பிரபஞ்ச பெருங்கடலில் சிறு துளி நான்! பிரபஞ்ச சிறு துளியில் பெருங்கடல் நான்!
Tag: tamil poem
-
-
குவாண்டம் தற்கொலை
அறைக்குள் தற்கொலைக்கு முயல்கிறேன். நீ கதவு திறக்கும் வரை உயிரோடு இருப்பேன். திறக்காவிடில் நான் சிரஞ்சீவி.
-
சாலை
வளைந்து வளைந்து சென்றாலும் எல்லா சாலைகளும் நேர் கோட்டில் பயணிப்பவையே!
-
புரியாது
என் கவிதை புரியவில்லை என தொலைபேசியிடும் நண்பர்களே உங்களையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது இல்லையென என்றாவது நான் புகார் சொன்னது உண்டா?
-
ஓரினமாதல்
என்றோ ஒரு நாள் யாரோ ஒருவர் மரத்தின் மீது எறிந்துச் சென்ற கருநீல நெடிய வயர் ஒன்று மரத்தோடுப் பிணைந்து தண்டோடுச் சுற்றி பட்டைகளோடுக் கலந்து பழுப்பாகி போனது. இளவேனில்காலத்தின் தொடக்க நாளொன்றில் அந்த வயரினுள் இருந்து முளைத்தது ஓர் இலை.
-
மரணத்தைக் கணித்தவன்
தன் மரணம் நிகழுமிடம் அறிந்தான். நிகழும் விதம் தெரியும். இரண்டு நிமிடத்திலா? இரண்டு வருடங்களிலா? எப்போது என தெரியவில்லை! சதுரங்க ஆட்டக்காரனின் கவனத்தோடு தன் நேரத்தை நகர்த்தி நகர்த்தி விளையாடுகிறான். விளையாட்டின் சுவாரஸ்யம் நிரம்பி ஓடி மரண பயத்தைக் கூட சற்றே மூடியிருக்கிறது. வாய் விட்டு சிரிக்கிறான் அவனுக்கு எதிரில் அரூபமாய் விளையாடுபவன்!
-
காட்சி
மனதிற்குள் ஒரு காட்சி
உருவானது.
...உருவாக்கினேன்.
அறை.
...நெடிய அறை.
எதிர்பக்க சுவர் விலகி செல்கிறது.
வெள்ளை சுவர்?
...சிகப்பு?
வெண்மஞ்சள்!
ஜன்னல்.
கரும்பழுப்பு.
துரு பிடித்த கம்பிகள்.
"வெண்மஞ்சள் சுவரில்
தன் வேர்களைப் படர விட்டு
நிற்கும்
கரும்பழுப்பு ஜன்னல்."
-
பாலை என்றால் வெறுமை
புல் பூண்டற்ற பாலையில் திசைகளற்ற அந்தச் சமவெளியில் நடந்து கொண்டே இருக்கிறேன் நகர மறுக்கும் நிலம் மீது.
-
மூளையைச் சாப்பிட முயல்கிறது
அது என் மூளையைச் சாப்பிட முயல்கிறது. அதை என்னால் உணர முடியும். அதன் சாத்தான் தன்மையை . அதை சாத்தான் போல என்று யாரும் யூகித்து விட முடியாது. ஏனெனில் அது ஒரு தேவதையின் உடல் மொழியை கொண்டிருக்கிறது. ஆனால் எனக்கு அதை தெரியும். சிறு வயதில் இருந்தே. யாரும் ஒப்பு கொள்ள மாட்டார்கள். நான் அவமான பட தான் வேண்டும் அதன் சுய ௹பத்தை நிரூபிக்க நினைத்தால். அது என் மூளையைச் சாப்பிட முயல்கிறது. நான் அதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இத்தனை காலம் அதை மீறி வாழ்ந்தாயிற்று. இனியும். உஷ்! அதை கவனிக்க வேண்டும் உன்னிப்பாக.
-
என் கண்களை உற்று பார்த்து
என் கண்களை உற்று பார்த்து நீ பேசியது... சுவரேறிய பல்லி என்னைப் பார்த்த போது ஏன் நினைவிற்கு வந்தது? மின்விசிறியின் நிழல் சுவரில் தடுமாறுவதைப் பார்க்கும் போது படபடக்கும் உன் இமைகள் ஏன் நினைவிற்கு வந்தது? எது எதுவோ எதை எதையோ இழுத்து வந்து போடுகிறது. என் மனம் உன் நினைவுகளை மட்டும் கோர்த்து கோர்த்து அர்த்தம் கற்பிக்க முயன்று தோற்று போகிறது. கலைந்த சேற்றில் ஓர் ஓவியம் பாவித்து கொண்டு கலைந்த மேகங்களை ஒரு சித்திரமாக மனத்திரையில் தீட்டி கொண்டு சுவற்றில் அடித்த சிறுநீரின் தடமோன்று தீட்டிய கதை வாசித்து மறந்து போன உன் முகத்தை மறக்காத உன் நினைவுகளை பற்றி கொண்டு மட்டும் வாழ்கிறது ஒரு மனம்.
