Tag: பயம்

  • மின்சாரம் இல்லை
    வழக்கம் போல.

    காற்றே இல்லாதது போலிருக்கிறது
    இந்த அடுக்குமாடி குடியிருப்பிற்குள்.

    ஆங்காங்கே பேட்டரி விளக்குகள்
    மங்கலாய் எரிந்தபடி.

    நிழல்கள் நீண்டு
    இருளைத் தொட்டு
    படர்ந்திருக்கின்றன.

    வேர்வையில் முழுக்க நனைந்து
    நடந்து கொண்டிருக்கிறேன்.
    இரு புறமும் கதவுகள் தோன்றி தோன்றி மறைகின்றன.

    சிவந்த கதவுகள்
    பேட்டரி விளக்கு வெளிச்சத்தைச்
    சிகப்பாக்குகின்றன.

    அச்செந்நிற ஒளி
    இருளில் கலக்கும் சமயம்
    உதிரமாய் வண்ணம் கொள்கிறது.

    மாடிப் படிகளில் ஏறி ஒவ்வொரு தளமாய் செல்கிறேன்.
    பெரும்பாலும் ஓசைகளே இல்லை.

    நான் பார்த்து இதுவரை
    ஒரு கதவு கூட திறந்திருந்ததில்லை.

    சில கதவுகளுக்குப் பின்னால்
    யாரோ விசும்பும் சத்தம் கேட்கும்.
    அல்லது அது பூனையின் ஒலியா?

    ஒரு கதவிற்குப் பின்னால்
    காதலர்களின் சண்டை சத்தம்.

    பிறகு நானே ஒவ்வொரு கதவிற்கும்
    ஒரு சத்தமிருப்பதாய் கற்பனைச் செய்து கொண்டேன்.

    விருப்பம் போல ஒவ்வொரு கதவின் பின்னாலும்
    ஒவ்வொரு சத்தத்தினைக் கேட்க தொடங்கினேன்.

    மற்றப்படி
    பெரும்பாலும் ஓசைகளே இல்லை.

    ஓர் இளம் யுவதி தற்கொலைச் செய்து கொள்வதற்கு முன்
    தனிமையில்
    விசும்புகிற ஒலியினைக் கேட்டேன்
    ஒரு கதவிற்கு அருகே.…மேலும் வாசிக்க


  • பெரிய தூங்குமூஞ்சி மரம்.
    கவனித்து பார்த்தால் தான் தெரியும்
    மரத்தில் திருடன் ஒருவன்
    கட்டப்பட்டு இருப்பது.

    மரத்தின் நிறமாய்
    மாறி விட்டன
    கயிறும்
    திருடனும்.

    பெருத்த மிருகம்
    தின்று
    சோர்ந்து
    தூங்குவது போல்
    உறங்குகிறது
    மரம்.

    கண்கள் மூடியிருக்கிறான்
    திருடன்.

    வலியில்லை,
    உணர்வில்லை,
    உணர்ச்சியுமில்லை,
    மரத்தோடு மரமாய்.

    தரையில் இருந்து
    மரத்திற்குச் செல்லும்
    எறும்புகள்
    அவன் மேல்
    ஊர்ந்து கடக்கின்றன.

    மேகங்கள் வேகமாய் நகர்கின்றன.
    சூரியனின் கண்கள்
    அவனை உற்று பார்த்தபடி.

    அணில் ஒன்று
    அவன் கால் மேல் ஏறி
    கற்களைத் தாவி
    எங்கோ ஓடிற்று.

    பரிதாபத்தோடு
    ஒரு வயதான மூதாட்டி
    அவன் மேல் ஊற்றிய நீர்
    மரத்தினை உலுக்கிற்று.

    மரம் விழித்தது.
    கிளைகள் விம்மி சரிந்தன.
    பறவைகள்
    பயந்து
    மரத்திலிருந்து
    இறக்கைகள் படபடக்க
    காற்றில் குதித்தன.
    பதற்றத்தோடு
    நெஞ்சு பிசையும் பயத்தோடு
    மரம்
    ஊளையிட்டது
    அமைதியாக.


  • இலைகளின் சலசலப்பு போல
    சில பேச்சரவம்.
    மற்றப்படி
    நிரம்பி நின்றிருக்கும் நீர்நிலைப் போல
    பேரமைதி.

    எங்கோ உருப்பெற்று வழிந்தோடி
    கரைந்து போகிறது
    எதோவொரு வாகனத்தின் ஒலி.

    ஜன்னலுக்கு வெளியே
    நிரம்பி கொண்டிருக்கிறது
    மஞ்சள் வெயில்.

    விட்டெறிந்த கல்லாய்
    எல்லாவற்றையும் கலைத்து அழுகிறது
    பள்ளிக்கூட மணி.

    காலடிச்சப்தங்களுக்காக
    துழாவுகிறது
    செவிப் புலன்.

    உருக தொடங்கி
    வளைகிறது பெஞ்ச்.


  •     – 01 –

    பெல்ட் உயரும் போது
    அது
    நரியின் வால்.
    தயாராகும் போது
    அது
    பயந்து உறைந்து
    அடுத்த நகர்தலில் தீண்டுவதற்குத் தயாராகும்
    பாம்பு.

    காற்றிலே ஓர் இசை.
    என்னை தொடும் போது
    அது ஓர் ஒலி.
    பிறகு நரம்புகள் விழித்தெழும் வலி.
    உடலெங்கும் கதவுகள் திறக்கும்.
    ஒரு கணம்
    கண்கள் இருண்டு
    பிறகு விழிக்கும் போது
    நெருப்பு ஜுவாலை ஒன்று
    உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை
    பரவி சென்றிருக்கும்.
    சிந்தனைகள் இல்லாது
    உடலும் மனமும்
    ஒருங்கே
    வலியில் திளைக்கும்.

        – 02 –

    ஒரே ஓர் பெல்ட் அடி
    என்னை
    அடி பணிய வைத்து விடும்.
    ஆனாலும்
    எனக்கு
    நான்கைந்து கொடுத்தால் ஒழிய
    உன்னால் நிறுத்த முடியாது.

    இங்கே
    அடி வாங்கும் நான் முக்கியமல்ல
    உனக்கு.
    உன் செய்கையே முக்கியம்.

    சுருண்டுப் பிறகு அதிவேகமாய் அது
    காற்றைக் கிழித்து கொண்டு
    விஸ்வரூபம் எடுக்கும் சமயம்
    உன் முகத்தில்
    ஒரு பைக்கை ஓட்டும் திருப்தி.…மேலும் வாசிக்க