• குழந்தையை சுமப்பது போல
    இரு இளம்பெண்கள் தங்கள் மருதாணியிடப்பட்ட கைகளை
    எதன் மீதும் உரசாமல் கவனத்துடன் நடந்து போவதை
    பார்க்கும் போது தான்
    நான் எந்த வீதிக்கு வந்து இருக்கிறேன்
    என்பது உரைக்கிறது.

    அங்கங்களை நகைகளாக மாற்றி கொள்ளும்
    ஆர்வத்தில் மாதுகளுடன் சில இளைஞர்களும்
    அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    என் கரங்களின் மேலிருக்கும்
    கறுப்பு கறையை மறைக்க வேண்டிய
    கட்டாயத்தினை உணரும் போது
    முலைகளின் வாசம் எங்கெங்கும் எழுகிறது.

    மூக்கிலிருந்து பொங்கும் உதிரத்தினை
    மறைக்க ஓட வேண்டும்
    ஏதேனும் பழைய துணியினை தேடி.

    குப்பை தொட்டிகளை காண முடியவில்லை.

    பளபளக்கும் துணிகள்
    கடைகளின் வாசலில் தொங்கியபடி
    அனைவரையும் அணைத்து வரவேற்கிறது.

    என் மூக்கிலிருந்து ரத்தம் கொட்ட கொட்ட
    தூரத்தில் நடனமாடும் துணிகளை நோக்கி ஓடுகிறேன்.

    யாரோ மறித்தார்கள்.
    எங்கோ அடி விழுந்தது.
    கண்கள் இருள்வதற்கு முன்
    உதிரத்தால் ஒப்பனையிடப்பட்ட
    வேறொருத்தியின் முகத்தை காண்கிறேன்.
    அல்ல அது நான் தானா?

    விடைக்கு முன்னால்
    உடல் அடங்கி கொண்டிருக்கிறது.


  • ஆச்சரியம் தான். நான் இதற்கு முன் பல முறை பல வலைப்பதிவுகளை தொடங்கி இருக்கிறேன். அவற்றிற்கு அதிகபட்ச ஆயுள் ஓரிரு தினங்கள் தாம். ஆனால் இந்த வலைப்பதிவு சற்று மாறுபட்டது. தொடங்கி ஒரு வருடமாகி விட்டது. 67 பதிவுகள் பதிந்தாயிற்று.

    தமிழ்மணத்தின் உதவியால் உடனடி பார்வையாளர்கள் கிடைத்தது தான் இந்த வலைப்பதிவு இன்றும் உயிருடன் இருப்பதற்கு முதல் காரணம். நாம் பதிவதை பலர் படிக்க வருகிறார்கள் என தெரிந்த பிறகு வலைப்பதிவு என்னுடைய வாழ்க்கையின் முக்கிய பங்காக மாறி வருகிறது.

    வலைப்பதிவு இன்ன காரணத்திற்காக இந்த வகைபட்டதாய் (genre) இருக்க வேண்டும் என தொடக்கத்திலே முடிவு செய்வது மிகவும் கஷ்டம். கவிதைகளுக்கு மட்டும் என்று நான் திட்டமிட்டது இன்று கவிதைகளை தாண்டி புனைவு மற்றும் வெவ்வேறு தலைப்புகளாக வளர்ந்து நிற்கிறது.

    இந்த வலைப்பதிவு காரணமாய் நல்ல நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள். பள்ளிப்பருவத்தில் தொடர்பு அறுந்து போன நண்பன் ஒருவன் இந்த வலைப்பதிவு வழியாய் மீண்டும் கிடைத்தான். இந்த வலையுலகத்தை அறிமுகம் செய்தவர் பாலபாரதி. தொடங்கிய சில நாட்களிலே ஓடி வந்து ஊக்கமளித்து இன்றும் தெம்பு தருபவர் ரவி. தவிர நிறைய நண்பர்களுக்கு நன்றி கடன்பட்டிருக்கிறேன்.

    ஒரு வருடம் கடந்த இந்த வலைப்பதிவால் என்ன லாபம் என கேட்டால் எனக்கு தெளிவாக தெரியவில்லை. முதலில் ஓர் எழுத்து பயிற்சி. இந்த வலைப்பதிவு இல்லையெனில் 34 கவிதைகளை எழுதியிருக்கவே மாட்டேன். வாரத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் கவிதைகளை பதிக்க வேண்டும் என்கிற சுய விதிமுறையை அவ்வபோது நான் மீறி இருந்தாலும் 34 கவிதைகளை எழுதியதே எனக்கு பெரிய காரியம். அடுத்து கட்டாயபடுத்தி எழுதுவதெல்லாம் கவிதையா என்கிற கேள்வியை எழுப்பினால் இந்த 34-இல் ஒரு கவிதையாவது தேறி இருக்காதா என்றே யோசிக்கிறேன்.

    கதையாடல் என்கிற பெயரில் நான் போட்டு கொண்டிருக்கும் புனைவும் இல்லாத, கட்டுரையும் அல்லாத இரண்டும் கலந்த பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வகையறா பதிவுகளை தொடர்ந்து எழுத முடியவில்லையெனினும் அவ்வபோதாவது முயற்சி செய்வேன்.

    வலைப்பதிவில் அவ்வபோது எழுதவில்லையெனில் அது உயிர்ப்புடன் இருக்காது என அறிவேன். அதற்காக தொடர்ந்து எதையாவது எழுதி கொண்டே இருந்தால் தரமிருக்காது என்றும் தெரியும்.

    அடுத்த ஆண்டு இந்த சமயம் இந்த வலைப்பதிவு தொடங்கி இரண்டு வருடமாகி விட்டது என நான் எழுதும் போது இந்த வலைப்பதிவின் முகமும் தரமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே அடுத்த முயற்சி.

    அனைவருக்கும் நன்றி.

    – சாய் ராம்


  • எந்த ஒரு செயல் நடப்பதற்கு முன்பும் அது நடக்க போகிறது என்கிற அறிவிப்பு காட்டுகிற விதமான விஷயங்கள் நடப்பதுண்டு. ஆங்கிலத்தில் சுருக்கமாக Symptoms. தமிழ் இனத்திற்கும், தமிழ் பாரம்பரியத்திற்குமான சாவு மணி பல வருடங்களுக்கு முன்னாலே அடிக்கபட்டாலும் அதன் சாவின் முன்னோட்டம் இப்போது ஈழத்தில் அடித்து வீழ்த்தப்படும் அப்பாவி தமிழ் மக்களின் சாவுகளாலும் அதனை தொடர்ந்து எழும் தமிழ் மக்களின் மௌனத்தாலும் தெளிவாக தெரிகிறது.

    தமிழ் நாட்டில் ஆங்கிலத்தில் பேசுவது கௌரவம், ஆங்கிலத்தில் நமது பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும், மேற்கத்திய கலாச்சாரத்தில் ஊறினால் மரியாதை என்கிற விதமான மனோபாவம் பரவலாக பரவிய போதே சாவு மணி கேட்க தொடங்கி விட்டது. இப்போது ஈழத்தில் லட்சக்கணக்கான மக்கள் மனித உரிமைகளை இழந்து போர்கைதிகளாக நிற்கும் சூழலில் அதனை தமிழனே தட்டி கேட்க தயங்கும் நிலை உருவாக்கபட்ட பிறகு, இது “தமிழினி மெல்ல சாகும்,” என்பதனை தான் உரத்து சொல்லுகிறது.

    ஓவியம்: Frank Frazetta


  • நமக்கு தெரிந்த தகவல் தான். ஆனால் ஆராய்ச்சி முடிவாய் வெளிவரும் போது அதிர்ச்சியாக தானே இருக்கிறது. அதிகாரம் படைத்தவர் முதலாளியோ, கம்பெனி எம்.டியோ, சிறுவர்களாய் இருந்தால் தந்தையோ, அதிகாரமிக்கவர் யாரேனும் ஆணையிட்டால் அதனை ஏற்று பெரும்பாலனோர் கொல்லவும் துணிவார்கள் அல்லது குறைந்தபட்சம் மற்றவர்களை சித்ரவதை செய்யவும் துணிவார்கள். இது சாந்தா கிளாரா பல்கலைகழகத்தில் உள்ள முனைவர் ஜெர்ரி பர்கர் என்பவர் வெளியிட்டுள்ள ஆய்வின் முடிவு. இதற்கு முன்பு இதே போன்ற ஆய்வு முடிவினை 1963-ம் ஆண்டே யேல் பல்கலைகழகத்தை சேர்ந்த ஸ்டான்லி மில்கிராம் என்பவர் வெளியிட்டார். சர்ச்சைக்கு ஆளான இந்த ஆய்வு முடிவு இப்போது மீண்டும் செய்திகளில் அடிபட தொடங்கியிருக்கிறது. மிக சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்கள் கூட கலவரங்கள் நடக்கும் போது சட்டென எதிர் இனத்தவரை கொல்லும் கும்பலில் சேர்ந்து மிக கொடூரமான குற்றங்கள் புரிவது பற்றி இந்த ஆய்வு முடிவு விளக்க முயல்கிறது.

    அதிகாரம் என்பது ஒரு கதாபாத்திரம் அல்ல

    அதிகாரம் என்பது ஒரு நாட்டின் ராணுவ அதிகாரியையோ அல்லது ஒரு குழுவின் தலைவனை மட்டும் குறிப்பதல்ல. ஒரு சிறு அலுவலகத்தில் இருக்கும் சிடுமூஞ்சி மேனேஜர், பள்ளிக்கூடத்தில் மாணவர்களை பயமுறுத்தும் வாத்தியார், வீட்டில் பிள்ளையை மிரட்டும் தந்தை இவர்கள் எல்லாருமே அதிகாரங்கள் தாம். ஓர் இடத்தில் அதிகாரம் செலுத்துபவராய் இருப்பவர் மற்றொரு இடத்தில் அதிகாரத்திற்கு பயந்தவராய் இருக்கவும் நேரிடுகிறது. அதிகாரம் குறித்த பயமும், அதிகாரம் கிடைத்தால் அதனை துஷ்பிரயோகம் செய்வதும் மனிதர்களிடையே பரவலாய் நடப்பது தானே.

    மக்கள் தங்கள் வாழ்க்கைக்கென ஒரு மதீப்பீடு வைத்து இருக்கிறார்களா? அல்லது ஜனநெருக்கடி மிகுந்த தெருவில் கூட்டம் இடித்து கொண்டு முன்னேறும் பாதையில் தாங்களும் ஆற்றில் விழுந்த இலை போல போய் கொண்டிருக்கிறார்களா? இது தான் இன்று நம் முன் நிழலாடும் கேள்வி.

    ஓவியம் – Marci Nick


  • மண் புழுதி தெருவில் பறக்க
    அந்த அக்காவை
    அவர்கள் இழுத்து சென்ற காட்சியை
    அவள் கண்டது ஐந்து வயது சிறுமியாக.

    முப்பது நாற்பது வருடங்கள் உருண்டோடினாலும்
    அந்த மண் புழுதி
    இன்னும் மறையவே இல்லை.
    அதோடு, “இனி நம்ம சாதி பொம்பளைங்க
    சாதி மாறி ஆசை வைக்க கூடாது,” என
    அந்த பெண்ணின் மாமன்
    சாராய வாடையோடு கர்ஜித்ததும்;
    பெருங்குரலெடுத்து அந்த பெண்ணின் தாயார்
    மண்டியிட்டு அழுததும்;
    அடுத்த நாள் சுண்ணாம்பு குழியில்
    கண்டெடுக்கபட்ட
    கருகி போன அந்த அக்காவின் உடலும்
    அவளை துரத்துகின்றன
    ஒவ்வொரு முறையும்
    அவள் காதலர்களை கடக்கும் போதெல்லாம்.


  • இன்று காலை நான் தூங்கி விழித்த போது என் படுக்கைக்கு நேர் எதிரில் இருந்த தொலைக்காட்சி பெட்டியில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஈராக்கிய பத்திரிக்கையாளர் ஒருவர் தனது ஷுவை எறிந்த காட்சி ஒளிபரப்பாவதை பார்த்தேன். இப்படியாக இந்த காட்சியை பார்த்து என்னுடைய நாள் தொடங்கியது குறித்து ஏனோ எனக்குள் ஒரு மகிழ்ச்சி. எதற்காக இந்த மகிழ்ச்சி?

    இன்று முழுவதும் நான் சந்தித்த மனிதர்கள் பல பேர் இந்த காட்சியினை கண்டு சந்தோஷபட்டதை பார்த்தேன். யாரும் தீவிர அமெரிக்க எதிர்ப்பாளர்கள் கிடையாது. உலகிலே மிகுந்த அதிகாரமுள்ள ஒருவர் மீது ஷு எறியும் துணிவுள்ளவரை பற்றிய வியப்பும் அல்ல இது. பலருடைய மனதில் இருக்கும் பெருங்கதையாடல் குறித்த கோபம் தான் இப்படி வெளிபடுவதாய் நினைக்கிறேன். அல்லது அதிகாரத்தின் மீதான சராசரி மனிதனுக்கு இருக்கும் கோபத்தின் வெளிபாடு தான் இந்த காட்சி குறித்தான மகிழ்ச்சி என்று நினைக்கிறேன்.

    முன்டேசர் அல் சய்தி! ஈராக்கில் உள்ள அல் பாக்தாத்தியா என்கிற தொலைக்காட்சி நிறுவனத்தில் பத்திரிக்கையாளராக வேலை பார்த்து வருபவர். கடந்த வருடம் தீவிரவாதிகளால் கடத்தபட்டு மூன்று நாட்கள் கழித்து விடுவிக்கபட்டார்.

    அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து அடுத்த மாதம் விலக இருக்கும் ஜார்ஜ் புஷ் 2003-ம் ஆண்டு ஈராக் மீது படையெடுத்தது மூலம் அந்த பகுதியில் அதிகமாய் வெறுக்கபடும் மனிதராய் இருக்கிறார். இச்சூழலில் கடைசி முறையாக அமெரிக்க அதிபராக ஈராக்கிற்கு வருகை தந்த போது இந்த அவமானம் நிகழ்ந்தது.

    பத்திரிக்கையாளர் சந்திப்பில் புஷ் பேசி முடித்தவுடன் அல் சய்தி தனது இருக்கையிலிருந்து எழுந்திருத்து, “நாயே இந்தா எங்களது பிரிவு உபசார பரிசு,” என கத்தியபடி தனது இரண்டு ஷுக்களையும் ஒன்றன் பிறகு ஒன்றாக புஷ்ஷை நோக்கி எறிந்தார். புஷ்ஷின் மேல் அவை விழவில்லை. அவர் குனிந்து தப்பித்து கொண்டார்.

    “ஈராக்கில் கொல்லபட்டவர்களுக்காக, அனாதை ஆக்கபட்டவர்களுக்காக, விதவையாக்கபட்டவர்களுக்காக,” என அல் சய்தி ஷுவை எறியும் போது கத்தினார்.  மத்திய கிழக்கு நாடுகளில் ஒருவரை பார்த்து ஷுவை காட்டுவது அவமானங்களின் உச்சம். அதை விட அவமானத்தின் உச்சம் ஒருவர் மீது ஷுவை எறிவது.

    இப்போது ஈராக்கில் மட்டுமல்லாது மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் அல் சய்தி ஒரு ஹீரோவாக பார்க்கபடுகிறார். பல இடங்களில் மக்கள் ஒன்று கூடி அல் சய்தி விடுதலை செய்யபட வேண்டுமென போராட்டம் நடத்துகிறார்கள்.  சவுதியில் உள்ள சமூக அரசியல் பேராசிரியர் காலித் அல் தக்கில் என்பவர் இந்த சம்பவம் புஷ் ஈராக்கில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் எதிரொலி என குறிப்பிட்டு இருக்கிறார்.  நீங்கள் சந்தோஷப்பட்டீர்களா? அல்லது புஷ்ஷிற்காக பரிதாபப்பட்டீர்களா? காட்சியை கண்டவுடன் அடுத்த நொடி உங்கள் மனதில் தோன்றிய உணர்ச்சியை கேட்கிறேன்.


  • 1. பிரச்சாரத்தின் பிம்பம்
    புகைப்படக்காரர் – கிரிஸ்டோபர் மோரிஸ்

    அமெரிக்காவில் இந்த ஆண்டு நடந்த அதிபர் பதவிக்கான தேர்தல் பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கான பிரச்சாரம் வரலாறு காணாத வகையில் பிரம்மாண்டமாக நடந்தது. அதிபர் பதவிக்கு போட்டியிட்ட மெக் கைன் தான் நிகழ்த்த இருக்கும் உரைக்கு தன்னை தயார் செய்து கொண்டிருந்த போது அவரது மனைவி சிண்டி, ஓட்டல் அறையில் வெள்ளை வைனை அருந்தியவாறு கணவருக்காக காத்திருந்தார்.

    பெல்ப்ஸ் சாதனை
    புகைப்படக்காரர் – ஹன்ஸ் லுடைமியர்

    இந்த ஆண்டு சீனாவில் நடத்தப்பட்ட ஓலிம்பிக் போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த நீச்சல் போட்டி வீரர் மைக்கெல் பெல்ப்ஸ் உலக சாதனையாக அதிகளவு தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். அவரது ஏழாவது தங்கப்பதக்கம் நூறு மீட்டர் பட்டர்ஃபளை நீச்சலில் கிடைத்தது. இதில் அவருக்கு அடுத்ததாக வந்த செர்பிய நாட்டு நீச்சல் வீரர் மிலோரட் கேவிக்கிற்கும் அவருக்கும் இருந்த வித்தியாசம் வெறும் .01 விநாடிகள் தாம்.

    சீயோனின் குழந்தைகள்
    புகைப்படக்காரர் – ஸ்டெபானி சின்கலர்

    அமெரிக்க டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தனிப்பிரிவு கிருஸ்துவ சர்ச் நிர்வாகம் ஒன்றின் மீது குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் நடப்பதாக குற்றம் சாட்டபட்டது. இதனை தொடர்ந்து அங்கு ரெய்டு நிகழ்த்தபட்டது. கடுமையான விதிமுறைகள் கொண்ட இந்த சமூகத்தினுள் நடப்பதை படம் பிடிக்கக்கூடிய அரிய சந்தர்ப்பம் புகைப்படக்காரர் ஸ்டெபானி சின்கலருக்கு வாய்த்தது. ஒரு சிறுமி தனது விளையாட்டு திறமையை காண்பிக்க்கும போது எடுக்கப்பட்ட படம்.

    மணலில் வரையப்பட்ட கோடு
    புகைப்படக்காரர் – ஆண்டனி சூவா

    அமெரிக்காவிற்கும் அதன் அண்டை நாடான மெக்ஸிகோவிற்கும் இடையே ஒரு நீண்ட சுவர் பல வருட பேச்சு வார்த்தைக்கு பிறகு கட்டப்பட்டு வருகிறது. 1.2 மில்லியன் டாலர் செலவில் கட்டப்படும் இந்த சுவரின் ஒரு பகுதி அரிசோனா மாகணத்தின் சான் லுயிஸ் பாலைவனத்தில் உள்ளது. அதனை அமெரிக்க எல்லை ரோந்து படையினர் பார்வையிடுகிறார்கள்.

    இழுத்து செல்லபட்டவை
    புகைப்படக்காரர் – பிரியான் ரே

    அமெரிக்காவில் இந்த ஆண்டு ஜுன் மாதம் வெள்ளம் கரை புரண்டோடியது. ஓரிடத்தில் ஆற்றங்கரையில் இருந்த வீடுகள் ரயில்வே பாலத்திற்கு கீழே வரை அடித்து செல்லபட்டன.

    இடிப்பாடுகளுக்கு நடுவே
    புகைப்படம் – கலர் சைனா போட்டோ நிறுவனம்

    சீனாவில் உள்ள சீயோசன் மாகணத்தில் இந்த ஆண்டு நிகழ்ந்த
    பூகம்பத்தில் 87,000 பேர் உயிர் இழந்தார்கள். மீட்பு பணியில் இருந்தவர்கள் பல நாட்கள் யாரேனும் உயிர் பிழைத்து இருப்பார்களா என தேடுதல் பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். மியான்யங் பகுதியில் இடிந்த கட்டிடத்தினுள் இருந்து காயமடைந்த ஒருவரை மீட்டு வருகிறார்கள்.

    கவனிக்கபடாதவை
    புகைப்படக்காரர் – யூரி கோஸிரிவ்

    தென் ஓசோட்டியா தனிநாடு கோரிக்கை கேட்டதை தொடர்ந்து ரஷ்யாவிற்கும் ஜார்ஜியாவிற்கும் இடையில் உரசலும் மோதலும் முற்றியது. மோதலில் இறந்து போன ஜார்ஜியா நாட்டு போர்வீரர்களின் உடல்கள் ஐந்து நாட்கள் ஆகியும் புதைக்கபடாமல் சவப்பெட்டியிலே இருக்கின்றன. டைம் இதழின் புகைப்படக்காரர் யூரி கோஸிரிவ் அங்கிருந்த அரசு அலுவலர்களிடம் கேட்ட போது, புதைக்க போதுமான வசதிகள் இன்னும் வந்து சேரவில்லை என்கிற பதிலே கிடைத்தது. ஆனால் அதே நாளன்று ஜார்ஜியாவில் உள்ள பழங்குடியினர் வீடுகளை இயந்திரங்கள் இடித்து தள்ளியதை புகைப்படக்காரர் பார்த்தார்.

    முகமூடி மனிதன்
    புகைப்படக்காரர் – ஜேரோம் டிலே

    ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் மீண்டும் இராணுவத்தினருக்கும் புரட்சியாளர்களுக்கும் நடுவே சண்டை முற்றியது. நாட்டின் கிழக்கு பகுதியெங்கும் நடந்த உக்கிர சண்டை காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர நேர்ந்தது.

    கைக்குலுக்கல்
    புகைப்படக்காரர் – ஜெர்ரி மோரிசன்

    2011-ம் ஆண்டு அமெரிக்க படைகள் இராக்கிலிருந்து வெளியேறுவதாக புது பாதுகாப்பு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டிருக்கிறது. செப்டம்பர் மாதம் அமெரிக்க பாதுகாப்பு செயலர் ராபர்ட் கேட்ஸ் பாக்தாத்தில் உள்ள கேம்ப் விக்டரியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது நகரத்தை மண் சூறாவளி முற்றுக்கையிட்டுருந்தது.

    தாயும் சேயும்
    புகைப்படக்காரர் – அலெக்சாண்டரா வெசினா

    ஆப்கானிஸ்தானில் உள்ள படாகஸ்தான் மாகணத்தில் வாழும் சயாமய் என்னும் பெண் தன் ஒரு மாத குழந்தைக்கு தாய்பால் கொடுக்கிறார். வளர்ச்சியின் நிழல் படியாத இந்த மலை பிரதேசதம் தான் உலகத்திலே அதிக பிரசவ மரணங்கள் நடக்கும் இடமாக விளங்குகிறது.

    மேலதிக விவரங்களுக்குடைம் இதழில் வெளிவந்த தொகுப்பு


  • பனை மரங்கள் ஆடி ஓய்ந்த
    சூறாவளி நாளுக்கு அடுத்த தினம்.

    இப்போது தான் எல்லையருகே வந்து இருக்கிறேன்.
    சூறாவளியை போர்வையாய் போர்த்தி
    எல்லை தாண்டலாம் என்கிற கனவு
    இனி பலிக்காது.

    துப்பாக்கி ஏந்தி ஒரு காக்கி கூட்டம்
    எறும்பு வரிசையாய் தூரத்தில் தெரிகிறது.

    ஆத்மாக்களை பிழிந்து உருவாக்கிய
    முறுக்கு கம்பிகள்
    இரத்த வாடையுடன் நீளமான கோடு கிழித்து
    காத்து இருக்கின்றன.
    வேலியினூடாக
    மின்சார தெரிப்பு மின்னலாய் நெருப்பினை
    துப்பி துப்பி தயாராகி விட்டன.

    நான் ஓட வேண்டும்.
    அவகாசமில்லை.

    மழை தெளித்த வீட்டின் முகப்பில்
    தவளைகளின் பெருங்குரல்களுக்கு பின்னே
    தன் அழுகையை ஓளித்து வைத்து
    காத்து இருப்பாள் என் மனைவி
    இறந்து போன மகளின் படத்தோடு.


  • உலகளவில் பிரபலமான தன்னார்வ தொண்டு நிறுவனம் ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் (HRW – Human Rights watch.) சர்வதேச அளவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை தைரியமாய் பகிரங்கபடுத்துவதில் இந்த தன்னார்வ நிறுவனம் பெயர் பெற்றது. சில நாட்களுக்கு முன்பு இந்த நிறுவனம் இலங்கையில் உள்ள கிழக்கு மாகாண அரசாங்கத்தை குற்றம் சாட்டி, அங்கு கடுமையான மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக தெரிவித்து இருக்கிறது.

    இலங்கையின் கிழக்கு மாகாணம் தற்போது ராஜ பக்சே அரசின் கட்டுபாட்டில் உள்ளது. விடுதலைபுலிகளின் நம்பிக்கைக்குரிய போர்படை தளபதியாக இருந்த கருணா அம்மன் 2004 ஆம் ஆண்டு விடுதலைபுலிகளிடமிருந்து பிரிந்து இலங்கை அரசிற்கு துணை போனார். தற்போது அவரது தலைமையின் கீழ் செயல்படும் ‘தமிழ்மக்கள் விடுதலைபுலிகள்’ என்கிற அமைப்பு கிழக்கு மாகாணத்தின் ஆட்சி பொறுப்பில் இருக்கிறது. கடந்த மே மாதம் முதல் இந்த அமைப்பை சேர்ந்த பிள்ளையன் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தன் என்பவர் இங்கு முதலமைச்சராக பதவி வகிக்கிறார். இவர் சிறுவனாக இருந்த போது விடுதலைபுலிகளால் வலுக்கட்டாயமாக அவர்களது படையில் சேர்க்கபட்டார் என்று இலங்கை அரசாங்கம் சொல்கிறது. இலங்கையில் 18 வயதிற்கு குறைவான சிறுவர்களை வலுக்கட்டாயமாக போரில் ஈடுபடுத்தினார்கள் என்பது விடுதலைபுலிகளின் மீதான பரவலான குற்றசாட்டு. இதன் பின்னணியில் பிள்ளையன் முதலமைச்சராக பதவியேற்றது ஜனநாயகத்திற்கு கிடைத்த மிக பெரிய வெற்றி என இலங்கை அரசாங்கம் கொண்டாடியது.

    HRW அமைப்பின் ஆசிய பிரிவு தலைவரான பிராட் ஆடம்ஸ், “இலங்கை அரசாங்கம் கிழக்கு மாகாணத்தை ஜனநாயக பாதைக்கு திரும்பிய பகுதியாக சொல்வது பொய். அங்கு கொலைகளும் ஆள் கடத்தல்களும் ஏராளமாய் நடக்கின்றன. குற்றவாளிகள் எந்த தண்டனையும் இல்லாமல் சுதந்திரமாய் நடமாடுகிறார்கள்,” என்று குற்றம் சாட்டி இருக்கிறார்.

    விடுதலைபுலிகளிடமிருந்து பிரிந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த கருணா லண்டனில் சமீபத்தில் கைதானார். பாஸ்போர்ட் தொடர்பான வழக்கில் அவர் கைது செய்யபட்டிருந்தார். கடந்த ஜுலை மாதம் அவர் இலங்கை கிழக்கு மாகாணத்திற்கு திரும்பி வந்து ‘தமிழ்மக்கள் விடுதலைபுலிகள்’ அமைப்பின் தலைமை பொறுப்பினை ஏற்றார். ஆனால் முதலமைச்சராக இருக்கும் பிள்ளையனுக்கும் கருணாவிற்கும் இடையில் அதிகார பகிர்வு காரணமாக பகைமை உண்டானது என்றும், இன்று ‘தமிழ்மக்கள் விடுதலைபுலிகள்’ கருணா மற்றும் பிள்ளையன் என இரண்டு பிரிவுகளாக பிரிந்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.

    அக்டோபர் மாதம் கருணா இலங்கை பாராளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார். கருணாவும் சரி, தற்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையனும் சரி 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை வலுகட்டாயமாக தங்கள் படையில் சேர்த்து கொண்டிருக்கிறார்கள் என குற்றம் சாட்டுகிறது HRW நிறுவனம்.

    ‘தமிழ்மக்கள் விடுதலைபுலிகள்’ ஆயுதங்களோடு கிழக்கு மாகாணத்தில் சுதந்திரமாய் சுற்றுகிறார்கள் என்பது பிபிசி நிறுவனம் தொடங்கி எல்லாரும் வெளியிட்ட தகவல். இலங்கை அரசாங்கம் இது குறித்து கவலைபடுவதே இல்லை. செப்டம்பர் மாதம் தொடங்கி 30 கொலைகளுக்கு மேல் நடந்திருக்கிறது என சொல்கிறது HRW நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை. கடந்த மாதம் அக்டோபர் மூன்றாம் தேதி இரண்டு தமிழ் இளைஞர்கள் இங்கு காவல்துறையினரால் கைதானார்கள். ஆறு நாட்கள் கழித்து அவர்களது உடல்கள் கடற்கரையோரம் ஒரு தூணில் கட்டபட்ட நிலையில் கண்டெடுக்கபட்டது. அவர்களது உடலில் கடுமையான சித்ரவதைகள் நடந்ததற்கான சான்றாய் காயங்கள் இருந்தன. இது போல பல சம்பவங்கள்.

    திரிகோணமலையின் கோனேஸ்வரம் கோயிலின் தலைமை பூசாரி சிவ குருராஜ குருக்கள் பகலில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது சுட்டு கொல்லபட்டார். மனித உரிமை அமைப்பு செயலாளர்களும் பத்திரிக்கையாளர்களும் கடத்தபடுவதும் கொல்லபடுவதும் மிரட்டபடுவதும் வாடிக்கையான நிகழ்வாகி கொண்டிருக்கிறது.

    HRW நிறுவனம் இலங்கை கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் அனைத்து மனித உரிமை மீறல்களுக்கும் அங்கு ஆட்சி பொறுப்பில் இருக்கும் ‘தமிழ்மக்கள் விடுதலைபுலிகளும்’ அவர்களுக்கு கண்மூடித்தனமான ஆதரவு தரும் ராஜ பக்சே அரசாங்கமுமே காரணம் என குற்றம் சாட்டி இருக்கிறது.

    இலங்கையில் தமிழ் மக்கள் மீது எந்த தாக்குதலும் நடக்கவில்லை என இந்திய அரசாங்கத்திடம் ராஜ பக்சே சொல்வதை வடி கட்டிய பொய் என நிருபிக்க HRW வெளியிட்டுள்ள அறிக்கையும் ஒரு சான்று.

    இந்திய அரசாங்கம் இனியாவது இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தமிழர்கள் மீது கட்டவிழ்க்கப்பட்டுள்ளது என்கிற உண்மையை ஒப்பு கொள்ளுமா அல்லது பல வருடங்களாய் கடைபிடித்து வரும் அமைதியை தொடருமா?

    மேலதிக விவரங்களுக்கு

    HRW நிறுவனம் வெளியட்டுள்ள அறிக்கை


  • வெடி மருந்து ஆறாய் ஓடுகிறது.
    தீக்குச்சிகள் அதில் நனைந்து அணைந்து போகின்றன.
    கரையோரம் பெருங்கூட்டம்.
    அழிவு பெருங்கணத்தை காண வியர்வை வாசத்தை பொருட்படுத்தாது காத்திருக்கிறார்கள்.
    சிலர் கூட்டநெரிசலால் கால் தவறி வெடிமருந்தில் விழுந்து புதைந்து போகிறார்கள்.
    யாரேனும் விழும் போதெல்லாம் ஒரு சாட்டையை விசிறினாற் போல சத்தம்.
    அந்த சத்தம் ஓலிக்கும் போதெல்லாம் தொடங்கும் பெரும் ஆரவாரமும் கேலி சிரிப்பு சத்தமும்.
    முரட்டு யானைகள் போன்ற பெண்கள் கூட்டமொன்றில் அரைபட்டு கரைபக்கம் வந்து கொண்டிருக்கிறேன்.
    இன்றாவது கடைசி நாளாக இருக்க வேண்டும்.