திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகி விட்டது. அந்த ஆணிற்குத் தன் திருமண வாழ்க்கை அலுக்க தொடங்கி விட்டது. அவனது பார்வை மற்ற பெண்கள் மீது நகர்கிறது. அப்போது அவனிடம் அவள் சிக்கினாள். ஒரு நாள் நியூ யார்க் நகரத்தில் இருவரும் ஒரு திகில் படத்தைத் திரையரங்கு ஒன்றில் பார்த்து விட்டு வெளியே வருகிறார்கள். நிலத்திற்கு அடியில் சப்வே ரயில் ஓடும் சத்தம் கேட்கிறது. சப்வே தண்டவாளம் ஓடும் இடத்திற்கு மேலே இரும்பு கம்பிகளால் ஆன தடுப்பு இருக்கும் இடத்திற்குச் சென்று அவள் நிற்கிறாள்.
“இங்கு எப்படி காத்து வருது பார்,” என்று சிரித்தபடி சொல்கிறாள். கீழிருந்து வரும் காற்று அவள் அணிந்திருந்த வெள்ளை நிற கவுனைப் பட்டாம்பூச்சி இறக்கைகள் போல வடிவம் கொள்ள வைத்தது. உடை உயர்ந்தது. அவளுடைய பளீர் கால்களும், தொடைகளும் பார்வைக்குத் தெரிந்தது. அவள் சிரித்தபடி தனது உடையை அழுத்தி பிடிக்கிறாள். எனினும் அதீத காற்று தன் முயற்சியில் வென்றபடி இருந்தது.
Seven years Itch என்கிற ஆங்கிலப் படத்தில் வரும் காட்சி இது. காட்சியில் நடித்தவர் பிரபல நடிகை மர்லின் மன்றோ. இந்தத் திரைப்படத்தை விட அந்தக் காட்சி; அந்தப் புகைப்படம் உலகளவில் புகழ் பெற்று விட்டது.
எதோ தற்செயலாக எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல இது. திரைப்பட தயாரிப்பு நிறுவனமான திவண்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் திட்டமிட்டு உருவாக்கிய நிகழ்வு. இந்தக் காட்சியைப் படமாக்க போகிறோம் என்பதும் எங்கே என்பதும் எந்த நேரத்தில் என்பதும் முன்பே பரவலாக சொல்லப்பட்டது. 1954ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி இந்தக் காட்சி படம் பிடிக்கப்பட்டது. காட்சியைப் படமாக்கும் சமயம் அங்கே எக்கசக்க பேர் குழுமி விட்டார்கள். அதோடு நிறைய புகைப்படக்காரர்களும் வந்து விட்டார்கள். திரைப்பட இயக்குனரான பில்லி வைல்டர் சுற்றி நிற்கும் புகைப்படக்காரர்களுக்கு உதவுவதற்காக அந்தக் காட்சியைப் பதினைந்து முறை எடுத்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சாம் ஷா என்கிற புகைப்படக்காரர் எடுத்த புகைப்படம் தான் உலகளவில் புகழ் பெற்றது.
“புகைப்படத்தில் ஒரு சராசரி அமெரிக்க மத்திய வர்க்க பெண்ணைப் போல தான் மர்லின் மன்றோ இருக்கிறார். எங்கோ வெளியூர் போகும் போது திடீரென காற்றடித்து உடை உயர்ந்ததும் சிரித்தபடி அதை மறைக்க முயலும் பெண்ணை அவர் நினைவுப்படுத்துகிறார். இதில் போஸ் கொடுக்கும் மன்றோ ஆணின் பார்வைக்காக நளினம் காட்டி அதே சமயம் அதிலிருந்து தப்பிக்கவும் செய்கிறார். 1950களில் இருந்த அமெரிக்க மனநிலையைப் பிரதிபலிக்கிறது இந்தப் புகைப்படம். அன்றைய சமூக விழுமியங்களுக்காக தன் அங்கங்களை மறைக்க முயல்கிறார். அதே சமயம் அப்படி செய்யும் முறையிலே அதை நையாண்டியும் செய்கிறார். இரண்டாம் உலகப்போர் முடிந்து வல்லரசாக மாறி கொண்டிருக்கும் அமெரிக்காவின் அன்றைய எதைப் பற்றியும் கவலைப்படாத உணர்வும் சந்தோஷமும் மர்லின் மன்றோவின் முகத்தில் தெரிகின்றன,” என்கிறார் பேராசிரியை லூயிஸ் பேனர். வரலாறு மற்றும் பாலின பார்வை குறித்த வல்லுனர் இவர்.
மேலும், “அணிந்திருக்கும் உடை வெள்ளை நிறம். அவளது தலைமுடி தங்க நிறத்தில் பளபளக்கிறது. காற்றில் விரியும் உடை இறக்கைகளைப் போல் தோற்றம் கொள்கிறது. கிருஸ்துவ மரபில் மனிதர்களைக் காக்கும் தேவதையை நினைவுப்படுத்துகிறாள். அதே சமயம் கிரேக்க மரபில் வரும் காதலுக்கான கடவுள் அப்ரோடிட் காமத்திற்கு ஏங்கி நிற்பதைப் போலவும் தெரிகிறாள். அமெரிக்காவில் இன்னும் இருக்கும் பழமைவாதிகளையும் கண்டிப்பான சென்சார் போர்ட்டையும் அவள் நகைக்கிறாள். காட்சி அவளது கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவளே மேலே இருக்கும் பெண். இயற்கையின் நியதிகளை மாற்றி போடுகிறாள். ஆணின் அதிகாரத்தை ஒரு சீண்டலில் காலி செய்து விட்டாள்,” என்கிறார் லூயில் பேனர்.
20ம் நூற்றாண்டின் மறக்க முடியாத புகைப்பட போஸாக இது மாறி போனது. இந்தப் புகைப்படம் ஏன் உலகப்புகழ் பெற்றது என்பதற்குக் காரணங்களைப் பாலியல்ரீதியாக உளவியல் முறையில் அடுக்கி கொண்டே போக முடியும்.
கவர்ச்சியும் மர்மமும்
1920ம் ஆண்டு மர்லின் மன்றோ பிறந்தார். இவரது தந்தை யார் என்பது குறித்த சர்ச்சை இன்னும் தீரவில்லை. தாயார் கிளேடிஸ் வறுமையிலும் பிறகு மனநோயாலும் பாதிக்கப்பட்டார். என் கதை என்கிற தலைப்பில் மர்லின் மன்றோ எழுதிய கட்டுரையில் தனது தாய் எப்போதும் கத்தி கொண்டும் சிரித்தும் கொண்டும் இருந்தார் என்று எழுதுகிறார். ஒரு கட்டத்தில் கிளேடிஸ் மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். மர்லின் மன்றோ அனாதை காப்பகங்களில் வளர்ந்தார். 16 வயதில் திருமணம் செய்து கொண்டார். அவருடைய முதல் கணவர் போரில் வெளிநாட்டிற்குச் சென்ற பிறகு மன்றோ போர் உபகரணங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்ய தொடங்கினார். அங்கே ஒரு புகைப்படக்காரர் மர்லினை கண்டுபிடித்தார். ‘பின் அப்’ புகைப்படங்களுக்காக கவர்ச்சி போஸ் கொடுக்க தொடங்கினார். இடையில் பணக் கஷ்டத்திற்காக 50 டாலருக்காக ஒரு கேலண்டருக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்தார்.
திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்கவும் தொடங்கினார். கவர்ச்சியும் சிறுமித்தனமான சேஷ்டைகளும் அவரைப் புகழ் ஏணியின் உச்சியில் ஏற்றியது. அமெரிக்காவின் மறக்க முடியாத கனவு கன்னி என பெயர் பெற்றார் மர்லின் மன்றோ. அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டியூட் அவரை ‘எல்லா காலங்களிலும்’ சிறந்த நடிகை என புகழ்கிறது. டிவி கைட் நெட்வொர்க் திரைப்படங்களிலே கிளாமரான நடிகைகளில் நம்பர் ஒன் என்கிற அந்தஸ்தினை அளித்து இருக்கிறது.
மர்லின் மன்றோ ஹாலிவுட்டில் புகழ் உச்சியில் இருந்த சமயம் அவர் வறுமை காலத்தில் நிர்வாணமாய் கொடுத்த போஸ் பற்றிய தகவல் வெளியானது. இந்தப் புகைப்படத்தில் இருப்பது மர்லின் மன்றோவே இல்லை என சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் சொல்ல திட்டமிட்டன. ஆனால் மன்றோ அது தன்னுடைய புகைப்படம் தான் என்றும் வறுமைக் காலத்தில் அப்படி போஸ் கொடுத்தேன் என்றும் பேட்டி கொடுத்தார். இந்தப் பேட்டி சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் பயந்ததற்கு நேர்மாறான விளைவுகளை ஏற்படுத்தியது. அவருடைய தாயின் மனநோய், அனாதை இல்லங்களில் கழிந்த அவரது இளமைக்காலம், எங்குச் சென்றாலும் அவருக்கு நேரிட்ட பாலியல் தொந்தரவுகள் பற்றிய கதைகள் பத்திரிக்கைகளில் தொடர்ந்து வெளியாக ஆரம்பித்தன. அவருடைய திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற தொடங்கின.
பொருளாதாரம் வளர்ந்தாலும் மன்றோவின் தனிப்பட்ட வாழ்க்கை பல சவால்களைச் சந்தித்தபடியே தான் இருந்தது. கணவர்கள் மாறி கொண்டே இருந்தார்கள். திரைப்படங்கள் பெரும்பாலும் அவரை வெகுளி போல சித்தரித்தாலும் உண்மையில் மன்றோ அறிவாற்றல் மிக்கவராகவே இருந்தார். புகழ் பெற்ற இலக்கியவாதியான ஜான் மில்லரைத் திருமணம் செய்து கொண்டார். சொந்த திரைப்பட நிறுவனத்தைத் தொடங்க திட்டமிட்டார்.
மற்றொருபுறம் அதீத புகழ் மர்லின் மன்றோவின் குணத்தை மாற்றி கொண்டிருந்தது. பொது இடங்களில் அவர் அணியும் உடைகள் அவர் நடந்து கொள்ளும் முறைகள் விமர்சிக்கப்பட்டன. தூங்க இயலவில்லை என மன்றோ உளவியல் நிபுணர்களை நாடி சென்றார். ஆனால் போதை மருந்திற்கு அடிமையானார். பல ஆண்களோடு தொடர்பு வைத்து கொண்டதாகவும் கிசுகிசு உண்டு. அமெரிக்க ஜனாதிபதி கென்னடியும் இதில் அடக்கம் என்பார்கள். ஒரு கட்டத்தில் ஷுட்டிங் ஸ்பாட்களிலே அவருடைய நடத்தை தாங்க முடியாத அளவு மாறியது என்கிறார்கள். இதனால் திரைப்பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. ஏற்கெனவே ஒப்பு கொண்ட சினிமாக்களில் நடிக்க மறுக்கிறார் என்கிற புகார்கள் எழுந்தன. திரைப்பட நிறுவனங்கள் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. அவருடைய உடல்நிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
சரியும் தன் புகழை மீட்பதற்காக மன்றோ பல நிர்வாண புகைப்படங்களுக்குப் போஸ் கொடுத்தார். சர்ச்சைக்குரிய பேட்டிகள் அளித்தார். மீண்டும் திரைப்பட வாய்ப்புகள் பெருக தொடங்கிய சமயத்தில் தனது 36வது வயதில் இறந்து போனார். அதிகளவு போதை மருந்து உட்கொண்டதால் இறந்தார் எனவும் தற்கொலையாகவும் இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. மர்லின் மன்றோ கொல்லப்பட்டார் என்றும் கென்னடி இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்றும் அமெரிக்க உளவு நிறுவனத்தின் சதி என்றும் இல்லை இது மாபியா கும்பலின் கைவரிசை என்றும் பல கதைகள் பிறகுப் புனையப்பட்டன. அமெரிக்காவின் தீர்க்கப்படாத மர்மங்கள் வரிசையில் மர்லின் மன்றோவின் புதிர் மரணமும் இடம் பெற்று விட்டது.
அமெரிக்காவின் மறக்க முடியாத புகைப்பட போஸ்
1954ம் ஆண்டு மர்லின் மன்றோ சர்வதேச அளவில் புகழ் உச்சியில் இருந்த காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் seven years itch. கவுன் காற்றிலே பறக்கும் காட்சியிலே மர்லின் மன்றோ அணிந்திருந்த வெள்ளை நிற உடையை வடிவமைத்தவர் வில்லியம் டிராவில்லா. 2011ம் ஆண்டு இந்த உடை ஏலத்திற்கு வந்தது. 33 கோடி அறுபது லட்சம் ரூபாயிற்கு விற்பனையானது.
இந்தப் புகைப்படத்தின் காரணமாகவே அப்போதைய கணவர் ஜோ டீமேகோவோடு மர்லின் மன்றோவிற்குப் பிரச்சனை தொடங்கியது. இந்த போஸ் மிக அதீதமாக இருப்பதாக ஜோ நினைத்தார். விரைவிலே இருவரும் பிரிந்து விட்டார்கள். ஆனால் மர்லின் மன்றோவின் மர்மமான மரணத்திற்குப் பிறகு ஜோ தான் வாழ்ந்த அனைத்து நாட்களும் மர்லினின் சமாதிக்குப் பூக்களை அனுப்பி கொண்டே இருந்தார்.
மர்லின் மன்றோவின் புகழ் பெற்ற புகைப்படத்தை எடுத்த சாம் ஷா திறமையானவர். உயர்ந்த கட்டிடங்கள், விவசாயிகள், பாடகர்கள், அழகான பெண்கள் என அவர் எடுத்த புகைப்படங்கள் ஏற்கெனவே புகழ் பெற்றிருந்தன. 1950களில் திரைப்பட துறைக்கு வந்த சாம் ஷா seven years itch திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ புகைப்படக்காரர்.
காற்றிலே கவுன் உயர எழும்பும் காட்சியைப் சாம் ஷா தவிர இன்னும் பல பேர் புகைப்படம் எடுத்தார்கள். மேத்யூ சிப்பர்மென் எடுத்த புகைப்படத்தில் மர்லின் மன்றோ சற்று குனிகிறார். அவருடைய உடை பட்டாம்பூச்சி இறக்கைகள் போல விரிந்து நிற்கின்றன. பின்னால் இருக்கும் புகைப்படக்காரர்களும் தெரிகிறார்கள். எலியட் எர்விட் எடுத்த புகைப்படத்திலே மர்லின் மன்றோவின் அழகிய வடிவம் நின்ற நிலையில் பதிவாகி இருக்கிறது. கேரி வின்னோகிரான்ட் எடுத்த புகைப்படத்திலே மர்லின் மன்றோவின் கைகள் இன்னும் உடையை அழுத்தி கொண்டு இருக்கிறது. ஆனால் முகம் பின்னோக்கி சரிந்திருக்கிறது. அந்தச் சமயத்தில் எடுக்கப்பட்ட மற்ற புகைப்படக்காரர்களின் படங்களும் இன்னும் விரும்பப்படுகிறது.
மர்லின் மன்றோ அன்றைய அமெரிக்காவின் செக்ஸ் குறியீடாக இருந்தார். புகைப்படக்காரர்களுக்கு மிக அழகான போஸ்களைக் கொடுப்பதில் திறமையானவராகவும் இருந்தார். புகழ் பெற்ற புகைப்பட நிபுணரான ரிச்சர்ட் அவ்டன், “நான் இதுவரை புகைப்படம் எடுத்த எல்லா பெண்களில் மன்றோ போல திறமையானவரைப் பார்த்ததில்லை,” என்கிறார்.
இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதற்கு அடுத்த நாள் சினிமா தயாரிப்பு நிறுவன ஊழியர்கள் இந்தப் புகைப்படத்தினை அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உள்ள எல்லா நாளிதழ்களுக்கும் பத்திரிக்கைகளுக்கும் அனுப்பினார்கள். தொடர்ச்சியாக இந்தப் புகைப்படம் மக்கள் மத்தியில் காட்டுவதற்கான ஏற்பாடுகளைக் கவனித்து கொண்டே இருந்தார்கள். அவர்களுடைய முயற்சிகளைத் தாண்டி மிக பெரிய புகழினை ஈட்டி விட்டது இப்புகைப்படம்.
அமெரிக்காவின் மறக்க முடியாத புகைப்பட போஸினைப் பின்னர் பல நடிகைகளும் பல திரைப்படங்களும் காப்பியடித்தன. தமிழில் நடிகை ரம்பா உள்ளத்தை அள்ளித் தா திரைப்படத்தில் அழகிய லைலா பாடலின் தொடக்கத்தில் இந்த போஸினைக் காப்பியடித்து இருப்பார். 2013ம் ஆண்டு ஜப்பானில் நெற்பயிர்களில் இந்த போஸ் பிரம்மாண்ட சைஸில் வடிவமைக்கப்பட்டது. ‘Forever Mariyln’ என்கிற பெயரில் இந்த போஸ் பெரிய சைஸில் சிலையாக வடிவமைக்கப்பட்டு சிகாகோ நகரில் காட்சிக்காக வைக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் மத்தியில் இந்த சிலை புகழ் பெற்றாலும் உள்ளூர்வாசிகளுக்கு இது எரிச்சலை ஏற்படுத்தியது. சுற்றுலா பயணிகள் மர்லினின் கால்களை நக்குவது போலவும், உயர்ந்த கவுனுக்கு கீழே நின்று மேலே பார்ப்பது போலவும் புகைப்படம் எடுத்து கொண்டார்கள். இரண்டு முறை சிலையைச் சிதைக்கும் முயற்சியும் நடந்தது. மர்லின் மன்றோ என்றாலே சர்ச்சைகள் தானோ?