• ஒரு சினிமா படப்பிடிப்பு தளம். வழக்கம் போல எல்லாரும் பிசியாக இருக்கிறார்கள். ஓர் ஓரத்தில் சிவா நின்று கொண்டிருக்கிறான். நான்கு நாள் தாடி. மெலிந்த உருவம். ஒரு கோணத்தில் அந்தச் சினிமா டைரக்டரைப் பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்தது போலவே இருக்கிறது. டைரக்டரின் கடைக்கண் பார்வைக்காக தான் சிவா நின்று கொண்டிருக்கிறான். அவரும் தினமும் அவனைப் பார்க்கிறார். பார்க்கிறார் என்பதை விட அவரது பார்வை அவனிருக்கும் திசையில் கடந்து போகும். அவன் எழுந்து பணிந்து ஒரு வணக்கம் வைப்பான். அதை அவர் பொருட்படுத்தவே மாட்டார். யாருமில்லாத சுவற்றைப் பார்த்தது போல அவரது ரியாக்ஷன் இருக்கும்.

    அவன் நேற்று மதியம் கடைசியாக சாப்பிட்டது. பசியில் வயிறு எரிகிறது. தலை சுற்றல் வேறு.

    சிவாவிற்கு சேலம் பக்கத்தில் ஒரு கிராமம் தான் சொந்த ஊர். சிறு வயதில் படிப்பு ஏறாமல் ஊர் சுற்றி கொண்டிருந்தான். அவனது கிராமத்தில் பரோட்டா கடை நடத்தும் தனசேகர் அவனுக்கு ஒரு வகையில் தூரத்து சொந்தம். தனசேகருக்குச் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது பல நாளாய் கனவு. இளமையில் சென்னையில் போய் தங்கி முயற்சித்து பார்த்தாராம். ஆனால் எதுவும் சரிப்படவில்லை. பிறகு ஊருக்கு திரும்பி திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாகி பரோட்டா கடை நல்லபடியாய் ஓடி கொண்டிருந்தது. அப்போது தான் அவருக்கு நட்பானான் விகாஸ். விகாஸ் சென்னையில் திரைப்படத்துறையில் உதவி இயக்குநராக பணிபுரிகிறான். தனசேகரின் போட்டோவை வாங்கி கொண்டு சென்னைக்குத் திரும்பி போனான் விகாஸ்.

    விகாஸ் ஊரை விட்டு சென்று மூன்று மாதங்களாகியும் அவனிடமிருந்தும் எந்த தகவலும் வரவில்லை. சரி டீ, பிராந்தி செலவிற்காக ஒரு நாள் முழுக்க நம்மோடு பேசி கொண்டிருந்தான் போல என தனசேகர் கடை வியாபாரத்தில் கவனம் செலுத்தினார். ஒரு நாள் தொலைபேசியில் விகாஸ் அழைத்தான்.

    “அண்ணே. அடுத்த சத்யராஜ் படத்துல நீங்க தான் வில்லன். சத்யராஜ் சாரே ஓகே சொல்லிட்டாரு. உடனே கிளம்பி சென்னைக்கு வாங்க,” என சந்தோஷம் பொங்க விகாஸ் சொன்னதும் தனசேகருக்கு அடுத்து என்ன செய்வது என தெரியவில்லை. அங்கே போகிறார். இங்கே போகிறார். மகிழ்ச்சி செய்தியை வருபவர் போறவர்களிடம் எல்லாம் சொல்லி கொண்டிருக்கிறார். சிவாவைப் பார்த்து, ‘நீயும் என்னோட சென்னைக்கு வந்துடு,’ என கொக்கி போட்டு அழைக்கிறார்.

    மூன்று நாள் கழித்து தனசேகரும் சிவாவும் சென்னைக்குப் போனார்கள். வடபழனியில் ஓர் ஒற்றை அறை குடியிருப்பில் உதவி இயக்குனர் விகாஸ் அவர்களை வரவேற்றான். அங்கேயே தங்கி கொள்ளும்படி பணித்தான். சத்யராஜ் சார் பிசியாக இருக்கிறார். சீக்கிரமே நேர்ல போய் பார்க்கலாம் என்று சொன்னான்.

    நாட்கள் கழிந்தன. சத்யராஜ் சார் எப்போதுமே பிசியாகவே இருந்தார். அதனால் தனசேரும் சிவாவும் அந்த அறைக்குள்ளே அடைந்து கிடந்தார்கள். மாலை நேரமானால் உதவி இயக்குநர்கள் குழுவொன்று அங்கு வரும். அவர்கள் அனைவரும் வருங்கால இயக்குநர்களாயிற்றே. தனசேகர் தான் அனைவருக்கும் தினமும் மது, இரவு உணவு எல்லாவற்றிற்கும் செலவு செய்வார். அவர்கள் பேசும் சினிமா செய்திகளை இருவரும் வாய் பிளந்தபடி கேட்டு கொண்டிருப்பார்கள். பத்து நாட்களில் ஊரிலிருந்து எடுத்து வந்த பணம் அனைத்தும் காலியானது.

    விகாஸ் அறைக்கு இரண்டு நாட்களாக வரவே இல்லை. தனசேகரும் சிவாவும் சாப்பிட்டிற்கே திண்டாட தொடங்கினார்கள். விகாஸின் நண்பன் ஒருவன் அப்போது அங்கு வந்தான். அவனும் ஓர் உதவி இயக்குநர் தான்.

    “அவனை நம்பி ஏன் சார் இங்க வந்தீங்க. அவனே வேலை வெட்டி இல்லாம இருக்கான். அவன் எப்படி உங்களுக்கு வில்லன் ரோல் வாங்கி தருவான். ஊருக்கு கிளம்புற வழிய பாருங்க,” என அந்த உதவி இயக்குநர் இருவருக்கும் அறிவுரை சொன்னான்.

    “ஊருல எல்லாருக்கும் சொல்லிட்டு வந்துட்டோம் தம்பி. இப்போ இப்படி ஏமாந்து போய் அவங்க முன்னாடி நிக்கறதை விட சென்னையில சாப்பாடு தண்ணியில்லாம செத்து போயிடலாம். கடன் வேற வாங்கிட்டு வந்துட்டேன். அத எப்படி அடைக்கிறதுன்னு தெரியலை. அந்த பய விகாஸை நேர்ல பார்த்து நாலு அடி போடாம வர மாட்டேன்,” என தனசேகர் சொன்னார். அவர் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்க சங்கிலி தான் அவரை அப்படி பேச செய்தது. தங்க சங்கிலியை அடகு வைத்தார்கள்.

    அவர்கள் தங்கியிருந்த அறையின் உரிமையாளர் வாடகை கேட்டு சண்டை போட்டார். இவர்களே இரண்டு மாத வாடகை பாக்கியை செட்டில் செய்தார்கள். விகாஸை தேடி தினமும் திரிந்தார்கள். அறிவுரை சொன்ன உதவி இயக்குநர், சங்கிலியை அடகு வைத்ததும் வீட்டிற்கு வந்து வாடகை கேட்ட வீட்டு உரிமையாளர் உட்பட எல்லாருமே விகாஸின் நெட்வொர்க் தான் என மிக தாமதமாக புரிபட ஆரம்பித்தது.

    பணம் காலியாவதற்கு முன் ஊருக்குப் போகலாம் என சிவா சொன்னான். மனைவியின் முகத்தில் இந்தத் தோல்வியோடு எப்படி முழிப்பது என்பதால் இன்னும் ஒரு நாள், இன்னும் ஒரு நாள் என தொடர்ந்து சொல்லி கொண்டே தனசேகர் நாட்களைக் கடத்தியபடி முழு பணத்தையும் அங்கேயே காலி செய்தார். இரண்டு நாட்களுக்கு மேல் பசி தாங்க முடியவில்லை. சிவாவின் தூரத்து சொந்தக்கார பையன் ஒருவன் வேளச்சேரியில் ஒரு வியாபாரம் செய்து கொண்டிருக்கிறான். டிக்கட் எடுக்காமல் பஸ்ஸில் பயணம் செய்து அவனிடம் போய் விழுந்தார்கள். அவன் கொடுத்த பணத்தை வைத்து ஊருக்குத் திரும்பினார்கள். உயிரோடு திரும்பியதே அதிர்ஷ்டம் என மகிழ்ந்தார்கள்.

    தனசேகருக்கு கடை சரியாக போகவில்லை. வேறொருவர் கடையில் பரோட்டா மாஸ்டராக இப்போது வேலை செய்கிறார். சிவா அவ்வப்போது சென்னைக்குப் போய் மாதக்கணக்கில் தங்குவான். நடிகனாக வேண்டும் என்கிற ஆசையை விட இப்போது இயக்குநராக வேண்டும் என்கிற ஆசை தான் பலமாக இருக்கிறது. வயித்துக்கு என்ன செய்ய? தனசேகர் மாதிரி சினிமா கனவில் சென்னைக்கு வரும் புது ஆட்கள் தான் இப்போது அவனுக்கு சோறு போடும் உத்தமர்கள். அவர்களை அவன் ஏமாற்றுவதாக நினைக்கவில்லை. தான் இயக்குநரானால் இவர்கள் எல்லாருக்கும் கட்டாயம் வாய்ப்பு கொடுக்க தானே போகிறான்.

    நன்றி:

    ஓவியம் – Matthew Askey

    மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.


  • அவரது பெயர் சீனிவாசன். சீனா என்று சொன்னால் தான் பலருக்கு அவரைத் தெரியும். திரைக்கதை எழுதுவதில் திறமைசாலி. பல நிறுவனங்களில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கபட்டன. முழு திறமையையும் காட்ட வேண்டிய காலகட்டத்தில் திடீரென மனநிலை பிறழ்ந்து பைத்தியமாகி போனார்.

    சீனா வட சென்னையில் ஒரு மனநல காப்பகத்தில் இருந்த போது தான் நான் அவரை முதன்முதலாக சந்தித்தேன். நண்பர்களுடன் வேறொரு பணிக்காக நாங்கள் அந்த மனநல காப்பகத்திற்கு சென்றிருந்தோம். அங்கே போகும் வழியில் நண்பர்கள் சீனாவைப் பற்றி தான் பேசி கொண்டு வந்தார்கள். அதனால் அவர் எப்படியிருப்பார் என்பது பற்றிய என் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

    சென்னைக்கு வெளியே ஒரு கிராமம் போன்ற இடத்தில் அந்த மனநல காப்பகம் இருந்தது. அமைதியான இடம். காப்பகத்திற்கு நிதி வசதி குறைவாக இருந்ததினால் கட்டிடங்களோ அங்கிருந்த வசதிகளோ மிக சுமாராக இருந்தது. ஆண்களுக்கான தனியார் இலவச மனநல காப்பகங்கள் சென்னையில் மிகவும் குறைவு. அந்த வகையில் அந்தக் காப்பகத்தில் வசதிகள் இல்லையெனினும் அது இருப்பதே ஒரு சேவை தான்.

    காப்பகத்திற்குள் நாங்கள் போன போது வெளியிலிருந்து இருவர் உள்ளே நுழைந்தார்கள். ஒருவர் டிப் டாப்பாய் வெள்ளை கறுப்பு உடையில் இருந்தார். இன்னொருவர் லுங்கி சட்டையில் இருந்தார். இருவர் கையிலும் பீடி இருந்தது. டிப் டாப்பாய் இருந்த இளைஞன் அங்கு கவுன்சிலிங் வேலையில் இருப்பவன். லுங்கி சட்டையில் இருந்தவர் தான் சீனா. நாற்பது வயதிருக்கலாம். நல்ல நிறமாய் இருந்தார். ஒரு மூக்கு கண்ணாடி. ஒல்லியாக இருந்தார். படபடக்கும் விழிகளுடன் ஓர் இளைஞனின் உற்சாகத்துடன் இருந்தார்.

    சீனாவை அந்த இளைஞனுக்கு மிகவும் பிடித்து விட்டது போல. மிக உயர்வாய் பேசினான். நாங்கள் காப்பகத்தில் இருந்து கிளம்பும் வரை சீனாவிடம் மனநிலை குன்றியது போன்ற செய்கை எதையுமே நான் பார்க்கவில்லை. கிளம்பும் சமயம் அங்கிருந்த மற்ற நோயாளிகளுக்கு அவர் தனிபட்ட வகையில் எதையோ போதித்து கொண்டிருந்தார். தன்னால் கடவுளைக் காட்ட முடியுமென அவர் அவர்களிடம் சொன்னது என் காதில் விழுந்தது. சீனா தன்னை இந்தக் காப்பகத்தினைத் திருத்த வந்த ஆசிரியராக நினைத்து கொண்டிருப்பதாக அந்த இளைஞன் சொன்னான்.

    மாதங்கள் உருண்டோடின. சீனா மனநிலை சரியாகி விட்டாரென சொன்னார்கள். அப்போது நான் பணிபுரிந்த நிறுவனத்திலே அவருக்கு ஒரு வேலை கொடுத்திருந்தார்கள். அதோடு அவர் மீது இரக்கப்பட்டு அங்கேயே தங்கவும் அனுமதித்திருந்தார்கள். இந்தச் சமயத்தில் தான் சீனா என்னுடன் பழக தொடங்கினார். அவர் தொடர்ந்து தன் கவிதைகளை எனக்கு வாசிக்க கொடுப்பார். இந்த வகையில் எங்கள் நட்பு வளர்ந்தது.

    அந்த காலகட்டத்தில் நான் திருவல்லிகேணி மேன்சனில் தங்கியிருந்தேன். சீனாவும் அங்கு குடிபெயர்ந்து வந்தார். அவருக்கு தனியறை என தனியே வைக்க தான் விரும்பினேன். ஆனால் அவர் எனது மேன்சன் அறையில் தான் தங்கினார். மேன்சனில் மற்றவர்களுக்கு ஒரு தொல்லையாக இருந்து விடக்கூடாதே என்பது தான் என் கவலை. ஆனால் சீனா விரைவிலே மென்சனில் பலருக்கு நெருக்கமாகி விட்டார்.

    அவருடன் பல ஊர்களுக்குப் பயணம் செய்திருக்கிறேன். எந்த இடத்தில் எது சிறப்பு என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. திருத்தணி மலை அடிவாரத்தில் உள்ள ஒரு காளி கோயில், திருவண்ணாமலையில் உள்ள ஒரு பிரபலமாகாத சாமியாரின் மடம், சென்னனயில் வால்மீகி நகர் கடற்கரை, மாம்பலத்தில் உள்ள ஒரு தஞ்சாவூர் மெஸ், திருவொற்றியூரில் உள்ள ஒரு உடுப்பி ஓட்டல் என அவரது கண்டுபிடிப்புகள் ஏராளம். தனது கற்பனை சக்தியைப் பற்றிய கர்வமுடையவர். ஆனால் பாவம் இன்றைய இலக்கிய உலக ஜே.ஜேக்களை அறியாதவராய் இருந்தார். அதனால் அவர் புகழ் பாடும் குழு அவரைச் சுற்றி இல்லை. ஆனால் தொலைக்காட்சி சீரியல் ஆட்கள் அவரைப் பற்றி பேசும் போது அவரது கற்பனை திறனை மிக உயர்வாய் பேசினார்கள்.

    சீனாவிற்குத் திருமணமாகி விவாகரத்தும் ஆகியிருந்தது. குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் இதைப் பற்றி அவர் பேசியதே இல்லை. எங்கள் மேன்சன் காலகட்டத்தில் ஒரு நாள் அவர் தன் மனைவியைச் சந்தித்ததாகவும், குழந்தைகளின் எதிர்காலம் கருதி இருவரும் சில நிபந்தனைகளுடன் சேர்ந்து வாழ போவதாகவும் சொன்னார். சீனா என்கிற திரைக்கதை சுபமான முடிவினை நோக்கி போவதைப் பற்றி அப்போது மிகவும் சந்தோஷப்பட்டேன். ஆனால் என் சந்தோஷம் நிலைக்கவில்லை. மனைவியுடனான அவரது பேச்சு வார்த்தை முறிந்தது. ஏன் என்று அவர் சொல்லவில்லை. மீண்டும் மனநிலை தவறினார்.

    மனநிலை தவறிய ஒரு நண்பருடன் மேன்சனில் வாழ்வது மிகவும் கஷ்டம். என் நண்பர்களின் உதவியுடன் கொஞ்ச காலத்தை ஓட்டினோம். அவர் முன்பிருந்த மனநிலை காப்பகத்தில் அவரை ஏற்று கொள்ள மறுத்து விட்டார்கள். முன்பு அங்கிருந்து யாரிடமும் சொல்லாமல் ஓடி வந்து விட்டார் என்பது தான் காரணம். சென்னையில் இருக்கும் மனநல காப்பகங்களில் எல்லாம் முயற்சித்தோம். ஆண்களுக்கான மனநல காப்பகங்கள் மிக குறைவு. தான் மனநல காப்பகத்திற்குப் போவதில்லை என சீனா உறுதியாய் இருந்தார்.

    சில சமயம் சீனா மாதக்கணக்கில் காணாமல் போவார். பிறகு திரும்ப வருவார். சினிமா, தொலைக்காட்சி நிறுவனங்கள் பலவற்றில் அவருக்கு நண்பர்கள் இருந்தார்கள். அவர்களிடம் பணம் வாங்கி தன் அன்றாட செலவுகளைக் கவனித்து கொண்டார். மனநலம் தவறுகிறவர்கள் தங்களது உள் மன அழுக்குகளை வெளிபடையாக பேசும் அவலம் இருக்கிறது. சீனா தன்னை விட நல்ல எழுத்தாளன் இந்த உலகத்தில் இல்லை என பேசி கொண்டிருப்பார். சில சமயம் கடவுளின் தூதுவன் என்றும், ஒன்றிரண்டு முறை தானே கடவுள் என்றும் பிரகடனம் செய்தார்.

    சீனாவை ஒரு முறை அண்ணா நகரில் உள்ள ஒரு மனநல மருத்துவமனைக்கு நானும் நண்பர்களும் அழைத்து சென்றோம். உள்ளே வந்த சிறிது நேரத்திலே, “நானா இங்கே பைத்தியக்காரன், இந்த மருத்துவர்களை விட எனக்கு உளவியல் அதிகமாய் தெரியும்,” என சண்டை போட்டு விட்டு வெளியே சாலையை நோக்கி ஓடினார். நண்பர்களில் ஒருவர் அவரைத் துரத்தி கொண்டு ஓடினார். மற்றவர்கள் டீக்கடையில் நின்று விட்டோம். எங்கள் பொறுமை எல்லை கடந்து விட்டது. சீனா எங்களுக்கெல்லாம் ஒரு பெரிய சுமையாய் தெரிந்தார்.

    அரை மணி நேரம் கழித்து சீனாவை துரத்தி கொண்டு ஓடிய நண்பர் டீக்கடைக்கு வந்தார்.

    “சீனாவோட அண்ணன் வீடு இங்க தான் பக்கத்துல இருக்கு.” இது எனக்கு புது தகவல். சீனாவின் தாய், அண்ணன், அண்ணி எல்லாரும் ஒரு வசதியான பங்களாவில் அண்ணா நகரில் இருக்கிறார்கள் என நண்பர் சொன்னார்.

    “அப்ப சீனா சேர வேண்டிய இடத்துல சேர்ந்திட்டார்,” என நப்பாசையில் நான் கேட்டேன். நண்பரின் முகத்தில் அவ்விதமான அறிகுறிகள் எதுவுமில்லை.

    “அவங்களுக்குள்ள எதோ பெரிய பிரச்சனையிருக்கு. சீனா நேரா அந்த வீட்டுக்கு தான் போனாரு. வீட்டுல அவங்க அண்ணி தான் இருந்தாங்க. கேட்டை கூட திறக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க.”

    “நாம அவங்க அம்மாக்கிட்ட பேசி பார்ப்போம்,” என்றார் இன்னொரு நண்பர்.

    “ம்கூம். அவங்க அம்மா அங்கிருந்தா இவரைப் பார்த்தவுடன் கதவை சாத்திட்டு உள்ளே போயிருப்பாங்கன்னு அவங்க அண்ணி சொன்னாங்க.”

    “ஏன் அப்படி?” என்று கேட்டேன் நான். நண்பர் முகத்தில் களைப்பு தெரிந்தது.

    “அவங்க சீனாவின் அம்மா பத்தி சொன்னது எனக்கு அது பொய் சொன்ன மாதிரி தெரியலை. இவருக்கு உடம்பு சரியில்ல. நீங்க தானே கவனிக்கணும்னு கேட்டேன். நீங்க ஏன் அத பத்தியெல்லாம் கவலைப்படறீங்க. தெருவில அவரை விட்டுட்டு போங்க. அவருக்கு பிழைச்சுக்க தெரியும்னு சொல்லிட்டு அந்தம்மா கதவை மூடிட்டு உள்ள போயிடுச்சு,” என்றார் நண்பர்.

    “அப்ப சீனா எங்கே?” என்று கேட்டார் இன்னொரு நண்பர்.

    “எங்க போயிட போறாரு? நம்மளைத் தேடி தான் வருவாரு,” என்று நண்பர் சொன்ன போது நான் தூரத்தில் சீனா எங்களை நோக்கி களைப்புடன் நடந்து வருவதைப் பார்த்தேன்.

    மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.


  • மது வாடையடிக்கும் மாலை பொழுதில்
    வானத்தில் பூசப்பட்ட வண்ணங்களை கொண்டு
    கற்பனை செய்கிறேன்
    பல ஓவியங்களை.

    போலீஸ்காரர்களின் பூட்ஸ் ஓலிகள்
    ஓவியத்தை கலைத்து செல்கின்றன.

    எங்கிருந்தோ இருள் உதிப்பதற்குள்
    கலைக்கபட்ட ஓவியங்களை
    நான் சீராக்கி
    வார்த்தைகளுக்குள் சேமிக்க வேண்டும்.

    என் மொழியில் சேமித்தவற்றை
    அவரவர் மொழியில் உண்ணும் போது
    இன்னும் பூக்கலாம்
    உன்னத தருணங்கள்.


  • ஒரு காலத்தில் பாண்டிச்சேரி பேருந்து நிலையம் அருகே உள்ள கண் டாக்டர் தோட்டம் என்கிற பகுதி பாலியல் தொழிலுக்கும் ரவுடித்தனத்திற்கும் பேர் பெற்ற பகுதியாக இருந்தது. இங்கே சில வருடங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். என்னுடன் பணபுரியும் பாண்டிச்சேரி நிருபர் அங்குள்ள மனிதர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். சந்துரு என்ற 20 வயது இளைஞன் எனக்கு அறிமுகமானது இப்படி தான்.

    சந்துருவின் மீது பல அடிதடி வழக்குகள், திருட்டு வழக்கு, ஒரு கொலை முயற்சி வழக்கு என பல வழக்குகள் இருந்தன. அந்தப் பகுதி இளைஞர்கள் பெரும்பாலும் அடியாட்களாய் தான் இருந்தார்கள். சிறு வயதிலிருந்தே இந்தச் சூழலில் வளரும் இளைஞர்கள் மிக சிறிய வயதிலே ரவுடித்தனத்தில் ஈடுபட தொடங்கி விடுகிறார்கள். பாலியல் தொழில் தரகர்களாய் சிறுவர்கள் தான் ஈடுபடுத்தபடுகிறார்கள். பாண்டிச்சேரி பஸ் நிலையத்திலோ அல்லது அருகில் உள்ள பார்களிலோ திரியும் வெளியூர் சபல கேஸ்களைச் சிறுவர்கள் தங்கள் ஏரியாவிற்குப் பேசி அழைத்து செல்கிறார்கள். அங்கே ஆசை வார்த்தைகளுக்கு முரணாக நிஜம் இருப்பதால் இந்தச் சபல கேஸ்கள் சண்டையிட தொடங்கும் போது இளைஞர்கள் உள்ளே நுழைந்து இரண்டு தட்டு தட்டி பிரச்சனையைச் சரி செய்வார்கள். சில சமயம் ஏரியாவிற்குள் வரும் சபல கேஸ்களைக் கண் மண் தெரியாமல் தாக்கி அவர்களது நகை பணத்தைக் கொள்ளையடித்து கொள்வதும் உண்டு. பாதிக்கப்பட்டவர்கள் தங்களது சபல புத்தியை நொந்து கொள்ள தான் முடியுமே தவிர காவல்துறையினரிடம் புகார் கொடுக்க முன் வர மாட்டார்கள். அப்படியே புகார் கொடுத்தாலும் பெரிய நடவடிக்கை எதுவும் எடுக்கபடாது. ஏனெனில் காவலர்கள் இந்த இளைஞர்களிடம் தொடர்ந்து மாமூல் வாங்கி கொண்டு தான் இருந்தார்கள்.

    என்னுடன் இருந்த பாண்டிச்சேரி நிருபர் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்திலும் பணிபுரிந்து கொண்டிருந்தார். கண் டாக்டர் தோட்டத்து மனிதர்களின் வாழ்வை மேம்படுத்த அவரது களப்பணி சிறப்பாக இருந்தது. நான் முதன்முறையாக சந்தித்த போது சந்துரு துருதுருவென சுற்றி கொண்டு இருந்த இளைஞன். அவன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவாகி விட்டதால் ஒரு பயத்துடன் இருந்தான். அவனது நண்பர்கள் அதிக பணத்தைச் சம்பாதிப்பது, அதை ஒரே இரவில் நட்சத்திர ஓட்டலில் சென்று வீணாக்குவது என பகட்டாய் வாழந்த போது சந்துரு பதுங்கி பதுங்கி வாழ்ந்து கொண்டிருந்தான். பாண்டிச்சேரி நண்பர், சந்துரு சரண்டைந்த பிறகு அவனது வழக்கிற்கான உதவியினை செய்வதாக உறுதியளித்து இருந்தார். எல்லாவற்றிற்கும் தலையாட்டிய சந்துரு சரண்டையும் நாளிற்கு முன் அங்கிருந்து காணாமல் போனான்.

    சில மாதங்கள் கழித்து ஒரு நாள், பாண்டிச்சேரி நண்பர் என்னுடன் தொலைபேசியில் பேசும் போது சந்துரு திருந்தி வாழ நினைப்பதாகவும் அவனுடன் உள்ள நண்பர் குழாம் அவனை திருந்த அனுமதிக்கவில்லை என்றும் சொன்னார். அத்துடன் இதைப் பற்றி சந்துரு சென்னைக்கு வந்து எங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முகம் மறைத்து பேட்டி கொடுக்க விரும்புவதாகவும் சொன்னார். அதன்படியே அந்த ஞாயிற்று கிழமை, அலுவலகத்தில் கூட்டம் குறைவாய் இருந்த போது சந்துருவின் பேட்டியைப் பதிவு செய்தோம். கேமராவிற்கு முன் அவனால் பெரிதாய் ஒன்றும் பேச முடியவில்லை. ஆனால் என்னால் வாழ முடியவில்லை, வாழ ஆசையிருக்கிறது என்பதை மட்டும் திரும்ப திரும்ப சொன்னான். அந்தப் பேட்டி பிறகு வேறு காரணங்களால் ஒளிபரப்பாகவில்லை.

    சில மாதங்கள் கழித்து பாண்டிச்சேரி நண்பர் என்னை நேரில் சந்தித்த போது, சந்துரு தற்போது புதிதாய் ஒரு கொலை வழக்கில் தலைமறைவான குற்றவாளியாக இருப்பதாகவும், தனது அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்து விட்டன என வருந்தினார். சந்துரு காவல்துறையினருக்கு மட்டும் பயந்து தலைமறைவாய் வாழ்க்கை நடத்தி கொண்டிருக்கவில்லை. ரௌடிகளுக்குள் தொழில் போட்டி காரணமாக அடிதடி கொலைகள் நடப்பது சாதாரணம் தானே. சந்துருவை குறி வைத்து அவனது பகையாளிகள் காத்திருந்தார்கள். காவல்துறையினர் லிஸ்டில் அவன் தேடப்படும் குற்றவாளி.

    ஒன்றிரண்டு வருடங்கள் கழிந்தன. பாண்டிச்சேரி நிருபர் திடீரென ஓர் இரவு போன் செய்தார். சந்துருவைக் கொலை செஞ்சுட்டாங்க. பாடியை இப்ப தான் மீட்டு போஸ்ட்மார்ட்டத்திற்கு அனுப்பியிருக்காங்க என வருத்தம் மேலிட பேசினார்.

    கல்லூரியில் முதலாமண்டு படிக்கும் மாணவன் போல தான் அவனிருந்தான். நல்லது கெட்டது பற்றிய அறிவு வருகிற வயது அது. ஆனால் அந்த வயதிற்குள் தான் செய்த தவறுகளுக்காக தன் உயிரையும் இழந்து விட்டான்.

    நன்றி:

    ஓவியம் – Pablo Picasso

    மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.


  • நாம் வாழும் பிரபஞ்சம் எப்படி உருவானது? அதற்கு முன் என்ன இருந்தது? தொடக்கத்திற்கு முன் எதாவது இருந்ததா? ஒன்றுமில்லாத நிலையில் இருந்து பிரபஞ்சம் உருவானதா? ஒன்றுமில்லாத நிலை என்று ஒன்றுண்டா? இப்படி பல கேள்விகள் எல்லாருக்கும் உண்டு. இதற்கெல்லாம் அறிவியல் பதில் கண்டு பிடித்து விட்டதா என்றால் இல்லை. ஆனால் இப்படியாக இருக்கலாம் என சில அறிவியல் தத்துவங்கள் உண்டு. அத்தகைய அறிவியல் தத்துவங்களில் சமீப காலத்தில் புது புரட்சி ஒன்று நடந்திருக்கிறது.

    Big Bang

    பூமி சூரியனிலிருந்து உருவானது என்றும், சூரிய குடும்பங்களை போல பல நட்சத்திரங்களை உள்ளடக்கியது galaxy என்றும், இவ்வாறு பல galaxyகளை உள்ளடக்கியதே நாம் வாழும் பிரபஞ்சம் என்றும் அறிவோம். இந்த பிரபஞ்சத்திற்கு 13.7 பில்லியன் வருடங்கள் வயதாகிறது என சொல்கிறார்கள்.

    தொடக்கத்தில் பிரபஞ்சம் மிக சிறியதாக இருந்திருக்க வேண்டும். அங்கே கடும் வெப்பம் நிலவியிருக்க வேண்டும். பிறகு மெல்ல பிரபஞ்சம் விரிய தொடங்குகிறது. அதன் காரணமாய் வெப்பம் குறைய ஆரம்பிக்கிறது. இது தான் பிரபஞ்சத்தின் பிறப்பு என சொல்கிறது big bang தத்துவம். அதாவது பிரபஞ்சம் இன்னும் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. இந்த தத்துவத்தை அனைத்து துறையினரும் ஏற்று கொண்டிருக்கிறார்கள். என்றாலும் நுண் ஆய்வில் இந்த தத்துவத்தை சார்ந்த பல கேள்விகளுக்கு இன்னும் விடை காணப்படவில்லை.

    பிரபஞ்சத்தின் தொடக்கம்

    Big bang தத்துவம் சொல்வது போல யோசித்தால் தொடக்கத்தில் (Big Bang காலகட்டத்திற்கு முன்) ஒன்றுமே இல்லை. இப்போது சமீப ஆய்வாளர்கள் பிரபஞ்சம் பிறப்பிற்கு முன் இன்னொரு பிரபஞ்சம் இருந்திருக்கலாம் என்றும் அந்த பிரபஞ்சத்திலிருந்து நாம் வாழும் பிரபஞ்சம் உருவாகியிருக்கலாம் என்றும் நம்ப தொடங்கியிருக்கிறார்கள். அதாவது ஒரு பிரபஞ்சத்தினுள் மற்றொரு பிரபஞ்சத்தின் பிறப்பு நிலவுகிறது. தாய் பிரபஞ்சம் இறந்த பிறகும் சேய் பிரபஞ்சம் வாழ்கிறது. சேய் பிரபஞ்சம் இறப்பதற்கு முன் அதற்கு ஒரு சேய் பிரபஞ்சம் பிறந்திருக்கும். தொடக்கத்தில் ஒன்றுமில்லை என்பது தவறாக இருக்கலாம் என்பது தான் சமீப ஆய்வுகளின் முடிவு.

    இப்போது கணிப்பொறியில் நீங்கள் இந்த வலைத்தள பக்கத்தை வாசித்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அமர்ந்திருக்கும் அந்த அறையினுள்ளே ஒரு பிரபஞ்சத்தின் பிறப்பு நிகழலாம். மெல்ல அது விரிவடைய தொடங்கி இன்றைய பிரபஞ்சத்தின் அழிவிற்கு பிறகும் நீடிக்கும் புது பிரபஞ்சமாக திகழலாம். இப்படியாக தான் பிரபஞ்சத்தின் தொடக்கம் இருக்க கூடும் என்பதே விஞ்ஞானிகளின் கணிப்பு.

    Big Bang தத்துவத்தை போலவே புதிய ஆய்வுகளும் இறுதியான முடிவுகள் அல்ல என்றாலும் நடப்பில் இருப்பவற்றில் அதிகமாய் நம்ப தகுந்த தத்துவங்களில் ஒன்று.

    காலத்தால் பின்னோக்கி பயணிக்க முடியுமா?

    புது ஆய்வுகளில் இயற்பியலை ஆட்டி படைத்து கொண்டிருக்கும் மற்றொரு சந்தேகத்திற்கான விடையும் அறிய வரலாம். ‘காலம் ஏன் முன்னோக்கி பயணிக்கிறது. பின்னோக்கி பயணிக்க முடியாதா’ என்கிற கேள்வி தான் அது. உடைந்த ஒரு முட்டையை மீண்டும் ஒன்று சேர்க்க முடியாது. நேற்றில் நாம் வாழ முடியாது. ஒரு அம்பு போல காலம் ஏன் முன்னோக்கியே பயணித்து கொண்டிருக்கிறது. இதற்கான விடை விரைவில் நாம் அறிய கூடும்.

    ஆய்வுகளை பற்றிய தகவல்கள்

    கலிபோர்னியாவில் உள்ள ஒரு ஆய்வு கூடத்தில் {the California Institute for Technology (Caltech)} Dr Adrienne Erickcek என்பவர் தலைமையில் உள்ள விஞ்ஞானிகளே புது ஆய்விற்கு வித்திட்டிருக்கிறார்கள்.

    Cosmic microwave background என்பது உமிழபட்ட ஒளி. பல லட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்பு பிரபஞ்சத்தால் உமிழபட்ட ஒளி இன்னும் நமது வெளியில் நாம் காண கிடைக்கிறது. நமது பிரபஞ்சத்திற்கு நான்கு லட்சம் ஆண்டுகள் வயதாக இருந்த போது (இன்றைய வயது 13.7 பில்லியன் ஆண்டுகள்) உமிழ்ந்த ஒளியினை ஆய்வு செய்தே தற்போதைய ஆய்வுகள் தொடங்கியிருக்கின்றன.

    மேலதிக தகவல்களுக்கு இந்த ஆய்வை குறித்த பிபிசி செய்தியை வாசித்து பாருங்கள்.


  • ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பணிபுரிந்த போது எனக்கு கல்யாண் என்னும் மனிதரின் அறிமுகம் கிடைத்தது. கல்யாணிற்கு 35 வயதிருக்கும். சினிமாவில் சின்ன சின்ன ரோல்களில் அவ்வப்போது நடித்து கொண்டிருப்பவர். தவிர ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொருவிதமான வேலை செய்து பிழைத்து கொண்டிருப்பவர்.

    சில வருடங்களுக்கு முன்பு கல்யாணிற்கு ஒரு பெண் மீது காதல் பிறந்தது. அது பிறந்த இடம் தான் கொஞ்சம் வித்தியாசமானது. மும்பையில் நண்பர்களுடன் காப்ரே நடனம் பார்க்க சென்ற கல்யாணிற்கு அங்கு நடனமாடிய ஒரு தமிழ் பெண்ணைப் பார்த்தவுடன் அவள் மீது காதல் பிறந்து விட்டது. அதற்குப் பிறகு வெகு பிரயத்தனப்பட்டு அந்தப் பெண்ணின் அபிமானத்தை பெற்று, அவளது தாயிடம் நற்பெயரைப் பெற்று தன் குடும்பத்தின் எதிர்ப்பிற்கிடையே அந்தப் பெண்ணையே மணந்து கொண்டார்.

    கல்யாணிற்குத் தன்னுடைய திருமணத்திற்குப் பிறகு தான், தன் மனைவி ஏற்கெனவே ஓர் ஆளுடன் வாழ்ந்து கொண்டிருந்த விவரம் தெரிய வந்தது. என்றாலும் திருமணத்திற்குப் பிறகு அது போல எதுவும் நேர கூடாது என மனைவியை எச்சரித்து அவளுடனே வாழ தொடங்கினார். திருமணத்திற்குப் பிறகு காப்ரே நடனம் ஆட மாட்டேன் என சொன்ன மனைவி திருமணத்திற்குப் பிறகும் நடனத்திற்குப் போவதை நிறுத்தவில்லை. தன் குடும்பத்திற்கு உள்ள இரண்டு லட்சம் ரூபாய் கடனை அடைத்துவிட்டு அந்தத் தொழிலில் இருந்து விலகி விடுவதாக சொன்னார். சினிமாவில் ஹீரோவாகி விட வேண்டுமென இருந்த கல்யாணிற்குப் பணத்தின் தேவை அப்போது தான் உறைக்க தொடங்கியது. தன் சினிமா கனவைத் தூக்கியெறிந்து விட்டு ஒரு ஹோட்டலில் வேலை செய்ய தொடங்கினார்.

    கல்யாணின் மனைவிக்குச் சிகரெட், மது என பழக்கமிருந்தது. அத்துடன் அவ்வப்போது மற்ற ஆண்களுடன் அவருக்குத் தொடர்பிருப்பதாக செய்திகள் வர தொடங்கின. இதனால் தினமும் கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவு தொடங்கியது. கல்யாணின் மாமியார் அவரை மோசமாக நடத்தியிருக்கிறார். ஒரு ஹோட்டல் முதலாளிக்கும் தன் மனைவிக்கும் உறவு நீடிப்பதை அறிந்து மனமொடிந்து கல்யாண் மனைவியைப் பிரிந்து தனியே சென்னைக்குத் திரும்பினார்.

    கல்யாண் தன் மனைவியைப் பிரிந்து வந்ததைக் கேள்விப்பட்டு அவரது பெற்றோர் சந்தோஷப்பட்டார்கள். அவர்களது வற்புறுத்தலால் விவாகரத்தும் கோரி பெற்றார். என்றாலும் அவரால் தன் காதலை மறக்க முடியவில்லை. வாழ்க்கையின் மீது பிடிப்பில்லாமல் வாழ்ந்து வந்தார்.

    வருடங்கள் உருண்டோடின. ஒரு நாள் கல்யாணிற்கு அவரது முன்னாள் மனைவியிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இப்போது தான் அவருடைய உண்மையான அன்பினைப் புரிந்து கொண்டதாகவும் உடனே தன்னைப் பார்க்க வரும்படி அவரது முன்னாள் மனைவி அழுகையுடன் பேசினார். கல்யாண் மும்பைக்கு உடனே போனார். அங்கே அவரது மனைவி ஒரு குழந்தையுடன் இருந்தார். விவாகரத்திற்குப் பிறகு வேறொரு ஆணுடன் தனக்கு தொடர்பிருந்ததாகவும் அதன் மூலம் இந்தக் குழந்தை பிறந்ததாகவும் ஆனால் குழந்தை ஊனமாக பிறந்து விட்டதால் அந்த நபர் விலகி விட்டதாகவும் இப்போது பிழைக்க வழியின்றி இருப்பதாகவும் அந்த பெண் சொல்லியிருக்கிறார்.

    கல்யாணிற்கு எப்போதுமே தன் மனைவி மீது அளவுக்கடந்த காதலுண்டு. மீண்டும் திருமணம் செய்து கொண்டு இருவரும் சேர்ந்து வாழ தொடங்கினார்கள். தன் மனைவியின் குழந்தையின் மீது முழுமையாக கவனமெடுத்து கொண்டு கல்யாண் வாழ தொடங்கினார். குடும்பத்தை நடத்த அவரது மனைவி மீண்டும் காப்ரே நடனம் ஆட வேண்டியிருந்தது.

    வறுமையில் நன்றாக இருந்த கணவன் மனைவி உறவு கொஞ்சம் பணம் சேர தொடங்கியதும் பிரச்சனைகளைச் சந்திக்க தொடங்கியது. குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இறந்து போனது. அதோடு கல்யாணின் மாமியார் அவர்களுடன் வாழ வந்தார். கல்யாணின் மனைவி மீண்டும் தினமும் குடித்து விட்டு வர தொடங்கினார். அதோடு மனைவிக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பிருப்பதாக செய்திகள் வர தொடங்கின. மாமியாரின் தொல்லைகளையும் மனைவியின் அலட்சியத்தையும் தாங்க முடியாமல் கல்யாண் மீண்டும் மனமொடிந்து சென்னைக்குத் திரும்பினார்.

    கல்யாண் என்னைப் பார்க்க வந்த போது பல நாள் தாடியுடன் ஒரு மன நோயாளி போல தோற்றத்தில் இருந்தார். தன் மனைவியுடன் தன்னைச் சேர்த்து வைக்க வேண்டுமென கல்யாண் என்னிடம் கேட்டார். அவரது கதையைக் கேட்ட பிறகு நான் அவரிடம் நீங்கள் இவ்வளவு கேவலமாக நடத்தபட்ட பிறகு மீண்டும் அந்தப் பெண்ணுடன் ஏன் சேர்ந்து வாழ ஆசைபடுகிறீர்கள் என கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதிலை என்னால் இன்று வரை மறக்கவே முடியவில்லை.

    “என் ஃபிரெண்ட்ஸ் எல்லாம் இதான் சார் சொல்றாங்க. அவங்க கேக்கறதை என்னால புரிஞ்சுக்கவே முடியல. ஒரு பொண்ணு வந்து அவ புருஷனை இன்னொரு பொண்ணு கவர்ந்துட்டு போயிட்டா அப்படின்னு புகார் சொன்னா எல்லாரும் அந்தப் புகார் சொன்ன பொண்ணுக்குச் சப்போர்ட் பண்ணி பேசுவாங்க, புருஷனோட சேர்ந்து வாழ உதவுவாங்க. என் மனைவியை இன்னொருத்தன் கவர்ந்திட்டு போயிட்டான்னு சொன்னா அவ கூட இனி நீ ஏன் வாழணும்னு கேட்கிறாங்க. அதென்ன ஆம்பிள்ளைன்னா ஒரு நியாயமா? என் பொண்டாட்டி மேல எனக்கு காதல் இருக்க கூடாதா?”

    மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.


  • “எங்களுக்கு எல்லா அரசியல்வாதிகளோட, நடிகர்களோட பிறந்த நாள் நல்லா நினைவிருக்கு. மறக்காம அன்னிக்கு ஏரியாவுல எல்லாருக்கும் சாக்லெட் கொடுத்து கொண்டாடுவோம். ஆனா எங்க பிறந்த நாள் எங்களுக்கு தெரியாது.”இது ஒரு தமிழ் படத்துல கேட்ட வசனம். தமிழக சமூகங்கள் பலவற்றிற்கு பிறந்த நாளை நினைவில் வைத்திருப்பதும் கொண்டாடுவதும் சமீப காலமாக வந்த பழக்கம். இதனால் தான் பள்ளிக்கூடங்களில் முதல்முறையாக தங்கள் மகன், மகள்களை சேர்க்க செல்லும் பெற்றோர் அவர்களது பிறந்த நாளை சொல்ல திணறுகிறார்கள். பள்ளிக்கூடங்களில் இது அடிக்கடி சந்திக்கும் பிரச்சனை என்பதால் இதற்கு ஒரு தீர்வு வைத்திருந்தார்கள். அது தான் கண்ணை மூடியபடி அப்படி அப்பாவியாக வந்து நிற்கும் மாணவர்களுக்கு வயது ஐந்து, பிறந்த நாள் ஜுன் 6 என குறித்து கொள்வது. இந்த தேதியே பள்ளிக்கூட காலண்டருக்கு ஏற்ற பிறந்த நாள்.

    எனக்கு தெரிந்து பலர் இந்த ஜுன் 6-யன்று தங்களது மறந்து போன பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். இது அறியாமையா? அல்லது திணிக்கபட்ட பழக்கமா?

    எனது அம்மாவிற்கும் இன்று தான் பிறந்த நாள்.


  • லீமா அவனுடைய பெயர். மணிப்பூரைச் சேர்ந்தவன். என்னுடன் கல்லூரியில் படித்தவன். ஒரு பெரிய செல்வந்தர் குடும்பம் அவனுடையது. தாய் சிறு வயதிலே இறந்து விட்டாள். தந்தையின் நான்காவது மனைவியின் பெயர் கூட அவனுக்கு நினைவில்லை. மணிப்பூரில் அவனிருந்த பகுதியில் தினமும் கலவரம் நடக்கும் என்பதால் தொலைதூரத்தில் அவனைப் படிக்க அனுப்பியிருக்கிறார் அவனது தந்தை. மற்றொரு காரணம், இவனது அண்ணன் அங்கிருந்த ஒரு தீவிரவாத அமைப்பில் உறுப்பினர். இரண்டாவது மகனையும் அந்த வழியில் இழக்க அவர் விரும்பவில்லை.

    லீமா யாரிடமும் அதிகமாய் பேச மாட்டான். நசுங்கிய மூக்கும் அந்நிய நிறமும் சென்னையில் அவனை இன்னும் அமைதியானவனாய் மாற்றி விட்டது. கல்லூரியில் சேர்ந்த ஓரிரு மாதங்களில் வேறு கல்லூரிகளில் படிக்கும் மணிப்பூரைச் சேர்ந்த மாணவர்கள் அவனுக்கு நட்பானார்கள். அவனைச் சந்திக்க அடிக்கடி வர தொடங்கினார்கள். கஞ்சாவும் சிகரெட்டும் மதுவும் தினசரி பழக்கங்களாயின.

    லீமாவிற்கு போதையின் மீது மிகுந்த ஆர்வமிருந்தது. அவன் வீட்டிலிருந்து மாதமாதம் சிகரெட் பொடியும், சிகரெட் பேப்பரும் பார்சலில் வரும். கஞ்சா தவிர அவன் சில மாத்திரைகளைத் தொடர்ந்து உண்டு வந்தான். முதலில் தனக்கு ஒரு நோய் இருப்பதாக சொல்லி வந்தான். பிறகு அது கர்ப்பிணி பெண்களுக்குப் பிரசவ நேரத்தில் கொடுக்கப்படும் மாத்திரை என சொன்னான். அதனை நார்மலான சமயத்தில் உண்டால் மிகுந்த போதையாக இருக்கும் என சொல்லி கொண்டிருந்தான்.

    லீமா அமைதியானவனாய் இருந்தாலும் அவனுக்கும் ஒரு காதலி இருந்தாள். அவள் மணிப்பூரில் இருப்பதாக சொன்னான். சில காலம் கழித்து அமெரிக்க போனதாக சொன்னான். பிறகு இருவரும் ஒருவருக்கொருவர் தொடர்பே இல்லாமல் பிரிந்து போனதாக சொன்னான்.

    விரைவிலே சிகரெட் பழக்கத்தை விட்டுவிடுவதாக சொல்லி விடும் ஆட்களை பார்த்திருக்கிறேன். போதை பழக்கம் மட்டும் இல்லையெனில் எப்போதோ செத்து போயிருப்பேன் என்று சொன்னான் லீமா. போதை தான் வாழ்க்கை, போதை தவிர தன் வாழ்க்கைக்கு வேறு எதுவும் அர்த்தம் சேர்ப்பதில்லை என பேசினான். கல்லூரி காலம் முடிவதற்கு முன்பே அடிக்கடி அவனுக்கு வலிப்பு வர தொடங்கியது. ஒரு நாள் கல்லூரி பின்புறம் செத்து கிடந்தான்.

    மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.


  • நான் பள்ளியில் இருந்த போது பிரம்பிற்குப் பேர் பெற்ற ஒரு டீச்சரம்மா இருந்தார்கள். அவரைக் கண்டாலே மாணவர்கள் நடுங்குவார்கள். ஐந்தாம் வகுப்பு வரை இருந்த ஒரு கிருஸ்துவ பள்ளி அது. ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் தாம் மூத்தவர்கள். அவர்களின் வகுப்பு ஆசிரியை தான் நம்ம பிரம்பு டீச்சரம்மா.

    நான்காம் வகுப்பில் இருக்கும் போதே அடுத்த வருடம் பிரம்பு டீச்சரம்மாவிடம் பிரம்படி வாங்க வேண்டுமே என எல்லாரும் பயந்து போய் இருந்தோம். தினமும் காலை பள்ளி மைதானத்தில் வெயிலில் முட்டி போடும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள்; ஐந்தாம் வகுப்பு அறையிலிருந்து கேட்கும் அலறல் சத்தங்கள் என தினமும் எங்கள் திகில் அதிகரித்தபடி இருந்தது. அடுத்த வருடம் நான் வேறு பள்ளிக்குப் போய் விடுவேன் என ஒருவருக்கொருவர் சொல்லி எங்களை நாங்களே ஆறுதல்படுத்தி கொள்வோம். ஆனால் எங்களது பெற்றோர்கள் யாரும் எங்களது பயத்தினைப் பொருட்படுத்தவேவில்லை.

    நாங்கள் ஐந்தாம் வகுப்பிற்குப் புலம் பெயரும் நாளும் வந்தது. முதலிரண்டு நாட்கள் அமைதியாக போயின. தடி மாடு முருகேசன் என செல்லமாய் அழைக்கபடும் என் நண்பன் தான் வகுப்பில் தூங்கி பிரம்படியை முதலில் வாங்கினான். பிறகு வகுப்பில் நான்கைந்து மாணவர்கள் குறி வைக்கபட்டார்கள். அவர்கள் அனைவருக்குமே பாடத்தின் மேல் நாட்டமில்லாமல் இருந்தது. ஆனால் வகுப்பினுள் ஆசிரியை நுழையும் போதே அவர்களைத் தான் முதலில் எழுந்திருக்க வைத்து கேள்வி கேட்பார். சில மாதங்களிலே அவர்கள் போர்களத்தில் உணர்விழந்த வீரர்கள் போல பிரம்பினைக் கண்டு மிரளாமல் அடி வாங்கும் அளவு தேர்ச்சி பெற்று விட்டார்கள்.

    பரிதாபத்திற்கு உரிய அந்த நான்கைந்து ஜீவன்கள் தவிர வகுப்பு மாணவர்கள் அனைவரும் அவ்வப்போது பிரம்பிற்கு உணவாகி கொண்டு தான் இருந்தோம். ஒரு முறை மாணவி ஒருத்தியை அவள் செய்த தவறிற்காக வகுப்பறையில் அவளது மேல்சட்டையை கழட்ட வைத்தார். ஒரு முறை வகுப்பு மாணவர்கள் அனைவரையும் மைதானத்தைப் பத்து முறை சுற்றி வர செய்து சிலரை வெயிலில் மயங்கி விழு செய்தார்.

    பிரம்பு டீச்சரம்மாவை பற்றி நான் இரகசியமாக போலீசிற்கு கடிதங்கள் எழுத தொடங்கினேன். ஆனால் என் கடிதங்களை யாரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. கடிதம் எழுதியவரின் பெயர் இல்லை என்பதால் உதாசீனபடுத்தியிருப்பார்கள் என தோன்றியது. டீச்சரே தன்னைப் பற்றி புகார் எழுதுவதாய் கடிதம் எழுதினேன். அந்த ரகசிய கடிதங்களைப் பற்றி அறிந்த மற்றொரு நண்பன் என்னை இதன் காரணமாய் பல காலமாய் பிளாக் மெயில் செய்து கொண்டிருந்தான்.

    ஓரிரவு கனவில் பள்ளி மைதானத்தில் பிரம்பு டீச்சரை ஒரு ராட்சஸ கழுகு தூக்கி கொண்டு போய் விடுவதாக கனவு கண்டேன்.

    ஒரு நாள் தடி மாடு முருகேசன் வீட்டு பாடம் எழுதாமல் வந்திருந்தான். ஆசிரியை கேள்வி கேட்கும் போது அவனது முகத்தில் பிரம்பைப் பற்றிய பயமே இல்லாமல் இருந்தது. அவனை முட்டி போட சொன்னார் ஆசிரியை. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என பிரம்படி தொடர்ந்தது. பல மணி நேரங்களாய் பூசை நடந்தாற் போல ஒரு பிரமை. முருகேசன் டவுசரில் மூத்திரம் போயிருந்தான். அவனது தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வர தொடங்கியிருந்தது. அன்று தான் நாங்கள் பிரம்பு டீச்சரம்மாவை கடைசியாக பார்த்தது.

    சில மாதங்கள் கழித்து, பள்ளி சிஸ்டர்கள் இருவர் பிரம்பு டீச்சரம்மாவை பற்றி பேசி கொண்டிருப்பதை கேட்டேன்.

    “ஒண்ணு நம்ம மாதிரி ஆகியிருக்கணும். இல்ல கல்யாணமாகி செட்டில் ஆகியிருக்கணும். இரண்டும் இல்லாம தெய்வ சேவைன்னு பொய் சொல்லி சுத்தியிட்டிருந்தா. நாப்பது வயசுல வயித்தை ரொப்பிட்டு வந்து இப்படி எல்லார் தலையிலும் இடியை போட்டுட்டாளே.”

    மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.


  • தூரத்தில் காதலியின் உருவம் தோன்றும் போது
    காத்திருத்தலின் சுவை குன்றி,
    கண்களின் தேடுதல் மங்கி
    இரு கால்களிடையே தலையை கொடுத்து
    அழுது கொண்டிருந்தேன் நான்.

    ஆறுதல் வார்த்தைகளோ
    அன்பு அரவணைப்போ எதிர்பார்க்கவில்லை.
    போய் விடு.

    எனக்கான துக்கத்தை
    நான் தான் உண்ண வேண்டும்.