டத்தில் யாராவது சிபாரிசு செய்ய வேண்டும் என்கிற நிலை நீடித்தது. பொருளாதார மாற்றங்கள் நிகழும் வேகத்தில் அரசியல் மாற்றங்கள் அரங்கேறவில்லை. முக்கியமாக சர்வதிகார தன்மையினைத் தளர்த்துவது குறித்தான விவாதத்தில் முக்கிய முன்னேற்றம் எதுவுமில்லை.

    எண்பதுகளின் பிற்பகுதியில் சீனாவில் இளைஞர்கள் பெரிதும் நம்பிக்கை இழந்து இருந்தனர். இந்தக் காலக்கட்டத்தில் தான் பேங் லிசி என்பவர் சீன இளைஞர்களிடையே புகழ் பெற தொடங்கினார். பேங் லிசி ஒரு பேராசிரியர். சிறிது காலம் அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவிட்டு சீனாவிற்கு திரும்பிய பேங் லிசி சீன பல்கலைக்கழகங்களுக்கு பயணித்து அங்கு மனித உரிமை குறித்தும், சுதந்திரம் குறித்தும், அதிகார பரவலாக்கம் குறித்தும் பேச தொடங்கினார். அவருடைய பேச்சும் சிந்தனையும் பல சீன மாணவர்களை ஒன்றிணைக்க தொடங்கியது.

    1989 தியனன்மென் போராட்டம்

    சீனா
    ஹு யோபாங்

    உலகம் எங்கும் கம்யூனிச நாடுகள் சந்தித்த சரிவு, பொருளாதார மாற்றங்கள் கொண்டு வந்த அவநம்பிக்கை, அரசாங்கத்தின் சர்வதிகாரம், கம்யூனிச அமைப்பினுள் பெருகிய ஊழல் மற்றும் அதிகாரத்தினைத் தவறாக பயன்படுத்து சம்பந்தமான குற்றச்சாட்டுகள், ஹு போன்ற தலைவர்கள் பதவி இழந்தது, பேராசிரியர் பேங் லிசி போன்றவர்களின் தாக்கம் இவற்றின் காரணமாக சீன இளைஞர்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராடுவதற்கான மனநிலையில் இருந்தனர். இந்தக் காலக்கட்டத்தில் ஹு 1989-ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக இறந்தார். அவருக்கு இறுதி மரியாதை செலுத்த பத்து கிலோமீட்டர் தூரம் மக்கள்கூட்டம் வரிசையில் காத்திருந்தார்கள் என சொல்லப்படுகிறது. அவருடைய இறுதி ஊர்வலத்திற்கு 50000-யிற்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டனர். ஹுவின் இறுதி ஊர்வலத்தினை சீன அரசு இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த உணர்வெழுச்சி மாணவர்களை அரசாங்கத்தின் சர்வாதிகார அமைப்பிற்கு எதிராகவும் போராட தூண்டியது. பலவித கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் அரசிற்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். தியனன்மென் சதுக்கத்தில் பெரிய அளவில் உருவெடுத்த இப்போராட்டத்தை இன்றும் தியனன்மென் போராட்டம் என்றே அழைக்கிறார்கள். மாணவர்களின் போராட்டத்திற்கு பொதுமக்களிடத்திலும் பரவலான வரவேற்பு இருந்தது. பல நகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. டெங் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்தார். அதோடு அவர்களைத் தேச பற்று இல்லாதவர்கள் என வர்ணித்தார். அரசாங்கத்தின் மேல்மட்ட நிலையில் இருந்தவர்கள், வளர்ந்து வரும் போராட்டங்கள் கம்யூனிச ஆட்சியினை முடிவிற்கு கொண்டு வந்து விடும் என்கிற பயத்தில் இருந்தார்கள்.

    ஒன்றரை மாதங்களாக சீனாவெங்கும் ஆதரவு பெற்று வளர்ந்த மக்கள் போராட்டத்தினை கடுமையாக எதிர்கொள்வது என டெங் தீர்மானித்தார். ஜுன் மாத தொடக்கத்தில் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தினை ராணுவம் எதிர்கொண்டது. ஏகே 47 துப்பாக்கியால் ராணுவம் மக்களை நோக்கி சுட தொடங்கிய போது மக்களால் இதை நம்பவே முடியவில்லை. ராணுவம் சொந்த மக்களை கொல்வதை அவர்கள் கேள்விபட்டிருக்க மாட்டார்கள். நாள் முழுக்க இந்த வேட்டை நிகழ்த்தப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் தேடி தேடி கொல்லப்பட்டார்கள். சாலைகளில் இறந்து கிடந்தவர்களின் உடலை அகற்ற முயன்றவர்களும் சுட்டு கொல்லப்பட்டார்கள். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என மனித உரிமை ஆர்வலர்கள் சொல்கிறார்கள். அரசு கணக்குப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை 241.

    புகைப்படம்

     

    சீன ராணுவத்தின் வேட்டை நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் தான் இந்த பீரங்கி டாங்கியைத் தனியே ஓர் இளைஞன் எதிர்கொண்ட சம்பவம் நடந்தது. மிருகத்தனமாய் நிற்கும் பீரங்கி டாங்கிக்கு எதிராக தனியாளாய் துணிந்து நிற்கும் இளைஞனின் புகைப்படம் சீன போராட்டக்காரர்களின் துணிவை மட்டுமல்ல, உலகமெங்கும் இது போன்ற அதிகாரத்தை எதிர்த்து போராடும் மக்களின் துணிவைப் பிரதிபலிக்கும் உலகப்புகழ் பெற்ற புகைப்படமாய் மாறியது.

    பீரங்கி டாங்கிக்கு எதிரே துணிந்து நின்ற இளைஞனின் பெயர் என்ன என்பதோ அல்லது அதற்கு பிறகு அவர் என்னவானார் என்பதை பற்றியோ இது வரை உறுதியான தகவல்கள் எதுவுமில்லை. ஒரு சிலர் அந்த இளைஞன் பிறகு ராணுவத்தால் கொல்லப்பட்டான் என சொல்கிறார்கள். ஒரு சிலர் இந்த இளைஞன் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.

    இந்தச் சம்பவத்தைப் பல புகைப்படக்காரர்கள் புகைப்படம் எடுத்து இருந்தாலும் அசோசியேட் பிரஸ் புகைப்படக்காரர் ஜெஃப் வைட்னர் எடுத்த புகைப்படம் தான் இன்றும் பிரபலமாக இருக்கிறது. (இந்தப் பதிவில் உள்ள முதல் புகைப்படம்!)

    சீனாவில் இந்தப் புகைப்படம் தடை செய்யப்பட்டு இருக்கிறது.

    உலகப் புகழ் பெற்ற புகைப்படங்களின் பின்னணியில் உள்ள உணர்ச்சிமிகு உண்மை கதைகள் அனைத்தையும் வாசியுங்கள்.


  • ஓர் அரசாங்கம் ஒரு போராட்டத்தினை எப்படி அணுக வேண்டும்? சம்பந்தபட்டவர்களைக் கைது செய்து கடுமையான தண்டனை கொடுக்கலாம். அப்படி தான் பல சர்வதிகார அரசுகள் செய்கின்றன. ஆனால் இன்றைய இந்திய அரசு சிவில் உரிமைகளை மதிக்கும் அரசு. அதனால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதுவும் செய்ய மாட்டார்கள். முதலில் பேச்சு வார்த்தை, பிறகு சமாதான தூதர்கள், அப்புறம் ஊடக பிரச்சாரம், அதன்பிறகு எதிராளிகள் மேல் அவதூறு பரப்புதல், இறுதி கட்டத்தில் காவல்துறை பூச்சாண்டி என்று படிபடியாக தங்களது அணுகுமுறையை விரித்து கொண்டு போவார்கள். (இந்த அணுகுமுறை கூட இடத்திற்கு இடம் மாறும். காஷ்மீரோ வடகிழக்கு மாநிலங்களோ அல்லது இலங்கைக்கு எதிரான போராட்டங்களாக இருந்தால் அரசு அணுகுமுறை இன்னும் கடினமானதாக மாறி போகும்.)

    ஓர் அரசு தங்களுக்கு எதிரான அல்லது தாங்கள் எடுத்த ஒரு முடிவிற்கு எதிரான ஒரு மாற்றுகருத்தினை எப்படி அணுகுகிறது என்பதை வைத்து அந்த நாட்டின் ஜனநாயகம் எந்தளவு ஆரோக்கியமாக இருக்கிறது என சொல்ல முடியும்.

    எடுத்தவுடன் கைது என்றாலும் சரி அல்லது இப்போது இந்திய அரசு கொண்டுள்ள பலநிலை அணுகுமுறையாக இருந்தாலும் இதன் அடிப்படை ஒன்று தான். அது மாற்றுகருத்தினை சிறிதும் காது கொடுத்து கேட்கவில்லை என்பது தான். கூடங்குளம் பேச்சு வார்த்தையின் போது போராட்டக்குழுவினை எப்படி தாஜா செய்வது என்பது தான் நோக்கமாக இருந்ததேயன்றி மாற்றுக்கருத்தினில் இருக்கும் நியாயத்தினைப் புரிந்து கொள்ளும் நோக்கம் இல்லை.

    இப்போது காவல்துறை, வெளிநாட்டு சதி, சிபிஐ என தங்களது அணுகுமுறையின் இறுதிநிலையில் சர்வதிகார அரசு போல தான் இன்றைய அரசு மாறி விட்டது.

    மாற்று கருத்தினை காது கொடுத்து கேட்பது என்பது என்ன?

    நேரு காலத்து இந்தியா தன்னளவில் கொள்கைகளைக் கொண்ட ஒரு நாடாக இருந்தது. இன்றோ நாம் வல்லரசு பகற்கனவில் அமெரிக்க சாயத்தைப் பூசிக் கொண்டு திரிகிற சமூகமாக இருக்கிறோம். இந்திய அரசுக்கு இன்று உலக அரங்கில் என்ன மதிப்பு இருக்கிறது? இலங்கை போற்குற்றங்களுக்கு உடந்தை, இஸ்ரேலுக்கு ஆதரவு என அதன் பாதை வேறு பக்கமாய் திரும்பி விட்டது. இந்தியாவின் இன்றைய மத்திய வர்க்கத்தினர் அமெரிக்காவில் உள்ள மத்திய வர்க்கத்தினரை விட பேராசைமிக்கவர்களாய் இருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் வாழும் மத்திய வர்க்கத்தினரின் பேராசை உலகத்தில் உள்ள அனைத்து வளங்களையும் ஏற்கெனவே காலி செய்யும் முனைப்பில் உள்ளது. இந்திய மத்திய வர்க்கமும் அந்த வேலையில் இறங்குவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தபடி தயாராக இருக்கிறது. இவர்களுக்கு சாதகமாக நடப்பதாய் பிம்பத்தை உண்டு செய்து தங்களது கொள்கைகளை அமுல்படுத்துகின்றன அந்தந்த நாட்டு அரசாங்கங்கள்.

    மாற்று கருத்துகளை உள்வாங்கி மைய நீரோட்டத்தில் ஒதுக்கப்பட்டவர்களையும் அரவணைத்து செல்லுதல் நல்ல அரசாங்கமா? அல்லது ஒரு கட்டுகோப்பான வணிக நிறுவனம் போல நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி கொண்டே போவதை முதல் குறிக்கோளாய் கொண்டிருத்தல் நல்ல அரசாங்கமா?

    பெருகி வரும் மின்பற்றாகுறையைப் போக்க இன்று அணுமின் உலைகளை விட்டால் வேறு வழியில்லை என்று தொடர் பிரச்சாரம் நடக்கிறது. ஆனால் அரசு தரப்பில் யாரும் வெளியில் சொல்லாத சில உண்மைகள் உண்டு.

    அணுமின் உலை செயல்பாட்டிற்கு வரும் போது அதில் இருந்து வெளியாகும் கழிவுகள் ஆபத்தான கதிர்வீச்சு நிரம்பியதாக இருக்கும். ஆபத்தான புளுட்டோனியம் இந்த கழிவுகளில் இருப்பதும் ஒரு காரணம். இந்த கழிவுகளின் கதிர்வீச்சு கட்டாயமாக கேன்சர் தொடங்கி பலவித நோய்களைப் பல தலைமுறைகளுக்கும் ஒருசேர ஏற்படுத்தும். முப்பது டன் கழிவுகளிலிருந்து உண்டாகும் கதிர்வீச்சு, இரண்டாம் உலக போரில் ஹீரோசிமா நகரில் வீசப்பட்ட அணுகுண்டு போல ஆயிரம் மடங்கு ஆபத்தானது என்கிறார்கள். இந்தக் கழிவுகள் குறைந்தது 50000 ஆண்டுகளுக்கு கதிர்வீச்சு தன்மையுடையதாக தொடர்ந்து இருக்கும். இந்தத் தகவல்களை அரசு தரப்பில் யாரும் மறுக்க முடியாது. ஆனால் இதை அவர்கள் வெளியில் சொல்லாமல் இருக்கிறார்கள்.

    கழிவுகளை பாதுகாப்பாக ஒளித்து விடுவோம் என்கிறது அரசு. உலகம் எங்கும் இந்தக் கழிவுகளை கடலுக்கு அடியிலோ நிலத்திற்கு அடியிலோ ஆழமாய் ஒளித்து வைக்கிறார்கள். ராக்கெட் மூலம் இத்தகைய கழிவுகளை விண்வெளியில் எறிந்து விடலாம் என்று கூட சில நாடுகள் யோசிக்கின்றன. ஆனால் ஐம்பதாயிரம் வருடங்களுக்கு தொடரும் இந்த ஆபத்தினை எப்படி சரியாக கையாள்வது என்று உலகில் யாருக்கும் இன்று வரை தெரியாது. ஆனாலும் உலகம் எங்கும் பல நாட்டு அரசாங்கங்கள் அணுமின் உலைகளைப் பற்றிய உண்மைகளை மறைப்பதிலே குறியாக இருக்கின்றன.

    த்ரீ மைல் தீவு (1979), செர்னோபிள் (1986), ஜப்பான் பூகிசிமா (11 மார்ச் 2010) அணு/அணுமின் விபத்துகளுக்குப் பிறகும் இன்னும் பல அரசாங்கங்கள் இந்த ஆபத்தினைச் சரியாக புரிந்து கொள்ளவே இல்லை. இப்போது ஜெர்மனி மட்டும் 2020-ம் ஆண்டிற்குள் அணுமின் உலைகளைப் படிபடியாக குறைப்பதாய் அறிவித்து இருக்கிறது.

    இன்னும் ஐம்பது வருடங்களில் மனிதகுலத்தை ஆட்டி படைக்கும் பிரச்சனையாக ஆபத்தான கதிர்வீச்சு தான் இருக்க போகிறது. சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்திய மனிதகுலம் இறுதியாக தனது அழிவிற்கு வழிகோலுவதாக அணுமின் திட்டங்களை உருவாக்கி கொண்டு இருக்கிறது. ஐம்பது வருடங்கள் கழித்து எல்லா நாடுகளும் தங்களது தவறை நினைத்து வருந்தி திருந்திய பின்னர் திருந்துவது தான் இந்திய அரசின் நிலைப்பாடாக இருக்கும். அது வரை அவர்கள் மாற்றுகருத்தினை உதாசீனப்படுத்தவே செய்வார்கள். அது வரை அவர்கள் அபத்தமான ‘சுனாமி வந்தாலும் ஆபத்தில்லை, நிலநடுக்கம் வந்தாலும் ஆபத்தில்லை,’ போன்ற பிரச்சாரங்களைத் தொடர்ந்து வலியுறுத்தியபடி தான் இருப்பார்கள். இன்று இந்திய அரசு உலக நாடுகளுக்கு முன்னோடியாக இல்லை. உலக நாடுகளை பின்தொடர்ந்து செல்லும் ஆட்டுமந்தையில் ஓர் ஆடாகவே இருக்கிறது.


  • வருடங்கள் உருண்டோடி
    தனிமையிலே முதியவர்கள் ஆனோம்.
    முகத்தில் சுருக்கங்களுடன்
    எத்தனையோ எத்தனை வருத்தங்கள்.
    அவர் வருவதற்காக காத்து இருந்தோம்.
    எங்கள் இளமையை மீட்பதற்காக
    அந்த வருகை.
    மீண்டும் நாங்கள் இளைஞர்களாக மாறுவோம்.
    அதுவரை சலனமற்ற நீர்பரப்பில் பிரதிபலிப்போம்
    எங்கள் வருத்தங்களை.


  • இந்தியாவில் ஒரு புத்தகத்தை தடை செய்வதற்கு நிறைய சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும். ஒரு மாநில அரசாங்கம் தான் அத்தகைய செயலில் ஈடுபட முடியும். அதற்கு அந்த அரசு, நீதிமன்றத்தில் முழுமையான விவாதம் நடத்தி தனது நடவடிக்கைக்கு சட்ட ஒப்புதல் பெற வேண்டும். சல்மான் ருஷ்டியின் ‘சாத்தானின் செய்யுள்கள்’ புத்தகம் அத்தகைய முழுமையான சட்ட வழிமுறைகளால் தடை செய்யபட்டது அல்ல. 1988-ம் ஆண்டு ‘சாத்தானின் செய்யுள்கள்’ வெளியான போது உலகம் முழுக்க பல இடங்களில் முஸ்லீம்கள் அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்தியாவில் அப்போது இருந்த ராஜீவ் காந்தி அரசு இந்த புத்தகத்தை வெளிநாட்டில் இருந்து கொண்டு வருவதற்கு தடை விதித்தது. வெறும் customs act-இல் தடை செய்யபட்டது மட்டுமே இந்த புத்தகம். இப்போது சல்மான் ருஷ்டி ஜெய்பூர் இலக்கிய விழாவிற்கு வருவது யாருக்கு பிடிக்கவில்லையோ தெரியவில்லை, வழக்கமாய் அவர் இந்தியாவிற்கு வரும் போதெல்லாம் நடக்கும் ஆர்ப்பாட்டங்களை காட்டியே இந்த முறை அவரை வரவிடாமல் செய்து விட்டார்கள். இதில் தீவிரவாதிகளின் பெயரில் பொய் வதந்தி வேறு. இறுதியாக அவர் வெப் கேம் மூலம் விழாவில் பேச அனுமதி கொடுத்து பிறகு கடைசியில் வயரை அறுத்து விட்டு என்று காவல்துறையினரும், மாநில அரசாங்கமும் ஜோக்கர்களாயின. ‘சாத்தானின் செய்யுள்கள்’ புத்தகத்தில் இருந்து சில பகுதிகளை மேடையில் படித்து காட்டியவர்களும் மிரட்டப்பட்டு இருக்கிறார்கள். முஸ்லீம்கள் ருஷ்டியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவது அவர்கள் உரிமை. அது போல சல்மான் ருஷ்டிக்கு பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டியது அரசின் கடமை. ஜனநாயக நாட்டின் அரசாங்கம் அப்படி தான் செயல்பட்டு இருக்க வேண்டும். ஆனால் பிரச்சனைகள் எதுவுமே நிகழ்ந்து விடக்கூடாது என்கிற பதட்டத்தில் சட்டத்தை தாண்டி அரசு செயலாற்றி இருக்கிறது. தங்களுக்கு பிரச்சனை வந்து விடக்கூடாது என்பதற்காக சட்டங்களை புறந்தள்ளி அல்லது சட்டத்தை தவறாக காட்டுகிற அதிகாரத்தின் இரண்டாம் நிலையினரின் சதி இது. மற்றொரு பக்கம் தாங்கள் பாலுக்கும் காவலன், பூனைக்கும் தோழன் என்று டாப் லெவல் அதிகாரம் வேடம் போடுகிறது. வெளிபடையாக அவர்கள் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக பேச மாட்டார்கள். அதே சமயம் திரைமறைவில் இது போன்ற காரியத்தில் ஈடுபடுவார்கள். ஓவியர் எம்.எப்.உசேன், தஸ்லீமா நஸிரீன் என இந்த கபட நாடகத்திற்கு பலியானவர்கள் ஏராளம்.