• தினமும் நடக்கும் விஷயம் தான்.
    தன் அறையிலிருந்து வெளியே வந்தவுடன்
    அவளை அந்த மிருகம் பின்தொடரும்.
    அரூபமானது! வக்கிரமானது! நிழல் போல!
    சூடான மூச்சுக்காற்றினைப் பின்கழுத்தில் உணர்வாள்.
    பின்புறத்தில் அதன் பார்வையின் சூடு எரிச்சலூற்றும்!
    பழமொன்று கெட்டு போனதைப் போன்ற
    அதன் வாடை எங்கும் நிரம்பி இருக்கும்!
    நெருக்கடியான ஜனக் கூட்டத்தில் காதில்
    எதாவது முணுமுணுத்து கொண்டே இருக்கும்.
    ஆட்களற்ற தார் சாலையில் அவள் நடக்கும் போது
    உயர்ந்து எழும்பி இருக்கும் கட்டிடங்களின்
    ஜன்னல்கள் அதன் கண்களாய் மாறியிருக்கும்.
    காலங்கள் கடந்தாலும் அது அன்னியமாகவே இருக்கிறது.
    அவளுடைய பதட்டம் குறையவே இல்லை.


  • அது ஓர் அகதிகள் முகாம். சில கிலோமீட்டர் தொலைவில் அவர்களுடைய சொந்த ஊர் இருந்தது. எனினும் அவர்களால் அங்குப் போக முடியாது. சொந்த ஊரில் இருந்து வரும் தகவல்கள் திகிலூட்டுவதாக இருக்கின்றன. ஊரில் இருந்த 17 வயதிற்கு மேற்பட்ட 70 வயதிற்குட்பட்ட ஆண்களை எல்லாம் மொத்தமாய் ஓரிடத்தில் கைது செய்து வைத்திருக்கிறார்கள். அங்கிருந்து தப்பித்தவர்கள் அந்த இடத்தில் எப்போதும் சித்ரவதை செய்யப்படுபவர்களின் ஓலம் நிரம்பியே இருக்கிறது என்று சொன்னார்கள். அருகில் இருந்த பாதையில் பயணித்தவர்கள் வழியெங்கும் பிணங்களாய் இருக்கிறது என்றார்கள். பலர் உயிரோடு புதைக்கப்பட்டார்கள். சிலரது கை கால்கள் வெட்டப்பட்டன. கொடூரமான சித்ரவதைகள் நிகழ்த்தப்பட்டன. மரணம் மட்டுமே அவர்களை அந்த நரகத்தில் இருந்து விடுவிக்கும் வழியாக இருந்தது.

    அகதிகள் முகாமில் பல்லாயிரக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் இருக்கிறார்கள். இன்னும் சில நேரத்தில் இடமே மக்கள் நெருக்கடியால் வெடித்து விடும் என்பது போல இருக்கிறது. சூரியன் பகல் பொழுதில் கொளுத்துகிறது. உணவோ குடிப்பதற்கு நீரோ இல்லை.… …மேலும் வாசிக்க


  • ஒரு மீட்டலில் இசைத்து விடுகிற வீணை தான்
    எனினும் ஏழு மலைத் தாண்டி ஏழு கடல் தாண்டி
    அலைந்து திரிந்தாலும் அதன் பசி அடங்குவதில்லை.

    அதன் நிறம் சூரிய கிரகணத்தைப் போன்றது.
    மூழ்கி போனவனின் வாசனை அதற்கு.
    குரலோ இரவில் பதற்றம் ஏற்படுத்தும்
    கொடூர வனவிலங்குடைய கர்ஜனை.
    தொட்டால் பனிக்கட்டி; தொடாவிட்டால்  வெயில்.

    சுமையா?
    இயந்திரமா?
    வெறும் மாயை தானோ?
    நான் தானா?
    இன்னொரு ‘நானா?’
    ஆதி ரகசிய செய்தியா?
    கடவுளோ?
    சைத்தானோ?


  • திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகி விட்டது. அந்த ஆணிற்குத் தன் திருமண வாழ்க்கை அலுக்க தொடங்கி விட்டது. அவனது பார்வை மற்ற பெண்கள் மீது நகர்கிறது. அப்போது அவனிடம் அவள் சிக்கினாள். ஒரு நாள் நியூ யார்க் நகரத்தில் இருவரும் ஒரு திகில் படத்தைத் திரையரங்கு ஒன்றில் பார்த்து விட்டு வெளியே வருகிறார்கள். நிலத்திற்கு அடியில் சப்வே ரயில் ஓடும் சத்தம் கேட்கிறது. சப்வே தண்டவாளம் ஓடும் இடத்திற்கு மேலே இரும்பு கம்பிகளால் ஆன தடுப்பு இருக்கும் இடத்திற்குச் சென்று அவள் நிற்கிறாள்.

    “இங்கு எப்படி காத்து வருது பார்,” என்று சிரித்தபடி சொல்கிறாள். கீழிருந்து வரும் காற்று அவள் அணிந்திருந்த வெள்ளை நிற கவுனைப் பட்டாம்பூச்சி இறக்கைகள் போல வடிவம் கொள்ள வைத்தது. உடை உயர்ந்தது. அவளுடைய பளீர் கால்களும், தொடைகளும் பார்வைக்குத் தெரிந்தது. அவள் சிரித்தபடி தனது உடையை அழுத்தி பிடிக்கிறாள். எனினும் அதீத காற்று தன் முயற்சியில் வென்றபடி இருந்தது.… …மேலும் வாசிக்க


  • இந்த ஊரின் காவல் தெய்வமே!

    இன்னல் நேர்ந்தால் நோய் தீர்ப்பவளே!

    அந்தக் தவறைச் செய்தது நானே!

    அகத்திலே குற்ற உணர்வு மிகுந்திருந்தேன்!

    குளிர்ந்த ஏரிநீரில் மூச்சடக்கி மூழ்கி

    உன் பார்வையில் இருந்து தப்பஎண்ணினேன்!

    பாய்ந்த ஒரு வெண்ணொளி நீரைக்

    கிழித்து ஏரியைப் பற்றி எரித்தது!


  • தெரு ஒன்று
        கட்டிடங்களின் காலடியில்.
    விறுவிறுவென நடந்தபடி
        இருக்கிறார்கள் மனிதர்கள்
    எதையோ யோசித்தபடி
        எங்கோ வெறித்தபடி.
    
    தன்னைமறந்து கூட்டத்தினைப் 
        பார்க்கும் நாய்கள்.
    விண்ணில் அலட்சியபார்வை
        பார்த்துநகரும் காகங்கள்.
    மண்துகள்கள் பறக்கின்றன
        தார் ரோட்டில்.
    
    அனல் காற்றோடு
        பெருகுகிறது வெக்கை.
    வேர்வை மிகுந்தோடுகிறது
        ஒவ்வொருவர் மீதும்.
    வெண் மஞ்சளாய்
        மங்குகிறது காட்சி.
    
    

  • என் வலைப்பதிவில் வெளியான மனிதர்கள் பதிவுகளைத் தொகுத்து தற்போது ரவிசங்கர் ‘மனிதர்கள்’ என்கிற பெயரில் இபுத்தகமாக வெளியிட்டு இருக்கிறார். நீங்கள் விரும்பிய பணத்தை கொடுத்தோ அல்லது இலவசமாகவோ இப்புத்தகத்தை தரவிறக்கி கொள்ளலாம்.

    நான் அறிந்த உண்மை மனிதர்களை/சம்பவங்களை புனைவோடு கலந்து எழுதியது இந்த மனிதர்கள் தொடர் பதிவுகள். இங்கே ஒவ்வொரு பதிவாய் வெளியான போது நிறைய பேரை சென்றடைந்தது. தற்போது இபுத்தகமாய் அது மேலும் பல பேரை சென்றடையும் என்பதில் மகிழ்ச்சி.

    என்னுடைய எழுத்தினை மேலும் பல பேர் வாசிப்பார்கள் என்பதைத் தாண்டி இந்த இபுத்தக ரிலீஸ் ‘நூல் இனி’ மின்னூல் சந்தையின் இரண்டாவது இபுத்தக வெளியீடு என்பது மற்றொரு பெருமை. பதிப்பாளர்கள் தயவில்லாமல், பத்திரிக்கை ஆசிரியர்கள் தயவில்லாமல் நம்முடைய எழுத்து மற்றவர்களை சென்றடையாது என்கிற நிலை எப்படி இணையத்தின் மூலமாகவும் முக்கியமாகவும் வலைப்பதிவுகள் மூலமாகவும் மாறியதோ அதற்கடுத்த முன்னேற்றம் நாமும் பெரும் நிறுவனங்களில் தயவில்லாமல் இபுத்தகங்களை வெளியிடலாம் என்பது தான். இதற்கான ஒரு முயற்சி ‘நூல் இனி.’… …மேலும் வாசிக்க


  • பாதி எழுதி
    வைத்து விட்டு போகும்
    கவிதையின் மிச்ச வரிகள்
    நான் திரும்பி வருகையில்
    நிரம்பி இருக்கும்.


  • ஒரு கோப்பை தேநீர்,
    துளிர்த்து தொடங்கும் காமம்,
    வானத்தில் பரவி கிடக்கும் மரக்கிளைகள்,
    என்றோ வாய்க்கிற மாடி தருணம்,
    பொதுவில் பார்க்கிற அந்நியர்கள் என
    எல்லாம் அமிழ்ந்து போகிறது
    மனதினுள் எப்போதும்
    பெய்து கொண்டிருக்கும் மழையில்.


  • 1. எனக்குக் கவிதை எழுத தெரியும் என நம்புகிறேன்.
    2. எனக்குக் கவிதை எழுத வராது. அதனால் கவிதை எழுதுவதற்குப் பழகுகிறேன்.
    3. கவிதை ஒரு போதை.
    4. கவிதை எழுதினால் புகழ் பெறலாம் என நம்புகிறேன்.
    5. நான் ஒரு சோம்பேறி. பக்கம் பக்கமாய் கதைகள் எழுதுவதை விட சில வரிகளில் கவிதை எழுதுவது சுலபம் என நினைக்கிறேன்.
    6. நான் ஒரு விஷயத்தில் ஈடுபட்டால் அதிலே அதீத ஆர்வத்துடன் ஈடுபட தொடங்கி விடுவேன். கவிதைக்கான கரு மனதில் உருவானால் அதை எழுதும் வரை அதை உருட்டி உருட்டி உழைத்து கொண்டே இருப்பேன். அந்த உழைப்பு, அதீத ஆர்வம், obsession எனக்குப் பிடித்திருக்கிறது.
    7. கவிதை புத்தகம் போடலாம். வீட்டில் நிறைய இடம் காலியாக தான் இருக்கிறது.
    8. கவிஞர்கள் நண்பர்கள் ஆவார்கள்.
    9. “நீ எதுக்குத் தான் லாயக்கி?” என்று கேட்டவர்களுக்கு நான் சொல்லும் பதில்
    10. கவிதை ஒரு தொழில்.… …மேலும் வாசிக்க