Category: கவிதைகள்

  • ஷோரூமில் பார்ப்பதற்கும்
    வாங்கி இரண்டொரு நாள் கழித்து பார்ப்பதற்கும்
    சட்டைகள் வித்தியாசமாக தான்
    காட்சியளிக்கின்றன.

    பொருந்துமென நினைத்தது
    பொருந்தாமல் போவதும்
    பிடிக்காத சட்டை
    பிறகு பிடித்தமானதாக மாறுவதுமென
    முதல் பார்வை சரியானதாகவே இருப்பதில்லை.

    இந்த வகை தான் பிடிக்கும் என்கிற தீர்மானங்கள்
    நிலைப்பதும் இல்லை.

    ஒரு பொழுதை தன் முதுகில்
    ஏற்றி செல்லும் வலிமையுண்டு
    சட்டைகளுக்கு.
    அது எந்தச் சட்டை என அறியும்
    நுட்பமில்லை மனிதர்களுக்கு.

    ஒருவேளை சட்டைகளுக்கு…?


  • நான் அழ வேண்டிய தருணங்களில்
    அழுவதில்லை.
    சாவு வீடுகளில் கூட.
    என்றோ எதோ ஓர் அர்த்தமற்ற சினிமா காட்சிக்காக
    சட்டென அழுகை வருகிறது.
     
    அழாத போது குற்றவுணர்வும்
    அழுது முடிக்கும் போது சலிப்பும்
    சிலுவையைச் சுமக்க வைக்கின்றன
    எப்போதும்.

  • என் தெரு
    விரியும் சுருங்கும்
    என் மனநிலைக்கு ஏற்ப.

    வீட்டு கடிகாரம்
    முள் வேகத்தை
    குறைக்கும் கூட்டும்
    என் முகத்தைப் பார்த்து.

    என்னுள்
    காலமும் தூரமும்.


  • ஓர் அசைப்படம்
    அந்தப் பெரிய கட்டிடத்தின்
    சுவரில்
    சாலையில் செல்லும் வாகனங்களின் ஒளியால்.

    நானே இருவராய்
    அதை கவனித்தபடி.

    எனக்குள்/எங்களுக்குள்
    தர்க்கம்.
    சிலசமயம் வசை.
    பலசமயம் வெற்று வார்த்தைகள்.

    கவனம் குவித்து
    புறம் மறந்து
    வாழ்கிறோம்/வாழ்கிறேன்.


  • ஒரு மழைத்துளி
    காற்றின் அலைகளை மீறி
    கம்பியாய் தடமிழுத்து
    குழியில் திரண்டு நின்ற நீரில்
    விழுந்து
    மேற்பரப்பில் அதிர்வலைகளை உருவாக்கி
    கீழ்நோக்கி பாய்ந்து
    சற்று கலைந்து
    கலந்தது.

    நன்றி
    ஓவியம்: சிகப்பு முத்தம்
    ஓவியர்: ஐமெரிக் நோவா


  • மதுக்கடைகள் நிரம்பிய அந்தச் சாலைக்கு
    நீங்கள் என்றாவது போயிருந்தால்
    அவனைப் பார்த்திருப்பீர்கள்.
    புழுதி பறக்கும் சாலையோரம்
    தன் பை முழுக்க சாவிகளோடு
    ஒன்றுக்கொன்று பேசும் உலோக சப்தத்தோடு
    தன் வாழ்வைச் சுமையென சுமந்து
    நடந்து கொண்டிருப்பான்.

    அரிதாக அவன் உட்கார்ந்து இருக்கும் போது
    எதேனும் சாவியை உருவாக்கி கொண்டிருப்பான்.
    அல்லது துடைத்து கொண்டிருப்பான்.
    அல்லது அப்படியாக பாவனை செய்து கொண்டிருப்பான்.

    அவனிடம் யாரும் சாவி வாங்கியதில்லை.
    தொலைந்து போன சாவிக்கு மாற்று ஒன்றை
    உருவாக்க கேட்டதில்லை.
    என்றாலும் சாவிகளுடன் தான்
    அவன் வாழ்க்கை.

    மழை பொழியும் நாள் ஒன்றில்
    மரத்திற்குக் கீழே
    அவன் குந்தி அமர்ந்திருக்கும் காட்சியினைக் கண்டால்
    அவன் யாருக்கோ காத்திருக்கிறான் என தோன்றும்.
    சாவிகளை ஒப்படைக்க
    காலம் காலமாக அவன் காத்திருக்கிறான் என
    நினைப்பீர்கள்.

    மழை நின்ற பிறகு
    அவன் தன்னை உதறி கொண்டு கிளம்புவான்.
    அவன் வெறும் பிம்பம் தானா?
    நம் பிரதிபலிப்பா?
    மனம் கட்டமைத்த கற்பனை உருவமா?…மேலும் வாசிக்க


  • ஆடு தாண்டி விடும் ஓடை.
    சன்னமாய் ஓடுகிறது.
    நீரைக் கையில் ஏந்தி பார்க்கிறேன்.
    ஒளியினைத் தின்றபடி பிரகாசிக்கிறது.

    பருகினால் மதுவின் சுவை.
    கால் வைத்து இறங்கினால்
    நீருக்கடியில்
    மலை உயர ஆழம்.

    மூச்சிறைத்து பிழைத்து வந்தால்
    மேலெல்லாம் மதுவின் வாசம்.


  • மலை உச்சியில் பெருங்கூட்டம்.
    எல்லாரும் முண்டியடிக்கிறார்கள்
    பள்ளத்தாக்கில்
    அனல்கங்குகளைச் சுமந்து ஓடும்
    ஆற்றினைக் காண.

    பெருத்த முலைகளையும்
    முட்டும் தொப்பைகளையும்
    தள்ளியபடி
    முரட்டு யானைகள் போன்ற பெண்கள் கூட்டமொன்றில்
    அரைபட்டு முன்னேறி கொண்டு இருக்கிறேன் நான்.

    கூட்ட நெரிசல்,
    வியர்வை வாசம்,
    காலை யார் யாரோ மிதிக்கிறார்கள்.
    இரை விழுங்கிய பாம்பினைப் போல
    பிதுங்கி நெளிந்து
    கூட்டம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

    யாரோ ஒருவர் மலை மேலிருந்து
    ஆற்றில் விழுகிறார்.
    பிறகு மற்றொருவர்.
    அடுத்தடுத்து யாராவது விழுந்து கொண்டே இருக்கிறார்கள்.

    யாரேனும் விழும் போதெல்லாம்
    சாட்டையை விசிறினாற் போல சத்தம்.
    தொப் என அது முடிவடைவதற்குள்
    அலை அலையாய் மக்களிடையே பரவுகிறது
    ஆரவாரமும் கேலி பெரும் சிரிப்பும்.

    கூட்டத்தில் எனக்கு முன்னால்
    ஒரு குண்டான பெண்
    மற்றவர்களால்
    உயர்த்தப்பட்டு
    தலைகளுக்கு மேலாக உருட்டி செல்லப்பட்டாள்.
    மீண்டும் எழுந்தது பெரும் ஆரவாரம்.

    என் முலையில்
    ஓர் அன்னியனின் கையினை உணர்ந்தேன்.
    தொடர்ந்து முளைத்தன
    பல கைகள்.…மேலும் வாசிக்க


  • தடதடவென ரயில் அதிர்ந்து ஓட
    பாலத்தின் கீழே சாலையில்
    வாகனங்கள்
    அதிர்வலையில் மிதந்து செல்லும்.

    ரயிலோ இல்லையோ
    பாலத்தின் எதோ ஓரிடத்தில் இருந்து
    ரத்தத் துளிகள் விழுந்தபடியே இருந்தன
    சாலையில்
    வருவோர் போவோர் வெகு சிலர் மீது.

    அதை உணராமலோ
    மழைதுளியென எண்ணியோ
    போய் விடுவார்கள் பலர்.

    ரத்தத்தைக் கண்டு திகைத்தவர்கள்
    வேறு பாதைக்கு
    மாறி விட்டார்கள்.

    எங்கிருந்து ரத்தம் சொட்டுகிறது என
    அறிய முற்பட்டவர்கள்
    பலியானார்கள்
    ரயிலின்
    தடதடக்கும் சக்கரங்களுக்கு.


  • வலியே
    வலியை மறக்க வைக்குமளவு
    அடிபட்டு
    உள்ளெல்லாம் சிதைந்து
    நாளெல்லாம்
    மரணத்தை வேண்டி நிற்கும்
    சமயத்தில் கூட
    நம்பிக்கை
    எங்கோ
    சிறு துகளாக
    இருந்தபடியே தான் இருக்கிறது.