பெல்ட் உயரும் போது அது நரியின் வால். தயாராகும் போது அது பயந்து உறைந்து அடுத்த நகர்தலில் தீண்டுவதற்குத் தயாராகும் பாம்பு.
காற்றிலே ஓர் இசை. என்னை தொடும் போது அது ஓர் ஒலி. பிறகு நரம்புகள் விழித்தெழும் வலி. உடலெங்கும் கதவுகள் திறக்கும். ஒரு கணம் கண்கள் இருண்டு பிறகு விழிக்கும் போது நெருப்பு ஜுவாலை ஒன்று உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பரவி சென்றிருக்கும். சிந்தனைகள் இல்லாது உடலும் மனமும் ஒருங்கே வலியில் திளைக்கும்.
– 02 –
ஒரே ஓர் பெல்ட் அடி என்னை அடி பணிய வைத்து விடும். ஆனாலும் எனக்கு நான்கைந்து கொடுத்தால் ஒழிய உன்னால் நிறுத்த முடியாது.
இங்கே அடி வாங்கும் நான் முக்கியமல்ல உனக்கு. உன் செய்கையே முக்கியம்.
சுருண்டுப் பிறகு அதிவேகமாய் அது காற்றைக் கிழித்து கொண்டு விஸ்வரூபம் எடுக்கும் சமயம் உன் முகத்தில் ஒரு பைக்கை ஓட்டும் திருப்தி. பேச்சில் வென்ற கர்வம். புது செல்போனை முழுமையாய் புரிந்து கொண்ட சிரிப்பு.
அதனாலே பிறகுத் துணி அணிவதற்குக் கையை உயர்த்தும் போது கூட அதே அதிகார பாசாங்கு.
– 03 –
ஒவ்வொரு முறை பெல்ட் என்னை அடித்து விட்டு போகும் போதும் தரையோடு தரையாய் பரவி அது முடியும் வரை என்னை மறந்து வலியில் மூழ்கி கிடப்பேன்.
நீ நகர்ந்த பின்னே என்னைப் பார்த்து பரிதாபப்படுவாயென அசட்டு காத்திருப்பு வேறு அந்தச் சில நொடிகளில்.
– 04 –
அது ஒரு கறுப்பு பெல்ட். பளபளவென இருக்கும். சிறு வயதில் தோட்டத்தில் கண்ட கருநாகத்தை நினைவுப்படுத்தும். ஒரு தேளின் கொடுக்கினைப் போல திமிரானது.
இந்த லெதரை எந்த மாட்டிலிருந்து உருவாக்கியிருப்பார்கள்? பசுக்களைத் துரத்தும் காளை? நடக்கும் தடமெல்லாம் விந்து சொட்டு சொட்டாய் சிந்தியபடி செல்லும் காளை?
பெல்ட் பக்கிள் வெண்மையாய் சிரிக்கிறது. என் முகத்தைப் பிரதிபலிக்கிறது.
– 05 –
உன்னை நான் ஏன் அடிக்க வேண்டும்? இல்லையெனில் உன் முட்டாள்தனம் இந்தத் தருணத்தை தரையில் ஊற்றிய நீராக்கி விடும்.
ஓட தெரியாத குதிரையினை பழக்கி பழக்கி நாட்களை நகர்த்தி கொண்டு இருக்கிறேன் நான்.
வலி என்பது நீ இந்தப் பாடத்திற்காக செலுத்தும் கட்டணம். உன் வலி எனக்கு அதிகார போதை. அது எனக்கு நீ தரும் குரு தட்சணை.
சற்று முன்பு பெய்த மழையின் பளபளப்பில் ஓர் இரயில் நிலையம்.
ஈரத் தரை விரிந்து கிடந்த பிளாட்பார்மில் சோகமுடன் அமர்ந்திருக்கிறாள் அந்தப் பெண்.
அழுகிறாள். காரணம் தெரியவில்லை. வெள்ளை நிறமே பெருகி உருகுவது போல். துயரத்தின் கருவறைக்குள் குழுந்தையாய். ஈரம் சொட்டும் இலைகளாகிறாள்.
கூட்டம் அதிகமில்லை. குழந்தையுடன் நடந்து போகும் பெண்ணொருத்திக்கு இவளைக் கண்டு முகம் கோணுகிறது. கண்ணீர் திரண்டு நிற்கிறது.
அழுகிற பெண்ணின் அழகில் எல்லாம் மறந்து அவளையே வெறித்தபடி நிற்கிறாள் ஒரு மூதாட்டி.
அழுபவளின் உடல் குலுங்குகிறது. கைகளைக் கண்ணில் பொத்தி தன்னைச் சுருட்டி கொள்கிறாள்.
சுருண்டு கிடந்தவளுக்குப் பின்னாலிருந்த இரயில்வே வேலி உருகுகிறது. சோகம் தாளாமல் மீண்டும் தூறல் தொடங்குகிறது.
நிலமெல்லாம் தூறலின் தடதடப்பு. தவளைகள் எங்கிருந்தோ தொடக்க வாத்தியமிசைக்கின்றன. அலையாய் பரவி வந்த காற்றொன்று மரத்திலெல்லாம் சப்தமெழுப்பி இலையிலிருந்து ஈரத்தை தரையில் கொட்டி படபடத்து இசைக்கிறது.
அந்தப் பெண்ணைக் கண்ட கண்கள் அனைத்தும் இருண்டு கிடக்கின்றன.
உலகில் இது வரை இப்படியொரு கவிஞன் இருந்ததுமில்லை; இருக்கப்போவதுமில்லை என மொழி வாழும் காலம் வரை தன் பெயர் நிலைக்க வேண்டுமென விரும்பினான்.
திருமணம் மறுத்தான். வயிறு பிழைப்பிற்காக சில மணி நேர வேலைத் தவிர மற்ற நேரங்களில் கவிதைகளிலே உழன்றான். இரவில் பேயானான். பகலில் ஏடானான்.
கண்களில் கவிதை. கைகளில் எப்போதும் ஒரு சொட்டு வார்த்தைச் சொட்டி கொண்டே இருந்தது.
எனினும் பாராட்டில்லை, போற்றி புகழ்வார் யாருமில்லை. புரவலருமில்லை.
எழுதினால் மட்டும் போதாது விளம்பரப்படுத்த ஆட்கள் வேண்டும் என பல நண்பர்களைப் பிடித்தான். முகநூலில் தேடி தேடி நட்பு சேர்த்தான். இலக்கிய விழாக்களுக்கு முதல் ஆளாய் அஜராகி இறுதி ஆளாய் டாஸ்மாக் கடை வரை நின்று கவிதைப் புராணம் வாசித்தான்.
‘உனக்கு எழுத தெரியவில்லை’ என ஒரு முறுக்கு மீசை சொல்லி விட்ட இரண்டாம் நாள் தனது கவிதைகளையெல்லாம் ஓரம் கட்டி விட்டு இலக்கிய கோட்பாடு நூற்களைத் தேடி தேடி வாசித்தான். அன்றைய இன்றைய பிரபல கவிகளுடைய கவிதைகளையும் தன் கவிதைகளையும் ஒப்பிட்டு பார்த்தான்.
எழுதியதை நூறு முறை திருத்த தொடங்கினான். திருத்தியதைக் கிழித்து விட்டு கண்ணீர் விட்டு அழுதான்.
தன் எழுத்துகளைக் கொளுத்தி விட்டு தூக்கில் தொங்கி விடலாமா என யோசித்தான். அன்றிரவு துர்கனவு. கண்களைக் கசக்கி எழுந்தவன் அதைக் கவிதையாக்க தாள் தேடினான்.
இந்தக் கணம் இன்பமாய் இருக்கிறது. வழியும் சிகரெட் புகை உடலில் எங்கோ கீதமிசைக்கிறது. இசையின் மயக்கத்தில் நடனமாடுகின்றன நரம்புகள். சூடாய் இறங்கும் தேனீர் பானம் உடலிற்குள் இளம் மழையின் அரவணைப்பு.
ஒரு கணம் ஒரே ஒரு கணம் மட்டும் தேனில் வழுக்கி விழுந்தவனாய் மிகப் பெரிய குத்து முகத்தில் இறங்கிய கணத்தில் ஸ்தம்பித்தவனாய் நீருக்கடியில் மூச்சிற்குப் போராடி தோற்றவனாய் உடலுறவில் உச்சத்தில் நிலைத்தவனாய் ஆழ் தூக்கத்திற்குள் போகும் தருணத்தில் இருப்பவனாய் எங்கோ விழுந்து வலியில் பெரும் ஓலத்துடன் கதறுபவனாய் வெறுமையில் நிலைத்தவனாய் இருக்கிறேன்.
ஆனால் மறுகணம் ரோட்டில் ஓடும் வாகனங்கள், பேச்சு அரவம், வலு பெறும் வெயில், குப்பைகளின் நாற்றம், கையில் இருக்கும் தேனீர் கோப்பையின் சூடு என்னுள்.
அதற்கு அடுத்து நினைவு அடுக்குகளில் இருந்து எது எதோ நினைவுகள் கலைத்து போட்ட சீட்டுக் கட்டுகளாய்.
எதற்கோ பயப்படுகிறேன். பழையதை நினைத்து முகம் சுளிக்கிறேன். குவிந்து கிடப்பவைகளில் நிலையில்லாமல் பார்வையை நகர்த்தி எதோ ஒரு செங்கலில் அது தரும் நினைவு அலைகளில் மூழ்கி எதோ ஓர் உணர்வெழுச்சியில் பிறிதொரு நினைவிற்குத் தாவி பின் அதனோடுச் சம்பந்தப்பட்ட ஒரு பழைய நிகழ்வை ஓட்டி பார்த்து கொண்டிருக்கிறேன்.
ஒரு பெருமூச்சு மணலில் இருந்த கிறுக்கல்களை அழிக்கும் அலை போல என்னை மீட்டு எடுக்கிறது. மீண்டும் வெறுமைக்குள் மூழ்க முயல்கிறேன். பாசாங்குச் செய்கிறேன். படையெடுத்து வரும் சிந்தனையோட்டங்களைத் தடுத்து நிறுத்த மீண்டும் மீண்டும் முயல்கிறேன்.
இதைக் கவிதையாக எழுதுவதா? நல்ல யோசனை. முதல் வரி என்னவாக இருக்கும்?
தோற்கிறேன். கடல் அலைகளால் பந்தாடப்படுகிறேன். வார்த்தைகளில் விளையாடுகிறேன்.
அந்தக் குடும்பத்திற்கு அது ஒரு விசேஷ சந்திப்பு. கணவன், மனைவி, அவர்களது குழந்தைகள், தம்பதியரின் தாய் தந்தையர் என எல்லாரும் மதிய விருந்திற்காக குழமியிருந்தார்கள். வெளியே மதிய வெயில் பழுக்க தொடங்கியிருந்தது. சிரிப்பும் சந்தோஷமுமாய் மதிய விருந்து தொடங்கியது. என்ன விசேஷம்? அந்தக் கணவன் சிவில் வாழ்க்கைக்குத் திரும்பியிருப்பது தான் விசேஷம். இரண்டாம் உலகப் போரிலே ராணுவ வீரராய் பணியாற்றி விட்டு போர் முடிந்து இப்போது தான் திரும்பியிருக்கிறார் அவர். பெயர் வெயின் மில்லர். வயது 27.
இரண்டாம் உலகப் போரில் இருந்து திரும்பியிருப்பது மட்டும் விசேஷமல்ல, அந்தப் போரிலே வெயின் மில்லர் எடுத்த புகைப்படங்கள் பெரும் புகழைப் பெற்று விட்டன. டாக்டரான அவருடைய தந்தைக்கு அது குறித்து பெருமை தான். மகன் பள்ளி படிப்பு முடித்தவுடன் பரிசாக புகைப்பட கருவியை அவனுக்கு அளித்து அவனுள் புகைப்பட ஆர்வத்தை உண்டாக்கியவரே அவர் தான். மில்லரின் தாய் நர்ஸாக பணியாற்றியவர். தன் ஐரிஷ் பின்புலத்தைக் குறித்து பெருமைக் கொண்டவர். தான் சார்ந்த மத்திய வர்க்கத்திலே தனக்கு ஓர் இடம் ஏற்படுத்துவதையே வாழ்க்கைக் குறிக்கோளாய் கொண்டவர். மகன் அடுத்து என்ன செய்ய போகிறான் என கேட்பதில் ஆர்வமாக இருந்தார் தாய்.
அடுத்த இரண்டு வருடத்திற்கு சிகாகோ நகரத்தில் உள்ள ஆப்பிரிக்க அமெரிக்க (கறுப்பின) மக்களைப் புகைப்படமெடுக்க போவதாக சொன்னார் வெயின் மில்லர். தாயின் முகம் சுருங்கியது.
“உன் பொண்ணை ஒரு நீக்ரோவிற்குக் கல்யாணம் பண்ணி தருவீயா?” என்று கேட்டார் தாய். இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற நாற்பதுகளின் பிற்பகுதி அது. வெள்ளையர் கறுப்பர் வித்தியாசம் மிக பெரிய அளவில் இருந்த காலம். பொது இடங்களில் வெள்ளையர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட வசதிகள் கறுப்பின மக்களுக்கு மறுக்கப்பட்டு வந்தது. ஆனால் மாற்றத்தின் அறிகுறிகள் தொடங்கி விட்டன. கறுப்பின மக்கள் எல்லா துறைகளிலும் நுழைய முனைப்புடன் இருந்தார்கள். குறிப்பாக நகரங்களிலும் அதுவும் அவர்கள் வசித்த சிகாகோ நகரத்திற்குத் திரள் திரளாக கறுப்பின மக்கள் வளமான எதிர்காலம் தேடி குடிபெயர்ந்து வந்தார்கள். இது எல்லாம் அப்போதைய மத்திய வர்க்க வெள்ளையர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி கொண்டிருந்தது. அந்த மனநிலையிலே வெயினின் தாயாரும் இருந்தார்.
சந்தோஷமாய் கழிய வேண்டிய மதிய உணவு வேளை தடைப்பட்டது. வெயின் கோபமாய் அங்கிருந்து கிளம்பி விட்டார். வெயினின் தந்தையார் அவர் பின்னாலே வந்து அவரைச் சமாதானப்படுத்தினார். வெயினும் சமாதானமாகவில்லை. அவருடைய தாயின் கோபமும் குறையவில்லை.
மனிதனுக்கு மனிதனை அறிமுகப்படுத்துவது
அமெரிக்காவில் சிகாகோ நகரில் பிறந்து வளர்ந்தவர் வெயின் மில்லர். தந்தையின் பரிசான புகைப்பட கருவி அவரைப் புகைப்படக்காரராக மாற்றியது. கல்லூரியின் ஆண்டு விழா புத்தகத்தில் அவருடைய புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டன. இரண்டாம் உலகப்போரில் இராணுவத்தில் சேர்ந்தார். போர் காட்சிகளைப் புகைப்படமெடுக்க வேண்டியது தான் அவரது பணி. ஒரு போர் விமானத்தில் இருந்து குண்டு காயங்களுடன் இருக்கும் இராணுவ வீரரை மற்ற படை வீரர்கள் வெளியே எடுக்கும் புகைப்படம் வெயினுக்கு மிக பெரிய புகழைப் பெற்று தந்தது. அந்த விமானத்தில் வெயின் பயணிக்க வேண்டியது. ஆனால் அவருக்குப் பதிலாக பயணத்திருந்த மற்றொரு இராணுவ புகைப்படக்காரர் குண்டடிப்பட்டு இறந்து விட்டார்.
ஜப்பான் நாட்டின் மீது அமெரிக்கா வீசிய இரண்டு அணு ஆயுத குண்டுகள் இரண்டாம் உலகப் போரினை முடிவிற்குக் கொண்டு வந்தது. 1945ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜப்பான் சரணடைந்த பிறகு அணு ஆயுதத்தால் அழிக்கப்பட்ட ஹிரோசிமா நகரத்தினைப் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்ட சில புகைப்படக்காரர்களில் வெயினும் ஒருவர். பிரம்மாண்டமான அழிவையும் அழிவின் தாக்கத்தை முகத்திலே சுமந்திருந்த ஜப்பானியர்களையும் அவர் புகைப்படமெடுத்தார்.
“அமெரிக்கர்களுக்கு ஜப்பானியர்களைத் தெரியாது. ஜப்பானியர்களுக்கு அமெரிக்கர்களைத் தெரியாது. நாம் ஒருவரையொருவர் அறிந்திருந்தால் இந்த (போர்) சூழலே மாறியிருக்கும்,” என சொன்னார் வெயின். புகைப்பட கலையை அரசியல் மற்றும் சமூக மாற்றத்தினை உண்டாக்க வல்ல ஊடகமாக அவர் பார்க்க தொடங்கியது இக்காலக்கட்டத்தில் தான். போர் முடிந்த பிறகு தாயகம் திரும்பிய வெயினின் மனதில் இந்தச் சிந்தனைகளே ஓடின. அவருடைய அடுத்த பணி இதற்கு ஏற்றார் போல அமைய வேண்டுமென திட்டமிட்டார்.
“மனிதனுக்கு மனிதனை அறிமுகப்படுத்துவது, மனித குலத்தினைப் புரிந்து கொள்வது,” என பிற்காலத்தில் அவர் தன் புகைப்பட கலையைப் பற்றி சொன்னார்.
பிழைப்பு தேடி, மரியாதைத் தேடி
ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து ஐரோப்பியர்களால் அமெரிக்காவிற்குக் கொண்டு வரப்பட்ட கறுப்பின மக்கள் மிக துயரமான வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். 1882ம் ஆண்டு தொடங்கி 1968ம் ஆண்டு வரை இனவேற்றுமை காரணங்களுக்காக 3500-க்கும் மேற்பட்ட கறுப்பின மக்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். காலங்கள் உருண்டோட அடிமை மனநிலை மாற தொடங்கியது. தங்களுக்கான உரிமையைப் பற்றி அவர்கள் பேசவும் அதற்காக போராடவும் துணிந்தார்கள். வெள்ளை இளைஞர்கள் சிலரும் இந்த மாற்றத்தினை ஆதரிக்க தொடங்கினார்கள். நகர்புறங்களில் இந்த மாற்றம் வேகமெடுக்க தொடங்கியது. ஆனால் கிராமப்புறங்களில் இன்னும் கறுப்பின மக்கள் அடிமை மனநிலையிலே பார்க்கப்பட்டார்கள்.
நகர்புறங்களில் தொழிற்சாலைகள் அபரிதமாய் வளர தொடங்கிய காரணத்தால் வேலை வாய்ப்புகளும் பெருக தொடங்கின. இதன்காரணமாக 60 இலட்சத்திற்கு மேற்பட்ட கறுப்பின மக்கள் கிராமப்புறங்களில் இருந்து வடக்கு மாகாணங்களில் இருந்த நகரங்களுக்கு இடம் பெயர்ந்தார்கள். இது அமெரிக்கா வரலாற்றிலே மிக பெரிய குடிபெயர்தலாக அமைந்தது.
கிராமப்புறங்களில் முக்கியமாக அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களில் கறுப்பின மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. வடக்கிலும் மேற்கிலும் 20 நூற்றாண்டின் தொடக்கத்தில் மிக சிறிய அளவிலே கறுப்பின மக்கள் இருந்தார்கள். ஆனால் இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்தில் வடக்கு மேற்கு பகுதியில் இருந்த பெருநகரங்களில் கறுப்பின மக்களின் எண்ணிக்கை மிக பெரிய அளவில் உயர்ந்தது.
புகைப்பட கலைஞர் வெயினின் சொந்த ஊரான சிகாகோ இந்தக் குடிபெயர்தலின் மையமாக இருந்தது. சிகாகோ நகரத்தின் தெற்குப் பகுதி கறுப்பின மக்களின் புது நகரமாக மாற தொடங்கியிருந்தது. போர் முடிந்து நாடு திரும்பிய வெயினுக்கு இந்த மாற்றம் புலப்பட்டது. அமெரிக்காவில் உள்ள வெள்ளையர் கறுப்பர் பிரிவினை ஆபத்தானது என நினைத்தார் வெயின். கறுப்பின மக்களைப் பற்றி வெள்ளையர்கள் அறிந்து கொள்ள தன் புகைப்படங்கள் ஓர் ஊடகமாக அமைய வேண்டும் என நினைத்தார். “வடக்கு நீக்ரோவின் வாழ்க்கை,” என பெயரிடப்பட்ட அவரது புகைப்பட திட்டத்திற்கு நிதியுதவியும் கிடைத்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இதற்காக மட்டும் அவர் உழைக்க தொடங்கினார்.
நீக்ரோவின் வாழ்க்கை
வெயினுக்கு இடங்களோ சம்பவங்களோ முக்கியமாக இருப்பதில்லை. அவருக்கு முகங்களும் உணர்ச்சிகளும் தான் முக்கியமானவையாக இருந்தன. புகைப்பட பத்திரிக்கையாளராக இருந்த காரணத்தினால் அவர் அழகுணர்ச்சியுடன் படமெடுப்பதைக் காட்டிலும் தெருவில் இருக்கும் யதார்த்தங்களை அதிகமாக படமெடுக்க விரும்பினார். யதார்த்தத்தினைப் படமெடுக்க பொறுமையுடன் காத்திருந்தார்.
சிகாகோவின் தெற்குப் பகுதிக்குள் நுழைந்து கறுப்பின மக்களைப் படமெடுப்பது என்பது வெள்ளையரான வெயினுக்கு எளிதாக அமைந்து விடவில்லை. உள்ளே நுழையவே அவருக்கு வாரக்கணக்கில் நேரம் விரயம் ஆனது. ஒரு வருடத்திற்கு முன்பு தான் கேய்டன் என்பவரும் கேளர் டேர்க் என்பவரும் சிகாகோ பல்கலைக்கழகத்திற்காக ஒரு புத்தகத்தினைப் பதிப்பித்து இருந்தார்கள். அதன் பெயர் ‘கறுப்பு நகரம் – வடக்கு (மாகாண) நீக்ரோவின் வாழ்க்கை.’ கேய்டனின் உதவியுடன் வெயினுக்கு இபோனி பத்திரிக்கை ஆசிரியர் பென் பர்ன்ஸின் அறிமுகம் கிடைத்தது. புது அறிமுகங்களின் உதவியோடு வெயின் தெற்கு சிகாகோவில் உள்ள நபர்களைப் பிடித்து தன் புகைப்பட கருவியோடு அங்கே கால் பதித்தார்.
“தெற்கு சிகாகோ என்னை உடனே தயக்கமின்றி ஏற்று கொண்டது,” என்று பிறகு எழுதினார் வெயின் மில்லர். புகைப்பட கருவியோடு சுற்றி சுற்றி படமெடுத்து திரியும் வெள்ளையனைக் கறுப்பின மக்கள் சில நாட்களிலே தங்கள் பகுதியில் ஒருவனாக ஏற்று கொண்டார்கள். திருமண நிகழ்ச்சிகள், இறப்பு இரங்கற் நிகழ்ச்சிகள், தொழிற்சாலைகள், மது பான விடுதிகள், குடிகாரர்கள், மீன் விற்பவர்கள், ஆலயங்கள், மத பிரச்சாரகர்கள், இசைக் கலைஞர்கள், ரவுடிகள், பரத்தைகள், இரவு களியாட்டம், குழந்தைகள் என தான் காண்பது அனைத்தையும் புகைப்படம் எடுக்க தொடங்கினார் வெயின்.
வரலாற்று சிறப்பு மிக்க தருணங்களைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. மனித தன்மையைப் பிரதியெடுப்பதே அவர் நோக்கம். மது பான விடுதியிலே தன்னை நோக்கி இளிக்கும் ஆணை அலட்சியமாய் பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறாள் ஒரு பெண். செவ்வாய்க்கிழமை மதியம் ஜன்னலைத் திறந்து வைத்து உள்ளே கட்டிலில் நெருக்கமாய் இருக்கிறார்கள் ஒரு கணவன் மனைவி. ஏரிக்கரையோரமாய் தன் மகனோடு அமர்ந்திருக்கிறார் ஒரு தந்தை. மதுக்கடைக்கு வெளியே காத்திருக்கிறார்கள் இரண்டு சிறுமிகள். சரியான பராமரிப்பும் மேற்பூச்சும் இல்லா செங்கற் கட்டிடத்தில் ஒரு பத்திரிக்கையை தலைகீழாய் வாசித்தபடி அமர்ந்திருக்கிறாள் ஒரு சிறுமி. வெயின் தன் புகைப்பட கருவியோடு கண்ணுக்குப் புலப்படாதவராய் மாறி விட்டார்.
“என் புகைப்பட கருவியை மறைத்து கொண்டோ அல்லது நான் மறைந்து நின்றோ புகைப்படங்கள் எடுக்கவில்லை. அப்படி செய்திருந்தால் அங்கே இருந்தவர்கள் என்னைச் சந்தேகத்திற்குரிய ஆளாக பார்க்க தொடங்கியிருப்பார்கள். யாரைப் புகைப்படம் எடுக்க நினைக்கிறேனோ அவர்களிடம் போய் ‘தயவு செய்து என்னைக் கண்டு கொள்ளாதீர்கள். நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்களோ அதைச் செய்யுங்கள்,’ என்று சொல்வேன். நம்பினால் நம்புங்கள் அவர்கள் நான் சொன்னபடியே செய்தார்கள். ஏன்? யோசித்தால் எனக்கு ஒரு காரணம் தான் தோன்றுகிறது. அவர்களைப் பற்றி பரிவு கொண்டவனாக அவர்கள் மீது விமர்சனங்கள் இல்லாதவனாக என்னை அவர்கள் எதோ ஒரு வகையில் உணர தொடங்கியிருந்தார்கள். நல்லதையோ கெட்டதையோ தேடி நான் அங்கு வரவில்லை; தினசரி யதார்த்தங்களைத் தேடி வந்திருக்கிறேன் என அவர்கள் உணர்ந்தார்கள். உலகத்தைப் பற்றிய அவர்களது பார்வை, அவர்களுடைய உணர்ச்சிகள், அவர்களுடைய நம்பிக்கைகள், அவர்களுடைய கதைகளைத் தேடி நான் வந்திருக்கிறேன் என உணர்ந்தார்கள். இந்தப் புரிதலே மிக பெரிய வித்தியாசத்தைக் கொண்டு வந்தது. ஒரு புகைப்பட கலைஞனுக்குக் கிடைக்க கூடிய பெரிய பாராட்டு எனக்குக் கிடைத்தது. அது அங்கு நான் ஏற்கப்பட்டதும் எனது வேலையை தனித்து செய்ய அனுமதிக்கப்பட்டதும் தான்,” என சொல்கிறார் வெயின் மில்லர்.
கறுப்பினத்தவரான லேங்ஸ்டன் ஹக்ஸ் என்பவர் அப்போது புகழ் பெற்ற எழுத்தாளர். ‘சிகாகோ டிவ்வெண்டர்’ என்கிற வார இதழுக்காக அவர் எழுதி கொண்டிருந்த ஒரு பத்தி அப்போது பிரபலம். சிம்பிள் என்கிற கற்பனைக் கறுப்பின கதாபாத்திரத்தை உருவாக்கி அன்றைய சமூகத்தைப் பற்றி எழுதியிருந்தார். அதே சமயம் வெயின் ஒரு கட்டிடத்தின் கண்ணாடி ஜன்னலுக்கு உள்ளே உட்கார்ந்திருக்கும் ஒரு கறுப்பின இளைஞனைப் படம் பிடித்திருந்தார். அப்புகைப்படத்தினைப் பார்த்தவுடன் லேங்ஸ்டன் ஹக்ஸ், “புகைப்படத்தில் இருப்பவர் தான் சிம்பிள்,” என்றார்.
மற்றொரு புறம் தொழிற்சாலைகளில் யூனியனின் ஆதிக்கம் தொடங்கியிருந்தது. அங்கே கறுப்பின மக்கள் பணி புரிய அதிக வாய்ப்புகள் தரப்பட்டன. வெள்ளையர்களும் கறுப்பின மக்களும் சேர்ந்து பணி புரிந்தார்கள். இதன் காரணமாய் இரு சமூகத்திற்கிடையே சில நட்புகள் தோன்றின. தொழிற்சாலையில் அழுக்கு படிந்த உடையில் ஒரு வெள்ளையரும் கறுப்பினத்தவரும் தோள் மீது கை போட்டு புகைப்படத்திற்குப் போஸ் கொடுக்கிறார்கள்.
வறுமையையும் கனவுகளையும் சுமந்தபடி அந்தச் சமூகம் வாழ்ந்து கொண்டிருந்தது. எனினும் அதிலே சிலர் மத்திய வர்க்கமாய் மாற தொடங்கி விட்டார்கள். சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த கேளர் சேர்க் வீட்டில் பதிப்பக துறையைச் சார்ந்த கறுப்பினத்தவர்கள் உணவிற்காக அமர்ந்திருக்கும் காட்சி வித்தியாசமானது. ஒழுங்கும் தன்னம்பிக்கையும் கொண்ட ஒரு மத்திய வர்க்கம் கறுப்பின மக்களிடையே உருவாகி வருவது வெள்ளையர்களுக்குப் பெரும் ஆச்சரியத்தை உண்டு செய்தது.
ஸுனுக்கர் விளையாட்டறையில் கறுப்பினத்தவர் குழமியிருக்கும் காட்சி அந்தச் சமூகம் மேற்கொண்டிருக்கும் சமூக மாற்றத்தினைப் பிரதிபலிப்பதாய் அமைந்தது. அப்புகைப்படமே பிறகு புத்தகமாய், ‘சிகாகோவின் தெற்குப் பகுதி,’ என பெயரிடப்பட்டு வெளி வந்த வெயினின் புகைப்பட தொகுப்பு புத்தகத்திற்கு அட்டைப்படமாய் தேர்வு செய்யப்பட்டது.
வெயின் எடுத்த சில புகைப்படங்களைக் கறுப்பின மக்களைக் கிண்டலடிப்பதற்கு சில வெள்ளையின பத்திரிக்கைக்காரர்கள் பயன்படுத்தி கொண்ட சம்பவங்களும் உண்டு. முக்கியமாக விருந்து, களியாட்டம் பற்றிய புகைப்படங்கள் அவ்வாறு பயன்படுத்தப்பட்டன. ஆனால் இன்று வரை ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் வெயின் மில்லரின் புகைப்படங்களுக்குக் கொடுக்கும் மரியாதை அவருடைய முயற்சி வெற்றியடைந்ததையே உணர்த்துகிறது.
“அக்காலக்கட்டத்தில் இருந்த கறுப்பு சிகாகோவினைப் பற்றிய சிறந்த பதிவு ஆவணம்,” என வெயினின் இந்தப் புகைப்படங்களைப் பற்றி பிறகு சொன்னார் வரலாற்று பேராசிரியர் அலெக்ஸ் கீரின். “வெயின் தெற்கு சிகாகோவிற்குச் சரியான காலக்கட்டத்தில் வந்திருந்தது அவருடைய அதிர்ஷ்டம். ஒவ்வொரு நாளும் அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து பிழைப்பு தேடி மரியாதை தேடி அங்கே குடி வரும் கறுப்பின மக்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருந்தது. கட்டமைப்பு மாற தொடங்கியிருந்தது. கறுப்பின மக்களிடையே தன்னம்பிக்கையும் பக்குவமும் வளர தொடங்கியிருந்தது. இந்தப் புகைப்படங்கள் அக்காலக்கட்டத்தில் தங்கள் குரலை உயர்த்த சக்தி கொண்ட ஒரு சமூகத்தை பதிவு செய்கிறது. அதே சமயத்தில் அக்குரலைச் செவிமடுக்க தயாராக இருந்த வெயினின் பொறுமையையும் இப்புகைப்படங்கள் பிரதிபலிக்கின்றன,” என்று சொன்னார் அலெக்ஸ் கீரின்.
ஆணின் குடும்பம்
சிகாகோவின் தெற்கு பகுதி மிக பெரிய வெற்றி ஈட்டிய பிறகு மில்லர் ‘ஆணின் குடும்பம்,’ என்கிற பெயரில் ஒரு புகைப்பட தொகுப்பினை உருவாக்கினார். தன் குடும்பம், தன் மனைவியின் பிரசவம், தன் குழந்தைகள் என அக்கால அமெரிக்க குடும்பங்களைப் பற்றிய தொகுப்பாக அது வெளிவந்து பரவலான வரவேற்பினைப் பெற்றது. லைஃப், நேஷனல் ஜியாகரெபி என பல இதழ்களில் அவருடைய புகைப்படங்கள் பிரசுரமாகியிருக்கின்றன. எழுபதுகளில் அவர் புகைப்பட தொழிலை நிறுத்தி விட்டு கலிபோர்னியாவில் உள்ள காடுகளைப் பாதுகாக்க குரல் கொடுக்கும் அமைப்போடு சேர்ந்தார். தனது 94வது வயதில் 2013-ம் ஆண்டு இறந்தார்.
மேக்னம் போட்டோஸ் நிறுவனத்தின் தலைவர் அலெக்ஸ் மஜோலி, “யதார்த்தத்தையும் தெருக்களையும் சித்தரிக்க நமக்கு பாதை அமைத்து கொடுத்தவர் வெயின் மில்லர்,” என்று சொன்னார்.
புகைப்படங்கள்: வெயின் மில்லரின் புகைப்படம் மற்றும் செல்பி தவிர மற்ற அனைத்தும் வெயின் மில்லரின் ‘சிகாகோவின் தெற்குப் பகுதி’ தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டவை.
அது ஹிப்பிகளின் பொற்காலம். கடற்கரையெங்கும் இளைஞர்கள் நிரம்பி இருக்கிறார்கள். பலருக்கு நீளமான தலைமுடி, தாடி. பெண்களோ எளிமையான உடையில். வெயில் மஞ்சளாய் மாறி கொண்டிருக்கிறது. கஞ்சா வாசனை எங்கும் அடிக்கிறது. மேடையில் இசை விழா அரங்கேறி கொண்டிருக்கிறது. ராக் இசை விழா. பார்ப்பவர்களின் நரம்புகளைப் பதம் பார்க்கும் ராக் இசை. போதைக் கண்ணிற்கு ஏற ஹிப்பிகள் இசையின் உலகிற்குத் தன்னை அர்ப்பணித்து கிடந்தார்கள். திடீரென யாரென தெரியாத ஓர் இளம் வயது பெண் மேடை மீது ஏறினாள். ‘எதைப் பற்றியும் கவலைப்படாத’ உடை. அலட்சிய உடல் பாவனை. இசையின் மயக்கத்தோடு மேடையில் தோன்றியவளுக்கு மேடை சங்கோஜமோ பயமோ இல்லை. இசையின் வலிய தாளங்களுக்கு நளினமாய் உடலை அசைத்து ஆடினாள். கூட்டம் கரகோஷமிட அவள் ஆடுவதைக் கேமரா புகைப்படமாய் எடுத்தது.
புகைப்படத்தின் உயிர்
20ம் நூற்றாண்டின் மிக முக்கியமான புகைப்படக்காரர் டென்னிஸ் ஸ்டாக். இரண்டாம் உலகப் போர் காரணமாக பள்ளி படிப்பைப் பாதியிலே நிறுத்தி விட்டு ராணுவத்தில் இணைந்தார். போர் முடிந்த பிறகு மேக்னம் நிறுவனத்திலே புகைப்படக்காரராய் இணைந்தார். மிக விரைவிலே அவரது புகைப்படங்கள் புகழ் பெற தொடங்கின. முக்கியமாக ஜேம்ஸ் டீன் என்றொரு சினிமா நடிகரின் புகைப்படம் மிக பெரிய புகழைப் பெற்று தந்தது.
1955ம் ஆண்டு. ஜேம்ஸ் டீன் அப்போது தான் ஹாலிவுட்டில் அறிமுக நடிகர். அவருடைய கோபக்கார இளைஞன் பார்வையும், அலட்சிய உடல் மொழியும், கலைந்து கிடக்கும் தலைமுடியும் அவரது திரைப்படங்கள் வெளிவருவதற்கு முன்னரே அவரைப் பற்றிய எதிர்ப்பார்ப்பினை மக்களிடையே ஏற்படுத்தின. அக்காலக்கட்டத்தில் நியூ யார்க் நகரம் டைம்ஸ் சதுக்கத்தில் நடிகர்களுக்கான பட்டறை ஒன்று இயங்கி கொண்டிருந்தது. இங்குத் தான் அறிமுக நடிகர்களும் இயக்குனர் கனவில் இருப்பவர்களும் திரைப்பட கதாசிரியர்களும் குழுமி கிடப்பார்கள். அப்படி ஒரு மாலை நேரம் நடிகர்களுக்கான பட்டறையில் இருந்து வெளியே வந்து டைம்ஸ் சதுக்கத்தில் நடந்து போகிறார் ஜேம்ஸ் டீன். அவரது உடல் அளவை விட பெரிய அளவிலான ஓவர் கோட், பனி மூட்டம், மழையில் நனைந்து ஆளில்லாமல் வெறிச்சென இருக்கும் டைம்ஸ் சதுக்கம், கண்களில் ஓர் அலட்சிய பார்வை, வாயில் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட். இந்தப் புகைப்படம் ஜேம்ஸ் டீனின் குணாதிசயத்தை வெளிப்படுத்தும் படமாக மாறி போனது. போஸ் கொடுக்க வைத்து எடுக்கப்படும் புகைப்படங்களை விட இந்தப் புகைப்படத்திலே உயிர் இருந்தது.
புகைப்படம் எடுத்த போது அறிமுக நடிகராக இருந்த டீன் விரைவிலே தனது 24வது வயதில் ஒரு விபத்திலே இறந்து போனார். அவரது இறப்பிற்குப் பிறகு வெளிவந்த திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகின. ஜேம்ஸ் டீன் மறக்க முடியாத நடிகரானார். டைம்ஸ் சதுக்கத்தில் நடந்து செல்லும் ஜேம்ஸ் டீனின் புகைப்படம் அமரா புகழ் பெற்றது. உலகப்புகழ் புகைப்படங்களின் வரிசையில் இடம் பெற்று விட்டது ஜேம்ஸ் டீன் புகைப்படம்.
ஜேம்ஸ் டீனின் புகைப்படத்தினை எடுத்த புகைப்படக்காரர் டென்னிஸ் இதற்குப் பிறகு பரவலாக கவனம் பெற்றார். சினிமா நடிகர்களும் பிரபலங்களும் அவரது லென்ஸ் தங்கள் பக்கம் திரும்ப காத்திருந்தனர். 1968ம் ஆண்டு புகழ் உச்சியில் இருந்த டென்னிஸ் திடீரென ஒரு நாள் ஒரு சின்ன முட்டைமூடிச்சோடு கலிபோர்னியாவிற்குப் பயணப்பட்டார்.
கலிபோர்னியா அப்போது ஹிப்பிகளின் தலைநகரமாய் இருந்தது. அமெரிக்கா எங்கும் ஹிப்பிகளைப் பற்றிய பேச்சாகவே இருந்தது. இளைஞர்களிடையே பரவலான தாக்கத்தினை ஹிப்பிகள் உண்டு செய்து கொண்டிருந்தார்கள். ஹிப்பிகளைப் பற்றி, “போதை மருந்து அடிமைகள், சோம்பேறிகள், பாலியல் வக்கிரக்காரர்கள்,” என்று வயதானவர்கள் குறைச் சொல்லி கொண்டு இருந்தார்கள். இந்த ஹிப்பிகள் உண்மையில் எப்படிபட்ட வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதை அறிய டென்னிஸ் ஆசைப்பட்டார். அதற்காகவே தன் வழக்கமான வாழ்க்கையைச் சிறிது காலம் உதறி விட்டு கலிபோர்னியாவிற்குப் பயணப்பட்டார். அப்படி உதறி புறப்பட்டதே ஒரு ஹிப்பிதனம் தான் என்பதை அப்போது அவர் அறியவில்லை.
காதலியுங்கள் போரிடாதீர்கள்
60-களின் துவக்கத்தில் அமெரிக்காவில் இளைஞர்களிடையே தோன்றிய கலாச்சார இயக்கம் தான் ஹிப்பி. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு அமெரிக்கா வல்லரசாக தன்னை நிலைநிறுத்த தொடங்கியது. பொருளாதார அளவில் அமெரிக்காவின் மத்திய வர்க்கம் வளர தொடங்கியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகுப் பிறந்த குழந்தைகள் டீன் ஏஜிற்கு வந்த காலக்கட்டத்தில் உலகம் அவர்களுக்கு முன்பிருந்த தலைமுறையினரின் இளமைக் காலத்தைக் காட்டிலும் வேறு மாதிரியாக இருந்தது.
மனித உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வு பரவ தொடங்கியது. மனித உரிமைகளுக்காக சர்வதேச அளவில் குரல் கொடுக்கும் ஆம்னஸ்டி இண்டர்நெஷ்னல் தொடங்கப்பட்டது இக்காலக்கட்டத்தில் தான். சிறுபான்மையினர், ஓரின சேர்க்கையாளர்கள், வேற்று இனத்தவர்கள் போன்றவர்களின் உரிமைகளைச் சத்தமாக பேச தொடங்கியது சிவில் உரிமைகள் இயக்கம். ஆப்பிரிக்க அமெரிக்க (கறுப்பின) இளைஞர்கள் புது உத்வேகத்துடன் வலம் வர தொடங்கினார்கள். ஆப்பிரிக்க அமெரிக்க மக்களுக்காக அகிம்சை முறையில் போராடிய மார்டின் லூர்தர் கிங் (ஜுனியர்) அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்றார்.
1961-ல் அப்போதைய ஜனாதிபதி கென்னடி அமெரிக்கர்களை அவர்களது வீடுகளில் பதுங்குக் குழிகளை அமைத்து கொள்ள யோசனை சொன்னார். அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான பனிப்போர் உச்சத்திற்கு வந்தது. இதற்கிடையில் மேலும் சில நாடுகள் அணுஆயுதங்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தன. அமெரிக்காவில் அணு ஆயுதங்களுக்கு எதிரான இயக்கம் வலு பெற ஆரம்பித்தது. விரைவிலே தொடங்க இருக்கும் அடுத்த உலகப் போர் அணு ஆயுத போராக இருக்குமென்றும் அது உலகினையே அழித்து விடும் என்றும் பரவலாக பயம் இருந்தது.
தொழில்நுட்பம் மிக பெரிய வளர்ச்சியைப் பெற்றது. ஊடகங்கள் பரவலாக எல்லாரிடத்தும் சென்றடைந்தது. நேரடி தொலைக்காட்சி ஒளிப்பரப்புகள் பிரபலமாக தொடங்கின. விண்வெளிக்குள் சோவியத் யூனியனின் யூரி காக்ரின் முதல் மனிதனாக பிரவேசித்தார். இதைத் தொடர்ந்து நிலவிற்கு மனிதனை அனுப்பும் முயற்சிகள் தொடங்கின. அடுத்தடுத்து மனிதர்கள் வெவ்வேறு கோள்களுக்குச் செல்வார்கள் என்றும் நட்சத்திரங்களுக்குப் பயணப்படும் நாள் வெகுத் தொலைவில் இல்லையென்றும் நம்பிக்கைக் குரல்கள் எழுந்தன. உலகினை, எதிர்காலத்தைக் குறித்த சிந்தனைகள் அடியோடு மாறி போயின.
இந்தச் சூழலில் வியட்நாம் போர் தொடங்கியது. கென்னடியின் கொலை மற்றும் பல மர்மமான சம்பவங்கள் அரங்கேறின. அமெரிக்க தேசிய போலீஸ் அமைப்பான எப்.பி.ஐயின் இயக்குனர் எட்கர் ஹுவரின் நம்ப முடியாத அதிகாரம் பற்றியும் அதைக் கொண்டு அவர் செய்த அதிகார எல்லைமீறல்கள் பற்றியும் தகவல்கள் மெள்ள மெள்ள ஊடகங்களில் வெளிவர தொடங்கின.
போருக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் துவங்கின. இச்சமயம் அமெரிக்காவில் தாக்கமேற்படுத்திய பழங்காலத்து கீழை நாட்டு இலக்கியங்களும் கலாச்சாரமும் அமெரிக்க இளைஞர்களை, “காதலியுங்கள் போரிடாதீர்கள்,” என பேச வைத்தன.
இளைஞர்களிடையே கஞ்சாவும் போதை மருந்தும் பரவலாக பயன்பாட்டிற்கு வந்தது. டாக்டர் டேவிட் ரூபன் எழுதிய ‘செக்ஸ் பற்றி நீங்கள் அறிய விரும்பிய ஆனால் கேட்க பயந்த விஷயங்கள்’ என்கிற புத்தகமும் அலெக்ஸ் கம்போர்ட் எழுதிய ‘பாலியல் இன்பம்’ என்கிற புத்தகமும் பாலியல் குறித்த பார்வையை மாற்றியமைக்க ஆரம்பித்தன.இந்தச் சமயத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட புதிய ‘பயன்பாட்டிற்கு எளிய’ கருத்தடை சாதனங்கள் பாலியல் சுதந்திரத்தை உருவாக்கின.
பாப் டையலான், பீட்டில்ஸ் என இசையோ புதிய உச்சத்தைத் தொட்டு கொண்டிருந்தது. ராக் வடிவமும் ராக் இசை திருவிழாக்களும் இளைஞர்களிடையே மிக பெரிய வரவேற்பினைப் பெற்றன.
பெண்களுக்கான சமத்துவ உரிமையைப் பற்றிய குரல்கள் அதிகமாய் எதிரொலிக்க ஆரம்பித்தன. அபார்ஷன் செய்து கொள்ளும் உரிமையைப் பற்றி பெண்கள் போராட்டம் நடத்தினர். ரெட் ஸ்டாக்கிங்ஸ் என்கிற பெண்கள் போராட்ட குழு ‘பிட்ச் மெனிவெஸ்டோ’ வெளியிடப்பட்டது. சில்வியா பாத் போன்ற பெண் கவிஞர்கள் புகழ் பெற தொடங்கினார்கள்.
ஆனந்தம் எங்கும் அலையோடியது. தனிமை வாட்டியது. போர் முரசு கொட்டியது. அமைதிக்கான இசை பரவியது. போதையே வாழ்க்கை என்றானது. புது லட்சிய கனவுகள் பிறந்தபடி இருந்தன. இந்தக் காலக்கட்டத்தில் தான் ஹிப்பிகள் தோன்றினார்கள். இந்தக் காலக்கட்டம் தான் ஹிப்பிகளை உருவாக்கியது.
எதிர் கலாச்சாரம்
ஹிப்பிகளை பொதுவாக அன்றிருந்த மைய கலாச்சார நீரோட்டத்திற்கு எதிரான எதிர் கலாச்சாரமென சொல்வார்கள். அன்றைய தாய் தந்தையரின் வாழ்க்கை முறை, அவர்களது கலாச்சார ஆன்மீக உணர்வுகள் இவற்றை வெறுத்து புதிய வாழ்க்கைமுறைக்குப் பயணப்பட விரும்பிய இளைஞர்களே ஹிப்பிகளாக தங்களைப் பிரகடனப்படுத்தி கொண்டார்கள். ராக் போன்ற வலிமையான இசையையும் கீழை நாட்டு இசை வாத்தியங்களையும் ரசிக்க ஆரம்பித்தார்கள். நீளமாக தலைமுடி வளர்த்தார்கள். தங்கள் பெற்றோர் முகம் சுளிக்கும்படி நாடோடித்தனமான உடைகளை அணிந்தார்கள். ஹிப்பிகள் சந்தித்து கொள்வதற்காகவே தனியிடங்கள் உருவாயின. சில இளைஞர்கள் கூட்டமாய் நாடோடி வாழ்க்கை வாழ தொடங்கினார்கள். மிக எளிமையான உடைமைகளோடு வாழ்ந்த அவர்கள் ஒரு ராக் இசை விழாவிற்காக மேற்கு எல்லைக்கு பயணப்படுவார்கள். பிறகு ஒரு போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்காக கிழக்கு எல்லைக்கு வருவார்கள். பெண்கள் ஆண்களுக்கு நிகரான உரிமைகளை எதிர்பார்த்தார்கள். ஹிப்பிகளால் உருவான பிரபலங்கள் மேலும் ஹிப்பித்தனத்தைப் பிரபலப்படுத்தினார்கள்.
அக்காலக்கட்டத்தில் எல்லா இளைஞர்களுமே இத்தகைய வாழ்க்கையில் இருந்தார்கள் என்றால் இல்லை. ஆனாலும் ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய மகனோ மகளோ ஹிப்பித்தனமாய் ஆகி விடக்கூடாது என பயப்படும்படியான சூழல் உருவாகி விட்டது.
ஹிப்பிகள் காலக்கட்டத்தில் தன் பதின்பருவத்தில் இருந்த எழுத்தாளர் பில் மான்கின் தன்னுடைய அனுபவத்தைச் சுவாரஸ்யமாக பதிவு செய்திருக்கிறார்.
அன்றைய பத்திரிக்கைகளும் ஊடகங்களும் தொடர்ச்சியாக ஹிப்பிகளைப் பற்றிய செய்திகளை வெளியிட்டு கொண்டிருந்தன. அவை பொதுவாக பெரிய செய்திகளாக இருக்காது. துணுக்குகளாக பெட்டி செய்திகளாக இடம் பெறும். ஹிப்பிகளைப் பற்றிய அதிர்ச்சியூட்டும் செய்திகள் முக்கியத்துவம் பெறும். அன்றைக்கு அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த இளைஞர்கள் பலரது கவனத்தை இத்தகைய செய்திகள் கவர்ந்தன. ஆனால் அவர்களும் அத்தகைய ஹிப்பித்தனமான வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் கார் பிடித்து சான் பிராசிஸ்கோ நகரத்திற்கோ அல்லது லாஸ் ஏஜெல்ஸ் நகரத்திற்கோ அல்லது நியூ யார்க் நகரத்திற்கோ போக வேண்டியது தான். ஆனால் அன்று பெற்றோருடன் வாழ்ந்து கொண்டிருந்த இளைஞர்களுக்கு அது சாத்தியமில்லாத விஷயமாக இருந்தது. அவர்கள் இன்னும் கடந்த காலத்திலே தாங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாய் நொந்து கொண்டிருந்தார்கள்.
நான் அட்லாண்டாவில் வசித்து கொண்டிருந்தேன். ஒரு நாள் ஒரு பத்திரிக்கையில் அட்லாண்டாவில் உள்ள ஒரு உணவு விடுதி பற்றி தகவல் வந்தது. அது ஹிப்பிகளின் ரகசிய சந்திப்பு இடம் என்று அந்தச் செய்தி துணுக்குச் சொன்னது. எனக்கு தாங்க முடியாத ஆச்சரியம். நானும் ஒரு நாள் அந்த உணவு விடுதிக்குப் போனேன். ஆனால் அங்கே ஹிப்பித்தனமாய் எதுவுமே இல்லை. எங்குமே ஒரு நீள தலைமுடி ஆண்ணைக் கூட பார்க்க முடியவில்லை. எதையோ ஆர்டர் கொடுத்து அதைச் சாப்பிட்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாக அலுப்புடன் அங்கே உட்கார்ந்திருந்து பிறகு ஏமாற்றத்துடன் வெளியே வந்தேன். வெளியே வந்தவுடன் என் கண்கள் சுற்றுமுற்றும் தேடின. ஒரு வேளை ஹிப்பிகள் இந்தத் தெருவில் எங்காவது ரகசியமாக சந்தித்து கொள்கிறார்களா என சிந்தித்தேன். எல்லா அட்லாண்டா தெருக்களைப் போலவே இருந்தது அந்தத் தெருவும்.
கிட்டத்தட்ட என் தேடலை நான் கைவிடலாமென நினைத்த தருணத்தில் ஒரு மின்னல் போல ஓர் ஆண் என்னைக் கடந்து சென்றார். அந்தக் காலக்கட்டத்தில் நான் நீளமாக தலைமுடி வைத்திருந்தேன். ஆனால் அந்த ஆணோ நம்ப முடியாத அளவு முதுகில் புரளும் அளவு கூந்தல் வைத்திருந்தார். நான் அவரைப் பார்த்து புன்னகைத்தேன். இரு விரல்களை உயர்த்தி காட்டினார். நானும் இரு விரல்களை உயர்த்தி காட்டினேன். ஒரு தலையசைப்போடு கடந்து சென்று விட்டார்.
எனக்கோ ஒரு ரகசிய அமைப்பில் சேர்ந்து விட்டாற் போல் உற்சாகம். ரகசிய போராளி போல் உணர்ந்தேன். எங்கள் உடையமைப்பும் தலைமுடியுமே இந்த அமைப்பின் உறுப்பினர்கள் நாங்கள் என்பதற்கான ஆதாரம்.
நகரத்திற்கு நடுவே ஒரு பூங்கா இருந்தது. அங்கே வார இறுதி நாட்களில் இசை விழாக்கள் நடக்கும். கூட்டம் கூட்டமாய் இளைஞர்கள் அங்கே குவிந்து இருப்பார்கள். பெரும்பாலும் அங்கே குவிவது என்னோடு பள்ளிக்கூடத்தில் படித்த ஏற்கெனவே அறிமுகமான இளைஞர்கள் தான். எல்லாருமே என்னைப் போல ஹிப்பிகளைச் சந்திக்க வந்தவர்கள் தான். இசை வாசிப்பதும் எங்களுக்கு அறிமுகமான உள்ளூர் குழுக்களாகவே இருப்பார்கள். ஆக அது ஓர் ஏமாற்றம் தான். சூரியன் மறையும் சமயம் எல்லாரும் எங்கள் வீட்டிற்குத் திரும்பி விடுவோம். திங்கட்கிழமை ஒவ்வொருவரும் தங்களுடைய பள்ளிக்கோ கல்லூரிக்கோ வேலைக்கோ போய் விடுவார்கள். வார இறுதி இசை விழாக்கள் தொடர்ந்தன. நீளமான மதிய பொழுதுகளில் அலுப்பினைத் தீர்ப்பதற்காகவாது இளைஞர்கள் குழுமி கொண்டே இருந்தார்கள். ஆனால் நாங்கள் எங்களை அறியாமலே ஹிப்பிகளாய் இருந்திருக்கிறோம் என அப்போது தெரியவில்லை.
ஒரு நாள் அப்படியொரு இசை விழாவில் உள்ளூர் இசைக் குழு ஒன்று வாசித்து கொண்டிருந்தது. அப்போது ஒரு வெள்ளை வேன் ஒன்று அங்கு வந்தது. வேன் கதவைத் திறந்து இறங்கியவர்கள் எல்லாருமே புதுமுகங்கள். எல்லாருமே மிக நீளமான தலைமுடியோடு இருந்தார்கள். இசை வாத்திய கருவிகளை இறக்க தொடங்கினார்கள். இரண்டாவது டிரம் வாத்தியம் இறங்கியதும் கூட்டத்தின் பார்வை அவர்களது பக்கம் திரும்பியது. உள்ளூர் குழு முடித்ததும் இவர்கள் தங்களுடைய கிடாரை சில நிமிடங்களில் டியூன் செய்து விட்டு வாசிக்க ஆரம்பித்தார்கள். இது வரை நாங்கள் கேட்டிராத பூளூஸ் ராக் இசை அது. ஜார்ஜியாவில் இருந்து வந்திருப்பதாய் அறிவித்த அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. எங்களுடைய ‘ஹிப்பி’ தாகம் தணிந்தது. அதே சமயம் மேலும் ஹிப்பி மீது மோகம் உண்டானது.
கலிபோர்னியா பயணம்
கலிபோர்னியாவிற்குப் பயணித்த புகைப்பட கலைஞர் டென்னிஸ் ஸ்டாக் ஹிப்பிகளின் உலகிற்குள் பிரவேசித்தார். அவர்கள் கூடுமிடம், வாழுமிடம், இசை விழாக்கள், கடற்கரை இடங்கள், ஆர்ப்பாட்டம் நடக்குமிடங்கள், கல்லூரிகள் என எல்லா இடங்களுக்கும் பயணித்தார். அவருடைய கேமரா அவசரமின்றி பொறுமையாக காத்திருந்து ஹிப்பி தருணங்களைப் பதிவு செய்ய ஆரம்பித்தது. கலிபோர்னியா பயணம் முடிந்ததும் டென்னிஸ் ஸ்டாக் தனது புகைப்படங்களை ‘கலிபோர்னியா பயணம்’ என்கிற தலைப்பில் புகைப்பட நூலாக வெளியிட்டார். அந்த நூலை விடுதலைக்கான பாடல் என வர்ணித்தார்.
டென்னிஸ் தனது நூலைக் குறித்து சொல்லும் போது, “கலிபோர்னியாவில் எப்போதுமே ஒருவித அதிர்வினைப் பார்க்க முடியும். ஒவ்வொரு காலக்கட்டத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியோ ஆன்மீக தேடலோ எதுவாகினும் அது கலிபோர்னியாவில் முதலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி பிறகே உலகம் முழுக்க பரவும். இத்தகைய இடத்திலே புகைப்படக்காரனுக்கு சர்ரியலிச புகைப்படங்கள் வசப்படும்.”
“ஹிப்பிகள் இயக்கம் இரண்டு முக்கிய சிந்தாந்தங்களை வைத்திருக்கிறது. ஒன்று மற்றவர்களை பற்றி அக்கறைப்படுதல். மற்றொன்று சாகசங்களுக்கான சுவை. ஹிப்பிகளைப் பற்றிய எனது புகைப்படங்கள் மேம்பட்ட வாழ்க்கைக் குறித்த தேடல். அவர்களது சாதனைகள் என்னை ஈர்க்கின்றன. அவர்களுடைய உள்ளுணர்வு எதிர் கலாச்சாரமாக இருக்கிறது. மனிதனின் அடிப்படை இயல்புகளை மீட்டெடுக்க அவர்கள் முனைகிறார்கள். நாம் ஒவ்வொருவரும் நம் பதின்பருவத்தில் ஒரு போராளி குணத்தோடு சுற்றியிருப்போம். ஒரு பார்வையில் ஹிப்பி இயக்கத்தினைப் பதின்பருவத்து போராளி குணத்திற்குத் திரும்புதல் என்றும் சொல்லலாம்.”
டென்னிஸின் நூலில் இருந்த புகைப்படங்களிலே அதிக தாக்கமேற்படுத்தும் புகைப்படமாக கொண்டாடப்பட்டது அந்தப் பெயர் தெரியாத இளைஞியின் மேடை நடனம் தான். 1968ம் ஆண்டு வெனீஸ் கடற்கரையில் நடந்த ராக் இசை விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. அவளுடைய உடல் மொழி ஹிப்பிகளைப் பற்றி ஒற்றை பதிவில் வெளிப்படுத்தி விடுகிறது. இந்தப் புகைப்படம் ‘எல்லைகள் இல்லாத பத்திரிக்கையாளர்கள்’ இருபத்தி ஐந்தாவது வருட விழா புத்தகத்தின் அட்டைப்படமாக அலங்கரித்தது. இன்று வரை உலகப்புகழ் புகைப்படங்களின் வரிசையில் தவறாமல் இடம்பெறுகிறது.
கரைந்து போன ஹிப்பிகள்
70-களின் துவக்கத்தில் ஹிப்பிகள் கரைய தொடங்கி விட்டார்கள். ‘பொருள் சார்ந்த வாழ்வு மீதும் பணம் மீதும் நாட்டம் இல்லாதவர்களாய் தங்களைக் காட்டி கொண்ட ஹிப்பிகள் அமெரிக்காவின் முதலாளித்துவத்திடம் சரண்டைந்தார்கள்,’ என ஜோசப் ஹுத் மற்றும் அண்டூரு போட்டர் தாங்கள் இணைந்து எழுதிய ‘விற்பனையான போராளிகள்’ என்கிற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்கள்.
ஹிப்பிகள் ஏற்படுத்திய தாக்கம் அவர்களது காலக்கட்டத்திற்குப் பிறகு வந்த கலை, இலக்கியம், இசை, பண்பாடு, கலாச்சாரம் என எல்லாவற்றிலும் பிரதிபலித்தது. அவர்களுடைய தாக்கத்தினைச் சர்வதேச சமூகத்தின் மைய நீரோட்டம் உள்ளிழுத்து கொண்டது; சிலவற்றை தன்னுடைய இயல்பாக மாற்றி கொண்டது. ஹிப்பிகளாக இருந்து பிறகு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய பலர் பல துறைகளில் தங்களுடைய சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார்கள். ஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸைக் குறிப்பிட்டு சொல்லலாம். அதிகாரத்திற்கு எதிராக இன்று இயங்கும் ஹேக்கர்கள், வணிகரீதியான மென்பொருட்களுக்கு எதிராக (இலவச) கட்டற்ற மென்பொருட்களை உருவாக்கும் மென்பொருள் வல்லுனர்கள் எல்லாம் ஹிப்பிகளின் தாக்கத்தால் உண்டானவர்களே என்று சொல்கிறார்கள்.
ஹிப்பிகளின் நகரமாய் இருந்த கலிபோர்னியா இன்று சில்லிகான் பள்ளத்தாக்கினைத் தன்னகத்தில் வைத்திருக்கிறது. கூகுளும் பேஸ்புக்கும் தங்கள் தலைமையகத்தை இங்குத் தான் வைத்திருக்கிறார்கள்.
ஒன்று கூடுங்கள்
காதல் என்பது நாம் பாடும் பாடல். பயம் என்பது நாம் எப்படி இறந்தோம் என்பதே. நீங்கள் மலைகளைச் சுருள வைக்கலாம்; தேவ தூதர்களை அழ வைக்கலாம். ஆனால் பறவை ஏன் பறக்கிறது? உங்களுக்குத் தெரியாது அது!
வாருங்கள் எல்லாரும்! மற்றவர்களை நோக்கி புன்னகையுங்கள்! ஒன்று கூடுங்கள்! எல்லாரிடத்தும் அன்பு கொள்ளுங்கள்! இப்போதே!
சிலர் வருவார்! சிலர் போவார்! நம்மை இங்கு விட்டு சென்றவன் திரும்புகையில் உங்கள் பயணமும் முடியும். ஒற்றைப்புல்லினால் மறைந்து போகும் சூரிய ஒளி. அத்தகைய தருணமே நாம்.
வாருங்கள் எல்லாரும்! மற்றவர்களை நோக்கி புன்னகையுங்கள்! ஒன்று கூடுங்கள்! எல்லாரிடத்தும் அன்பு கொள்ளுங்கள்! இப்போதே!
புகைப்பட கலைஞர் டென்னிஸ் ஸ்டாக்கின் புகைப்படம் தவிர மற்ற அனைத்தும் டென்னிஸ் எடுத்த புகைப்படங்களே. நியூ யார்க் டைம்ஸ் சதுக்க புகைப்படம் தவிர மற்ற அனைத்தும் அவருடைய ‘கலிபோர்னியா பயணம்’ தொகுப்பில் இருந்து.
தினமும் நடக்கும் விஷயம் தான். தன் அறையிலிருந்து வெளியே வந்தவுடன் அவளை அந்த மிருகம் பின்தொடரும். அரூபமானது! வக்கிரமானது! நிழல் போல! சூடான மூச்சுக்காற்றினைப் பின்கழுத்தில் உணர்வாள். பின்புறத்தில் அதன் பார்வையின் சூடு எரிச்சலூற்றும்! பழமொன்று கெட்டு போனதைப் போன்ற அதன் வாடை எங்கும் நிரம்பி இருக்கும்! நெருக்கடியான ஜனக் கூட்டத்தில் காதில் எதாவது முணுமுணுத்து கொண்டே இருக்கும். ஆட்களற்ற தார் சாலையில் அவள் நடக்கும் போது உயர்ந்து எழும்பி இருக்கும் கட்டிடங்களின் ஜன்னல்கள் அதன் கண்களாய் மாறியிருக்கும். காலங்கள் கடந்தாலும் அது அன்னியமாகவே இருக்கிறது. அவளுடைய பதட்டம் குறையவே இல்லை.
அது ஓர் அகதிகள் முகாம். சில கிலோமீட்டர் தொலைவில் அவர்களுடைய சொந்த ஊர் இருந்தது. எனினும் அவர்களால் அங்குப் போக முடியாது. சொந்த ஊரில் இருந்து வரும் தகவல்கள் திகிலூட்டுவதாக இருக்கின்றன. ஊரில் இருந்த 17 வயதிற்கு மேற்பட்ட 70 வயதிற்குட்பட்ட ஆண்களை எல்லாம் மொத்தமாய் ஓரிடத்தில் கைது செய்து வைத்திருக்கிறார்கள். அங்கிருந்து தப்பித்தவர்கள் அந்த இடத்தில் எப்போதும் சித்ரவதை செய்யப்படுபவர்களின் ஓலம் நிரம்பியே இருக்கிறது என்று சொன்னார்கள். அருகில் இருந்த பாதையில் பயணித்தவர்கள் வழியெங்கும் பிணங்களாய் இருக்கிறது என்றார்கள். பலர் உயிரோடு புதைக்கப்பட்டார்கள். சிலரது கை கால்கள் வெட்டப்பட்டன. கொடூரமான சித்ரவதைகள் நிகழ்த்தப்பட்டன. மரணம் மட்டுமே அவர்களை அந்த நரகத்தில் இருந்து விடுவிக்கும் வழியாக இருந்தது.
அகதிகள் முகாமில் பல்லாயிரக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் இருக்கிறார்கள். இன்னும் சில நேரத்தில் இடமே மக்கள் நெருக்கடியால் வெடித்து விடும் என்பது போல இருக்கிறது. சூரியன் பகல் பொழுதில் கொளுத்துகிறது. உணவோ குடிப்பதற்கு நீரோ இல்லை. கழிவு நீர் ஓடையில் தான் நீர் ஓடி கொண்டிருக்கிறது. தாகம் தாங்க முடியாதவர்கள் அதிலே குடித்து கொள்ள வேண்டியது தான். தங்களுடைய வீட்டு ஆண்களுக்கு, தங்கள் தந்தைக்கு, சகோதரனுக்கு, கணவனுக்கு, மகனுக்கு என்ன ஆகியிருக்கும் என்கிற பதட்டம் ஒவ்வொருத்தர் முகத்திலும் நிரம்பி கிடக்கிறது.
யாரோ ஒரு பெண்
புகைப்பட கலைஞர் ஒருவர் தான் பணிப்புரியும் செய்தி நிறுவனத்திற்காக செய்தி சேகரிக்க அங்கு சென்றார். அகதிகளைப் பார்த்தவுடனே அவருக்கு ஒரு விஷயம் பளீரென உறைத்தது. பல்லாயிரக்கணக்கானோர் அங்கிருந்தாலும் அவரால் 17 வயதிற்கு மேற்பட்ட ஓர் ஆணைக் கூட அங்குப் பார்க்க முடியவில்லை.
ராணுவ வீரர்கள் தங்களுடைய ஆண்களையெல்லாம் கைது செய்து விட்டார்கள் என்றார்கள். அகதிகள் முகாமிற்குச் செல்லும் பேருந்துகள் எல்லாவற்றையும் பரிசோதித்து எல்லா ஆண்களையும் ராணுவம் இழுத்து சென்று விட்டது. தங்கள் கண் முன்னாலே தங்களுடைய ஆண்கள் மரணத்தின் முகாமிற்கு இழுத்து செல்லப்படுவதைப் பார்த்திருந்த அகதிகளின் நிலைப் பரிதாபத்திற்குரியதாக இருந்தது.
அதிகாலை பொழுதில் புகைப்பட கலைஞரிடம் மூன்று சிறுமிகள் அருகில் உள்ள காட்டில் ஒரு பெண் தூக்கில் தொங்குகிறாள் என்றார்கள். புகைப்படக்காரர் அவர்களுடன் நடந்தார். அருகிலிருந்த காட்டிற்குள் பிரவேசித்த சிறிது நேரத்தில் தூரத்தில் மரத்தில் வெள்ளை நிற கவுன் உடுத்தி சிகப்பு நிற மேலாடை அணிந்த பெண் ஒருத்தி தூக்கில் தொங்கி கொண்டிருப்பது தெளிவாக தெரிந்தது. அவருக்கு என்ன செய்வது என்று குழப்பமாக இருந்தது. தூக்கில் தொங்கும் காட்சியைப் படமாக எடுத்தாலும் பத்திரிக்கைகளில் போடுவார்களா என்பது சந்தேகமாக இருந்தது. அவர் வந்து கொண்டிருந்த திசையில் இருந்து அந்தப் பெண்ணின் முகம் நன்றாக தெரிந்தது. எனினும் சடலத்திற்குப் பின்பக்கமாய் நின்று இரண்டு புகைப்படங்கள் எடுத்து கொண்டார்.
பிறகு அந்தப் புகைப்பட கலைஞர் அகதிகள் முகாமிற்குத் திரும்பி அங்கிருந்த அமைதிப்படை வீரர் ஒருவரிடம் தூக்கில் தொங்கும் பெண்ணைப் பற்றி சொன்னார். “உயிரோடு இருப்பவர்களை முதலில் கவனிப்போம்,” என்று பதில் கிடைத்தது. பிறகு அந்தப் பெண்ணின் பிரேதம் அகதிகள் முகாம் அருகிலே புதைக்கப்பட்டது. அது யார் என அப்போது யாருக்கும் தெரியவில்லை. யாரென்று தெரியவில்லை என்று சமாதியில் எழுதி வைத்தார்கள்.
தூக்கில் தொங்கும் பெண்ணின் புகைப்படத்தினைப் பிரசுரிப்பது குறித்து முதலில் பத்திரிக்கை அலுவலகங்களில் விவாதம் நடந்தது. சடலத்தின் படத்தைப் பத்திரிக்கையில் பிரசுரிக்கலாமா? இந்தப் பெண் உண்மையில் அங்கிருக்கும் சமூக அவலங்களால் தான் தற்கொலைச் செய்து கொண்டாளா அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக தன் உயிரை மாய்த்து கொண்டாளா என்று பல விவாதங்கள். ஆனால் ஒன்றன்பின் ஒன்றாக பல பத்திரிக்கைகளில் இந்தப் படம் இடம் பெற ஆரம்பித்தது. சில நாட்களில் உலகமெங்கும் ‘தூக்கில் தொங்கும் பெண்’ பரபரப்பினை ஏற்படுத்த தொடங்கினாள்.
காட்டின் பச்சை நிறம் எங்கும் வியாபித்திருக்க, அதற்கு நேர் எதிர் நிறமான சிகப்பு நிற மேலாடையும் வெள்ளை நிற கவுனும் சட்டென மாறுபட்டு தெரிகிறது. அவள் எதற்காக தற்கொலைச் செய்து கொண்டாள்? ராணுவத்தால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாளா? அவளுடைய குடும்பத்தில் இருந்த ஆண்களைக் கொன்று விட்டார்கள் என்கிற செய்தி தாங்க முடியாமல் மனமொடிந்து போனாளா? அகதிகள் முகாமில் இருந்த நரகத்தனமான சூழலைக் கண்டு பயந்து விட்டாளா? தனக்கு நெருங்கியவர்கள் காணாமல் போய், அவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் மக்கள் நெருக்கடியில் தனித்து நின்றாளா? கொலைச் செய்யப்பட்டாளா? எதற்காக தற்கொலைச் செய்து கொண்டாள்? யாருக்கும் பதில் தெரியவில்லை. அவளுடைய பெயர் கூட தெரியாது. எனினும் எதோ ஒரு சோகமும் அதனூடாக குற்றவுணர்வும் அதைத் தாண்டி கையாலாகாதனத்தால் உண்டான இயலாமையும் நம் முன்னால் நிற்கும் அசுரனைக் கண்டு பயமும் அந்தப் புகைப்படத்தின் மீது கவிந்து கிடக்கின்றன.
இதைத் தடுக்க முடியாதா?
அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி கிளிண்டன் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. விவாதத்தின் ஊடாக அன்றைய துணை ஜனாதிபதி அல் கோர் குறுக்கிட்டார்.
“என் மகளுக்கு 21 வயதாகிறது. நேற்று அவள் இந்தப் புகைப்படத்தினை என்னிடம் காட்டினாள். இந்தப் பெண் ஏன் தற்கொலைச் செய்து கொண்டாள் என்று கேட்டாள். இதைத் தடுக்க நாம் ஏன் ஒன்றுமே செய்யவில்லை என்று கேட்டாள். எனக்குப் பதில் சொல்ல தெரியவில்லை. இன்று அதே கேள்வியைத் தான் நானும் இப்போது கேட்கிறேன். இந்தப் பெண்ணின் தற்கொலைக்குப் பின்னால் ஆயிரக்கணக்கானோரின் கதை இருக்கிறது. அவர்களது அவலத்தினைப் போக்க நாம் ஏன் ஒன்றுமே செய்யவில்லை?”
தூக்கில் தொடங்கும் பெண்ணின் புகைப்படம் ஐரோப்பாவிலும் அமெரிக்காலும் உள்ள மத்திய வர்க்கத்தினரிடையே தாக்கத்தினை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் மேலும் சில செனட் உறுப்பினர்கள் இந்தப் புகைப்படத்தினைக் காட்டி, “இந்த இனப்படுகொலையைத் தடுக்க சர்வதேச சமூகம் முயற்சிகள் எடுக்க வேண்டும்,” என பிரச்சாரம் செய்ய தொடங்கினர்.
சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் இனப்படுகொலை மேற்கொண்டு நடைபெறாமல் தடுக்கப்பட்டதுடன் அமைதிக்கான முயற்சிகள் மெதுவாக தொடங்கியிருக்கின்றன. இனப்படுகொலைக்குக் காரணமானவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குகளும் நடைப்பெற்று வருகின்றன.
இனப்படுகொலையின் அவலத்தைத் தன் மரணம் மூலம் சர்வதேச சமூகத்தின் பார்வைக்குக் கொண்டு வந்த அந்தப் பெண் யாரென்பது ஒரு வருட காலம் வெளியே தெரியாமல் இருந்தது. பிறகு அந்தப் பெண்ணின் பெயர் ஃபெரிடா ஒஸ்மானியோவிக் என தெரிய வந்தது.
ஃபெரிடாவின் கதை
ஐரோப்பாவில் பால்கன் தீபகற்பத்தின் மேற்குப் பகுதியில் இருந்த நாடு யூகோசுலாவியா. அது பல துண்டுகளாக சிதறிய காலகட்டம். குரோஷியா, ஸ்லோவேனியா, மெக்டோனியா என்று பல நாடுகள் உருவாயின. ‘போஸ்னியா மற்றும் ஹெர்ஜிகொவினா’ என்கிற பெயரில் ஒரு நாடும் அப்போது உருவாக்கப்பட்டது. இந்த நாட்டில் தான் மேற்சொன்ன இனப்படுகொலை நடந்து கொண்டிருந்தது. பிரிவினையில் யாருக்கு என்னென்ன நில பகுதிகள் என்பதில் தொடங்கிய போர் விரைவில் போஸ்னிய முஸ்லீம்களுக்கு எதிரான போஸ்னிய செர்பிய ராணுவத்தினரின் இனப்படுகொலையாக வடிவம் கொள்ள தொடங்கியது. அன்றைய போஸ்னியாவில் செர்பிய எல்லைக்கு மிக நெருக்கமாக அமைந்திருந்த பகுதி செர்பிரேடனிட்சா. இதனாலே இனப்படுகொலை இங்கு வீரியம் கொண்டது.
செர்பிரேனிட்சாவிற்கு அருகே இருந்த அழகிய மலைக்கிராமத்தில் தான் ஃபெரிடா வாழ்ந்து கொண்டிருந்தார். அமைதியான வாழ்க்கை. இவருடைய கணவரது பெயர் சல்மான். வீடுகளுக்கான பர்னிச்சர் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். டாமிர் என்றொரு மகனும் பாத்திமா என்றொரு மகளும் இருந்தார்கள். கிராமத்து சூழலில் மிக மெதுவாக நகரும் பொழுதுகள். அதனுடன் அவ்வப்போது துளிர்க்கும் மகிழ்ச்சி தருணங்கள். விடுமுறை நாட்களில் அவர்களுடைய கார் தொலைதூரம் பயணிக்கும். டாமிரும் பாத்திமாவும் ஜன்னலுக்கு வெளியே தெரியும் மக்களைப் பார்த்து கையாட்டியபடி பயணத்தில் மூழ்கியிருப்பார்கள். ஒரு நாள் கிராமத்தில் கேட்ட குண்டுச் சத்தம் அவர்களுடைய வாழ்க்கையை வேறொரு திசைக்குத் திருப்பி விட்டது.
“வீடுகள் தீப்பற்றி எரிவதைப் பார்த்தேன். ஒவ்வொருவர் முகத்திலும் உலகமே அழிய போவது போன்ற பயம் மிகுந்திருந்தது,” என்று தன் சிறு வயது நினைவுகளைச் சொல்கிறார் டாமிர்.
போஸ்னிய செரிபிய ராணுவம் பலம் பெற தொடங்கியது. போஸ்னிய முஸ்லீம்களை அந்த ராணுவம் அறவே வெறுத்தது. ஃபெரிடாவின் உறவினர் ஒருவர் தோட்டத்தில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார். பயந்து போன மற்ற முஸ்லீம்கள் தங்களுடைய உடைமைகளைச் சுமந்து கொண்டு வட மேற்கு நோக்கி நகர தொடங்கினார்கள். ஃபெரிடாவின் குடும்பமும் அகதிகளாய் மாறியது. செர்பிரேனிட்சா நகரத்திலே அகதிகள் எல்லாம் கூடுகிறார்கள் என்கிற தகவல் கேட்டு ஃபெரிடாவின் குடும்பமும் அங்குச் சென்றது.
வெறும் ஒன்பதாயிரம் பேர் வாழ்ந்து கொண்டிருந்த செர்பிரேனிட்சா நகரத்தில் அப்போது 60000 முஸ்லீம்கள் அகதிகளாய் கூடியிருந்தார்கள். கடும் உணவு நெருக்கடி. மருத்துவமனையிலோ மருந்துகள் பற்றாக்குறை. பட்டினியும் நோய்களும் அகதிகளை பாடாய் படுத்த தொடங்கின. இந்தச் சூழலில் ராணுவம் அங்கே தாக்குதலைத் தொடங்கியது. இந்தத் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தைத் தெரிவித்தது. நிலவரத்தினைத் தெரிந்து கொள்வதற்காக ஐநா அமைதிப்படையின் ஜெனரல் பிலிப் நேரடியாக செர்பிரேனிட்சா நகரத்திற்கு வந்தார். ஊருக்குள் அவரது வாகனம் வந்த போதே அங்கிருந்த அகதிகள் முக்கியமாக பெண்கள் அவரது வாகனம் முன்னால் வந்து படுத்து கொண்டார்கள். பெரும்திரளாக அகதிகள் நின்று தங்களுடைய ‘வாழ்வா சாவா’ பிரச்சனையைப் பற்றி சொன்னார்கள். தன் வாழ்க்கை முழுக்க தன்னைப் பாடாய் படுத்த போகும் ஒரு காரியத்தை ஜெனரல் பலிப் அன்று செய்தார். இங்கிருக்கும் அனைவரின் பாதுகாப்பிற்கும் தான் உறுதி கொடுப்பதாக சொன்னார். அகதிகள் முகமெல்லாம் மகிழ்ச்சி. விரைவிலே தங்களுடைய பிரச்சனைகள் தீருமென்று நம்ப தொடங்கினார்கள். ஜெனரல் பிலிப்பின் வாக்குறுதிக்குப் பிறகு ஐநாவின் அமைதிப்படை செர்பிரேனிட்சாவைத் தங்கள் வசமாக்கி கொண்டார்கள். சிறிது காலம் ராணுவத்தினரைப் பற்றிய பயம் அகதிகளிடையே குறைந்தது.
ஃபெரிடாவின் கணவர் சாந்தமானவர். பிரச்சனைகள் அதிகரிக்கும் போது கூட அவர் அமைதியானவராய் இருந்தார். மரக்கட்டைகள் எடுத்து வந்து தன்னிடம் இருந்த சிறு கத்தியால் அதிலே பொம்மைகள் செய்வார். பிறகு அதனை அங்கே விற்க முயல்வார். இப்படியாக அகதிகளாய் அவர்களது வாழ்க்கை கடும் பொருளாதார தட்டுப்பாடுகளுடன் நகர தொடங்கியது.
1995ம் ஆண்டு ஜுலை மாதம் மோதல் மீண்டும் கடுமையானது. பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்து கொண்டிருந்தன. அங்கிருந்த அமைதிப்படையினரின் எண்ணிக்கை மிக மிக குறைவு. விரைவிலே செர்பிரேனிட்சா நகரம் போஸ்னிய செர்பிய ராணுவத்தின் வசம் போய் விடுமென கவலை தோன்றியது. ஆண்கள் மொத்தமாய் கொன்று ஒழிக்கப்படுவார்கள் என்கிற யதார்த்தம் உறைக்க தொடங்கியது. அதனால் நகரத்திலே இருந்த 15000ற்கு மேற்பட்ட ஆண்கள் இரவு நேர இருட்டில் நகரத்தை விட்டு வெளியேறி போஸ்னிய மலைகளுக்குப் பயணப்பட்டார்கள். ஆனால் காடுகளின் உக்கிரமும் ராணுவத்தினர் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடிகளும் பலரது உயிரினைப் பதம் பார்க்க தொடங்கியது. நகரத்தினை நெருங்கி விட்டது ராணுவம்.
ஃபெரிடாவின் கணவர் சல்மானும் ஊரை விட்டு வெளியேற திட்டமிட்டார். ஆனால் அவரது மனைவி ஃபெரிடாவோ அவரிடம் மன்றாடி அங்கேயே தங்க வைத்து விட்டார். அமைதிப்படையினர் இருக்கும் வரை தங்களது பாதுகாப்பு உறுதி என ஃபெரிடா நம்பினார். தங்களுடைய உடைமைகளை எடுத்து கொண்டு அவர்கள் அமைதிப்படையினரின் அலுவலகத்திற்குக் கிளம்பினார்கள்.
1995ம் ஆண்டு ஜுலை மாதம் 11ம் தேதி நகரம் கிட்டதட்ட ராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் வர தொடங்கி விட்டது. அதிகாலையில் நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் குடும்பம் குடும்பமாய் வடக்கில் இருந்த அமைதிப்படையினரின் அலுவலகத்தினை நோக்கி கிளம்பினார்கள். கைத்தடியை ஊன்றியபடி முதியவர்களும் குழந்தைகளைச் சுமந்தபடி பெண்களும் தங்களால் எவ்வளவு தூக்க முடியுமா அவ்வளவு உடைமைகளைத் தூக்கி கொண்டு ஆண்களும் தங்களுடைய பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக கூட்டமாய் அங்குப் போனார்கள்.
அமைதிப்படையினர் கூடாரமடித்திருந்த பகுதியில் நுழைவாயிற் கதவு பூட்டப்பட்டிருந்தது. முறுக்கப்பட்ட கம்பிகளால் ஆன வேலிகளில் சிறு சிறு ஓட்டைகள் செய்து தங்களுடைய உடலில் அந்த இரும்பு முட்கள் குத்த குத்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் அமைதிப்படையினரின் பகுதிக்குள் போய் விட்டார்கள். மீதமிருந்த ஆயிரக்கணக்கானோர் வெளியே உயிரைக் கையில் பிடித்தபடி காத்திருந்தார்கள். ஃபெரிடாவின் குடும்பம் வேலிக்கு வெளியே ஒரே போர்வையில் அன்றைய இரவைக் கழித்தது. ராணுவத்தினர் நெருங்கி வந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற செய்தியைக் கேட்டதும் சல்மான் இருமுறை அங்கிருந்து காட்டிற்குத் தப்ப முயன்றார். ஆனால் தொடர்ந்து வெடித்து கொண்டிருந்த வெடிகுண்டுகளைக் கண்டு மிரண்டு மீண்டும் குடும்பத்தினர் இருக்கும் பகுதிக்கே வந்து விட்டார். ஐநா அமைதிப்படை இருக்கும் போது நம்மை ஒன்றும் செய்து விட மாட்டார்கள் என்று ஃபெரிடா கணவருக்கு ஆறுதல் சொல்லி கொண்டிருந்தார்.
ஒரு பேரலை போல ராணுவம் உள்ளே வந்தது. எண்ணிக்கையில் குறைவாய் இருந்த அமைதிப்படையினர் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட முயன்றனர். பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்கிற தகவல் சொல்லப்பட்டு கொண்டிருந்த போதே கூட்டத்தில் இருந்த முஸ்லீம்கள் சிலர் ராணுவத்தினரால் தனியே அழைத்து செல்லப்பட்டு கொல்லப்படுகிறார்கள் என்கிற தகவலும் பரவ தொடங்கியது. அமைதிப்படையின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்களில் சிலர் அன்று போஸ்னிய செர்பிய ராணுவத்தினரோடு மதுவருந்தினார்கள் என்று பிறகுக் கண்டறியப்பட்டது. அதே சமயம் பாலியல் பலாத்கார சம்பவங்களும் கொலைகளும் நிகழ தொடங்கின. முஸ்லீம் அகதிகளில் 17 வயதிற்கு மேற்பட்ட 70 வயதிற்குட்பட்ட அனைத்து ஆண்களும் போர் குற்றங்களைப் பற்றிய விசாரணைக்காக ராணுவத்தினரால் தனியிடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்கள். அமைதிப்படையினர் வெறுமனே வேடிக்கைப் பார்த்தபடி நின்றிருந்தார்கள்.
அடுத்த நாள் காலை அங்கிருக்கும் பெண்களையும் குழந்தைகளையும் பக்கத்திலிருக்கும் டூசலா நகரத்தில் உள்ள அகதிகள் முகாமிற்கு அழைத்து செல்ல பேருந்துகள் வரிசையாக வந்தன. ஃபெரிடாவும் அவரது கணவரும் இரண்டு குழந்தைகளும் ஒரு பேருந்தினை நோக்கி நடக்க தொடங்கினார்கள். சுற்றிலும் ஒரே கூச்சல். குழந்தை டாமிர் தன் தந்தையின் கையை இறுக்க பற்றி கொண்டிருந்தான். எது நடந்தாலும் தன்னுடைய தந்தை தன்னைக் காப்பாற்றுவார் என்று நினைத்திருந்தான். சாலையின் இருபுறமும் ராணுவ வீரர்கள் நின்றிருந்தார்கள். பேருந்தில் அவர் ஏற முனைந்த சமயம் இரண்டு வீரர்கள் வந்து சல்மானைப் பிடித்தார்கள். துப்பாக்கியை நீட்டி சல்மானை அங்கிருந்த மற்ற ஆண்களோடு நிற்க சொன்னார்கள். சிறுவனும் தன் தந்தையோடு நின்றான். ஃபெரிடா பேருந்தில் இருந்து சத்தமாய் அழுதபடி அங்கு ஓடி வந்தார். தன் கணவனை விட்டு விடும்படி ராணுவ வீரர்களிடம் கெஞ்சினார். சிறுவனைத் தன் பக்கம் இழுத்து கொண்டார். ஆண்கள் எல்லாரும் தனியே கூட்டமாய் நின்றிருக்க பெண்களையும் குழந்தைகளையும் ஏற்றியபடி பேருந்துகள் கிளம்பின. எல்லாருமே சத்தமாய் அழுது கொண்டிருந்தார்கள்.
டூசலா நகரத்தில் இருந்த அகதிகள் முகாம் வாழும் நரகமாய் இருந்தது. தன்னுடைய கணவர் திரும்ப வந்து விடுவார் என்று ஃபெரிடா காத்திருந்தார். கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான ஆண்கள் கொடூரமாய் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்படுகிறார்கள் என்கிற தகவல்களும் முஸ்லீம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் என்கிற செய்தியும் நிமிடத்திற்கு நிமிடம் வந்தபடி இருந்தது. அகதிகள் முகாமிலோ எந்த வசதிகளும் இல்லை, வாழவே முடியாதபடி நெருக்கடி. ஐந்து நாட்களில் ஃபெரிடா பித்து பிடித்தாற் போல் ஆகியிருந்தார்.
ஆறாவது நாள் காலை குழந்தைகள் டாமிரும் பாத்திமாவும் விழித்த போது அவர்களுடைய தாயைக் காணவில்லை. அகதிகள் முகாம் முழுக்க சுற்றி திரிந்து தங்களுடைய தாயின் பெயரைச் சத்தமாய் சொல்லி அழைத்து அழைத்து பார்த்து சோர்ந்தார்கள் குழந்தைகள்.
அதே சமயம் அருகிலே காட்டில் தூக்கில் தொங்கி கொண்டிருந்த ஃபெரிடாவின் சடலத்தைப் படம் எடுத்து கொண்டிருந்தார் ஏபி செய்தி நிறுவனத்திற்காக பணிப்புரியும் புகைப்பட கலைஞர் டார்கோ பேண்டிக். தனியே சுற்றி கொண்டிருந்த குழந்தைகளை அவர்களது உறவினர்கள் தங்களுடைய பொறுப்பில் எடுத்து கொண்டார்கள்.
ஃபெரிடாவிற்குப் பிறகு
ஃபெரிடாவின் மரணத்திற்குப் பிறகும் இனப்படுகொலை பல மாதங்கள் தொடர்ந்தது. ஃபெரிடாவின் மகனும் மகளும் ஆறு மாதங்கள் கழித்து தான் தங்களுடைய தாய் தூக்கில் தொங்கும் புகைப்படத்தினைப் பார்த்தார்கள். சமாதியில் ‘யாரென தெரியவில்லை’ என்கிற வார்த்தைகளை அழித்து பேனாவால் ஃபெரிடாவின் பெயரை எழுதினார்கள். பல மாதங்கள் கழித்து மீண்டும் அவர்கள் அங்கு வந்த போது எக்கச்சக்க சமாதிகள் அப்பகுதியில் முளைத்திருந்தன. அதில் எது தங்கள் தாயின் சமாதி என அவர்களால் கண்டுபிடிக்க முடியிவில்லை. அவர்களுடைய தந்தை என்னவானார் என்பது இப்போது வரை தெரியவில்லை. இனப்படுகொலையின் போது கொல்லப்பட்ட 8000ற்கும் மேற்பட்ட முஸ்லீம்களில் தங்களுடைய தந்தையும் ஒருவர் என அவருடைய மகனும் மகளும் சொல்கிறார்கள்.
கிட்டதட்ட 19 வருடங்களாகியும் இனப்படுகொலை ஏற்படுத்தி சென்ற காயங்கள் ஆறவில்லை. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இனப்படுகொலை நிகழ்ந்ததை ஐரோப்பிய நாடுகள் இங்கு தான் அதிகாரப்பூர்வமாய் ஒப்பு கொண்டிருக்கிறார்கள். உயிருடன் தப்பித்தவர்கள் ஒவ்வொருவரும் மிக கொடூரமான கதைகளைச் சொல்கிறார்கள்.
உறவினர்களின் உதவியோடு பாத்திமாவும் டாமிரும் கல்லூரி வரை படித்து தங்களுக்கான வாழ்க்கை வாழ தொடங்கிவிட்டார்கள். தன்னுடைய தாயின் ஒரே பிம்பமாக அந்தப் புகைப்படம் மட்டுமே தன் மனதில் ஓடுகிறது என அழுகிறார் பாத்திமா.
ஃபெரிடா ஏன் தற்கொலைச் செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. அந்தச் சமயத்திலே சூழலின் கொடூரத்தைத் தாங்க முடியாமல் நிறைய பேர் பித்து பிடித்தாற் போல் இருந்தார்கள். பலர் தற்கொலைச் செய்து கொண்டார்கள். காட்டிற்குத் தப்பித்து ஓட இருந்த கணவரைத் தடுத்து நிறுத்திய தன் செயலை நொந்து இந்த முடிவினை எடுத்தாரா அல்லது முகாமில் ராணுவத்தினர் அவருக்கு எதேனும் தொல்லைகள் கொடுத்தார்களா என்பதும் தெரியவில்லை. உலகமே தனக்கு எதிராக திரும்பி விட்டது என உணர்ந்திருப்பார். அவருடைய மரண புகைப்படத்தினை இன்று அதே உலகம் ‘இனப்படுகொலையைச் சித்திரிக்கும் கொடூரம்’ என சித்தரிக்கிறது.
புகைப்பட கலைஞர் டார்கோ பேண்டிக் போர் நிகழ்வுகளைப் புகைப்படங்களாய் எடுப்பதிலே புகழ் பெற்றவர். அவருடைய கல்லூரி படிப்பு போர் காரணமாகவே தடைப்பட்டது. இதற்குப் பிறகு அவரது வாழ்க்கையும் போர் சார்ந்ததாகவே மாறியது. குரோஷியா, போஸ்னியா, குசோவா, மெசிடோனியா, இராக், இரான், ஆப்கானிஸ்தான், எகிப்து என பல நாடுகளுக்குப் பயணித்திருக்கிறார். போரில் பாதிக்கப்பட்ட எளியவர்களைத் தொடர்ந்து புகைப்படம் எடுத்திருக்கிறார்.
இனப்படுகொலை
ஈழத்திலே நடந்த இனப்படுகொலையும், குஜராத்திலே நடந்த இனவொழிப்பு நடவடிக்கைகளும் பலவிதமான புகைப்படங்களினாலும் வீடியோகளாலும் தான் மக்களிடையே தாக்கத்தினை ஏற்படுத்தி விழிப்புணர்வு கொண்டு வந்தன. ஃபெரிடாவின் புகைப்படம் மட்டுமே இனப்படுகொலைக்கு எதிரான நடவடிக்கைகளைக் கொண்டு வரவில்லை எனினும் அந்த நகர்வில் அது ஒரு முக்கிய புள்ளி.
சேனல் 4 உட்பட பல ஊடகங்களும் தனி நபர்களும் இன்று ஈழ இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் போராட்டத்தில் முக்கிய புள்ளிகளாக இருக்கிறார்கள். போஸ்னிய முஸ்லீம்கள் ‘இனப்படுகொலை’ என்ற வார்த்தையை அரசாங்கங்கள் ஒப்பு கொள்ள வேண்டும் என்பதற்காக பல காலம் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி கொண்டு இருக்கிறார்கள்.
இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள், அந்தச் சமயத்தில் இருந்தவர்கள் அனைவரது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு அந்தக் காலத்தில் அரங்கேறிய கொடூரங்கள் அனைத்தும் அத்தாட்சிகளுடன் ஆவணப்படுத்தப்படுகின்றன. ஆங்காங்கே மொத்தமாய் புதைத்து வைக்கப்பட்டிருந்த சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு டிஎன்ஏ மூலம் அது யார் என கண்டறியும் முயற்சிகள் ஒரளவு வெற்றி பெற்றிருக்கின்றன. இறந்தவர்களுக்கான நினைவிடங்கள் கட்டியிருக்கிறார்கள்.
இனப்படுகொலையில் ஈடுப்பட்டவர்கள் யார் யார் என்பதும் அதற்கு உதவியவர்கள் யார் யார் என்பதும் ஓரளவு தெளிவாக பட்டியலிடப்பட்டிருக்கிறது. சிலர் தலைமறைவாக இருக்கிறார்கள். பலர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து கொண்டிருக்கிறது. வேடிக்கை பார்த்த அமைதிப்படையினர் மீதும் வழக்கு நடைபெறுகிறது. அண்டை நாடான செர்பியா அதிகாரப்பூர்வமாக இந்த இனப்படுகொலைக்கு ஆதரவு கொடுத்ததை அந்நாட்டு பாராளுமன்றமே ஒப்பு கொண்டு மன்னிப்பு கோரி இருக்கிறது.
செர்பிரேனிட்சா இனப்படுகொலைக்குக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் ராத்கோ மிலாடித். ராணுவ தளபதியாக அந்தச் சமயங்களில் படையை வழிநடத்தி சென்றவர் இவரே. போர் குற்றங்கள் குறித்த விசாரணைத் தொடங்கிய பிறகுக் கிட்டதட்ட பதினாறு ஆண்டுகள் இவர் தலைமறைவு வாழ்க்கை நடத்த வேண்டி இருந்தது. 2011-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தற்போது போர்குற்றங்களுக்கான விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது.
2009ல் ஈழத்தில் நடைப்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் முடிவில் முள்ளிவாய்க்காலிலும் பிற இடங்களிலும் கொடூரமான இனப்படுகொலைகள் நடைப்பெற்றதற்கான பல அத்தாட்சிகள் வெளிவந்தபடி இருக்கிறது. கண்கள் கட்டப்பட்ட விடுதலைப்புலி வீரர்களை நிற்க வைத்து கொன்று போடும் சிங்கள வீரர்களின் வீடியோ காட்சி உண்மையானது என ஐக்கிய நாடுகள் சபை ஒப்புக் கொண்டிருக்கிறது.
ஐநா பொது செயலாளர் பான் கீ மூன் ஈழ இனப்படுகொலையைப் பற்றி புலனாய்வு செய்ய ஒரு வல்லுனர்கள் குழு அமைத்தார். அந்தக் குழுவும் ‘வலுவான ஆதாரங்கள்’ இருப்பதாக சொல்லியிருக்கிறது. சர்வதேச வல்லுனர்களின் முழு வீச்சிலான புலனாய்வு சர்வதேச சட்டத்திற்குட்பட்டு நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையும் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கான சர்வதேச சமூகத்தின் ஆதரவும் பெருகியபடி இருக்கிறது. இதற்கிடையில் ஈழத்து ஃபெரிடாக்களின் கதைகள் இன்னும் வெளிவராமலே இருக்கின்றன.
குறிப்பு: நபர்களின் பெயர்கள் மற்றும் ஊர் பெயர்கள் உச்சரிப்பு பிழை இருக்கலாம்.
நன்றி முதல் ஓவியம்: கனடா நாட்டு ஓவியர் Ty Agha இரண்டாம் ஓவியம்: சோபா
படங்கள் அனைத்தும் செய்தி நிறுவன படங்கள். பெரும்பாலானவை புகைப்பட கலைஞர் டார்கோ பேண்டிக் எடுத்தவை.
ஒரு மீட்டலில் இசைத்து விடுகிற வீணை தான் எனினும் ஏழு மலைத் தாண்டி ஏழு கடல் தாண்டி அலைந்து திரிந்தாலும் அதன் பசி அடங்குவதில்லை.
அதன் நிறம் சூரிய கிரகணத்தைப் போன்றது. மூழ்கி போனவனின் வாசனை அதற்கு. குரலோ இரவில் பதற்றம் ஏற்படுத்தும் கொடூர வனவிலங்குடைய கர்ஜனை. தொட்டால் பனிக்கட்டி; தொடாவிட்டால் வெயில்.
சுமையா? இயந்திரமா? வெறும் மாயை தானோ? நான் தானா? இன்னொரு ‘நானா?’ ஆதி ரகசிய செய்தியா? கடவுளோ? சைத்தானோ?
திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகி விட்டது. அந்த ஆணிற்குத் தன் திருமண வாழ்க்கை அலுக்க தொடங்கி விட்டது. அவனது பார்வை மற்ற பெண்கள் மீது நகர்கிறது. அப்போது அவனிடம் அவள் சிக்கினாள். ஒரு நாள் நியூ யார்க் நகரத்தில் இருவரும் ஒரு திகில் படத்தைத் திரையரங்கு ஒன்றில் பார்த்து விட்டு வெளியே வருகிறார்கள். நிலத்திற்கு அடியில் சப்வே ரயில் ஓடும் சத்தம் கேட்கிறது. சப்வே தண்டவாளம் ஓடும் இடத்திற்கு மேலே இரும்பு கம்பிகளால் ஆன தடுப்பு இருக்கும் இடத்திற்குச் சென்று அவள் நிற்கிறாள்.
“இங்கு எப்படி காத்து வருது பார்,” என்று சிரித்தபடி சொல்கிறாள். கீழிருந்து வரும் காற்று அவள் அணிந்திருந்த வெள்ளை நிற கவுனைப் பட்டாம்பூச்சி இறக்கைகள் போல வடிவம் கொள்ள வைத்தது. உடை உயர்ந்தது. அவளுடைய பளீர் கால்களும், தொடைகளும் பார்வைக்குத் தெரிந்தது. அவள் சிரித்தபடி தனது உடையை அழுத்தி பிடிக்கிறாள். எனினும் அதீத காற்று தன் முயற்சியில் வென்றபடி இருந்தது.
Seven years Itch என்கிற ஆங்கிலப் படத்தில் வரும் காட்சி இது. காட்சியில் நடித்தவர் பிரபல நடிகை மர்லின் மன்றோ. இந்தத் திரைப்படத்தை விட அந்தக் காட்சி; அந்தப் புகைப்படம் உலகளவில் புகழ் பெற்று விட்டது.
எதோ தற்செயலாக எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல இது. திரைப்பட தயாரிப்பு நிறுவனமான திவண்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் திட்டமிட்டு உருவாக்கிய நிகழ்வு. இந்தக் காட்சியைப் படமாக்க போகிறோம் என்பதும் எங்கே என்பதும் எந்த நேரத்தில் என்பதும் முன்பே பரவலாக சொல்லப்பட்டது. 1954ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி இந்தக் காட்சி படம் பிடிக்கப்பட்டது. காட்சியைப் படமாக்கும் சமயம் அங்கே எக்கசக்க பேர் குழுமி விட்டார்கள். அதோடு நிறைய புகைப்படக்காரர்களும் வந்து விட்டார்கள். திரைப்பட இயக்குனரான பில்லி வைல்டர் சுற்றி நிற்கும் புகைப்படக்காரர்களுக்கு உதவுவதற்காக அந்தக் காட்சியைப் பதினைந்து முறை எடுத்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சாம் ஷா என்கிற புகைப்படக்காரர் எடுத்த புகைப்படம் தான் உலகளவில் புகழ் பெற்றது.
“புகைப்படத்தில் ஒரு சராசரி அமெரிக்க மத்திய வர்க்க பெண்ணைப் போல தான் மர்லின் மன்றோ இருக்கிறார். எங்கோ வெளியூர் போகும் போது திடீரென காற்றடித்து உடை உயர்ந்ததும் சிரித்தபடி அதை மறைக்க முயலும் பெண்ணை அவர் நினைவுப்படுத்துகிறார். இதில் போஸ் கொடுக்கும் மன்றோ ஆணின் பார்வைக்காக நளினம் காட்டி அதே சமயம் அதிலிருந்து தப்பிக்கவும் செய்கிறார். 1950களில் இருந்த அமெரிக்க மனநிலையைப் பிரதிபலிக்கிறது இந்தப் புகைப்படம். அன்றைய சமூக விழுமியங்களுக்காக தன் அங்கங்களை மறைக்க முயல்கிறார். அதே சமயம் அப்படி செய்யும் முறையிலே அதை நையாண்டியும் செய்கிறார். இரண்டாம் உலகப்போர் முடிந்து வல்லரசாக மாறி கொண்டிருக்கும் அமெரிக்காவின் அன்றைய எதைப் பற்றியும் கவலைப்படாத உணர்வும் சந்தோஷமும் மர்லின் மன்றோவின் முகத்தில் தெரிகின்றன,” என்கிறார் பேராசிரியை லூயிஸ் பேனர். வரலாறு மற்றும் பாலின பார்வை குறித்த வல்லுனர் இவர்.
மேலும், “அணிந்திருக்கும் உடை வெள்ளை நிறம். அவளது தலைமுடி தங்க நிறத்தில் பளபளக்கிறது. காற்றில் விரியும் உடை இறக்கைகளைப் போல் தோற்றம் கொள்கிறது. கிருஸ்துவ மரபில் மனிதர்களைக் காக்கும் தேவதையை நினைவுப்படுத்துகிறாள். அதே சமயம் கிரேக்க மரபில் வரும் காதலுக்கான கடவுள் அப்ரோடிட் காமத்திற்கு ஏங்கி நிற்பதைப் போலவும் தெரிகிறாள். அமெரிக்காவில் இன்னும் இருக்கும் பழமைவாதிகளையும் கண்டிப்பான சென்சார் போர்ட்டையும் அவள் நகைக்கிறாள். காட்சி அவளது கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவளே மேலே இருக்கும் பெண். இயற்கையின் நியதிகளை மாற்றி போடுகிறாள். ஆணின் அதிகாரத்தை ஒரு சீண்டலில் காலி செய்து விட்டாள்,” என்கிறார் லூயில் பேனர்.
20ம் நூற்றாண்டின் மறக்க முடியாத புகைப்பட போஸாக இது மாறி போனது. இந்தப் புகைப்படம் ஏன் உலகப்புகழ் பெற்றது என்பதற்குக் காரணங்களைப் பாலியல்ரீதியாக உளவியல் முறையில் அடுக்கி கொண்டே போக முடியும்.
கவர்ச்சியும் மர்மமும்
1920ம் ஆண்டு மர்லின் மன்றோ பிறந்தார். இவரது தந்தை யார் என்பது குறித்த சர்ச்சை இன்னும் தீரவில்லை. தாயார் கிளேடிஸ் வறுமையிலும் பிறகு மனநோயாலும் பாதிக்கப்பட்டார். என் கதை என்கிற தலைப்பில் மர்லின் மன்றோ எழுதிய கட்டுரையில் தனது தாய் எப்போதும் கத்தி கொண்டும் சிரித்தும் கொண்டும் இருந்தார் என்று எழுதுகிறார். ஒரு கட்டத்தில் கிளேடிஸ் மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். மர்லின் மன்றோ அனாதை காப்பகங்களில் வளர்ந்தார். 16 வயதில் திருமணம் செய்து கொண்டார். அவருடைய முதல் கணவர் போரில் வெளிநாட்டிற்குச் சென்ற பிறகு மன்றோ போர் உபகரணங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்ய தொடங்கினார். அங்கே ஒரு புகைப்படக்காரர் மர்லினை கண்டுபிடித்தார். ‘பின் அப்’ புகைப்படங்களுக்காக கவர்ச்சி போஸ் கொடுக்க தொடங்கினார். இடையில் பணக் கஷ்டத்திற்காக 50 டாலருக்காக ஒரு கேலண்டருக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்தார்.
திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்கவும் தொடங்கினார். கவர்ச்சியும் சிறுமித்தனமான சேஷ்டைகளும் அவரைப் புகழ் ஏணியின் உச்சியில் ஏற்றியது. அமெரிக்காவின் மறக்க முடியாத கனவு கன்னி என பெயர் பெற்றார் மர்லின் மன்றோ. அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டியூட் அவரை ‘எல்லா காலங்களிலும்’ சிறந்த நடிகை என புகழ்கிறது. டிவி கைட் நெட்வொர்க் திரைப்படங்களிலே கிளாமரான நடிகைகளில் நம்பர் ஒன் என்கிற அந்தஸ்தினை அளித்து இருக்கிறது.
மர்லின் மன்றோ ஹாலிவுட்டில் புகழ் உச்சியில் இருந்த சமயம் அவர் வறுமை காலத்தில் நிர்வாணமாய் கொடுத்த போஸ் பற்றிய தகவல் வெளியானது. இந்தப் புகைப்படத்தில் இருப்பது மர்லின் மன்றோவே இல்லை என சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் சொல்ல திட்டமிட்டன. ஆனால் மன்றோ அது தன்னுடைய புகைப்படம் தான் என்றும் வறுமைக் காலத்தில் அப்படி போஸ் கொடுத்தேன் என்றும் பேட்டி கொடுத்தார். இந்தப் பேட்டி சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் பயந்ததற்கு நேர்மாறான விளைவுகளை ஏற்படுத்தியது. அவருடைய தாயின் மனநோய், அனாதை இல்லங்களில் கழிந்த அவரது இளமைக்காலம், எங்குச் சென்றாலும் அவருக்கு நேரிட்ட பாலியல் தொந்தரவுகள் பற்றிய கதைகள் பத்திரிக்கைகளில் தொடர்ந்து வெளியாக ஆரம்பித்தன. அவருடைய திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற தொடங்கின.
பொருளாதாரம் வளர்ந்தாலும் மன்றோவின் தனிப்பட்ட வாழ்க்கை பல சவால்களைச் சந்தித்தபடியே தான் இருந்தது. கணவர்கள் மாறி கொண்டே இருந்தார்கள். திரைப்படங்கள் பெரும்பாலும் அவரை வெகுளி போல சித்தரித்தாலும் உண்மையில் மன்றோ அறிவாற்றல் மிக்கவராகவே இருந்தார். புகழ் பெற்ற இலக்கியவாதியான ஜான் மில்லரைத் திருமணம் செய்து கொண்டார். சொந்த திரைப்பட நிறுவனத்தைத் தொடங்க திட்டமிட்டார்.
மற்றொருபுறம் அதீத புகழ் மர்லின் மன்றோவின் குணத்தை மாற்றி கொண்டிருந்தது. பொது இடங்களில் அவர் அணியும் உடைகள் அவர் நடந்து கொள்ளும் முறைகள் விமர்சிக்கப்பட்டன. தூங்க இயலவில்லை என மன்றோ உளவியல் நிபுணர்களை நாடி சென்றார். ஆனால் போதை மருந்திற்கு அடிமையானார். பல ஆண்களோடு தொடர்பு வைத்து கொண்டதாகவும் கிசுகிசு உண்டு. அமெரிக்க ஜனாதிபதி கென்னடியும் இதில் அடக்கம் என்பார்கள். ஒரு கட்டத்தில் ஷுட்டிங் ஸ்பாட்களிலே அவருடைய நடத்தை தாங்க முடியாத அளவு மாறியது என்கிறார்கள். இதனால் திரைப்பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. ஏற்கெனவே ஒப்பு கொண்ட சினிமாக்களில் நடிக்க மறுக்கிறார் என்கிற புகார்கள் எழுந்தன. திரைப்பட நிறுவனங்கள் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. அவருடைய உடல்நிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
சரியும் தன் புகழை மீட்பதற்காக மன்றோ பல நிர்வாண புகைப்படங்களுக்குப் போஸ் கொடுத்தார். சர்ச்சைக்குரிய பேட்டிகள் அளித்தார். மீண்டும் திரைப்பட வாய்ப்புகள் பெருக தொடங்கிய சமயத்தில் தனது 36வது வயதில் இறந்து போனார். அதிகளவு போதை மருந்து உட்கொண்டதால் இறந்தார் எனவும் தற்கொலையாகவும் இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. மர்லின் மன்றோ கொல்லப்பட்டார் என்றும் கென்னடி இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்றும் அமெரிக்க உளவு நிறுவனத்தின் சதி என்றும் இல்லை இது மாபியா கும்பலின் கைவரிசை என்றும் பல கதைகள் பிறகுப் புனையப்பட்டன. அமெரிக்காவின் தீர்க்கப்படாத மர்மங்கள் வரிசையில் மர்லின் மன்றோவின் புதிர் மரணமும் இடம் பெற்று விட்டது.
அமெரிக்காவின் மறக்க முடியாத புகைப்பட போஸ்
1954ம் ஆண்டு மர்லின் மன்றோ சர்வதேச அளவில் புகழ் உச்சியில் இருந்த காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் seven years itch. கவுன் காற்றிலே பறக்கும் காட்சியிலே மர்லின் மன்றோ அணிந்திருந்த வெள்ளை நிற உடையை வடிவமைத்தவர் வில்லியம் டிராவில்லா. 2011ம் ஆண்டு இந்த உடை ஏலத்திற்கு வந்தது. 33 கோடி அறுபது லட்சம் ரூபாயிற்கு விற்பனையானது.
இந்தப் புகைப்படத்தின் காரணமாகவே அப்போதைய கணவர் ஜோ டீமேகோவோடு மர்லின் மன்றோவிற்குப் பிரச்சனை தொடங்கியது. இந்த போஸ் மிக அதீதமாக இருப்பதாக ஜோ நினைத்தார். விரைவிலே இருவரும் பிரிந்து விட்டார்கள். ஆனால் மர்லின் மன்றோவின் மர்மமான மரணத்திற்குப் பிறகு ஜோ தான் வாழ்ந்த அனைத்து நாட்களும் மர்லினின் சமாதிக்குப் பூக்களை அனுப்பி கொண்டே இருந்தார்.
மர்லின் மன்றோவின் புகழ் பெற்ற புகைப்படத்தை எடுத்த சாம் ஷா திறமையானவர். உயர்ந்த கட்டிடங்கள், விவசாயிகள், பாடகர்கள், அழகான பெண்கள் என அவர் எடுத்த புகைப்படங்கள் ஏற்கெனவே புகழ் பெற்றிருந்தன. 1950களில் திரைப்பட துறைக்கு வந்த சாம் ஷா seven years itch திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ புகைப்படக்காரர்.
காற்றிலே கவுன் உயர எழும்பும் காட்சியைப் சாம் ஷா தவிர இன்னும் பல பேர் புகைப்படம் எடுத்தார்கள். மேத்யூ சிப்பர்மென் எடுத்த புகைப்படத்தில் மர்லின் மன்றோ சற்று குனிகிறார். அவருடைய உடை பட்டாம்பூச்சி இறக்கைகள் போல விரிந்து நிற்கின்றன. பின்னால் இருக்கும் புகைப்படக்காரர்களும் தெரிகிறார்கள். எலியட் எர்விட் எடுத்த புகைப்படத்திலே மர்லின் மன்றோவின் அழகிய வடிவம் நின்ற நிலையில் பதிவாகி இருக்கிறது. கேரி வின்னோகிரான்ட் எடுத்த புகைப்படத்திலே மர்லின் மன்றோவின் கைகள் இன்னும் உடையை அழுத்தி கொண்டு இருக்கிறது. ஆனால் முகம் பின்னோக்கி சரிந்திருக்கிறது. அந்தச் சமயத்தில் எடுக்கப்பட்ட மற்ற புகைப்படக்காரர்களின் படங்களும் இன்னும் விரும்பப்படுகிறது.
மர்லின் மன்றோ அன்றைய அமெரிக்காவின் செக்ஸ் குறியீடாக இருந்தார். புகைப்படக்காரர்களுக்கு மிக அழகான போஸ்களைக் கொடுப்பதில் திறமையானவராகவும் இருந்தார். புகழ் பெற்ற புகைப்பட நிபுணரான ரிச்சர்ட் அவ்டன், “நான் இதுவரை புகைப்படம் எடுத்த எல்லா பெண்களில் மன்றோ போல திறமையானவரைப் பார்த்ததில்லை,” என்கிறார்.
இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதற்கு அடுத்த நாள் சினிமா தயாரிப்பு நிறுவன ஊழியர்கள் இந்தப் புகைப்படத்தினை அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உள்ள எல்லா நாளிதழ்களுக்கும் பத்திரிக்கைகளுக்கும் அனுப்பினார்கள். தொடர்ச்சியாக இந்தப் புகைப்படம் மக்கள் மத்தியில் காட்டுவதற்கான ஏற்பாடுகளைக் கவனித்து கொண்டே இருந்தார்கள். அவர்களுடைய முயற்சிகளைத் தாண்டி மிக பெரிய புகழினை ஈட்டி விட்டது இப்புகைப்படம்.
அமெரிக்காவின் மறக்க முடியாத புகைப்பட போஸினைப் பின்னர் பல நடிகைகளும் பல திரைப்படங்களும் காப்பியடித்தன. தமிழில் நடிகை ரம்பா உள்ளத்தை அள்ளித் தா திரைப்படத்தில் அழகிய லைலா பாடலின் தொடக்கத்தில் இந்த போஸினைக் காப்பியடித்து இருப்பார். 2013ம் ஆண்டு ஜப்பானில் நெற்பயிர்களில் இந்த போஸ் பிரம்மாண்ட சைஸில் வடிவமைக்கப்பட்டது. ‘Forever Mariyln’ என்கிற பெயரில் இந்த போஸ் பெரிய சைஸில் சிலையாக வடிவமைக்கப்பட்டு சிகாகோ நகரில் காட்சிக்காக வைக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் மத்தியில் இந்த சிலை புகழ் பெற்றாலும் உள்ளூர்வாசிகளுக்கு இது எரிச்சலை ஏற்படுத்தியது. சுற்றுலா பயணிகள் மர்லினின் கால்களை நக்குவது போலவும், உயர்ந்த கவுனுக்கு கீழே நின்று மேலே பார்ப்பது போலவும் புகைப்படம் எடுத்து கொண்டார்கள். இரண்டு முறை சிலையைச் சிதைக்கும் முயற்சியும் நடந்தது. மர்லின் மன்றோ என்றாலே சர்ச்சைகள் தானோ?