பெல்ட்

பெல்ட்

    – 01 –

பெல்ட் உயரும் போது
அது
நரியின் வால்.
தயாராகும் போது
அது
பயந்து உறைந்து
அடுத்த நகர்தலில் தீண்டுவதற்குத் தயாராகும்
பாம்பு.

காற்றிலே ஓர் இசை.
என்னை தொடும் போது
அது ஓர் ஒலி.
பிறகு நரம்புகள் விழித்தெழும் வலி.
உடலெங்கும் கதவுகள் திறக்கும்.
ஒரு கணம்
கண்கள் இருண்டு
பிறகு விழிக்கும் போது
நெருப்பு ஜுவாலை ஒன்று
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை
பரவி சென்றிருக்கும்.
சிந்தனைகள் இல்லாது
உடலும் மனமும்
ஒருங்கே
வலியில் திளைக்கும்.

    – 02 –

ஒரே ஓர் பெல்ட் அடி
என்னை
அடி பணிய வைத்து விடும்.
ஆனாலும்
எனக்கு
நான்கைந்து கொடுத்தால் ஒழிய
உன்னால் நிறுத்த முடியாது.

இங்கே
அடி வாங்கும் நான் முக்கியமல்ல
உனக்கு.
உன் செய்கையே முக்கியம்.

சுருண்டுப் பிறகு அதிவேகமாய் அது
காற்றைக் கிழித்து கொண்டு
விஸ்வரூபம் எடுக்கும் சமயம்
உன் முகத்தில்
ஒரு பைக்கை ஓட்டும் திருப்தி.
பேச்சில் வென்ற கர்வம்.
புது செல்போனை முழுமையாய் புரிந்து கொண்ட சிரிப்பு.

அதனாலே
பிறகுத்
துணி அணிவதற்குக்
கையை உயர்த்தும் போது கூட
அதே அதிகார பாசாங்கு.

    – 03 –

ஒவ்வொரு முறை பெல்ட்
என்னை அடித்து விட்டு போகும் போதும்
தரையோடு தரையாய் பரவி
அது முடியும் வரை
என்னை மறந்து
வலியில் மூழ்கி கிடப்பேன்.

நீ நகர்ந்த பின்னே
என்னைப் பார்த்து பரிதாபப்படுவாயென
அசட்டு காத்திருப்பு வேறு
அந்தச் சில நொடிகளில்.

    – 04 –

அது ஒரு கறுப்பு பெல்ட்.
பளபளவென இருக்கும்.
சிறு வயதில் தோட்டத்தில் கண்ட
கருநாகத்தை நினைவுப்படுத்தும்.
ஒரு தேளின் கொடுக்கினைப் போல
திமிரானது.

இந்த லெதரை
எந்த மாட்டிலிருந்து உருவாக்கியிருப்பார்கள்?
பசுக்களைத் துரத்தும் காளை?
நடக்கும் தடமெல்லாம்
விந்து சொட்டு சொட்டாய் சிந்தியபடி
செல்லும் காளை?

பெல்ட் பக்கிள் வெண்மையாய் சிரிக்கிறது.
என் முகத்தைப் பிரதிபலிக்கிறது.

    – 05 –

உன்னை நான் ஏன் அடிக்க வேண்டும்?
இல்லையெனில்
உன் முட்டாள்தனம்
இந்தத் தருணத்தை
தரையில் ஊற்றிய நீராக்கி விடும்.

ஓட தெரியாத குதிரையினை
பழக்கி பழக்கி
நாட்களை நகர்த்தி கொண்டு இருக்கிறேன் நான்.

வலி என்பது
நீ
இந்தப் பாடத்திற்காக செலுத்தும் கட்டணம்.
உன் வலி
எனக்கு அதிகார போதை.
அது எனக்கு நீ தரும் குரு தட்சணை.

நன்றி: படங்கள் www.freeimages.com -இல் Victor Maasilamani-யால் பதிக்கப்பட்ட படம்.