• இந்த ஊரின் காவல் தெய்வமே!

    இன்னல் நேர்ந்தால் நோய் தீர்ப்பவளே!

    அந்தக் தவறைச் செய்தது நானே!

    அகத்திலே குற்ற உணர்வு மிகுந்திருந்தேன்!

    குளிர்ந்த ஏரிநீரில் மூச்சடக்கி மூழ்கி

    உன் பார்வையில் இருந்து தப்பஎண்ணினேன்!

    பாய்ந்த ஒரு வெண்ணொளி நீரைக்

    கிழித்து ஏரியைப் பற்றி எரித்தது!


  • தெரு ஒன்று
        கட்டிடங்களின் காலடியில்.
    விறுவிறுவென நடந்தபடி
        இருக்கிறார்கள் மனிதர்கள்
    எதையோ யோசித்தபடி
        எங்கோ வெறித்தபடி.
    
    தன்னைமறந்து கூட்டத்தினைப் 
        பார்க்கும் நாய்கள்.
    விண்ணில் அலட்சியபார்வை
        பார்த்துநகரும் காகங்கள்.
    மண்துகள்கள் பறக்கின்றன
        தார் ரோட்டில்.
    
    அனல் காற்றோடு
        பெருகுகிறது வெக்கை.
    வேர்வை மிகுந்தோடுகிறது
        ஒவ்வொருவர் மீதும்.
    வெண் மஞ்சளாய்
        மங்குகிறது காட்சி.
    
    

  • என் வலைப்பதிவில் வெளியான மனிதர்கள் பதிவுகளைத் தொகுத்து தற்போது ரவிசங்கர் ‘மனிதர்கள்’ என்கிற பெயரில் இபுத்தகமாக வெளியிட்டு இருக்கிறார். நீங்கள் விரும்பிய பணத்தை கொடுத்தோ அல்லது இலவசமாகவோ இப்புத்தகத்தை தரவிறக்கி கொள்ளலாம்.

    நான் அறிந்த உண்மை மனிதர்களை/சம்பவங்களை புனைவோடு கலந்து எழுதியது இந்த மனிதர்கள் தொடர் பதிவுகள். இங்கே ஒவ்வொரு பதிவாய் வெளியான போது நிறைய பேரை சென்றடைந்தது. தற்போது இபுத்தகமாய் அது மேலும் பல பேரை சென்றடையும் என்பதில் மகிழ்ச்சி.

    noolini
    நூல் இனி – தமிழ் மின்னூல்கள் சந்தை

    என்னுடைய எழுத்தினை மேலும் பல பேர் வாசிப்பார்கள் என்பதைத் தாண்டி இந்த இபுத்தக ரிலீஸ் ‘நூல் இனி’ மின்னூல் சந்தையின் இரண்டாவது இபுத்தக வெளியீடு என்பது மற்றொரு பெருமை. பதிப்பாளர்கள் தயவில்லாமல், பத்திரிக்கை ஆசிரியர்கள் தயவில்லாமல் நம்முடைய எழுத்து மற்றவர்களை சென்றடையாது என்கிற நிலை எப்படி இணையத்தின் மூலமாகவும் முக்கியமாகவும் வலைப்பதிவுகள் மூலமாகவும் மாறியதோ அதற்கடுத்த முன்னேற்றம் நாமும் பெரும் நிறுவனங்களில் தயவில்லாமல் இபுத்தகங்களை வெளியிடலாம் என்பது தான். இதற்கான ஒரு முயற்சி ‘நூல் இனி.’ இது ஒரு தமிழ் மின்னூல்கள் சந்தை. வலைப்பதிவில் எழுதுபவர்கள், அச்சில் புத்தகங்கள் வெளியிட்டவர்கள், தங்களது படைப்புகளை இபுத்தகங்களாய் வெளியட விருப்பமுள்ளவர்கள் இந்த இபுத்தக சந்தையைப் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த முயற்சியினை மேற்கொண்ட ரவிசங்கர் இணைய உலகில் நிறைய பேருக்கு தெரிந்தவர். மின்னூல்கள் சந்தைக்காக தினமும் பல மணி நேரங்கள் ஒதுக்கி உழைத்து வருகிறார். என்னுடைய இபுத்தகத்தை தன்னுடைய சந்தையில் வெளியிட்டது மட்டுமல்ல, இதற்கான பதிப்பாளரும் அவரும். மிக்க நன்றி ரவிசங்கர்.

    ravi
    ரவிசங்கர்
    • நீங்கள் மின்னூல்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
    • தமிழில் மின்னூல்களுக்கு எதிர்காலம் இருக்கிறதா?
    • தமிழ் மின்னூல்களை இணையத்தில் பணம் கட்டி வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதா?

    உங்களது கருத்துகளை கீழே எழுதுங்கள்.


  • பாதி எழுதி
    வைத்து விட்டு போகும்
    கவிதையின் மிச்ச வரிகள்
    நான் திரும்பி வருகையில்
    நிரம்பி இருக்கும்.


  • ஒரு கோப்பை தேநீர்,
    துளிர்த்து தொடங்கும் காமம்,
    வானத்தில் பரவி கிடக்கும் மரக்கிளைகள்,
    என்றோ வாய்க்கிற மாடி தருணம்,
    பொதுவில் பார்க்கிற அந்நியர்கள் என
    எல்லாம் அமிழ்ந்து போகிறது
    மனதினுள் எப்போதும்
    பெய்து கொண்டிருக்கும் மழையில்.


  • 1. எனக்குக் கவிதை எழுத தெரியும் என நம்புகிறேன்.
    2. எனக்குக் கவிதை எழுத வராது. அதனால் கவிதை எழுதுவதற்குப் பழகுகிறேன்.
    3. கவிதை ஒரு போதை.
    4. கவிதை எழுதினால் புகழ் பெறலாம் என நம்புகிறேன்.
    5. நான் ஒரு சோம்பேறி. பக்கம் பக்கமாய் கதைகள் எழுதுவதை விட சில வரிகளில் கவிதை எழுதுவது சுலபம் என நினைக்கிறேன்.
    6. நான் ஒரு விஷயத்தில் ஈடுபட்டால் அதிலே அதீத ஆர்வத்துடன் ஈடுபட தொடங்கி விடுவேன். கவிதைக்கான கரு மனதில் உருவானால் அதை எழுதும் வரை அதை உருட்டி உருட்டி உழைத்து கொண்டே இருப்பேன். அந்த உழைப்பு, அதீத ஆர்வம், obsession எனக்குப் பிடித்திருக்கிறது.
    7. கவிதை புத்தகம் போடலாம். வீட்டில் நிறைய இடம் காலியாக தான் இருக்கிறது.
    8. கவிஞர்கள் நண்பர்கள் ஆவார்கள்.
    9. “நீ எதுக்குத் தான் லாயக்கி?” என்று கேட்டவர்களுக்கு நான் சொல்லும் பதில்
    10. கவிதை ஒரு தொழில். ஒரு craft. எனக்கும் ஒரு craft தெரியும் என நிரூபிக்கலாம்.


  • உங்கள் கண்காணிப்பில்
    நல்ல மனிதனாக வாழ்வதை விட
    சுதந்திரமாக
    கெட்ட மனிதனாக மாறி விட்டு போகிறேன்!
    அட போங்க அப்பால!


  • கவிதை என்பது
    கவிதை புத்தகங்களில் மட்டும்;
    ஓவியம் என்பது
    கலைக்கூடங்களில் மட்டும்
    இருக்குமென நீங்கள் நினைத்தால்
    உங்களுக்கு
    என் ஆழ்ந்த அனுதாபங்கள்!
    பின் குறிப்பு: இது கவிதையல்ல.


  • வலைச்சரம் என்கிற வலைப்பதிவினை நீங்கள் அறிந்திருக்கலாம். வார வாரம் ஒரு வலைப்பதிவர் அதில் ஆசிரியர் பொறுப்பேற்று தனக்கு பிடித்த அல்லது தான் பரிந்துரைக்க நினைத்த வலைப்பதிவுகளை தொடர்ச்சியாக அந்த வாரம் முழுவதும் பதிவிட்டு அறிமுகப்படுத்துவார். அதில் இந்த வாரம் நான் ஆசிரியர் பொறுப்பேற்று பதிவுகள் எழுதி வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்த போகிறேன். நேரம் இருக்கிறவர்கள் வலைச்சரத்தில் எனது பதிவுகளைப் படித்து கருத்து சொல்லுங்கள். நன்றி.


  • யூனிவர்சிட்டியின் பிரம்மாண்டமான கட்டிடத்தை வெறித்தவாறு அந்த மரத்தடி பெஞ்சில் அமர்ந்திருந்தேன். படித்து முடித்தாயிற்று. இப்போதும் இங்கு தான் சுற்றி கொண்டிருக்கிறேன். மெள்ள மெள்ள இந்த இடத்திலிருந்து அதோ அந்தச் சுவரினைத் தாண்டியிருக்கும் நெரிசல் மிகுந்த நகரத்தில் ஐக்கியமாகி விடுவேன் என்பது மட்டும் உறுதி. வெளியே நகரத்தின் நெரிசலுக்கும் வெயிலுக்கும் உள்ளே தவழ்ந்து கிடக்கிற அமைதிக்கும் பச்சைபரப்பிற்கும் எத்தனை வித்தியாசம். ஒரு சுவர் தான் இரண்டையும் பிரிக்கின்றன.

    நான் அமர்ந்திருந்த மரத்தடியோர பெஞ்சிற்குப் பின்புறம் இருந்தது யூனிவர்சிட்டி கேண்டீன். சில மாணவர்களைத் தவிர அங்கு வேறு யாருமில்லை. எனக்கு வர வேண்டிய டீ வந்தது. கண்ணாடி டம்பளரைப் பிடித்து அதன் சூட்டினை கைகளுக்குள் உணர்ந்தவாறு அமர்ந்திருந்தேன். தூரத்தில் காவியா என்னை நோக்கி வருவதைப் பார்த்தேன். கடந்த ஒரு மணி நேரத்தில் எந்தப் பெண்ணைத் தூரத்தில் பார்த்தாலும் அது காவியா தானா என்று பார்த்து பார்த்து அலுத்து போன காரணத்தினால் இதுவும் வேறு பெண்ணா என்று சந்தேகம் தோன்றியது. இல்லை இது அவளே தான். நீல ஜீன்ஸும் பச்சை நிற டாப்ஸும் போட்டு நடந்து வந்து கொண்டிருந்தாள். வழக்கமான உற்சாகம் அவளிடம் இல்லை. சோகம் அவள் மேல் அப்பியிருப்பதை உணர்ந்தேன். அவள் நெருங்க நெருங்க அவளுடைய அழகிய முகத்தில் கூட இருள் படர்ந்திருப்பதை உணர முடிந்தது. எதுவும் பேசாமல் என் முகத்தைப் பார்க்காமல் சட்டென பக்கத்தில் உட்கார்ந்தாள். அவள் மீது எப்போதும் ஒரு வித வாசனை உண்டு. அது இப்போது தான் தயாரான மலர்கொத்துவின் வாசனை போன்றது. அவளுடைய ஹேண்ட் பேக், கர்ச்சீப், புத்தகம் எல்லாவற்றிலும் இந்த வாசனை உண்டு. அந்த வாசனை இப்போது என் மேல் படர்ந்தது. உற்சாகமாய் உணர்ந்தேன். அதே சமயம் அவள் மேலிருந்த சோகம் அந்த உற்சாகத்திற்குத் தடை போட்டது.

    அவளும் நானும் இதே மரத்தடி பெஞ்சில் அமர்ந்து மணிக்கணக்கில் பேசியிருக்கிறோம். என்ன பேசினோம் என யோசித்து பார்த்தால் பெரிதாய் எதுவும் இல்லை. ஆனால் மணிக்கணக்கில் பேச்சு எப்படி நீண்டது என்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது.

    பின்பக்கமாய் திரும்பி கேண்டீனைப் பார்த்து கை காட்டினேன். இன்னொரு டீ வேண்டும் என அவர்களுக்குத் தெரியும். அவள் எதுவும் பேசாமல் தலைகுனிந்திருந்தாள். சில மாதங்களுக்கு முன்பு வரை இப்படியெல்லாம் அவளைப் பார்த்ததே இல்லை.

    “இரண்டு பேரும் சண்டை போட்டீங்களா?” என்றேன்.

    “ம்கூம், அதுக்கு வேற வேலை இல்லை,” என்றாள் ஹேண்ட் பேக்கில் இருந்து கர்ச்சீப்பை எடுத்தவாறு. இங்கு ‘அது’ என அவள் சொல்வது அவளுடைய காதலனை. அவனும் எங்கள் கிளாஸ்மேட் தான். இறுதியாண்டு இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள். அவன் எப்படி இவளைத் தேர்ந்தெடுத்தான், இவள் எப்படி அவனை ஏற்று கொண்டாள் இதெல்லாம் இன்று வரை எனக்குப் புரியாத மர்மம் தான். சரி, தெரிந்த இரு நண்பர்கள் திருமணம் செய்து கொள்வது நல்லது தான் என நினைத்து கொண்டேன். இவள் அமைதியானவள். அவனோ உணர்ச்சி பிரவாகம். நான் நினைத்த மாதிரி இருவரும் காதலித்து சிரித்து இருந்த கணங்களை விட சண்டையிட்டு கொண்ட தருணங்கள் தான் அதிகம். அல்லது நான் பார்த்த வரை அப்படியா தெரியாது. இருவரும் தனிமையில் ஒருவேளை சந்தோஷமாய் சிரித்து பேசி தான் இருப்பார்களா, தெரியவில்லை. அல்லது எனக்கு முன்னால் தான் அவன் இப்படி வேண்டுமென்றே சண்டையிடுகிறானா என்பதும் புரியவில்லை. அவனுக்கு நான் இவளுடைய நண்பனாக இருப்பது இப்போது சில மாதங்களாய் பிடிக்கவில்லை என்பது மட்டும் எனக்குத் தெரியும். போடா முட்டாள், உனக்குக் காதலியாவதற்கு முன்பு இருந்தே அவள் எனக்கு நல்ல தோழி. இதை அவனிடம் ஓபனாய் சொல்லியும் விட்டேன். இது ஒரு சிறு பிரச்சனை, சரியாகி விடும் என நானும் இவளும் காத்திருந்து காத்திருந்து இப்போது இது எங்களது நட்பைப் பாழாக்கும் அளவு வளர்ந்து விட்டது.

    அவளுக்கு டீ வந்தது. எப்போதும் இந்தப் பெஞ்சின் மேல் டீ கிளாஸை இரண்டு கைகளிலும் ஒரு முயல் குட்டியை அணைப்பது போல பிடித்தபடி இரண்டு கால்களையும் மடித்து தன் மாரோடு கட்டி கொண்டு அமர்ந்து தான் டீ குடிப்பாள். ஒரு கிளாஸைக் குடித்து முடிக்க அரை மணி நேரம் ஆகும். இப்போதும் அவளையறியாமலே அதே மாதிரி உட்கார்ந்து கொண்டு தான் டீ கிளாஸில் இருந்து முதல் சிப் குடித்தாள். அவளுடைய சிந்தனைகள் எல்லாம் வேறு எங்கோ இருந்தது. அடர்மழைக்குப் பயந்து ஒரு மூலையில் ஒண்டி உட்கார்ந்து இருக்கும் குழந்தை போல தெரிந்தாள்.

    “என்னடி ரொம்ப யோசனையா இருக்க?”

    “ம்கூம், ஒண்ணுமில்ல,” என்று சொல்லிவிட்டு தன் சிந்தனைகளை ஒதுக்கி விட்டு தலைமுடியைக் கோதிவிட்டு என் பக்கம் திரும்பி லேசாக புன்சிரித்தாள். அவளுடைய சிந்தனை உலகில் இருந்து இங்கு நிஜ உலகிற்கு ஜன்னலைத் திறந்து நிற்கிறாள் போல. அவளுடைய கையில் எப்போதும் இருக்கும் வண்ண வண்ண சரங்கள் இப்போது இல்லை. அதற்குப் பதில் கறுப்பு நிறத்தில் ஒரு புது வாட்ச் இருந்தது. வட்டமாய் ஒரு கழுகின் கண் போல இருந்தது. அதை ஏனோ எனக்குப் பிடிக்கவே இல்லை.

    “புதுசா?” என்றேன் வாட்ச்சைத் தொட்டு காட்டி.

    “நல்லா இருக்கா?”

    “ம்.”

    “ஆபிஸிற்கு போறதுக்கு இந்த மாதிரி வாட்ச் தான் சரியா இருக்கும்,” என்று மௌனித்தவள் பிறகு, “உன் வேலை எப்படி போகுது?” என்று கேட்டாள்.

    “ஆ வேலை,” என்று இழுத்தேன். “டார்க்கெட், டார்க்கெட் இதைத் தான் பேசுறானுங்க. பாத் ரூம் போறதுக்குக் கூட பெர்மிஷன் வாங்கிட்டு தான் போகணும். வெளியே போயிட்டு வந்தா செலவழிச்ச பணத்தையெல்லாம் நம்ம பாக்கெட்டுல இருந்து தான் செலவழிக்கணும். அதுக்குக் கணக்கு எழுதி அது பாஸாகி வர்றதுக்கு மாசக் கணக்குல ஆகும் போல இருக்கு.”

    “வேலை கஷ்டமா இருக்கா?” அவள் இப்போது முழுமையாய் தன் சிந்தனைகளில் இருந்து விடுபட்டு வந்து விட்டாள். பரிவோடு என்னைப் பார்த்தாள். “ஒல்லியாயிட்ட நீ,” என்று என் தோள்பட்டையைத் தொட்டாள்.

    “உன் வேலை எப்படி இருக்கு?” என்றேன்.

    “வேலை நல்லா தான் இருக்கு,” என்று தன் இரு கால்களை இன்னும் அணைத்து கொண்டு பெஞ்சில் வசதியாய் அமர்ந்து கொண்டாள். டீ கிளாஸை உற்று பார்த்து விட்டு, “ஆட்கள் தான் சரியில்லை. சிகரெட் நாத்தம் ஆபிஸ் முழுக்க. பொண்ணுங்களை பேசும் போது கூட மேனர்ஸ் இல்லாம அவங்க உடம்பெல்லாம் சொறிஞ்சுட்டே பேசுவானுங்க,” என்றாள்.

    “இவன் எப்படி இருக்கான்?” என்றேன். இது பேசக்கூடாது என நினைத்த டாபிக் ஆனாலும் பேசி விட்டேன். என்னைப் பார்த்து வாய் விரிய புன்னகைத்தாள். அவள் மிகவும் அழகாகும் தருணம் இது தான்.

    “நல்லா இருக்கான்,” என்று சுருக்கமாய் பதில் சொல்லி மீண்டும் டீ கிளாஸை முகத்தருகே கொண்டு போய் வேறு சிந்தனைகளுக்குள் மூழ்கி விட்டாள்.

    எங்கள் மூவருக்கும் இந்தச் சில மாதங்கள் கஷ்டமான காலம் தான். கல்லூரி முடிந்து வேலைக்குப் போகும் காலக்கட்டம். அவனுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. அவன் சரியாக முயற்சிக்கவில்லை என்பது என் எண்ணம். அதைவிட கொடுமையானது அவனுக்கு எங்கள் இருவரது நட்பு மீது தோன்றியிருக்கும் கோபம். சந்தேகம் என்று சொல்ல மாட்டேன். கோபம் தான் சரியான வார்த்தையாக இருக்கும். அதுவும் போன வாரம் நடந்த சம்பவத்திற்குப் பிறகு சந்தேகம் என்கிற வார்த்தையை அவன் தான் உதிர்த்தான். தன்னுடைய கோபத்தை வெளிகாட்ட எங்கள் இருவரையும் சந்தேகப்படுவது போல நடிக்கிறான் என்று தான் தோன்றுகிறது. எங்கள் இருவரையும் சந்தேகப்படவே முடியாது. நட்பினைத் தவிர வேறு எதுவும் இல்லை எங்கள் இருவருக்கும் இடையில். இதை எங்கள் இருவருக்கும் அடுத்து மிக சரியாக உணர்ந்தவன் அவனாக தான் இருப்பான். ஆனால் எப்படி இப்படியெல்லாம் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் தன் வாழ்க்கையில் பெரும் குழப்பத்தில் இருக்கிறான். கல்லூரி காலத்திலே வாழ்ந்திருந்தால் அவனுக்கு இந்தப் பிரச்சனைகள் வந்திருக்காது. பயப்படுகிறான். இதை அவனிடம் சொன்னால் சண்டைக்கு வருவான். ஆனால் அவனுடைய அத்தனை குழப்பங்களும் அவனைக் காயப்படுத்தியதை விட இவளைத் தான் அதிகம் காயப்படுத்துகிறது. குரூரமாக அவனே இவளே இன்னும் அதிகமாக காயப்படுத்தி கொண்டு இருக்கிறான். எனக்கு அவன் மீதிருந்த நட்பு, பரிவு எல்லாம் காணாமல் போய் விட்டது. இவளுடைய காதலன் என்கிற அளவில் தான் இப்போது அவன் மீது மரியாதை. அவன் செல்போனிற்கு கால் செய்வதோ நான் அவன் செல்போனிற்கு கால் செய்வதோ சுத்தமாய் நின்று விட்டது. இருவரும் இப்படி அமர்ந்து பேசியெல்லாம் பல மாதங்களாகி விட்டது. நாங்கள் இருவரும் சந்தித்து கொண்டால் இவளைச் சந்திப்பதற்காக தான் இருக்கும்.

    எங்கள் மூவருக்கும் இடையில் ஓர் இரும்பி சங்கிலி போல பிரச்சனை வளர்ந்து இருந்தாலும் நாங்கள் அதைப் பற்றி வெளிபடையாக பேசி கொள்வதே இல்லை. போன வாரம் இதே யூனிவர்சிட்டியில் தான் அவன் இவளோடும் என்னோடும் சண்டை போட்டு கொண்டு வேக வேகமாக நடந்து வெளியே போய் விட்டான்.

    “உன்னைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். அதுவும் உங்க இரண்டு பேரைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்,” என்று அவளைப் பார்த்து கத்தி விட்டு தான் போனான். இவள் அதற்குப் பிறகு மூக்கை சிந்தியபடி அழுது கொண்டிருந்தாள். அவன் அங்கிருந்து நகர்ந்து போகாமல் இருந்திருந்தால் இவளுடைய அழுகைக்காக அவனுடைய குரூரத்திற்காக நான் அவன் முகத்தில் ஓங்கி குத்தியிருப்பேன். இவள் அழுவதைப் பார்த்து இவள் மீதும் கோபம் வந்தது. பிறகுப் பாவமாகவும் இருந்தது. இவளுக்கு ஆறுதல் சொல்லவும் சங்கடமாய் இருந்தது. இவள் வேறு யாரோ ஒருவனுடைய காதலி என்று நான் உணர தொடங்கியது அப்போது தான். தனிமை மனமெங்கும் வியாபித்து ஒரு வாரமாய் அதைச் சுமந்தபடி திரிகிறேன். இவர்கள் இருவரும் சந்தோஷமாய் இருக்க வேண்டுமானால் நான் பிரிந்து போக தயார். ஆனால் எனக்கு நன்றாக தெரியும் அவனுடைய பிரச்சனை நான் இல்லை. நான் இல்லையென்றால் தன்னை தானே வருத்தி கொள்ள அதன் மூலம் அவளைத் துன்புறுத்த அவனுக்கு வேறு எதாவது விஷயம் கிடைத்து தான் இருக்கும்.

    “அன்னிக்கு இங்க சண்டை போட்டு போனதற்கு அப்புறம் நாங்க இரண்டு பேரும் ஒரு வாரமா போன்ல கூட பேசிக்கலை. நேத்து என் ஹாஸ்டலுக்கு வந்தான். முதல்ல நல்லா தான் பேசினான். நான் கூட சண்டை போட்டதையெல்லாம் மறந்துட்டான் போலன்னு நினைச்சேன்,” என்றாள்.

    “கடைசியா கிளம்புறதுக்கு முன்னாடி திரும்பவும் போன வாரம் மாதிரி சண்டை போட்டானா?”

    “ம்கூம் இல்ல. அப்படிச் சண்டை போட்டிருந்தா கூட பரவாயில்லை. ஆனா அவன் மெஷின் மாதிரி பேசுறான். நல்லா இருக்கீயா, சாப்பிட்டியா, தூங்கினீயா இப்படி மெஷின் மாதிரி பேசுறான்.”

    “இதுக்கெல்லாம் நான் காரணமில்ல.”

    “ம் ஆமா நீ காரணம் இல்ல.”

    “அவன் தான் காரணம். அவன் லைப்பை சீரியஸா எடுத்துக்கணும்.”

    “ம் ஆமா.”

    ‘உனக்கு என் மேல வருத்தமா?’ என்று கேட்க நினைத்தேன். ஆனால் எதுவும் கேட்காமல் மௌனமாய் இருந்தேன். இவள் நல்ல தோழி தான். ஆனால் இவளை இழக்க தான் வேண்டியிருக்கும் என்பதை முதன்முதலாய் உணர்ந்தேன். வேதனையாக இருந்தது. என் முகத்தில் அது தெரிந்திருக்க வேண்டும். அவள் என்னை இடித்தாள். என்னை சகஜமாக்க முயல்கிறாள் என புரிந்தது.

    “இத விடுடா. அடுத்த வாரம் நான் ஊருக்குப் போறேன்.”

    “அப்படியா,” என்றேன் நானும் பேச்சை மாற்றுவதற்காக பொய்யான உற்சாகத்தோடு.

    “தங்கச்சிக்குத் துணி வாங்கணும். இந்த வீக் எண்ட் நீ என் கூட ஷாப்பிங் வர்ற.”

    “இந்த வீக் எண்ட்டா…” என்று இழுத்தேன். அவள் என் தலையில் தட்டி, “முடியாதுன்னு சொல்லிடாத, எனக்கு தனியா ஷாப்பிங் போறதே பிடிக்காதுன்னு உனக்கு தெரியும் இல்ல,” என்றாள்.

    “ம்கூம், பார்க்கலாம்,” என்றேன்.

    அவள் டீ கிளாஸை கீழே வைத்து விட்டு என் தலைமுடியை சிலுப்பி விட்டாள்.

    “பிளீஸ்டா வாடா,” என்றாள்.

    “ஓகே ஓகே,” என்று சிரித்தேன். சட்டென மனதில் இருந்த இறுக்கம் குறைந்தது. சந்தோஷமாய் கேண்டீன் பக்கம் திரும்பி இன்னொரு டீ சொன்னேன்.

    *******************

    நன்றி:
    ஓவியம்: Beech Trees – T. C. Steele, 1895