மரத்தில் கட்டப்பட்ட திருடன்

மரத்தில் கட்டப்பட்ட திருடன்

பெரிய தூங்குமூஞ்சி மரம்.
கவனித்து பார்த்தால் தான் தெரியும்
மரத்தில் திருடன் ஒருவன்
கட்டப்பட்டு இருப்பது.

மரத்தின் நிறமாய்
மாறி விட்டன
கயிறும்
திருடனும்.

பெருத்த மிருகம்
தின்று
சோர்ந்து
தூங்குவது போல்
உறங்குகிறது
மரம்.

கண்கள் மூடியிருக்கிறான்
திருடன்.

வலியில்லை,
உணர்வில்லை,
உணர்ச்சியுமில்லை,
மரத்தோடு மரமாய்.

தரையில் இருந்து
மரத்திற்குச் செல்லும்
எறும்புகள்
அவன் மேல்
ஊர்ந்து கடக்கின்றன.

மேகங்கள் வேகமாய் நகர்கின்றன.
சூரியனின் கண்கள்
அவனை உற்று பார்த்தபடி.

அணில் ஒன்று
அவன் கால் மேல் ஏறி
கற்களைத் தாவி
எங்கோ ஓடிற்று.

பரிதாபத்தோடு
ஒரு வயதான மூதாட்டி
அவன் மேல் ஊற்றிய நீர்
மரத்தினை உலுக்கிற்று.

மரம் விழித்தது.
கிளைகள் விம்மி சரிந்தன.
பறவைகள்
பயந்து
மரத்திலிருந்து
இறக்கைகள் படபடக்க
காற்றில் குதித்தன.
பதற்றத்தோடு
நெஞ்சு பிசையும் பயத்தோடு
மரம்
ஊளையிட்டது
அமைதியாக.