சாதி உட்பிரிவுகளை முதலில் ஒழிக்க வேண்டும்
சாதிகளுக்கு இடையே நிறைய ஏற்ற தாழ்வுகளும் வேறுபாடுகளும் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலான சாதி உட்பிரிவுகளுக்கு இடையே ஏற்ற தாழ்வுகள் அதிகமில்லை. அதனால் முதலில் சாதி உட்பிரிவுகளை ஒழிப்பது தான் சரியான அணுகுமுறையாக இருக்கும் என ஒரு தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் இது சரியான அணுகுமுறை அல்ல. வட இந்தியாவிலோ அல்லது மத்திய இந்தியாவிலோ இருக்கும் பிராமணர்களை விட தென் இந்தியாவில் இருக்கும் பிராமணர்கள் சமூகத்தில் தாங்கள் உயர்ந்த இடத்தில் இருப்பதாக சொல்லி கொள்கிறார்கள். வட இந்தியாவில் இருக்கும் பிராமணர்கள் அல்லாத வைசியர்களும் கையாஸ்தாஸும் தான் தென்னிந்திய பிராமணர்களின் அந்தஸ்தில் இருப்பவர்கள் என்று சொல்ல முடியும். அது போலவே தென்னிந்தியாவில் இருக்கும் பிராமணர்கள் சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர்கள். ஆனால் காஷ்மீரிலோ பெங்காலிலோ பிராமணர்கள் அசைவ உணவினைச் சாப்பிடுகிறார்கள். குஜராத்தியர்கள், மார்வாடிகள், பனியாக்கள், ஜெயின் மக்கள் இவர்கள் தான் சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள். சாதி உட்பிரிவுகளிலே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இதனால் இதனை ஒழித்து சாதி என்பது உட்பிரிவு அல்லாத ஒரே சமூகமாக மாற்றுவதென்பது இயலாத காரியம். அப்படியே உட்பிரிவுகளை ஒழித்து விட்டாலும் கூட, இது எப்படி சாதியை ஒழிக்கும் வழியாகும்? உட்பிரிவுகள் இல்லாத சாதிகள் இன்னும் தன்னளவில் வலிமையுடையதாக மாறி போகும்.
சமபந்தி போஜனம்
இதை தீர்வாக சொல்ல முடியாது. இது சாதியை ஒழிப்பதற்கான முழுமையான ஆயுதம் அல்ல. நிறைய சாதிகளுக்கு இடையே சமமாய் உட்கார்ந்து சாப்பிடுவது தவறாக பார்க்கப்படுவதில்லை. ஆனால் இந்த சமபந்தி போஜனங்கள் சாதி உணர்வினை குறைப்பது இல்லை.
சாதிமறுப்பு திருமணங்கள்
ஒரு சாதியினர் மற்றொரு சாதியினரை வேறொரு கிரகத்தில் வந்தவர்கள் போல பிரித்து பார்க்கும் மனநிலையை உடைக்கும் சக்தி அதிகபட்சமாக சாதிமறுப்பு திருமணங்களுக்கு உண்டு. உதிரம் கலந்து ஒருவருக்கொருவர் உறவுகளாகும் பட்சத்தில் சாதி உணர்வு குறையும் வாய்ப்பு இருக்கிறது.
சாதிமறுப்பு திருமணங்கள் ஏன் அதிகமாய் கடைபிடிக்கப்படுவதில்லை
ஆனால் உங்கள் சாதியை விட்டு இன்னொரு சாதியினரோடு திருமணம் செய்து கொள்ளுங்கள் என எவ்வளவு தான் பிரச்சாரம் செய்தாலும் அதை மக்கள் ஏற்று கொள்ள மறுக்கிறார்களே, ஏன்? சாதி செங்கற்களால் கட்டப்பட்ட சுவர் அல்ல. ஒரு தடுப்பினை எடுத்து விட்டால் சாதியினை ஒழித்து விடலாம் என நினைக்க கூடாது. சாதி என்பது ஓர் உணர்வு. அது ஒரு மனநிலை. இந்துக்கள் சாதியினை ஏன் பின்பற்றுகிறார்கள்? அது தவறானது, மனித உரிமை மீறல் என்பதால் அதை அவர்கள் பின்பற்றவில்லை. அவர்கள் தங்கள் மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர்களாக இருக்கிறார்கள். அதனாலே அவர்கள் சாதிமுறையை கடைபிடிப்பவர்களாக இருக்கிறார்கள். சாதி இன்னும் இருக்கிறது என்பதற்கு மக்களைக் குற்றம் சொல்ல கூடாது. மாறாக அவர்களது மதத்தினைத் தான் குற்றம் சொல்ல வேண்டும். சாஸ்திரங்கள் தான் சாதிகளுக்கான மதத்தினைப் போதிக்கிறது. மக்கள் சமபந்தி போஜனத்தில் கலந்து கொள்வதில்லை அல்லது சாதிமறுப்பு திருமணங்களுக்கு ஆதரவளிப்பதில்லை என சொல்வதில் அர்த்தமே இல்லை. இதற்கு சரியான தீர்வு சாஸ்திரங்களின் புனித தன்மை குறித்தான நம்பிக்கைகளை அடியோடு அழிப்பது தான். சாஸ்திரங்களிடமிருந்து மனிதர்களுக்கு விடுதலை வாங்கி தந்து விட்டால் அதன்பின் அவர்களிடம் சாதிமறுப்பு திருமணங்கள் பற்றியோ சமமாக உட்கார்ந்து சாப்பிடுவது பற்றியோ அறிவுறுத்த வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் தாங்களாகவே தங்களுக்குள் சமமாக உட்கார்ந்து சாப்பிடுவார்கள், தாங்களாகவே வெவ்வேறு சாதியினரோடு திருமண உறவு வைத்து கொள்வார்கள்.
இந்து சாஸ்திரங்களை உடைக்காமல் சாதிகளை ஒழிக்கவே முடியாது
ஒவ்வொரு இந்தும் சாதி ஒழிப்பு குறித்து காரண காரியங்களோடு சுயமாய் யோசிக்க வேண்டும் என்று சொன்னால் அதை அவர்கள் ஏற்று கொள்வார்களா?
வேதா, ஸ்மிரிதி, சதாச்சார் ஆகிய மூன்றை மட்டுமே ஓர் இந்து பின்பற்ற வேண்டும் என்கிறார் மனு. இந்த மூன்றில் ஒன்றுக்கொன்று முரண்ப்பட்ட விஷயங்கள் இருந்தால் அதில் எதாவது ஒன்றைப் பின்பற்றலாம் ஆனால் அங்கே அறிவினைச் செலுத்தி சிந்தித்து எது சரி எது தவறு முடிவு எடுப்பது என்பது கடுமையான குற்றம் என வரையறுக்கிறது மனுதர்மம். யோசிப்பதையே தவறு என சொன்ன பிறகு அந்த மக்களை நாம் எப்படி யோசியுங்கள் என சொல்வது. வேதங்களையும் சாஸ்திரங்களையும் ஒழிப்பது மட்டுமே இதற்கு தீர்வாக இருக்கும்.
மேற்கண்டவை டாக்டர் அம்பேத்கர் எழுதிய சாதியை ஒழிப்பது எப்படி என்கிற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. அம்பேத்கர் எழுதிய இந்தப் புத்தகத்தினைக் குறித்து காந்தி ஒரு கட்டுரை எழுதினார்.
இந்து குடும்பத்தில் பிறந்த அம்பேத்கர், மற்ற சாதி இந்துக்கள் அவரை நடத்திய முறையைப் பார்த்தும் அவரது மக்களை நடத்திய முறையைப் பார்த்தும் இந்து மதத்தின் மீதே மிகுந்த கோபத்தில் இருக்கிறார். ஒரு அமைப்பு அதன் பிரதிநிதிகளின் நடத்தையை வைத்தே எடை போடப்படுகிறது. அம்பேத்கர் அப்படி தான் செய்திருக்கிறார். சாதி இந்துக்கள் சாதி முறைக்கு அடிப்படையாக சாஸ்திரங்களைச் சொல்கிறார்கள். அதனால் அவர் வேதங்களைத் தேடும் போது சாதி முறைக்கு ஆதரவாகவும் தீண்டாமைக்கு ஆதரவாகவும் நிறைய ஆதாரங்கள் அவருக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் வேதங்களில் இருந்து அம்பேத்கர் காட்டும் வரிகள் ஆதாரப்பூர்வமானவை என ஏற்றுக் கொள்ள முடியாது. ஸ்மிருதிகளில் இருப்பவை அனைத்தும் அச்சில் கொண்டு வர கூடியவையோ அல்லது அதன் மூலமாக புரிந்து கொள்ளக்கூடியவையோ அல்ல. இதை படித்த பண்டிதர்கள் புரிந்து கொள்ள முடியாது. முனிவர்களும் யோகிகளும் தங்களுடைய வாழ்க்கை மூலமாக அதை புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
சாதிக்கும் மதத்திற்கும் தொடர்பு எதுவுமில்லை. சாதியின் ஆதிவேர்களைப் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் சாதி ஆன்மீக வளர்ச்சிக்கும் தேசிய வளர்ச்சிக்கும் பாதகமானது. வர்ணங்களும் ஆஸ்ரமாக்களும் சாதியோடு தொடர்புடையவை அல்ல. வர்ணத்தின் சட்டங்கள் நாம் நம்முடைய மூதாயர்களின் வழியில் தொழில் செய்ய வேண்டும் என சொல்கிறது. அது நம்முடைய உரிமைகளைப் பற்றி பேசுவதில்லை. ஆனால் நம் கடமைகளைச் சுட்டி காட்டுகிறது. மனித குலத்தின் நலத்திற்காக செயல்படுபவை வர்ணங்கள். எல்லாரும் அந்தஸ்தில் சமமானவர்களே என்று அது சொல்கிறது. கடவுளுக்கு முன்னால் பிராமணர்களும் தலித்தும் ஒன்று தான் என வரையறுக்கப்பட்டு இருக்கிறது. ஒரு காலத்தில் எல்லாரும் சமூகத்திலே சமமாய் தான் நடத்தப்பட்டார்கள். இன்றும் சில கிராமங்களில் ஓர் அரோக்கியமான உறவு இருப்பதை நாம் காண முடியும்.
…குரானை ஒதுக்கினால் அவர் முஸ்லீம் அல்ல. பைபிளை ஒதுக்குபவர் கிருஸ்துவர் அல்ல. வர்ணங்களை வரையறுக்கிற சாஸ்திரங்களை ஒதுக்குபவர் இந்துவே அல்ல. சாஸ்திரங்கள் இன்றைக்கு நிலவுகிற சாதி முறையை ஆதரிக்கிறது என்பது நிரூபணமானால் நான் இந்து அல்ல என பிரகடனப்படுத்தி விடுவேன்.
தன் கட்டுரை குறித்து காந்தி எழுதியதற்கு அம்பேத்கர் மீண்டும் பதில் தன் புத்தகத்திலே எழுதினார்.
நான் சுட்டி காட்டியிருக்கும் வேதங்களில் உள்ள வரிகள் ஆதாரப்பூர்வமானவை அல்ல என்று மகாத்மா சொல்கிறார். இதில் நான் நிபுணன் அல்ல என்பதை ஒப்பு கொள்கிறேன். அதனால் தான் இந்து சாஸ்திரங்களிலும் சமஸ்கிருத மொழியிலும் நிபுணர் என்று பாராட்டப்பட்ட திலகரின் எழுத்துகளில் இருந்து இவற்றை எடுத்து சுட்டி காட்டினேன்.
இரண்டாவதாக மகாத்மா, எழுத்தில் உள்ளவை எல்லாம் சாஸ்திரங்கள் அல்ல. முனிவர்களும் யோகிகளும் இதனை வேறு விதமாய் தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்கிறார். பொது மக்களைப் பொறுத்த வரை சரியாக புரிந்து கொள்ளப்பட்ட சாஸ்திரங்களுக்கும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட சாஸ்திரங்களுக்கும் இடையே அவர்களுக்கு ஒரு வித்தியாசமும் தெரியாது. அவர்களுக்குச் சாஸ்திரத்தில் என்ன இருக்கிறது என்பதே தெரியாது. அவர்களில் பெரும்பாலனோர் படிப்பறிவே இல்லாதவர்கள். சாஸ்திரங்கள் சாதி முறையினையும் தீண்டாமையையும் வலியுறுத்துகிறது என்று தான் அவர்களுக்குச் சொல்லப்பட்டு இருக்கிறது.
முனிவர்களும் யோகிகளும் படித்த பண்டிதர்களை விட எத்தனை தான் உயர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, (நீங்கள் சொல்வது போல்) அவர்களில் வேதங்களைச் சரியாக புரிந்து கொண்டவர்கள் யாரும் சாதி முறையை தாக்கி பேசியதே இல்லை. மாறாக அவர்களும் சாதி முறையினை ஆதரித்து தான் இருந்திருக்கிறார்கள். தங்களுடைய சாதி அமைப்பிலே தான் வாழ்ந்து இருக்கிறார்கள்.
இரண்டாவதாக முனிவர்கள் யோகிகளின் வாழ்க்கையைப் போல வாழ வேண்டும் என்று மக்கள் நினைப்பதே இல்லை. காரணம் யோகிகள் முனிவர்கள் சாதியை மீறினால் கூட தப்பில்லை. ஆனால் பொது மக்கள் அப்படி இருக்க முடியாது. அவர்கள் யோகிகளையும் முனிவர்களையும் வணங்கி துதி பாடுவார்கள் தவிர தங்கள் வாழ்க்கையில் அவர்களைப் போல செயல்பட நினைக்க மாட்டார்கள். மகாத்மாக்களோ முனிவர்களோ சாஸ்திரங்களை வேறு விதமாய் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது இங்கு ஒரு பொருட்டே அல்ல. மக்கள் எப்படி புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நமக்கு முக்கியம். அவர்கள் சாஸ்திரங்கள் தான் சாதி அமைப்பினை வலியுறுத்துகின்றன என்றே புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்து சமூகத்தில் எந்த அடிப்படை மாற்றமும் செய்யாமல் உயர்ந்த வகுப்பினராக சொல்லி கொள்பவர்கள் மனதளவில் உயர்ந்தவர்களாக நடந்து கொண்டால் இந்த சமூகம் சரியானதாக இருக்கும் என்கிறார் மகாத்மா. இதனை நான் முழுமையாக எதிர்க்கிறேன். சாதி இந்துக்களின் தனிப்பட்ட ஒழுக்கத்தினை உயர்த்த விழையும் யாரும் தங்களுடைய நேரத்தினை வீணாக்குகிறார்கள் என்று தான் சொல்வேன். சாதியை ஆதரிக்கிற நபர் உயர்ந்த ஒழுக்கமுடையவராக இருந்தாலும் சரி அவர் மற்றவர்களை அவர்களது சாதி அடிப்படையில் தானே அணுக போகிறார். விஷத்தை விற்பவன் தன்னுடைய தொழிலைத் தொடர்ந்து செய்து கொண்டே ஒழுக்கமுள்ளவனாக எப்படி மாற முடியும். அவனது கையில் இன்னும் விஷம் இருக்க தானே செய்கிறது.
குறிப்பு: மேலே நீங்கள் படித்தவை அம்பேத்கரின் ‘The annihilation of caste’ புத்தகத்தில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் பிரித்து எடுக்கப்பட்ட சுருக்கப்பட்ட பத்திகள்.
இன்று ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கரின் 121-வது பிறந்த நாள்.