Tag: tamil poetry

  • அது ஒரு விளையாட்டு.
    ஆதிகாலத்து அரூப வேட்டையின் அரைகுறை நீட்சி.
    எங்கு எப்போது தொடங்கும் முடியும் என தெரியாது.

    கண்களோடு கண்கள் கோர்க்கப்படும் போது
    அங்கு கவிழ்கிறது ஒரு பேரமைதி.
    ஒரு கணம் தான் எனினும்
    அது ஒரு சலனமற்ற அகண்ட நீர்ப்பரப்பு.
    முதல் கல் விழுவதற்கு முன் வென்றாக வேண்டும்.


  • இருளில் ஆயிரக்கணக்கானோர் கூட்டம்!
    நடுவில் நெருப்பு வளர்த்து
    பெருகுது சத்தம்!
    யார் யாரோ யாரை யாரையோ எறிகிறார்கள்
    தீக்குண்டத்தில்!
    நடுங்கி நிற்கிறேன் நான்
    கூட்டதிற்கு வெளியே!


  • இருளிலே இருளோடு இருளாய் இருந்தான்.
    அவனது கர்ஜனை ஓயும் வரை நாங்கள் மதிலோடு ஒண்டியிருந்தோம்.

    அவள் எங்களை கடந்தாள்.
    வெள்ளை.
    பிரகாசம்.
    வெளிச்சம்.
    இளமையின் உயிர்ப்பு.

    அவளது முகத்தை சோகமே திரையிட்டிருந்ததை பார்த்தோம்.
    எங்கள் இரைஞ்சும் கண்களை உணர்வின்றி பார்த்து விட்டு
    அவள் அவனை நோக்கி நடந்தாள்.

    அவன் பார்ப்பதும்
    திணறுவதும்
    கூத்தாடுவதும்
    இறுதியாய் மண்டியிடுவதையும்
    எங்களால் உணர முடிந்தது.

    எங்கள் அம்புகளை தயாராக்கினோம்.


  • எங்கள் அறையில் எங்கெங்கும்

    குவிந்தும்

                 சிதறியும் கிடக்கின்றன

    அவனது வார்த்தைகள்.

    தனக்குள்ளே பேசியும்,

                                        சி

                                       ரி

                                        த்

                                        து

                                          ம்,

                                                 கதைசொல்லியும்

    கழிகின்றன அவனுடைய நாட்கள்.

     

    களவாடி பகிர்ந்துண்ட நினைவுகள்

    கல்மழை நெஞ்சில் விழ பயந்து ஓடிய கணங்கள்

    மழை நீரோடிய மெல்லிய மணலை சுவைத்த பாதங்கள்

    களிமண்ணில் பானைகள் வடித்தும், வயலில் நாற்று நட்டும்,

    துண்டுகளில் சடை வளர்த்தும் திரிவதாக கனவுகள்

    கைகோர்த்து பூப்பறிக்கச் சொல்லும் சடங்குகள்

    ‘கத்திரிக்கா தோட்டத்தில களை பறிக்க வாரியாளா’

    எனக் கூவும் பாடல்கள்

    எதிர்நீச்சல் போடசொல்லும் கால்வாய்கள்

    இசைவோடு நீந்தச்சொல்லும் குளங்கள்

    பள்ளத்தை கண்டு மிரளாத கிணற்று குளியல்கள்

    நண்பர்களுடன் கோபித்து

    பின் வெட்கப்புன்னகையுடன் சமாதானமாகும் பொழுதுகள்

    சண்டைகள்; சச்சரவுகள்

    இன்றும் எனது துயரங்களுக்கு மருந்து

    பால்யகால நினைவுகளே!

    அவற்றை நெஞ்சில் சுமந்து திரிந்து

    வீடு திரும்புகையில்

    தொலைந்த எதையோ

                                       அட்டைப்பெட்டிகளில்

                 துழாவிக்

                            தேடிக் கொண்டிருக்கிறான்

                                                       என் மகன்.

    – இளமதி.


  • இந்தக் கணம்.
    இதை என் கனவுகளில் பார்த்திருக்கிறேன்.

    மென்பனியில் வரைகோடாய் நீ தெரிவதை போல
    ஆழ்மனதில் இது எங்கோ எனக்கு தெரிந்தபடியே தான் இருந்திருக்கிறது.

    என் உதிரச்சுவையை உன் வாள் அறிந்திருப்பது போல
    இதன் சுவையை உணர்ந்து தான் இருந்திருக்கிறேன் இத்தனை காலமும்.

    உன் கண்களில் மிளிரும் குரோதம் போல
    என் பயங்களின் பெருந்தொகுப்பில் இது ஒளிர்ந்து கொண்டே தான் இருந்திருக்கிறது.

    உனக்கும் எனக்கும் இடையே
    காற்றினில் கனக்கும் பெருந்துயரம் போல
    என்னுள்ளே கனத்து தான் இருந்திருக்கிறது இந்த எதிர்பார்ப்பு.

    கருத்திருக்கும் பின்புலம் வாய்க்குமென
    ஏனோ அப்போதே உண்ர்ந்தேன் நான்.

    இன்று நீ எனக்கு செய்வதை
    இதற்கு முன்
    நான் செய்திருக்கிறேன் பலருக்கு
    நூற்றுக்கணக்கான முறை.

    எனினும்
    இந்த கணத்தினை
    நான் என் கனவுகளில் பார்த்திருக்கிறேன்.


  • அதிசயம் தான்.
    சடசடவென பெய்யும் மழையில்
    உடல் எங்கும்
    உள்ளுக்குள்ளாக வியாபிக்கிறது ஈரம்.

    கைகளில் மட்டுமே நீர்.
    எப்படி சுழற்றினாலும் மாற்றமில்லை.

    கண்களை மூடும் போது
    இடி இடிக்கும் சப்தம்
    இமைகளுக்குள்ளாக.

    கரைகிறேன்.

     


  • ஆயிரம் ரூபாயிற்கு சில்லறை உடனே கிடைத்தது ஆச்சரியம் தான்.
    நெரிசல் மிகுந்த டீக்கடையோரம்
    கால்களை பார்த்தவாறு
    ஒரு மூலையில் அமர்ந்து
    பத்து ரூபாய் நோட்டுகட்டுக்களை எடுத்து
    ஒவ்வொரு நோட்டாய் கிழித்து போட தொடங்கினேன்.
    முதலில் ஒரு மடிப்பு.
    இரண்டாக
    நான்காக
    எட்டாக கிழித்தேன்.

    கால்களை பார்க்கக்கூடாது.
    வெப்பத்தை உணரக்கூடாது.
    வியர்வையை துடைக்கக்கூடாது.
    ஓலியினை உணர்தல் வேண்டாம்.

    தரையெங்கும் குப்பைக்கூளம்.
    கால்களிடையே பறக்கும் கிழிசல்கள்.

    ஊழ்த்த இறைச்சி
    நும்மிடைப் பாவம் நில்லாவே.


  • எங்கோ விலகி போய் விட்டது
    என் இளமை பருவம்.
    என்னவனின் முத்தங்கள் இப்போது சுவைப்பதே இல்லை.
    இமை மூடுவதும் இல்லை.
    அவன் கண்களின் படபடப்பினை உணர்ந்த பிறகு
    ஒவ்வொரு முறையும்
    ஏமாற்றத்துடனே இதழ்களை துடைத்து கொள்கிறேன்.

    என் பழைய தருணங்கள் உயிர்த்தது போல இருக்கிறீர்கள்
    நீங்கள் இருவரும்.
    காதலின் பிரகாசம்
    உங்கள் மேலெல்லாம் இருக்கிறது.

    என்னை ஒரு முறை
    அவளை முத்தமிடுவது போல முத்தமிடுவாயா?

    ஒரு கணம் மீண்டும் பிறப்பேன்.

    நன்றி: Matrix திரைப்படம்


  • முதலில் அது யதேச்சையானது என நினைத்தேன்.
    நான் செல்லுமிடங்களில் எல்லாம் அவன் இருப்பதை பார்த்தேன்.

    நீல நிற ஜீன்ஸும் வெள்ளை நிற சட்டையும்
    வெண் கண்ணாடியுமாய்
    அவன் அழகானவனாய் இருந்தான்.

    முகத்தில் சிறிது தாடி.
    விரல்களுக்கிடையே சிகரெட்.
    புன்னகைக்கும் போது கனிவும்
    எப்போதும் யோசனையுமாய் இருந்தான்.

    தினமும் என் முதுகில்
    அவனது பார்வையை உணர்ந்தவாறே
    எனது நாட்களை கடத்த தொடங்கினேன்.

    என்றாவது ஒரு நாள் அவன் கைகளால்
    எனக்கு மரணம் சம்பவிக்கும் என கற்பனை செய்ய தொடங்கினேன்.
    அந்த தருணங்களை கற்பனை செய்து
    என்னை நானே தயார் செய்து கொண்டே இருந்தேன்.

    ஒவ்வொரு நாளும்
    அவன் கண்களில் கோபம் அதிகரித்தபடி இருந்தது.
    என்னை கொல்வதற்கு முன்
    கோபத்திற்கான காரணமாவது அவன் சொல்வானா?


  • பாழடைந்து கொண்டிருக்கும் கட்டிடங்கள்.
    சேதங்களுக்கு இடையே
    உடைந்த கால்களாலான கட்டிலில்
    படுத்திருக்கிறாள் சிறுமி ஒருத்தி.

    கையில் ரத்தக்கறையோடு
    தந்தை அவளையே பார்த்தவாறு அமர்ந்திருக்கிறான்.

    காகங்களின் கரைச்சலில்
    மறைந்து போயிருக்கின்றன
    தூரத்து ஒலி.
    சாம்பலை அள்ளி தெளிக்கிறது
    திடீர் காற்று.
    சாம்பலின் துகள்பட்டு
    நிறம் மாற யத்தனிக்கிறது
    பாட்டரி பெட்டியில் இருக்கும் குடிநீர்.

    குந்தி அமர்ந்திருப்பவன்
    கால்களை வலியோடு தடவி கொள்கிறான்.

    வேகமாய் நகர்ந்து கொண்டிருக்கும் மேகங்களோடு
    கலந்து கொண்டிருக்கும்
    சிறுமி புன்னகைக்கிறாள்.
    இரவு நெருங்கி கொண்டிருக்கிறது.

    நன்றி
    தலைப்பு: சிக்ஸ்த் சென்ஸ் திரைப்படம்