Category: கவிதைகள்

  • இலையுதிர் காலம் போல நீ.
    காற்றில் படபடக்கும் இலைகளாய் தொய்ந்த குரல்.
    கண்களில் குழப்பம்.
    பேச்சில் முணுமுணுப்பின் ஆதிக்கம்.
    சம்பந்தமில்லாத அழுகை.
    புரியாத சிரிப்பு.
    தள்ளாமையை மறைக்க முயலாத வெகுளித்தனம் புதுசு.

    பொங்கிய பழைய நினைவுகள்
    பழுப்பேறிய காகிதங்களாய்.
    கனமாய் இருக்கிறது யதார்த்தம்.

    அந்த நீண்ட பிரிவிற்கு பின்
    நாம் சந்திக்காமலே இருந்திருக்கலாம்.


  • குழந்தையை சுமப்பது போல
    இரு இளம்பெண்கள் தங்கள் மருதாணியிடப்பட்ட கைகளை
    எதன் மீதும் உரசாமல் கவனத்துடன் நடந்து போவதை
    பார்க்கும் போது தான்
    நான் எந்த வீதிக்கு வந்து இருக்கிறேன்
    என்பது உரைக்கிறது.

    அங்கங்களை நகைகளாக மாற்றி கொள்ளும்
    ஆர்வத்தில் மாதுகளுடன் சில இளைஞர்களும்
    அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    என் கரங்களின் மேலிருக்கும்
    கறுப்பு கறையை மறைக்க வேண்டிய
    கட்டாயத்தினை உணரும் போது
    முலைகளின் வாசம் எங்கெங்கும் எழுகிறது.

    மூக்கிலிருந்து பொங்கும் உதிரத்தினை
    மறைக்க ஓட வேண்டும்
    ஏதேனும் பழைய துணியினை தேடி.

    குப்பை தொட்டிகளை காண முடியவில்லை.

    பளபளக்கும் துணிகள்
    கடைகளின் வாசலில் தொங்கியபடி
    அனைவரையும் அணைத்து வரவேற்கிறது.

    என் மூக்கிலிருந்து ரத்தம் கொட்ட கொட்ட
    தூரத்தில் நடனமாடும் துணிகளை நோக்கி ஓடுகிறேன்.

    யாரோ மறித்தார்கள்.
    எங்கோ அடி விழுந்தது.
    கண்கள் இருள்வதற்கு முன்
    உதிரத்தால் ஒப்பனையிடப்பட்ட
    வேறொருத்தியின் முகத்தை காண்கிறேன்.
    அல்ல அது நான் தானா?

    விடைக்கு முன்னால்
    உடல் அடங்கி கொண்டிருக்கிறது.


  • மண் புழுதி தெருவில் பறக்க
    அந்த அக்காவை
    அவர்கள் இழுத்து சென்ற காட்சியை
    அவள் கண்டது ஐந்து வயது சிறுமியாக.

    முப்பது நாற்பது வருடங்கள் உருண்டோடினாலும்
    அந்த மண் புழுதி
    இன்னும் மறையவே இல்லை.
    அதோடு, “இனி நம்ம சாதி பொம்பளைங்க
    சாதி மாறி ஆசை வைக்க கூடாது,” என
    அந்த பெண்ணின் மாமன்
    சாராய வாடையோடு கர்ஜித்ததும்;
    பெருங்குரலெடுத்து அந்த பெண்ணின் தாயார்
    மண்டியிட்டு அழுததும்;
    அடுத்த நாள் சுண்ணாம்பு குழியில்
    கண்டெடுக்கபட்ட
    கருகி போன அந்த அக்காவின் உடலும்
    அவளை துரத்துகின்றன
    ஒவ்வொரு முறையும்
    அவள் காதலர்களை கடக்கும் போதெல்லாம்.


  • பனை மரங்கள் ஆடி ஓய்ந்த
    சூறாவளி நாளுக்கு அடுத்த தினம்.

    இப்போது தான் எல்லையருகே வந்து இருக்கிறேன்.
    சூறாவளியை போர்வையாய் போர்த்தி
    எல்லை தாண்டலாம் என்கிற கனவு
    இனி பலிக்காது.

    துப்பாக்கி ஏந்தி ஒரு காக்கி கூட்டம்
    எறும்பு வரிசையாய் தூரத்தில் தெரிகிறது.

    ஆத்மாக்களை பிழிந்து உருவாக்கிய
    முறுக்கு கம்பிகள்
    இரத்த வாடையுடன் நீளமான கோடு கிழித்து
    காத்து இருக்கின்றன.
    வேலியினூடாக
    மின்சார தெரிப்பு மின்னலாய் நெருப்பினை
    துப்பி துப்பி தயாராகி விட்டன.

    நான் ஓட வேண்டும்.
    அவகாசமில்லை.

    மழை தெளித்த வீட்டின் முகப்பில்
    தவளைகளின் பெருங்குரல்களுக்கு பின்னே
    தன் அழுகையை ஓளித்து வைத்து
    காத்து இருப்பாள் என் மனைவி
    இறந்து போன மகளின் படத்தோடு.


  • வெடி மருந்து ஆறாய் ஓடுகிறது.
    தீக்குச்சிகள் அதில் நனைந்து அணைந்து போகின்றன.
    கரையோரம் பெருங்கூட்டம்.
    அழிவு பெருங்கணத்தை காண வியர்வை வாசத்தை பொருட்படுத்தாது காத்திருக்கிறார்கள்.
    சிலர் கூட்டநெரிசலால் கால் தவறி வெடிமருந்தில் விழுந்து புதைந்து போகிறார்கள்.
    யாரேனும் விழும் போதெல்லாம் ஒரு சாட்டையை விசிறினாற் போல சத்தம்.
    அந்த சத்தம் ஓலிக்கும் போதெல்லாம் தொடங்கும் பெரும் ஆரவாரமும் கேலி சிரிப்பு சத்தமும்.
    முரட்டு யானைகள் போன்ற பெண்கள் கூட்டமொன்றில் அரைபட்டு கரைபக்கம் வந்து கொண்டிருக்கிறேன்.
    இன்றாவது கடைசி நாளாக இருக்க வேண்டும்.


  • இருள் கிழிந்து ஒரு நட்சத்திரம் விழுந்தாற் போல

    விழுந்த விண்கல்லை கண்டு

    அவள் கண் மூடி தனது வேண்டுதலை கடவுளுக்கு சொன்னாள்.

    கண் திறந்த போது இருளில் அது மூழ்கி போயிருந்தது.


  • அன்று ஜன்னல்கள் அடைக்கபட்டிருந்தன.
    இருளை அறையிலிருந்து வெளியே விடாதபடி
    துக்க வெப்பத்தில் மிதந்து கொண்டிருந்தாள் அவள்.

    கடந்த கால காட்சிகளை தள்ள தள்ள
    அவை திரும்ப மேல் எழும்பி பரிகாசம் செய்தன.

    சுற்றி இறைந்து கிடந்த காதல் கடிதங்களில் இருந்து
    உயிரற்ற வார்த்தைகள் உதிர்ந்து கொண்டே இருந்தன
    கண்ணீரை போல.

    ‘இது ஏற்கெனவே ஒத்திகை பார்த்து
    காத்திருந்த தருணம் தான்,’ என உறைத்த போது
    விம்மியெழுந்த அவளது அழுகை
    மலைகளை தாண்டி அவனுக்கு எட்டியது.


  • என் கவிதையின் கதாநாயகி
    இன்று என் கனவில் வந்தாள். 
    என்னை கொல்லும் உக்கிரத்தோடு வந்தவள்
    என்னை கேள்வி கேட்டு நேரத்தை வீண்டிக்க விரும்பவில்லை.
    அழுவதற்கும் அவள் தயாராக இல்லை.
    நான் அணிவித்திருந்த வெள்ளை உடையை துறந்து
    கறுப்பு ஜீன்ஸ் பேண்டில் இருந்தவளை
    முதலில் அடையாளமே தெரியவில்லை.

    என்னை கொல்வதற்கு ஆயுதங்களை கொண்டு வரவில்லை.
    கண்களாலே கொல்ல முடியுமென நினைத்தாள் போலும்.

    எனது குற்றவுணர்வை சொன்னேன்.
    மன்னிப்பை கோரினேன்.
    கருணை காட்ட அவள் தயாராக இல்லை.
    என் வலது கையின் கட்டை விரலை மட்டும்
    கடித்து எடுத்து கொண்டு
    இரத்தம் வழியும் உதட்டில் புன்னகையோடு
    மீண்டும் மறைந்து போனாள்.


  • துப்பாக்கி தோட்டாக்கள் வெடித்து எங்களிடையே நுழைவது
    மெல்லிய கம்பிகள் ஈட்டிகளாய் எறியபடுவது போல தோற்றம்.
    செவி தன் திறனை இழந்து விட்டது.
    கம்பிகள் கால்களை நோக்கி தான் வருகின்றன.
    ஒளியை கிளப்பி போவதும்
    தரையில் பட்டு சிதறுவதும்
    எல்லாரும் கால்களை தூக்கி தப்பிக்க நினைப்பதும்
    யாருடைய இரத்தமோ யார் யாரோ மீதெல்லாம் பரவி கிடப்பதும்…!
    யார் யார் சாக போகிறார்கள்?
    நானில்லை.
    நானில்லை.
    காற்றடித்து ஒதுங்கும் உதிர்ந்த இலைகள் போல
    நான் சாதுரியமாக ஒதுங்கி கொண்டிருக்கிறேன்.
    கண்கள் இருளும் போது தான்
    ஏன் எனக்கு எப்போதும் இப்படி நடக்கிறது என வருந்துகிறேன்.
    ஆனால் வலியே இல்லை.
    இறந்து விட்டேனா?


  • பாதி சொம்பு அரிசி எடுக்க
    அடுக்கி வைத்த மூட்டைகளில்
    மேல் மூட்டையை பிரிக்கவும்
    கொட்டி விழுந்து தரையில் பரவிய அரிசி போல்
    ஒரு நினைவு கோர்த்து இழுத்து வருகிறது பலவற்றை.