பாதி ஐயம்.
பாதி பரிதவிப்பு.
அவனைக் கடைசியில்
ஒரு ரயில் நிலையத்தில் சந்தித்தேன்.
வெள்ளைச் சட்டையில்
மெல்லிய சிகப்பு கோடுகள்.
கறுப்பு என்று சொல்லி விடலாம்
அவன் அணிந்திருந்த கருநீல பேண்ட்டை.
கொஞ்சமும் கசங்காத உடை.
சிதறாத முடி.
பளிச்சென்ற முகம்.
எதோ உயர் அதிகாரி தோற்றம்.
வேறொரு நாளாக இருந்தால்
கிண்டலும் எரிச்சலும்
இருந்திருக்க கூடும்.
இன்று
பதற்றம் மட்டுமே.
எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல்
செயற்கையாக புன்னகைத்து
தேவையில்லாமல்
செல்போனைத் துளாவி கொண்டிருக்கிறேன்.
என்றும் போல
இன்றும் கூட்டமாய் இருக்கிறது
ரயில் நிலையம்.
நகரத்திற்குள்ளாக
இரண்டடுக்கு மாடி உயர
பாலத்தில்
சுற்றி சுற்றி வரும்
ரயில்கள்.
எத்தனையோ முகங்கள்.
எத்தனையோ உணர்ச்சிகள்.
அத்தனையும் வாரி போட்டு கொண்டிருக்கிறது
ரயில்.
“வா பயணித்தபடி பேசுவோம்.”
அவன் ஏறிய பின்னர்
தயங்கி தயங்கி
இறுதியில்
ரயில் பெட்டியின் கதவு மூடப்படும் முன்பு
குதித்து ஏறினேன்.
நகரம் கூட அழகாய் இருந்தது
ஜன்னல்களில்.
மக்கள் ஒரே விதமான நாற்றத்துடன்
ஜன்னலில் இருந்து குதித்து
தற்கொலைச் செய்து கொள்ள போகிறவர்கள் போன்ற
முகத்துடன் காத்திருந்தார்கள்
அவரவர் இறங்க வேண்டிய நிலையத்திற்காக.
அவன் எவ்வித உணர்ச்சியும் அற்றவனாய் இருந்தான்.
அவன் கண்கள் எல்லாரையும் போல்
ஜன்னலிலே இருந்தன.
“என்ன வேண்டும் உனக்கு?”
உனக்கு தெரியாதா என்று நினைத்தேன்.
அது கூட கண்டுப்பிடிக்க முடியாதவன்
எப்படி மகத்துவ சக்தியுடையவனாய் இருப்பான்.
“பயமற்ற வாழ்க்கை ஒன்று வேண்டும்”
பல முறைச் சொல்லி பார்த்து
சரியாக அதே தொனியில்
அவனிடம் சொன்னேன்.
அவனிடம் எந்தவித உணர்வு மாற்றமும் இல்லை.
“பயமில்லாமல் வாழ முடியாது.”
“பயத்தோடு வாழ்ந்து வாழ்ந்து
கொடூரமான வலியில் இருக்கிறேன்.”
“பயமில்லாமல் வாழ்பவன்
ஒரு மணி நேரம் கூட தாக்குப் பிடிக்க முடியாது.”
அவன் பேசி கொண்டிருக்கும் போதே
ஒரு பெண் பயணி
கதவினை வலுக்கட்டாயமாக திறந்து
வெளியே குதித்தாள்.
நகரம் எதைப் பற்றியும்
கவலைப்படாமல்
அவளை விழங்கி கொண்டது.
“நீங்கள்
பயமற்ற வாழ்க்கையினை அருள்பவர் என்று
சொன்னார்கள்.”
“தவறு.
நான் மரணத்தை மட்டுமே அருள்பவன்.
எனெனில்
பயமற்ற வாழ்க்கை
மரணத்திற்குத் தான்
வழி வகுக்கும்.”
எதோ ஒரு ரயில் நிலையம்.
அவன் கூட்டத்தோடு கூட்டமாய்
இறங்கி சென்று விட்டான்.