• தூரத்தில் காதலியின் உருவம் தோன்றும் போது
    காத்திருத்தலின் சுவை குன்றி,
    கண்களின் தேடுதல் மங்கி
    இரு கால்களிடையே தலையை கொடுத்து
    அழுது கொண்டிருந்தேன் நான்.

    ஆறுதல் வார்த்தைகளோ
    அன்பு அரவணைப்போ எதிர்பார்க்கவில்லை.
    போய் விடு.

    எனக்கான துக்கத்தை
    நான் தான் உண்ண வேண்டும்.


  • அவருக்கு 35 வயதிருக்கலாம். ‘வறுமையின் நிறம் சிகப்பு’ படத்தில் வரும் கமல் போல தோற்றம். முகத்தில் எப்போதும் ஓர் இறுக்கம் இருந்தது. கண்களினுள் மறைந்திருந்த கோபத்தைத் தாண்டி ஒரு கவர்ச்சி இருந்தது. அவர் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பிரபல நாளிதழின் மாவட்ட பிரிவிற்கு உதவி ஆசிரியர்.

    உதவி ஆசிரியரின் ஊர் ஒரு மாவட்டத்தின் தலைநகரம். ஆனால் அதற்கான எந்த லட்சணங்களும் இல்லாத ஊர். டெல்லியிலிருந்து மூன்று மணி நேர பயணத் தூரத்தில் இருக்கிறது. இந்திய தலைநகரத்திற்கு அருகாமையில் இருந்தாலும் இங்கே பெரும்பாலான சமயம் மின்சாரம் இருக்காது. மாவட்டத்தில் இருக்கும் பல கிராமங்களுக்கு இன்னும் மின்சார வசதியே ஏற்படுத்தி தரப்படவில்லை. சாலைகள் எல்லாம் குண்டும் குழியுமாக பயணிகளை மசாஜ் செய்யும் ஆற்றலை பெற்றிருக்கின்றன. பஸ் வசதி இல்லாததால் ஒரு ஜீப்பில் இருபது பேருக்கு மேற்பட்டவர்கள் தொங்கி கொண்டும் நசுங்கி கொண்டும் பயணிப்பது தினசரி காட்சி.

    ஜனவரி மாதத்தின் குளிர். உடலை நடுநடுங்க வைக்கும் பனி. அதிகாலையில் மாட்டு வண்டிகள் அணிவகுத்து செல்வது போல ஒட்டக வண்டிகள் சாலைகளில் நகர்ந்து போய் கொண்டிருந்தன. அந்நிய மண்ணில் பாஷை தெரியாமல் ஒரு டீக்கடையில் நானும் கேமராமேனும் அமர்ந்திருந்தோம். மண் குடுவையில் நிரம்பி வழிந்த டீயை பருகியபடி இருந்தேன். உலகத்தின் எந்த மூலையிலும் எனக்காக ஒரு டீக்கடை இருக்கிறது என நான் யோசித்த போது தான் இந்த உதவி ஆசிரியரின் அறிமுகம் கிடைத்தது.

    நான் சென்னையிலிருந்து உத்திர பிரதேச கிராமத்திற்கு ஒரு ஸ்டோரிக்காக கேமராமேனுடன் குருட்டுத்தனமான நம்பிக்கையுடன் வந்து இறங்கியிருக்கிறேன். உள்ளூர் பத்திரிக்கையாளர் யாராவது உதவினால் தேவலாம் என்பதற்காக அங்குப் பிடித்து இங்குப் பிடித்து இந்த உதவி ஆசிரியரைப் பிடித்தேன். நான் விஷயத்தைச் சொன்னவுடன் யாருக்கோ போனை போட்டார், அடுத்த பத்தாவது நிமிடம் ஒரு ஜீப் என் பயணத்திற்காக வந்தது.

    எனக்கு இந்தி தெரியாது. அவருக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனாலும் இருவரும் உடனே நண்பர்களாகி விட்டோம். சிற்சில இந்தி வார்த்தைகளை நானும் சில ஆங்கில வார்த்தைகளை அவரும் தெரிந்து வைத்திருந்ததினால் எங்கள் உரையாடல் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது.

    எதோ கேங்க் லீடர் போல ஊரிலிருக்கும் அனைத்து பத்திரிக்கையாளர்கள் சூழ தான் உதவி ஆசிரியர் இருப்பார். நிறுவன வேறுபாட்டின்றி அந்த ஊரில் இருக்கும் அனைத்து பத்திரிக்கையாளர்களும் அவரது கட்டுபாட்டில் தான் இருந்தார்கள். பத்திரிக்கையாளர்கள் அனைவரும் எந்த மன கசப்பும் இல்லாமல் ஒன்றாக இருக்கிறார்கள். ஒரே ஊரில் வசிக்கும் சொந்தக்காரர்கள் ஒருவருக்கொருவர் உரிமையோடு பேசி கொள்வது போலவும், ஒருவரது தனிப்பட்ட பிரச்சனைகளை அறிந்து வைத்திருப்பது போலவும் நிருபர்கள் குழு பழகியதைப் பார்த்தேன். நான் அங்கு தங்கியிருந்த ஒரு வாரம் முழுவதும் இவர்களுடன் தான் மாலை பொழுது கழிந்தது.

    உதவி ஆசிரியரை விட வயதான பத்திரிக்கையாளர்கள் ஊரில் உண்டு என்றாலும் குழுவிற்கு தலையாய் இருப்பது உதவி ஆசிரியர் தாம். அவரது நிறுவனத்திலே வயதான ஆசிரியரை விட இவரது குரல் தான் எல்லாரையும் வழிநடத்தி கொண்டிருந்தது. ஊரிலிருந்த பெருந்தலைகள், அதிகாரிகள் எல்லாரும் இவருடன் தொடர்பில் இருந்தார்கள். இவருக்கு ஏன் இத்தனை மரியாதை. இவரது ஆளுமை மட்டும் தான் காரணமா? என் ஸ்டோரிக்காக இவர் உதவிய போது இவர் ஒரு நடமாடும் டேட்டாபேஸ் என உணர்ந்து கொண்டேன். செய்திகளை கடகடவென நினைவுபடுத்தி சொல்ல கூடியவர். அதோடு செய்தியின் பின்னாலிருக்கும் அரசியலை வெகு அழகாய் ஆராய்ந்து சொல்வார். பழகுவதற்கு இனிமையானவர்.

    சாதீய மனநிலையும், லஞ்ச லாவண்யம் நிகழும் அதிகார வர்க்க பூமியில் இன்று அதற்கு ஏற்றாற் போலவே அவர் மாறி விட்டார். வெளிச்சத்திற்கு வராத திறமைகள் இப்படி தான் புழுதியில் அடித்து போகும் போல.

    நான் உதவி ஆசிரியரிடமிருந்து விடை பெறுவதற்கு முந்திய நாள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து விட்டு திரும்பி கொண்டிருந்தோம். வழியில் சாலையிலே வலிப்பு வந்து விழுந்தார். கூட்டம் கூடி அவரை ஆட்டோவில் ஏற்றுவதற்கு முன்னர் சட்டென மதம் பிடித்தவர் போல எல்லாரையும் அடிக்க வந்தார். என்னை அப்போது அவர் பார்த்த பார்வையில் மிருக வெறி தானிருந்தது. பிறகு இன்னொரு பத்திரிக்கையாளர் என்னிடம் காரணத்தை சொன்னார்.

    “சாருக்கு ஒரு வித்தியாசமான நோய். திடீரென எல்லாமே மறந்து போயிடும். கொஞ்சம் நேரம் கழித்து சரியாடுவார். இதனை குணப்படுத்த லட்சக்கணக்கில் செலவாகும்ன்னு சொல்றாங்க. அதனால இதுக்கு மருத்துவம் பார்க்காமலே இருக்கார்.”

    மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.


  • கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பக்தர்களின் பார்வைக்கு காண கிடைக்கிறது மகரவிளக்கு. கோயில் பிரதேசத்திற்கு அருகில் இருக்கும் வனத்தில் ஓர் ஓளி தோன்றுகிறது. சில நிமிடங்களே தோன்றும் இந்த ஒளியினை மகரவிளக்கு என மிக புனிதமாக பக்தர்கள் கருதி வருகிறார்கள். இந்த ஒளியை பார்க்க மிக பெரிய கூட்டம் திரள்வதுண்டு. 1999ம் ஆண்டு மகரவிளக்கை பார்க்க கூடிய பெருங்கூட்டத்தில் நெரிசல் உண்டாகி விபத்தில் 53 பக்தர்கள் பரிதாபமாய் இறந்து போனார்கள்.
    சபரிமலை மகரவிளக்கை பற்றி பல காலமாகவே முற்போக்குவாதிகள் கேள்வி எழுப்பியபடி இருக்கிறார்கள். தானாக உருவாகுவதாக அல்லது கடவுளின் அருளால் உருவாகுவதாக பக்தர்கள் நம்பும் இந்த ஓளி உண்மையில் மனிதர்களால் உருவாக்கபட்டதே என பல ஆண்டுகளாக பலர் சொல்லியும் அதை பக்தர்கள் நம்பவில்லை. மகரவிளக்கினை காண வரும் கூட்டம் குறையவுமில்லை. பக்தர்களின் எண்ணிக்கையை உயர்த்தி அதன்மூலம் தனது வருமானத்தை உயர்த்தி கொள்ள சபரிமலை தேவஸ்தானம் இத்தகைய ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகிறது என குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது. கேரளாவில் உள்ள இடதுசாரி அரசு மகர விளக்கு சர்ச்சைக்கு தற்போது முற்றுபுள்ளி வைத்திருக்கிறது. இந்த ஒளி தானாக உருவாகுவதில்லை, மனிதர்களால் தான் உருவாக்கபடுகிறது என வெளிபடையாக அறிவித்திருக்கிறார் கேரள தேவஸ்தான அமைச்சர் ஜி. சுதாகரன்.சபரிமலை பூசாரி ராகுல் ஈஸ்வர் ஒரு பேட்டியில், “மகரவிளக்கு பற்றிய சர்ச்சை தெளிவான பக்தர்கள் மனதில் என்றும் இருந்ததில்லை. அறியாமையில் இருக்கும் பக்தர்கள் தான் இதை இவ்வளவு காலமாக நம்பி கொண்டிருந்தார்கள். மகரவிளக்கும் மகர ஜோதியும் வேறு வேறு. மகர ஜோதி என்பது ஒரு புனிதமான நட்சத்திரம். மகர விளக்கு பொன்னம்பல மேடு என்னுமிடத்தில் இருக்கும் தீபத்தில் இருந்து உருவாக்கபடும் ஒளி,” என உண்மையை ஒப்பு கொண்டிருக்கிறார். இதை தொடரந்து மகரவிளக்கினை உருவாக்குவதில் தங்களுக்கு எந்த பங்கும் கிடையாது என்று தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது.

    மகர ஜோதியினை பற்றிய உண்மை வெளியானதற்கு பிறகு கட்டமைக்கபட்ட புனிதங்களின் மீதான நம்பிக்கை மக்களிடம் குறையுமா?

    சபரிமலை சர்ச்சைகள்

    சமீப காலமாக ஐயப்பன் கோயிலை பற்றிய சர்ச்சைகள் அதிகரிக்க தொடங்கியிருக்கின்றன. 14 வயதிற்கும் அறுபது வயதிற்கும் உட்பட்ட பெண்கள் சபரிமலை கோயிலில் அனுமதிக்கபட மாட்டார்கள் என்கிற பழக்கத்தை பற்றி பெண்ணுரிமைவாதிகள் கேள்வி எழுப்பியதோடு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்கள். நடிகை ஒருவர் அந்த கோயிலுக்கு சென்று கர்ப்பகிரகத்தை தரிசித்ததாக ஒரு பேட்டியில் சொல்லி அதிர்ச்சி அலையை எழுப்பினார். பிறகு சம்பந்தபட்ட நடிகையும் இன்னொரு பிரபல ஜோதிடரும் சேர்ந்து செய்த சதியே இந்த வீண் புரளி என செய்திகள் கிளப்பப்பட்டன. கோயில் நிர்வாகத்தின் தலைமை தந்திரி ஒருவர் விபச்சாரிகளுடன் இருப்பது போல ஒரு புகைப்படம் வெளியாகி சர்ச்சைகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாய் விளங்கியது. சமீபத்தில் அந்த கோயில் ஊழியர்கள் உள்ளாடை அணிய அனுதிக்க வேண்டும் என மனித உரிமை ஆணையத்தின் தலையீட்டின் பேரில் ஒரு கொடிய பழக்கம் அழிக்கபட்டது.

    கோயில்களில் நடக்கும் வியாபாரம்

    குல சாமிகளுக்கும் பழைய கோயில்களுக்கும் இன்று பக்தர்கள் கூட்டம் குறைந்துவிட்டது. திருப்பதிக்கும் பழனிக்கும் பயணிப்பது போக்குவரத்து வசதிகளால் மிக எளிதாகி விட்டதனால் இன்று புகழ் பெற்ற கோயில் தலங்கள் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. பக்தி டூரிஸம் என அழைக்கப்படும் இந்த புதிய மாற்றத்தினை ஒவ்வொரு கோயிலும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள முனைந்திருக்கிறது.

    அதிகரிக்கும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு வசதிகளை மேம்படுத்துவது, பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டங்கள் என தேவஸ்தானங்கள் இன்று பன்னாட்டு நிறுவனங்கள் போல திட்டமிட வேண்டியதிருக்கிறது.

    சமீபத்தில் ஒரு நாள் ஆந்திராவில் உள்ள காளஹத்தி கோயிலுக்கு சென்றிருந்தேன். திருப்பதியிலிருந்து இந்த கோயில் ஒரு மணி நேர பயண தூரத்தில் உள்ளது. அதோடு தோஷம் உள்ளவர்களுக்கு அதனை நீக்க உதவும் தலமெனவும் புகழ் பெற்று விட்டதனால் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. பத்தடி நடந்து போய் சேர வேண்டிய கர்ப்பகிரகத்தினை போய் சேர ஒரு மணி நேரத்திற்கு கோயிலை சுற்றி ஒரு கியூ. 500 ரூபாய், 1000 ரூபாய் கொடுத்து ஸ்பெஷல் தரிசன டிக்கெட் வாங்கியவர்கள் பத்தடி தூரத்தை பத்தடியில் கடக்கிறார்கள். இவர்கள் கர்ப்பகிரகத்தில் நிமிட கணக்கில் நிற்கலாம். ஆனால் மணிக்கணக்காய் காத்து கிடந்தவர்கள் கர்ப்பகிரகத்தில் சில வினாடிகளுக்கு மேல் நின்றால் பூசாரிகள் துரத்துகிறார்கள். அதோடு கர்ப்பகிரகத்திற்கு முன்னால் நான் வந்த போது, பஸ் கண்டெக்டர் கையில் ரூபாய் நோட்டுக்களை மடித்து மடித்து வைத்திருப்பாரே அதே பாணியில் ஒரு பூசாரி ரூபாய் நோட்டுக்களை பிடித்தபடி மந்திரங்களை ஃபாஸ்ட் பார்வர்ட்டில் சொல்லியபடி பணத்தை கேட்டார். அதாவது கர்ப்பக்கிரகத்தை தரிசிக்க கிடைக்கும் ஒரு சில வினாடிகளில் இந்த பூசாரியையும் சமாளிக்க வேண்டும். பாவம் தான் ஏழை பக்தர்கள்.

    கோயிலுக்கு வெளியே செருப்பினை விட்டு செல்வதற்கு இலவசமாகவே வசதி இருக்கிறது. ஆனால் அந்த இடத்தை அடைவதற்கு முன் பதினைந்து கடைகளை கடக்க வேண்டும். வழியில் நின்றபடி, ‘செருப்பு போட்டுட்டு கோயிலுக்கு போக கூடாது,’ என அச்சுறுத்தும் குரலில் சொல்லும் பலர் தங்கள் கடைகளில் செருப்பினை வைக்கும்படி ஏமாற்றுகிறார்கள். இப்படி பல வியாபார தந்திரங்கள். பல பிரபல கோயில்களில் இது போன்ற அனுபவங்கள் தினசரி கிடைக்கின்றன. கோயில் வாசலில் அமர்ந்திருந்த போது பையிலிருந்த வாழைப்பழங்களை குரங்குகள் தூக்கி கொண்டு ஓடின. அவரவர் வயிறு அவரவருக்கு. ம்கூம்.


  • பேய், திகில், அமானுஷ்யம், திரில்லர் என்கிற மூடில் கதை வாசிக்க நினைப்பவர்கள் தயவு செய்து இந்த கதையை வாசிக்க வேண்டாம்.

    நண்பர் யெஸ்.பாலபாரதி தன்னுடைய விடுபட்டவை வலைத்தளத்தில் பேய் வீடு என ஒரு சிறுகதையை பதித்திருக்கிறார். அதனை படித்தவுடன் எனக்குள் ஏதோ ஓர் உத்வேகம். அதே கதையை நான் மளமளவென எனது நடையில் தட்டச்சு செய்ய ஆரம்பித்து விட்டேன். இன்னொருத்தர் கதையை இப்படி உரிமை கொண்டாடுவது தவறு தான். என்றாலும் கதை என் மீது செலுத்திய தாக்கமே இதற்கு காரணம்.

    இப்போது என் கதையை படிக்கும் போது பாலபாரதியின் கதைத்தலே சிறப்பாக இருக்கிறது என்றும், நான் தேவையில்லாமல் அதனை பாடுபடுத்திவிட்டேன் என்றும் தோன்றுகிறது. என்றாலும் எது சரி, எது தவறு, காரணம் என்ன போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்த கதையை பதிக்க அனுமதி அளித்த நண்பர் யெஸ்.பாலபாரதிக்கு நன்றி. இந்த கதையை படிப்பதற்கு முன் வாசகர்கள் அவரது பேய் வீடுகதையை படித்துவிடுதல் வாசிப்பனுபவத்திற்கு உகந்ததாக இருக்கும்.

    **********

    கடற்காற்றில் அனல் மிகுந்திருந்த ஒரு மதிய பொழுதில் எனக்கு பேய் பயம் தெளிந்தது.

    ஊரில் கூடாரமடித்திருந்த நாடக குழுவை சேர்ந்த பட்டினத்துக்காரியை அந்த பங்களா வாசலில் பார்த்தேன். யாரும் சஞ்சாரிக்காத பாழடைந்த பேய் பங்களாவின் கோட்டை சுவர் இரும்பு கேட்டினை திறந்து அவள் வெளிப்பட்டாள். அவள் பார்வையில் ஒரு திருட்டுதனம். தூரத்தில் சைக்கிள் ஓட்டி வந்த என்னை பார்த்தவுடன் தனது பார்வையை திருப்பி கொண்டு அவசர அவசரமாய் ஊரை நோக்கி நடந்தாள். முதலில் எனக்கு குழப்பமாய் இருந்தது. நான் பங்களா வாசலுக்கு சைக்கிள் மிதித்து வந்த சேர்ந்த போது ஒரு மின்னல் போல தங்கரசு சித்தப்பா அதே திருட்டு பார்வையோடு பங்களாவிலிருந்து வெளிபடுவதை பார்த்தேன்.

    “ஹே சங்கரா. எங்கடா?” அவரது குரலை அலட்சியப்படுத்தி சைக்கிளை வேக வேகமாய் ஊரை நோக்கி மிதித்தேன். அவரது முகத்தில் தோன்றிய அவமான குறி என் நினைவுகளில் அழிக்க முடியா தழும்பாய் மாறி போனது.

    சைக்கிளை மிதிக்க மிதிக்க பலவிதமான உணர்வுகள் என்னை ஆட்கொண்டன. ஓர் அணும் பெண்ணும் தனிமையில் இருந்து வெளிபடுவதை புரிந்து கொள்ளும் வயது எனக்கு அப்போது தான் தொடங்கியிருந்தது. என்றாலும் சித்தப்பாவின் துரோகம் மன்னிக்க முடியாதது. கடற்கரை மண்ணில் சைக்கிளை மிதித்து ஓட்டுவது கஷ்டமாக இருந்தது. என்றாலும் கால்களை உறுதியாய் தள்ளி வேக வேகமாய் மிதித்தேன். இந்த துரோக கணத்திலிருந்து எவ்வளவு விரைவாக தள்ளி போய் விட முடியுமோ அவ்வளவு விரைவில் தள்ளி போக நினைத்தேன். ஆனால் இது வாழ்க்கை முழுவதும் துரத்தும் என அப்போது எனக்கு தெரியாது.

    நாங்கள் சிறுவர்களாய் இருந்த போது எங்களுக்கு பேய் பயம் இருந்தது. எங்கள் கிராமத்தில் உள்ள பலருக்கு பேய் பயம் இருந்த காரணத்தினால் எங்களுக்கும் அது தொற்றியிருந்தது. என்றாலும் பேய் பயத்தினை எங்களுக்குள் அபரிதமாய் ஊட்டியது அந்த கடற்கரை ஓரமாய் இருக்கும் பேய் பங்களா தான்.

    ஆட்கள் அதிகம் சஞ்சரிக்காத பகுதியில் கடலை பார்த்தவாறு அமைந்திருந்தது அந்த பங்களா. பாழடைந்த பங்களா. பேய் படத்தில் காட்டுவார்களே அந்த இலக்கணம் கொஞ்சமும் குறையாத பங்களா. செதிலாய் செதிலாய் தோல் உறிந்து கிடக்கும் சுண்ணாம்பு பூச்சு கடற்காற்று அரிப்பில் தனக்கான ஒரு திகில் நிறத்தை தன் மீது பூசி கொண்டிருந்தது. ஜன்னல், கதவுகள் தேக்கு மரத்தின் நுண்வாசனையை இழந்து கரும்பழப்பு நிறத்திற்கு மாறி விட்டன. அழகிய வேலைப்பாடுகள் கோயில் கதவுகளை போல அந்த பங்களாவின் மரசட்டங்களுக்கு உண்டு. முகப்பு கதவு நுணக்கமாய் பூ வேலைப்பாடுடன் அழகிய வரைகோடுகளை கொண்டிருந்தது. நுட்பமாய் பார்த்தால் அதனுள்ளே பாம்புகளின் உருவமும் நிர்வாண பெண்களும் உயிர்ப்புடன் இருப்பார்கள். பேய்களுக்கும் அழகிய பெண்களுக்கும் கருத்த பாம்புகளுக்கும் திகில் கதையில் முக்கியத்துவம் உண்டு என அறிவீர்கள் தானே. பங்களாவை அருகில் சென்று பார்க்கும் பாக்கியம் சிறுவர்களுக்கு கிடையாது. பெரிய கோட்டை சுவர்கள் பேய் பங்களாவை தனக்குள் சிறை வைத்திருந்தன. அமாவாசை இரவன்று கோட்டை சுவர்களை அந்த பேய் பங்களா வன்மம் கொண்டு தாக்கும். அடுத்த நாள் காலை கோட்டை இரும்பு கேட் பாதி திறந்து கிடப்பதை எல்லாரும் பார்ப்பார்கள்.

    பேய் பங்களாவின் கோட்டை சுவர்களுக்கு உள்ளே புதிரான புதுவித மரங்கள் உண்டு. இளம் மஞ்சள் நிறத்தில் விகாரமான பூக்கள் எப்போதாவது அந்த மரங்களில் பூக்கும். வௌவால்களை முதன்முதலாக அந்த பங்களாவில் தான் பார்த்தேன். பேய்கள் நிரம்பிய அந்த பங்களாவின் அமானுஷ்யம் என் பால்ய காலத்து கற்பனைகளில் பிரதான அங்கம் வகித்தது.

    “சண்டாளி நூறு வருஷமானாலும் புருஷனை மன்னிக்காம பேயாட்டம் போடறாளே,” என அங்கலாய்த்தாள் பாட்டி. நான் பேயை பற்றி அறிய தொடங்கிய வயதில் அவளோடு அந்த பங்களாவை ஒட்டி நடந்து போன போது தான் இந்த அங்கலாய்ப்பு. பெரிய கோட்டை சுவர்கள் வெளிறி கற்கள் உறுதியிழந்து இருக்க பாட்டி என் கை பிடித்து கடற்கரை மணலில் நடந்தாள். கோட்டையின் இரும்பு கேட் திறந்து கிடந்தது. இது தான் பாட்டியை சத்தமாய் பேச தூண்டியிருக்கும்.

    பாட்டியின் பேச்சின் அர்த்தம் புரியாமல் திகைத்து நின்றிருந்த என்னை அவள் இழுத்து கொண்டு இன்னும் வேகமாய் நடக்க தொடங்கினாள். பிறகு அந்த பேய் பங்களாவின் கதையை அவள் தான் முதலில் எனக்கு சொன்னாள்.

    நூறு வருடங்களுக்கு முன்பு இந்த பங்களாவை ஒரு வடக்கதியக்காரர் விலை கொடுத்து வாங்கினாராம். அவரை மராட்டியகாரர் என்றும், காஷ்மீர் முஸ்லீம் என்றும் பலர் பலவிதமாய் சொல்வார்கள். வயதிலே பழுத்திருந்த அந்த நபருக்கு இளமையாக ஒரு மனைவி. அழகிலே அவளை போல் வேறு பெண்ணை பார்த்ததில்லை என்பார்கள். அவ்வளவு பெரிய பங்களாவில் கணவன் மனைவி மற்றும் ஒரு கூன் விழுந்த வேலைக்காரி இவர்கள் மூவர் தாம். இந்த மூவரும் பங்களாவை விட்டு வெளியே வருவதே அரிது. கிராமத்தில் உள்ளவர்களிடம் பேசுவதே கிடையாதாம்.

    ஒரு நாள் மதியம், கடற்கரையில் கதை பேசி அமர்ந்திருந்த சில இளைஞர்கள் அந்த அழகிய இளம் மனைவி உடலெல்லாம் தீ பற்றி எரிய கடலை நோக்கி ஓடுவதை பார்த்தார்கள். கடலுக்கு கொஞ்சம் முன்னாலே அவள் சுருண்டு விழுந்து விட்டாள். கடல் அலை அவளை நனைத்த போது அவளது உயிர் பிரிந்திருந்தது. அவள் தற்கொலை செய்து கொண்டதாய் அழுதார் அந்த முதியவர். ஆனால் தினமும் பங்களாவில் கணவனும் மனைவியும் சண்டையிடும் சத்தத்தை கேட்டிருந்த கிராமத்தவர்கள் அந்த முதியவர் தான் தன் மனைவியை கொன்று விட்டதாய் பேசி கொண்டார்கள்.

    மனைவி இறந்த பிறகு அந்த முதியவரையோ கூன் விழுந்த வேலைக்காரியையோ யாரும் பார்க்கவில்லை. இருவரும் ஊரை விட்டு போய் விட்டதாக நினைத்து கொண்டிருந்தார்கள். சில வருடங்கள் கழித்து யாரோ எழுப்பிய சந்தேகத்தின் பேரில் பங்களாவில் நுழைந்து பார்த்த போது வீட்டின் மாடி அறையில் அந்த முதியவரின் பிணத்தையும் சமையலறையில் அந்த கிழவியின் பிணத்தையும் எலும்பு குவியல்களாக பார்த்தார்கள். பிணத்தின் நாற்றம் கூட இல்லை. காளான் புற்றிலிருந்து எலும்புகளை காப்பாற்றி சுடுகாட்டில் எரித்தார்களாம்.

    பாட்டி சொன்ன கதையை அதற்கு பிறகு பல வடிவங்களில் பல விதமாய் கிராமத்தவர் பல பேரிடம் கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு கதையும் மற்ற கதைகளிடமிருந்து வேறுப்பட்டவை.

    தங்கரசு சித்தப்பா தான் அந்த பங்களா பற்றிய கதைகளை அடுத்தடுத்து புதுபுது விதங்களில் எங்களுக்கு சொல்ல தொடங்கினார். பெரிய மீசையும் தழும்புகள் நிறைந்த முகமுமாய் இருக்கும் தங்கரசு சித்தப்பா மிகவும் அன்பானவர்.

    “எந்த வேலயும் செய்யாம அடுத்தவன் காசுல சாப்பிடுறது எப்படின்னு இவன்கிட்ட தான் கத்துக்கணும்,” என அப்பா எல்லாரிடமும் புகார் சொல்வார். தங்கரசு சித்தப்பாவிற்கு சென்னை பட்டினத்தில் ஒரு நல்ல வேலை கிடைத்ததாம். ஆனால் ஒரு மாதம் கூட தாக்கு பிடிக்க முடியாமல் அங்கிருந்து ஓடி வந்து விட்டார். அவ்வபோது வெளியூர்களுக்கு சென்று வேலை செய்வது பிறகு மாதக்கணக்கில் கிராமத்திலே வெட்டியாய் இருப்பது என்பது தான் சித்தப்பாவின் வாழ்க்கை. அதோடு குடியும் பீடி பழக்கமும் வேறு.

    சிறுவர்களாகிய எங்களை பொறுத்த வரை சித்தப்பா பல பட்டினங்களை பார்த்தவர். அதனால் அவரிடம் எப்போதுமே சுவாரஸ்யமான விஷயங்கள் சொல்வதற்கு இருந்தன. சென்னையில் இருந்த வெள்ளைக்காரன் கோட்டை, திருச்சியில் இருந்த மலைக்கோயில், மதுரை மீனாட்சி கோயில் இப்படி உலகை வரைப்படமாக்கி எங்களுக்கு விரிவுப்படுத்தினார். அதோடு சித்தப்பாவிற்கு சுவாரஸ்யமாக கதை சொல்லும் திறன் வாய்த்திருந்தது.

    தங்கரசு சித்தப்பாவின் கதைகள் அனைத்தும் பேய் கதைகளே. பேய் பங்களா பற்றிய கதைகளே அதிகம். மனைவியை கொன்ற கணவனின் கதை தான் மைய திரி. கூன் விழுந்த வேலைக்கார கிழவி கதையின் வில்லி. ஒரே கதையை சித்தப்பா பல நாட்கள் வேறு வேறு மாதிரி சொன்னாலும் சிறுவர்களாகிய எங்களுக்கு அலுப்பதே இல்லை. ஊர் புழுதி அடங்கி வீட்டு திண்ணையில் விளையாட்டு களைப்போடு சிறுவர்கள் நாங்கள் அமர்ந்து அவரிடம் கதை கேட்கும் போது அவரே பேய் போல லாந்தர் வெளிச்சத்தில் தெரிவார். அம்மாக்களின் திட்டுகளை மீறி, சிறுவர்கள் பயப்படுவதை மீறி ஒவ்வொரு இரவும் அந்த பங்களாவை பற்றிய தங்கரசு சித்தப்பாவின் கதைகள் எங்களது கற்பனை உலகை விரிவுபடுத்தி கொண்டிருந்தன.

    மனைவி மீது சந்தேகப்படும் முதியவரும், சந்தேகத்தை ஊதி பெரிதாக்கும் கூன் விழுந்த கிழவியும், அழுகையுடனே எப்போதும் இருக்கும் அழகிய கதாநாயகியும் என பேய் கதையின் மாந்தர்கள் எங்கள் எல்லார் கண்ணிலும் குடியிருந்தார்கள். இருளில் தனியே நடக்கும் போது எங்காவது ஒளிந்திருந்து பயமுறுத்தினார்கள். ஆனால் அந்த பயம் எங்களுக்கு தேவையாக இருந்தது. தங்கரசு சித்தப்பா ஒரே கதையையே பல மாதிரி சொல்லி கொண்டிருந்தாலும் அவரது கதையை கேட்காத இரவுகளில் எதையோ இழந்தவர்களாய் இருந்தோம்.

    நூறு வருடங்களுக்கு முன்பு பேய் பங்களா பாழ் அடையாமல் இருந்த காலகட்டம். மழைக்காலம். ராட்சஷ வேகத்தில் காற்று சுழன்று கொண்டிருந்தது. இடியும் மின்னலும் நிறைந்திருந்த ஓரிரவு. மழை இரு நாட்களாய் பொத்து கொண்டு ஊற்றி கொண்டே இருக்கிறது. பங்களாவின் மாடியில் அமர்ந்திருந்தார் அந்த முதியவர். அவரது மேஜையின் மீது பெரிய புத்தகமொன்று இருந்தது. அதனை பல வருடங்களாய் வாசித்து கொண்டிருக்கிறார். மேஜைக்கு அருகே ஒரு ஜன்னலிருந்தது. மழைநீர் வராமல் தடுக்க அதனை இழுத்து இழுத்து மூட முயற்சித்தும் முடியாததால் ஜன்னல் திறந்து கிடந்தது. மழைநீர் ஜன்னல் வழியாய் அறையை நனைத்து கொண்டிருந்தது.

    ஒரு மின்னல். ஜன்னல் கம்பியில் ஒரு கருநாகம் சுற்றியிருப்பதை பார்த்தார் முதியவர். அவரது இதயம் ஒரு கணம் துடிக்க மறந்தது. பிறகு சுதாரித்து எழுந்து விளக்கினை அந்த பக்கம் திருப்பினார். நாகத்தை காணவில்லை. யாரோ கதவருகே நடந்து செல்லும் சத்தம். கொலுசு சத்தம். கட்டாயமாக கிழவி கிடையாது. இறந்து போன தன் மனைவியின் காலடி ஓசையது. இரவுகளில் ஒவ்வொரு ஜன்னல் கதவாய் அவள் சாத்தி செல்வாள். இப்போது சரியாக அதே சமயம் தான். ஒரு வேளை கனவா என முதியவர் குழம்பினார். மீண்டும் ஒரு மின்னல். ஜன்னல் கம்பியில் கருநாகம் அவரை முறைத்தவாறு படமெடுத்து நின்றது. மின்னல் மறைந்த போது விளக்கினை தவறவிட்டார். அவரால் ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. கதவருகே மனைவி அலுப்பாய் நடந்து செல்லும் காலடி சத்தம். இதயம் கனத்தது. தோள்பட்டை வலித்தது. கருநாகம் சீறும் சத்தம் இருட்டில் கேட்ட போது மனைவியின் விசும்பல் ஒலியும் கேட்டது. அவரால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை. உடைந்த மரக்கிளை போல சரிந்து விழுந்தார்.

    முதியவர் இறந்த அதே சமயம் கீழே சமையலறையில் அந்த கூன் விழுந்த மூதாட்டி இறந்து போன தன் வீட்டு எஜமானியை நேருக்கு நேராய் பார்த்தாள். ஜஸ் கட்டியில் உறைந்து கிடப்பது போல காற்றில் தோன்றியது எஜமானியின் உருவம். இன்னும் அழகாய் இருந்தாள். முகத்தில் ஒரு சோகம் எப்போதும் போலவே. கனவில் சஞ்சரிப்பது போல கிழவி தன் கைகளை உயர்த்தி அந்த உருவத்தை தொட எத்தனித்தாள். சட்டென எஜமானி கண் விழித்தாள். வைரம் போல மிளிர்ந்த கண்ணில் குரோதம் கொப்பளித்தது. அழகிய உதடுகள் பிரிந்த போது பாம்பு போல இரு நாக்குகள் சீறின. கிழவி பயத்தில் நெஞ்சடைத்து செத்து போனாள்.

    இரு உயிர்களை பலி கொண்ட பின்னும் வன்மம் அடங்காத அந்த கருநாகம் அந்த பங்களாவை நூறு வருடங்களாய் சுற்றி கொண்டே இருக்கிறது.

    சைக்கிளை ஓட்ட பழகிய போது எனக்கு பெரிதாய் ஒன்றை சாதித்த திருப்தியிருந்தது. என் வயது பசங்க இன்னும் சைக்கிளை மிதிக்க தெரியாமல் இருக்கும் போது பெரியவர்களை போல நான் சைக்கிள் சீட்டில் அமர்ந்து பெடல் மிதித்தவாறு கிராமத்து வீதியில் உலா வந்தேன். சிறு வயதிலிருந்தே கூட பழகியிருந்த மூக்கில் சளியோடு திரியும் சிறுமிகள் திடீரென அழகிகளாய் மாறியதும் இந்த காலகட்டத்தில் தான். அதிலே ஒருத்தியை டபுள்ஸ் வைத்து சைக்கிளில் பவனி வந்த போது அவளது அம்மா அவள் தலையில் நங்கென குட்டி வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார்.

    “அடுத்த வருஷம் ஹாஸ்டல்ல உன்னை தங்க வைச்சு படிக்க வைக்க போறேன்,” என அப்பா சொல்லி கொண்டிருந்தார்.

    இந்த சமயத்தில் எங்களூருக்கு அந்த நாடக கோஷ்டி வந்து கூடாரமடித்தது. ஊர் திருவிழா தொடங்க போகும் சமயம். ஊரே களை கட்டியது. ஒவ்வொரு வீட்டிலும் விருந்தினர் கூட்டம். நானும் நண்பர்களும் ஊருக்கு புதுசாய் வந்திருக்கும் சிறுமிகளின் அழகை பற்றி கடற்கரையில் அமர்ந்து இரகசிய குரலில் பேசி கொள்வோம்.

    நாடக கோஷ்டியில் இருந்த பட்டினத்துகாரியின் அழகை பற்றி சின்னசாமி அலுக்காமல் பேசி கொண்டே இருந்தான். பெண்களை நாங்கள் வித்தியாசமாய் பார்க்க தொடங்கிய அந்த நாட்களில் தான் நான் பேய் பங்களாவின் வாசலில் தங்கரசு சித்தப்பாவையும் பட்டினத்துகாரியையும் பார்த்தேன். அன்று வரை எனக்கு அந்த பங்களாவில் பேய் இருக்கிறது என்பதில் ஒரு ஐயமும் இல்லை.

    தங்கரசு சித்தப்பாவை அன்று பார்த்த பிறகு எனக்கு பேய் பயம் சுத்தமாக மறைந்து போனது. அதற்கு பிறகு அவரது கதையை கேட்க நான் என்றும் போனதில்லை. அவரும் கதை சொல்வதை நிறுத்தி விட்டார். வேறு ஊருக்கு வேலை கிடைத்து போனவர் அதிசயமாக அந்த வேலையிலே நிலைத்து விட்டார். தூரத்து உறவினர் பெண் ஒருத்தியை அவருக்கு மணமுடித்தார்கள். அவருக்கு அப்போது முப்பது வயதிற்கு மேலாகியிருந்தது. அந்த பெண்ணிற்கு பதினாறு வயது தான்.

    சில வருடங்கள் கழித்து நான் வெளியூர் ஹாஸ்டலில் படித்து கொண்டிருந்த போது என்னை பார்க்க வந்த தந்தை என் முகத்தை பார்க்காமல் வேறு எங்கோ வெறித்தவாறு சித்தப்பாவின் மனைவி தற்கொலை செய்து கொண்ட விவரத்தை சொன்னார்.

    கல்லூரி காலகட்டத்தில் நான் திராவிட கட்சிக்காரனாய் இருந்தேன். ஊர் ஊராய் கூட்டம் போடுவோம். ஒரு முறை எங்கள் பக்கத்து ஊரில் கூட்டம் போட்டு கலையும் போது என் தந்தையும் கூட்டத்தில் இருப்பதை பார்த்தேன்.

    “உன்னை இதுக்காகவா படிக்க வைச்சேன்,” என கண்ணீர் ததும்ப பேசி விட்டு அகன்றார்.

    வறுமை பேயை விட கொடூரமானது என்பதை சென்னை வந்த பிறகு அறிந்தேன். திருவல்லிகேணி மென்சனில் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு மட்டும் உண்டு உயிர் வாழ்ந்த போது மதிய நேரத்து அனலில் என்றோ செத்து போன அந்த பங்களா எஜமானி என்னுடைய பசி மயக்கத்தில் யாருமில்லா அறையில் காட்சி தருவாள்.

    பாம்புகளிடமிருந்து தப்பிக்க நான் கொள்கைகளை மறந்து வேலைக்கு சேர்ந்தேன். கொள்கைகள் பொய் தான் என நிருபிக்க காதல் புரிந்தேன். காதலியை மணமுடித்த மூன்றாவது வருடம் தாய் இறப்பிற்கு பிறகு தந்தை எங்களை ஏற்று கொண்டார்.

    ஊரில் மனைவியுடன் சைக்கிளில் போவது முதலில் வெட்கமாய் இருந்தது. பலருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. விடுமுறை காலத்தில் ஒரு நாள் மனைவியை சைக்கிளில் வைத்து ஓட்டி வந்த போது அந்த பேய் பங்களாவை பார்த்தேன். பல நினைவுகளை எனக்கு அது தந்தாலும் அதனுள் எதோ ஒன்று குறைவதை உணர்ந்தேன்.

    என் மனைவியிடம் இந்த பங்களாவை பற்றி கதை கதையாய் பேச வேண்டுமென தோன்றியது. சித்தப்பாவை இங்கே பார்த்த போது தான் நான் வயதிற்கு வந்தேன் என விளக்க வேண்டுமென சிந்தனைகள் எழுந்தன. எனக்கு என் மனைவிக்கும் இருக்கும் வயது வித்தியாசம் சட்டென பாம்பு சீண்டலாய் உறைத்தது. அமைதியாய் பார்வையை தாழ்த்தி கொண்டு சைக்கிளை மிதிக்க தொடங்கினேன். கடற்கரை மணலில் சைக்கிளை ஓட்டுவது சிரமமாய் இருந்தது. ஆனாலும் கால்களில் உறுதியை கொடுத்து மிதித்தேன்.

    “வெயில் இப்படி சுடுது. பாலைவனம் மாதிரி. எப்படி தான் மனுஷங்க இந்த கிராமத்துல வாழ்றாங்களோ,” என அலுத்து கொண்டாள் மனைவி.


  • கரிய வெயிலாய் இருட்டு
    துளிதுளியாய் வியர்வையை உறிஞ்ச,
    குரல் நூறு குரலாய் எதிரொலிக்கும்
    முடிவில்லா குகையினுள் தனியே நின்று கொண்டிருப்பது
    பயமாக இருக்கிறது.

    கால்கள் சோம்பினாலும்
    பயம் முன்னால் இழுத்து செல்கிறது.
    இங்கு வெறுமையை தவிர வேறு எதுவும் இல்லையா?

    மனம் தன் அனல்வெறுமையில்
    ஆயிரம் ஆவிகள் என்னை சூழ்ந்து நிற்பதை பார்க்கிறது.
    பிரகாசிக்கும் வெண் பற்கள்.
    அதன் மேலே இரத்த கறை.
    இரத்த கறையினுள் பூத்திருக்கிருக்கின்றன புழுக்கள்.

    ஆயிரம் ஆவிகளும் முறைத்திருக்க,
    அந்த முறைப்பு முதுகெலும்பில் சில்லிட்டு இருக்க,
    செயலிழந்த கால்களை இழுத்தபடி
    தாகத்தில் நாவறண்டு ஓடுகிறேன்
    முடிவில்லா குகையினுள்.

    இரத்த கறையில் கரைந்து போன முன்னோர்களுக்கு தெரியாது
    குகைக்கு வெளியே உதிர பசியோடு காத்திருக்கிறது
    வெள்ளை இருட்டாய் வெளிச்சம்.


  • ஒரு காலத்தில் எல்லா பேப்பர்களிலும் ஆட்டோ சங்கர் பற்றிய தகவல்களாய் இருந்தது. பிறகு வீரப்பன். ஹர்ஷத் மேத்தா, சிவகாசி ஜெயலட்சமி, டாக்டர் பிரகாஷ் என ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு செய்தி பிரதானமாய் ஊடகங்களில் அடிபடும். பிறகு நிறைய செய்தி தொலைக்காட்சி சானல்கள், பரபரப்பு பத்திரிக்கைகள் தோன்றின. ஊடகங்கள் மத்தியில் வளரும் போட்டி மனப்பான்மை காரணத்தால் இன்று பெரிய செய்திகளுக்கு தட்டுபாடு நிலவுகிறது. ஒரு ‘சத்துள்ள’ செய்தி கிடைத்த வேகத்தில் முழுமையாக சக்கையாகபட்டு மிக விரைவில் காலவதி ஆகிவிடுகிறது.

    இன்று செய்தி அறையை போர்களம் போல வர்ணிக்கிறார்கள். மக்களுக்கு உண்மையில் தேவையான செய்தியை தான் இன்றைய பத்திரிக்கைகள் செய்தியாய் வடிவெடுக்கின்றனவா என்கிற கேள்விக்கு உள்ளே இந்த கட்டுரை போக போவதில்லை. நோம் சாம்ஸ்கி சிந்தனைகள் இன்று ஊடகத்துறை மாணவர்களுக்கும் தெரியும். பிரபல ஊடகம் என்பது ஒரு வணிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் இந்த கட்டுரையின் நோக்கம், ‘ஒரு செய்தியை பிரபலமாக்கும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது?’ என்கிற கேள்விக்கு விடை காண்பது தான்.

    நிருபரா? செய்தி ஆசிரியரா? ஊடக நிறுவன உரிமையாளரா?

    நிருபர், செய்தி ஆசிரியர், ஊடக நிறுவன உரிமையாளர் எல்லாருக்கும் ‘ஒரு செய்தி’ (பிரபலமாக வேண்டிய ஒரு செய்தி) மிக அவசியமாக மிக அவசரமாக எப்போதும் தேவைப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. யானை பசிக்கு தீனியை உருவாக்கி கொண்டே இருக்கிற கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஆனால் கிடைக்கும் செய்தியை உடனே பெரிது செய்யவும் முடியாது. அதற்கு பல கட்டுபாடுகள்/புரிந்து கொள்ள முடியாத புதிர்கள் உண்டு.

    உதாரணத்திற்கு ஒன்று. காஞ்சி சங்கராச்சாரியர் கைது செய்யபட்ட சம்பவம். சங்கராச்சாரியர் கைது செய்யபடுவதற்கு முன்பு பல ஊடகங்களில் அவருக்கு வேண்டப்பட்டவர்கள், பக்த கோடிகள் இருந்தார்கள். சங்கராச்சாரியர் ஒரு பெண்ணிற்கு தொலைபேசியில் தினமும் பேசுகிறார் போன்ற குற்றச்சாட்டுகளை பிரபல ஊடகங்களில் செய்தியாக கொண்டு வரமுடியும் என்பதெல்லாம் 100 % முடியாத காரியம் என தான் எல்லாரும் நினைத்து இருந்தார்கள். ஆனால் நடந்ததோ வேறுவிதம். சங்கராச்சாரியர் கைது செய்யபட்டவுடன் அவரை பற்றிய குற்றச்சாட்டுகள், புரளிகள் என எல்லாவற்றையும் ஊடகங்கள் போட்டி போட்டு கொண்டு வெளிச்சம் போட்டன. இது நடந்தது எப்படி?

    விளம்பர நிறுவனங்களா? அரசியல் சக்தியா? வணிக பெரும்புள்ளிகளா?

    ஒரு செய்தியை மெல்ல அறிமுகப்படுத்தி பிறகு வளர விட்டு விஸ்வரூபமெடுக்க வைக்கும் சக்திகள் சிலது இருக்கின்றன. இது ஒரு பிரச்சாரம் போல மெல்ல வலுவாகும். இது ஒருபுறம் பின்னணியில் தாக்கம் உண்டாக்குகிறது. அமெரிக்க பிரச்சார சக்தி தொடர்ந்து ‘தீவிரவாத மிரட்டல்’ குறித்து ஒரு பிம்பத்தை உலகமெங்கும் உருவாக்கி வைத்திருப்பது போல. ஆனால் அமெரிக்க அதிபரே சட்டென ஊடக சக்திகளால் மாட்டி கொள்ளும் காமெடிகள் நடப்பது எப்படி?

    சதி ஆலோசனை அறையில் தமிழ் சினிமா வில்லன்கள் போல அரசியல்வாதி, பிரபல பிசினஸ் மேன், ஊடக நிறுவன அதிபர் ஆகியோர் அமர்ந்து அடுத்து மக்களை ஏமாற்ற என்ன செய்தியை உண்டாக்கி தலைப்பு செய்தியாக்கலாம் என திட்டம் தீட்டுவதில்லை. அவர்களால் ஊடகத்தில் ஒரு தாக்கம் ஏற்படுத்த முடியும் என்பது உண்மை தான். ஆனால் சதி ஆலோசனை அறை என்பது உண்மை அல்ல. சரி, ஒரு செய்தியை பிரபலமாக்கும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது? பொறுங்கள்.

    மிலன் குண்டேரா சொல்வது என்ன?

    இன்றைய உலக இலக்கியத்தில் பரவலாக அறியபட்ட எழுத்தாளர் மிலன் குண்டேரா. இவருடைய நாவலான ‘Immortality’ ஆங்கில பதிப்பில் imagology என்கிற வார்த்தை காண கிடைக்கிறது. அவருடைய உருவாக்கமான இந்த சொல் நமது கேள்விக்கு ஒரு புதுவிதமான விடையை தருகிறது.

    அவருடைய எழுத்திலிருந்து மேற்கோள்

    நூறு வருடங்களுக்கு முன்பு ரஷ்யாவில் மார்க்ஸிய கோட்பாட்டின் ஆதரவாளர்கள் சிறு சிறு குழுக்களாய் இரகசியமாய் குழுமி மார்க்ஸிய தத்துவங்களை படித்தார்கள். மற்ற குழுக்களுக்கும் பரப்ப வேண்டி, அந்த தத்துவங்களை எளிமையாக்கினார்கள். எளிமையாக்கபட்ட தத்துவங்களை பெற்ற மற்ற குழுக்கள் தங்களுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பரப்ப வேண்டி கற்பிக்க வேண்டியதை மீண்டும் எளிதாக்கினார்கள். இப்படியான பிரச்சார போக்கில் எளிமையாக்குதல் ஒவ்வொரு படிநிலையிலும் நடந்தேறியது. உலகம் முழுவதும் மார்க்ஸியம் புகழ் பெற தொடங்கிய போது, ஆறேழு கோஷங்கள் மட்டுமே மிஞ்சியிருந்தன. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத அந்த கோஷங்களுக்கு கருத்தியல் என்கிற தகுதியே இல்லை.

    சுத்தியலுடன் புன்னகைத்தபடி இருக்கும் ஒரு தொழிலாளி, வெள்ளை மனிதர்கள், கறுப்பு மனிதர்கள், சீன மனிதர்கள் கைகளை கோர்த்தபடி நிற்பது, அமைதி சின்னமாக புறா வானத்தில் பறப்பது போன்ற காட்சிகள் தான் இன்று மார்க்ஸியத்தை விளக்குகின்றன. இந்த சூழலில் கருத்தியல் உலக அளவில் எப்படி காட்சியியலாக (imagology) மாறுகிறது என்பதை பற்றி பேச நமக்கு எல்லா உரிமையும் இருக்கிறது…

    …கருத்தியல் என்பது ஒரு மேடைக்கு பின்புறமிருக்கும் பிரம்மாண்ட சக்கரங்கள் போல. அந்த சக்கரங்கள் உருளும் போது போர்கள் நடந்தன, புரட்சிகள் வெடித்தன, புது சிந்தனைகள் தோன்றின. ஆனால் காட்சியியலின் சக்கரங்கள் வரலாற்றின் மேல் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. கருத்தியல்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொண்டன. கருத்தியலின் தாக்கம் ஒரு குறிப்பிட்ட காலத்தையே முழுங்க வல்லது. ஆனால் காட்சியியல் தங்களுக்குள்ளான அடுத்த நகர்வுகளை ஒரு இசை போல ஒழுங்குபடுத்தி கொள்கிறது…

    …கருத்தியல் வரலாற்றிற்கு உரியது. ஆனால் வரலாறு முடியுமிடத்தில் தான் காட்சியியலின் ஆட்சி தொடங்குகிறது.

    ஐரோப்பாவிற்கு மாற்றம் என்கிற வார்த்தை மிக பிடித்தமானது. விகோ, ஹகேல், மார்க்ஸ் காலத்திற்கு பிறகு மாற்றம் என்பது ஒரு மேம்படுத்தபட்ட வளர்ச்சியின் அடுத்த கட்டம் என அர்த்தமிருந்தது. இன்று மாற்றம் என்கிற வார்த்தை வேறு அர்த்தம் பூண்டிருக்கிறது. ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு நகர்தல், முன்னாலிருந்து பின்னால், பின்னாலிருந்து முன்னால், இடதிலிருந்து வலது, வலதிலிருந்து இடது. அடுத்த சீசனுக்கு என்ன புது ஃபேஷன் என டிசைனர்கள் யோசிப்பது போல…

    …ஓர் உடற்பயிற்சி கூடத்தில் பெரிய பெரிய கண்ணாடிகளை சுவர்கள் தெரியாதபடி வைக்கிறார்கள். ஏன்? உடற்பயிற்சி செய்யும் போது பயிற்சி செய்பவர்கள் தங்கள் உடலை பார்த்தபடி இருக்க வேண்டுமென்கிற ஆர்வமல்ல. காரணம் காட்சியியலின் பல வாய்ப்புகளில் இன்று கண்ணாடி வைப்பதின் மேல் அதிர்ஷ்ட தேவதை (காட்சியியல் தேவதை?) கை காட்டியிருக்கிறாள். என்றோ இறந்து போன ஒரு தத்துவாசிரியர் இன்று மோசமாக திட்டபடுகிறார் என்றால் காட்சியியலின் கை இன்று அவருக்கு மோசமான கட்டத்தை வழங்கியிருக்கிறது என்று அர்த்தம். கருத்துகளையும் எதிர்கருத்துகளையும் காட்சியியல் உருவாக்க தான் செய்கிறது. ஆனால் இதற்கு வழங்கபடுகிற காலகட்டம் மிக குறுகியது. ஆனால் இவை நம் மீது மிக பெரிய தாக்கத்தை உண்டாக்குகின்றன. நமது செயல்பாடு, நமது அரசியல் நம்பிக்கைகள், நம் ரசனைகள், நம் வீட்டு தரைகம்பளத்தின் நிறம், எந்த புத்தகத்தை படிப்பது என்கிற தேர்வு இவை யாவும் காட்சியியல் நம் மேல் விட்டு செல்லும் தாக்கங்கள். ஒரு காலத்தில் இப்பணியை கருத்தியல்கள் செய்திருந்தன...

    …பத்திரிக்கையாளர்கள் காட்சியியலையே சார்ந்து இருக்கிறார்கள். அன்றைய காலகட்டத்தில் நிலவும் காட்சியியல் வரைகோடுகளே (பத்திரிக்கையாளனையும் பத்திரிக்கையையும்) ஒரு செய்தி பிரபலமாகுவதையும் தீர்மானிக்கின்றன.

    காட்சியியல் மேற்பார்வையாளர்கள் (Imagologue)

    மிலன் குண்டேராவின் நாவலில் வரும் ஒரு சிறு கதாபாத்திரம் Imagologue. காட்சியியல் பின்பற்றபடுகிறதா என சோதிப்பதற்காகவே இருக்கும் மனிதர்கள் தாம் Imagologue. அவர்களது பணியே அன்றைய ஃபேஷனுக்கு (காட்சியியலுக்கு) ஏற்ப பணிகள் அந்தந்த துறைகளில் இருக்கிறதா என்று சோதிப்பது தான். இந்த மனிதர்கள் எல்லா துறைகளிலும் இருக்கிறார்கள். இவர்களை தனித்து இனம் காண்பது அவ்வளவு எளிதல்ல. மிக குறுகிய காலத்தில் அந்த பணியை அவரிடமிருந்து பிடுங்கி மற்றொருவர் தம்மை அறியாமல் செய்ய தொடங்குகிறார். உதாரணமாக மிலன் குண்டேரா நாவலில் வரும் imagologue ரேடியோவில் இருக்கும் அறிவுபூர்வமான கலந்துரையாடல் நிகழ்ச்சியை தூக்கி விட்டு நிகழ்ச்சிகளில் சுவாரஸ்யமான மசாலாக்களை கலப்பதை பற்றி பேசுகிறார். அதன் விளைவாய் அந்த நிகழ்ச்சி தூக்கபட்டு, ரேடியோ நிகழ்ச்சிகள் சுவாரஸ்ய மசாலாக்களால் அலங்கரிக்கபடுகிறது.

    ஓர் இளம் அதிகாரி தனது நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்து வேலை நேரத்தை அதிகரிப்பது மற்றும் வேலை திறனை பற்றி பேசுகிறார் என்றால் அவர் இன்றைய நடப்பு ஸ்டைலை சொல்கிறார் என்று அர்த்தம். அதாவது அவர் ஒரு imagologue.

    இன்று ஒரு செய்தியை பிரபலமாக்குவதும் அல்லது இருட்டடிப்பு செய்வதும் imagologueகள் கையில் இருக்கிறது.


  • மொட்டை மாடியில் தொடர்ந்து உலாவுபவர்களை
    சாதாரணமாய் வெளியிடங்களில் இனம் காண முடியாது.
    நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களும்
    இருபது வயதிற்கு உட்பட்டவர்களுமே அதிகம்.

    கிராமத்தில் தனது வீடு மட்டுமே காங்கிரீட் வீடு என்கிற
    அகங்காரத்தின் காரணத்தினால்
    தன் மொட்டை மாடியில் உலா வந்த சிறுவன் பாண்டி.
    இளைஞன் ஆன பின் கல்லூரி ஹாஸ்டலிலே
    மொட்டை மாடியில் தான் அரட்டை கச்சேரி
    விடிய விடிய அரங்கேறும்.
    திருமணத்திற்கு பிறகு
    அறியா நகரத்தின் பற்கள் கொடுத்த காயத்தை போக்க
    மனதை லேசாக்க மொட்டை மாடியில் அமர்ந்து
    கண்ணுக்கெட்டிய தூரம் மனிதர்களும் கட்டிடங்களுமாய் தெரியும்
    நகரத்தை பார்வையால் வெறித்திருப்பான்.

    மனைவியின் மரணத்திற்கு பின்பு
    மகனுக்கும் மருமகளுக்கும் கூடுதல் சுமையாய்
    தன்னை கருதி வாழும் பாண்டிக்கு
    இருப்பதெல்லாம் ஒரு பிரச்சனை.
    அவர்கள் அபார்ட்மெண்ட் கட்டிடத்தின் மொட்டை மாடியில் யாருக்கும் அனுமதியில்லை.
    இறந்து போனான் விரைவில்.

    சொர்ணம்மாளுக்கு மொட்டை மாடியில் தான்
    தன் முதிய வயது ஒத்த தோழிகள் உண்டு.
    மருமகளை பற்றி பேச பேச குறையாமல் இருக்கும் புகார்கள்.

    பதினெட்டை தொடாத ஒரு சிறுமிக்கு
    மொட்டை மாடியில் தன் எழிலை காட்டியபடி
    மற்றவர் எல்லாரையும் பார்த்தபடி இருப்பது பிடித்திருக்கிறது.
    அவளது அம்மா ஏன் திட்டுகிறாள் என்பது தான் புரியவில்லை.

    காதலிக்கு காத்திருக்கும் கோட்டை அவனது மொட்டை மாடி.

    காதலை பறிமாறும் நந்தவனம்
    அவளது மாடி.

    குடித்து விட்டு அடிக்கும் கணவனை பழி வாங்க
    தன் கை குழந்தையுடன் விஜயா
    சாவை நோக்கி கீழே குதித்ததும் இங்கிருந்து தான்.

    இரவில் நகரத்து வெளிச்சம் விழுங்கிய நட்சத்திரங்கள் போக
    சிலது இன்னும் பிரகாசிக்கும் போது
    கள்ளதனங்கள் அரங்கேறும்.

    மதிய வெயிலில் யாரும் நெருங்கா நேரத்தில்
    துணிகளும்
    வடகமும்
    மொட்டை மாடிகளை அடுத்த நாடகங்களுக்கு தயார் செய்யும்.


  • உத்தபுரம் கிராமத்தில் நடந்த அவலங்களை கேள்விபட்டீர்களா? கேள்விபட்டவர்கள் அடுத்த பத்தியை தவிர்த்து அதற்கு அடுத்த பத்தியிலிருந்து படிக்கவும். கேள்விபடாதவர்கள் தொடர்ந்து வாசியுங்கள்.

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கிராமம் உத்தபுரம். இங்கு ஏறத்தாழ இரண்டாயிரம் தலித் குடும்பங்கள் வசிக்கிறார்கள். என்றாலும் இங்கு இருக்கும் சாதி இந்துக்கள் தலித்களை பல காலமாக புறக்கணித்து வந்திருக்கிறார்கள். 1990ம் ஆண்டு இந்த கிராமத்தில் சாதி ரீதியிலான மோதல் நடந்ததாக சொல்லபடுகிறது. இந்த மோதல் சம்பவத்தினை தொடர்ந்து சாதி இந்துக்கள் வசிக்கும் பகுதிக்கும் தலித் மக்கள் வாழும் பகுதிக்கும் இடையே 600 மீட்டர் நீள காங்ரீட் சுவர் கட்டபட்டிருக்கிறது. கிராமத்தில் உள்ள பொது வசதிகளை தலித் மக்கள் உபயோகிக்க கூடாது என்பதற்காகவே இந்த சுவர் கட்டபட்டிருக்கிறது. ஏறத்தாழ இருபது வருடங்கள் இந்த சுவர் இந்த மண்ணின் சாதி வெறியையும் அதிகாரிகளின் அலட்சியத்தையும் பறைசாற்றியபடி இருந்திருக்கிறது. சில காலத்திற்கு முன்பு இந்த சுவரின் உயரம் அதிகரிக்கபட்டிருக்கிறது. இதோடு அடங்கவில்லை சாதி வெறி. சுவர் ஏறி யாராவது குதித்தால் தீட்டாகிவிடுமே என்பதால் சுவற்றில் மின்சாரத்தை பாய்ச்ச தொடங்கினார்கள். இதற்கு பிறகு சமீப நாட்களாக செய்திகளில் அடிபட தொடங்கி பிறகு அரசின் கவனத்திற்கு இந்த பிரச்சனை வந்திருக்கிறது. அரசு மாவட்ட கலெக்டரை பணித்து அந்த சுவரை இடித்திருக்கிறது. சுவர் இடிக்கபட்ட காரணத்தினால் இந்த கிராமத்தில் வாழும் சாதி இந்துக்கள் தங்கள் ரேஷன் கார்டுகளை கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுக்கையிட்டு திரும்ப ஒப்படைக்கவும் முனைந்திருக்கிறார்கள். அதாவது தங்களது சாதி வெறியை தடுத்தால் தங்களால் இந்த நாட்டு பிரஜைகளாக இருக்க முடியாது என சொல்லியிருக்கிறார்கள். சாதி வேற்றுமை குறித்தோ சுவர் குறித்தோ கிரிமினல் வழக்கு எதுவும் பதிவானதாக தெரியவில்லை. ஆனால் சாதி இந்துக்கள் தங்களது சாதி வெறி எனும் உரிமை மறுக்கபட்டதால் கோபமுற்று கிராமத்தை விட்டு வெளியேறி வேறு எங்கோ தங்கியிருக்கிறார்கள். இவர்களை சாந்தபடுத்தி மீண்டும் கிராமத்திற்கும் கூட்டி வர மாவட்ட கலெக்டர் முயற்சி செய்து வருகிறார்.

    உத்தபுரத்தில் நடப்பது எதோ வித்தியாசமான நிகழ்வு போல ஊடகங்கள் எழுதுகின்றன. உண்மையில் இந்தியாவில் உத்தபுரங்கள் இல்லாத இடங்களே கிடையாது. இதை எல்லாரும் அறிந்திருக்கிறார்கள். ஆனால் பெரும்பான்மையானோர் ஏற்று கொள்ள மறுக்கிறார்கள்.

    தமிழக கிராமங்களில் சாதி அடிப்படையில் மக்கள் பிரிந்து வாழ்கிறார்கள். ஒவ்வொரு தெருவுக்கும் சாதியுண்டு. ஏன் கோயில் விழாக்கள் கூட சாதியினை அடிப்படையாக கொண்டுள்ளன. கேவலம், சொல்லவே வெட்கமாக இருக்கிறது. சாமிகளுக்கு கூட சாதியுண்டு. கிராமங்களில் மட்டும் தான் இப்படியா? நகரத்தில் வீடு வாடகைக்கு கிடைக்குமா என கேட்க போனால்,உங்கள் சாதி என்ன?” என கேட்காத வீட்டு உரிமையாளர்கள் மிகவும் குறைவு. திருமணங்களில் சாதி. பழக்க வழக்கங்களில் சாதி, உடைகளில் சாதி என இந்த சமூகம் இன்றும் அவல நிலையில் இருந்தாலும் மேலோட்டமாய், “சாதியா, அதெல்லாம் பிற்போக்குதனம், யாரோ படிக்காத பாமரர்கள் செய்யற வேலை,” என சொல்லி விடுகிறார்கள். ஆனால் நிஜத்தில் மெத்த படித்தவர்கள் தான் இட ஒதுக்கீடுற்கு எதிராக கொடி பிடிக்கிறார்கள். திறமை அடிப்பட்டு விடும், உலக அளவில் தரம் குறைந்து விடும் என வாய்சவடால் வேறு.

    சாதி தன்மை உயிர்ப்புடன் இருந்தாலும் அதனை ஏன் யாரும் ஏற்று கொள்வதில்லை. குற்றவுணர்ச்சியா? வெட்கமா? அதெல்லாம் இல்லை. வெளிபடையாக சொன்னால் மாட்டி கொள்வோம் என்பதால் தான். ஒவ்வொரு இந்தியனும் தன் பிறப்பிலும் வளர்ப்பிலும் சாதி என்னும் நஞ்சை உண்டு தான் வளர்கிறான். இதனை சத்தமாக சொல்லுவோம். சாதி உணர்வு இன்றும் உண்டு. சாதி வேற்றுமையும் தலித்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் இன்றும் பரவலாக நடந்தபடியே தான் இருக்கின்றன. ஐடி பார்க்குகள் கட்டபட்டாலும், இந்தியா ஜிடிபியில் முன்னேற்றம் காண தொடங்கி விட்டாலும், நம் பங்கு சந்தையில் கோடிக்கணக்கில் அன்னிய நாட்டு முதலீடு குவிய தொடங்கி விட்டாலும், இந்தியா வல்லரசாக மாறுவதற்கான பாதையில் பயணிக்க தொடங்கி விட்டது என ஒரு பொய் பிம்பம் காட்டபட்டாலும் சாதி வேற்றுமையுணர்வு நம் சமூகத்தில் ஆழமாய் வேர் ஊன்றி இருக்கிறது என்பது யதார்த்தம். இந்த நிஜத்தை மூடி மறைக்காமல் சத்தமாய் சொல்வோம். ஏனெனில் பிரச்சனை இருக்கிறது என ஒப்புக் கொள்ளாதவர்கள் கட்டாயம் அந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சிக்கு எதிரியாக தான் பார்க்கபடுவார்கள்.


  • இருளை தவிர வேறு பொருளில்லை.
    என் குரலை தவிர வேறு ஓலியில்லை.

    தோல் எல்லாம் சொரசொரப்பாய் உதிர்கிறது.
    தரையெங்கும் என் தலைமுடிகள் பரவி கிடக்கின்றன
    .
    காலும் கையும் ஒரே பணியை தான் செய்கின்றன
    .
    இந்த நான்கு சுவர்களை தாண்டி உலகம் அழிந்து போயிருக்கக்கூடும்
    .

    பஞ்சு மேகங்களாய் கடந்த கால நினைவுகள்
    தெளிவில்லாமல் அவ்வபோது கனவில் தோன்றும்
    .
    என் பழைய மொழியில் உறுமல் மட்டுமே நினைவில் இருக்கிறது.

    சமீபத்தில் தான் கற்று கொண்டேன்,
    இந்த அறையில் என்னோடு வசிக்கும்
    சிறுசிறு உயிரினங்களின் மொழியை
    .

    சிந்திக்க மறந்தேன்.
    அதனால் வாழ்கிறேன்
    .


  • ஒவ்வொரு வினாடிக்கு அடுத்தும்

    கோடிக்கணக்கான சாத்தியக்கூறுகள்.

    அத்தனையும் அழிந்து போகும்.

    ஏதேனும் ஒன்றை தவிர.


    கால இயந்திரத்தில் நம்பிக்கை இல்லை.

    எனினும் ஒரு நொடியை மீட்டு கொடுத்தால்

    இழந்த வாழ்வை மீட்டெடுத்திடுவேன்.

     

    கடந்த காலத்தில் இருக்கிறது

    உயிர்த்திருத்தலின் இரகசியம்.

    வருங்காலத்தில் அல்ல.