• முதல் சந்திப்பிலே ஆச்சரியப்படுத்தும் மனிதர்கள் உண்டு. சுந்தரமூர்த்தியுடனான முதல் சந்திப்பு அவ்வாறு தான் இருந்தது.

    சுந்தரமூர்த்திக்கு அறுபது வயதிருக்கும். வெள்ளை சட்டை, வேட்டி தான் உடுத்தி இருந்தார். பணக்காரர் என்பதை அவரது வீடும் அவரது வீட்டை அலங்கரித்த பொருட்களுமே சொல்லின. அவருக்கென இருந்த பிரத்யேக அறையில் தான் என்னை சந்தித்தார். அந்த அறை வியாபார நிமித்தமாக வருபவர்களைச் சந்திப்பதற்காக என யூகித்தேன். வியாபாரத்திற்கென தனி அலுவலகம் அவருக்கில்லை என சொன்னார். தேர்ந்த ரசனையுடையவர் என்பதை அவர் அந்த அறையை அலங்கரித்து இருந்த விதமே சொன்னது. மென் நீல சுவர். தூசி படியாத நீல தரைவிரிப்பு. நான்கு சேர்கள். ஒரு நீளமான சோபா. பெரிய மேஜை. ஒரு மர பீரோ. சுவரில் அழகான ஓவியங்கள் இரண்டு. யார் வரைந்தது என தெரியவில்லை. ஆனால் மென்நீல சுவருக்குள் பொருந்துவதற்காகவே வரைந்தாற் போலிருந்தன. அறையின் பிரதானம் அந்த கம்ப்யூட்டர் மானிட்டர் தாம். அந்த அறையின் கர்ப்பகிரக தெய்வம் போல நாயகமாக இருந்தது.… …மேலும் வாசிக்க


  • “…நமது அரசியலைப்பு உருவாகி அறுபது வருடங்களாகி விட்டன. தீண்டாமை இன்னும் அழிந்தபாடில்லை…” – நீதிபதி பி.கே.மிஸ்ரா & நீதிபதி ஜெயசந்திரன், உயர்நீதிமன்றம்.

    மேற்சொன்ன வார்த்தைகள் சமீபத்தில் நடந்த வழக்கு ஒன்றில் நீதிபதிகளால் சொல்லபட்டவை. என்ன வழக்கு அது?

    திருச்சி அருகே மணப்பாறை தாலுக்காவில் உள்ள சம்பட்டி பஞ்சாய்த்து இடுகாட்டில் தலித் உடலை புதைக்க அனுமதி மறுத்தனர் சாதி இந்துக்கள். இது நடந்தது டிசம்பர் 2008இல். மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் என எல்லா உயர் அதிகாரிகளும் அங்கு வந்து சமரசம் பேசினர். சாதி இந்துக்கள் தலித் உடலை இடுகாட்டில் அனுமதிக்க தயாராக இல்லை. காலம் காலமாக அரசு உயரதிகாரிகள் எடுக்கும் அதே முடிவை தான் இந்த உயரதிகாரிகளும் எடுத்தார்கள். சர்ச்சை உருவானால் சட்டம் ஒழுங்கு கெடும் என்பதால் எதற்கு வம்பு என்று தலித் உடலை வேறு இடத்தில் புதைத்து கொள்ள சொல்லி விட்டார்கள்.

    தற்போது இந்த விஷயத்தை பற்றி வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.… …மேலும் வாசிக்க


  • நடுத்தர வர்க்கத்திற்கான ஓட்டல்களில் சர்வர்கள் அலட்சியம் தாங்க முடியவில்லை. தண்ணீர் டம்ளர்களில் விரலை நுழைத்து அதை நமக்கு பருக தந்து விட்டு போகிறார்கள். என்ன இருக்கு என்றால் ஒரே நான்கு ஐட்டம் தான் சொல்வார்கள்.

    “இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா.”

    பக்கத்து டேபிளில் ஒருவர் குழி பனையாரத்தையும், இன்னொருவர் சாம்பார் இட்லியையும் சுவைத்து கொண்டிருக்கும் போது இந்த நான்கு ஐட்டம் மட்டும் ஏன் சொல்கிறாய் என்று கேட்டால் மெனு கார்ட்டை டேபிளில் வைத்து விட்டு போய் விடுவார்கள்.

    சில ஓட்டல்களில் சர்வர்களை பிடிப்பதே கஷ்டம். சாம்பாருக்காக எச்சக் கையோடு சர்வருக்காக நிமிஷக்கணக்கில் காத்து கொண்டிருக்க வேண்டியதாக இருக்கிறது.

    என் நண்பன் ஒருவனோடு இப்படி ஓட்டலில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த போது இதே மாதிரியான வேதனை (உட்கார்ந்து கால் மணி நேரமாகியும் ஆர்டர் எடுக்க ஆள் வரவில்லை.) என் நண்பன் மேனேஜரை கூப்பிட்டு கத்தி ஆர்ப்பாட்டம் செய்து விட்டான். அடுத்தடுத்த உபசரிப்புகள் கடகடவென நடந்தன.… …மேலும் வாசிக்க


  • தெருவெங்கும் முகமூடி அணிந்த மனிதர்கள்!
    ஒவ்வொரு வீட்டிற்கு வெளியேயும் தொங்குகின்றன தொய்ந்து நைந்து போன முகமூடி!
    வீட்டிற்குள் வந்ததும்
    அவரவர் கண்ணாடியில் பார்த்து கொள்கிறார்கள்
    முகமூடி கழற்றபட்ட தங்கள் முகங்களை.

    முகமூடியை கழற்றியும்
    முகத்தில் தெரியவில்லை முகம்.

    சிலர் மட்டும் கழுவி கொண்டே இருக்கிறார்கள் முகத்தை!


  • இலையுதிர் காலம் போல நீ.
    காற்றில் படபடக்கும் இலைகளாய் தொய்ந்த குரல்.
    கண்களில் குழப்பம்.
    பேச்சில் முணுமுணுப்பின் ஆதிக்கம்.
    சம்பந்தமில்லாத அழுகை.
    புரியாத சிரிப்பு.
    தள்ளாமையை மறைக்க முயலாத வெகுளித்தனம் புதுசு.

    பொங்கிய பழைய நினைவுகள்
    பழுப்பேறிய காகிதங்களாய்.
    கனமாய் இருக்கிறது யதார்த்தம்.

    அந்த நீண்ட பிரிவிற்கு பின்
    நாம் சந்திக்காமலே இருந்திருக்கலாம்.


  • குழந்தையை சுமப்பது போல
    இரு இளம்பெண்கள் தங்கள் மருதாணியிடப்பட்ட கைகளை
    எதன் மீதும் உரசாமல் கவனத்துடன் நடந்து போவதை
    பார்க்கும் போது தான்
    நான் எந்த வீதிக்கு வந்து இருக்கிறேன்
    என்பது உரைக்கிறது.

    அங்கங்களை நகைகளாக மாற்றி கொள்ளும்
    ஆர்வத்தில் மாதுகளுடன் சில இளைஞர்களும்
    அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    என் கரங்களின் மேலிருக்கும்
    கறுப்பு கறையை மறைக்க வேண்டிய
    கட்டாயத்தினை உணரும் போது
    முலைகளின் வாசம் எங்கெங்கும் எழுகிறது.

    மூக்கிலிருந்து பொங்கும் உதிரத்தினை
    மறைக்க ஓட வேண்டும்
    ஏதேனும் பழைய துணியினை தேடி.

    குப்பை தொட்டிகளை காண முடியவில்லை.

    பளபளக்கும் துணிகள்
    கடைகளின் வாசலில் தொங்கியபடி
    அனைவரையும் அணைத்து வரவேற்கிறது.

    என் மூக்கிலிருந்து ரத்தம் கொட்ட கொட்ட
    தூரத்தில் நடனமாடும் துணிகளை நோக்கி ஓடுகிறேன்.

    யாரோ மறித்தார்கள்.
    எங்கோ அடி விழுந்தது.
    கண்கள் இருள்வதற்கு முன்
    உதிரத்தால் ஒப்பனையிடப்பட்ட
    வேறொருத்தியின் முகத்தை காண்கிறேன்.
    அல்ல அது நான் தானா?

    விடைக்கு முன்னால்
    உடல் அடங்கி கொண்டிருக்கிறது.


  • ஆச்சரியம் தான். நான் இதற்கு முன் பல முறை பல வலைப்பதிவுகளை தொடங்கி இருக்கிறேன். அவற்றிற்கு அதிகபட்ச ஆயுள் ஓரிரு தினங்கள் தாம். ஆனால் இந்த வலைப்பதிவு சற்று மாறுபட்டது. தொடங்கி ஒரு வருடமாகி விட்டது. 67 பதிவுகள் பதிந்தாயிற்று.

    தமிழ்மணத்தின் உதவியால் உடனடி பார்வையாளர்கள் கிடைத்தது தான் இந்த வலைப்பதிவு இன்றும் உயிருடன் இருப்பதற்கு முதல் காரணம். நாம் பதிவதை பலர் படிக்க வருகிறார்கள் என தெரிந்த பிறகு வலைப்பதிவு என்னுடைய வாழ்க்கையின் முக்கிய பங்காக மாறி வருகிறது.

    வலைப்பதிவு இன்ன காரணத்திற்காக இந்த வகைபட்டதாய் (genre) இருக்க வேண்டும் என தொடக்கத்திலே முடிவு செய்வது மிகவும் கஷ்டம். கவிதைகளுக்கு மட்டும் என்று நான் திட்டமிட்டது இன்று கவிதைகளை தாண்டி புனைவு மற்றும் வெவ்வேறு தலைப்புகளாக வளர்ந்து நிற்கிறது.

    இந்த வலைப்பதிவு காரணமாய் நல்ல நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள். பள்ளிப்பருவத்தில் தொடர்பு அறுந்து போன நண்பன் ஒருவன் இந்த வலைப்பதிவு வழியாய் மீண்டும் கிடைத்தான்.… …மேலும் வாசிக்க


  • எந்த ஒரு செயல் நடப்பதற்கு முன்பும் அது நடக்க போகிறது என்கிற அறிவிப்பு காட்டுகிற விதமான விஷயங்கள் நடப்பதுண்டு. ஆங்கிலத்தில் சுருக்கமாக Symptoms. தமிழ் இனத்திற்கும், தமிழ் பாரம்பரியத்திற்குமான சாவு மணி பல வருடங்களுக்கு முன்னாலே அடிக்கபட்டாலும் அதன் சாவின் முன்னோட்டம் இப்போது ஈழத்தில் அடித்து வீழ்த்தப்படும் அப்பாவி தமிழ் மக்களின் சாவுகளாலும் அதனை தொடர்ந்து எழும் தமிழ் மக்களின் மௌனத்தாலும் தெளிவாக தெரிகிறது.

    தமிழ் நாட்டில் ஆங்கிலத்தில் பேசுவது கௌரவம், ஆங்கிலத்தில் நமது பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும், மேற்கத்திய கலாச்சாரத்தில் ஊறினால் மரியாதை என்கிற விதமான மனோபாவம் பரவலாக பரவிய போதே சாவு மணி கேட்க தொடங்கி விட்டது. இப்போது ஈழத்தில் லட்சக்கணக்கான மக்கள் மனித உரிமைகளை இழந்து போர்கைதிகளாக நிற்கும் சூழலில் அதனை தமிழனே தட்டி கேட்க தயங்கும் நிலை உருவாக்கபட்ட பிறகு, இது “தமிழினி மெல்ல சாகும்,” என்பதனை தான் உரத்து சொல்லுகிறது.

    ஓவியம்: Frank Frazetta


  • நமக்கு தெரிந்த தகவல் தான். ஆனால் ஆராய்ச்சி முடிவாய் வெளிவரும் போது அதிர்ச்சியாக தானே இருக்கிறது. அதிகாரம் படைத்தவர் முதலாளியோ, கம்பெனி எம்.டியோ, சிறுவர்களாய் இருந்தால் தந்தையோ, அதிகாரமிக்கவர் யாரேனும் ஆணையிட்டால் அதனை ஏற்று பெரும்பாலனோர் கொல்லவும் துணிவார்கள் அல்லது குறைந்தபட்சம் மற்றவர்களை சித்ரவதை செய்யவும் துணிவார்கள். இது சாந்தா கிளாரா பல்கலைகழகத்தில் உள்ள முனைவர் ஜெர்ரி பர்கர் என்பவர் வெளியிட்டுள்ள ஆய்வின் முடிவு. இதற்கு முன்பு இதே போன்ற ஆய்வு முடிவினை 1963-ம் ஆண்டே யேல் பல்கலைகழகத்தை சேர்ந்த ஸ்டான்லி மில்கிராம் என்பவர் வெளியிட்டார். சர்ச்சைக்கு ஆளான இந்த ஆய்வு முடிவு இப்போது மீண்டும் செய்திகளில் அடிபட தொடங்கியிருக்கிறது. மிக சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்கள் கூட கலவரங்கள் நடக்கும் போது சட்டென எதிர் இனத்தவரை கொல்லும் கும்பலில் சேர்ந்து மிக கொடூரமான குற்றங்கள் புரிவது பற்றி இந்த ஆய்வு முடிவு விளக்க முயல்கிறது.

    அதிகாரம் என்பது ஒரு கதாபாத்திரம் அல்ல

    அதிகாரம் என்பது ஒரு நாட்டின் ராணுவ அதிகாரியையோ அல்லது ஒரு குழுவின் தலைவனை மட்டும் குறிப்பதல்ல.… …மேலும் வாசிக்க


  • மண் புழுதி தெருவில் பறக்க
    அந்த அக்காவை
    அவர்கள் இழுத்து சென்ற காட்சியை
    அவள் கண்டது ஐந்து வயது சிறுமியாக.

    முப்பது நாற்பது வருடங்கள் உருண்டோடினாலும்
    அந்த மண் புழுதி
    இன்னும் மறையவே இல்லை.
    அதோடு, “இனி நம்ம சாதி பொம்பளைங்க
    சாதி மாறி ஆசை வைக்க கூடாது,” என
    அந்த பெண்ணின் மாமன்
    சாராய வாடையோடு கர்ஜித்ததும்;
    பெருங்குரலெடுத்து அந்த பெண்ணின் தாயார்
    மண்டியிட்டு அழுததும்;
    அடுத்த நாள் சுண்ணாம்பு குழியில்
    கண்டெடுக்கபட்ட
    கருகி போன அந்த அக்காவின் உடலும்
    அவளை துரத்துகின்றன
    ஒவ்வொரு முறையும்
    அவள் காதலர்களை கடக்கும் போதெல்லாம்.