வலியே
வலியை மறக்க வைக்குமளவு
அடிபட்டு
உள்ளெல்லாம் சிதைந்து
நாளெல்லாம்
மரணத்தை வேண்டி நிற்கும்
சமயத்தில் கூட
நம்பிக்கை
எங்கோ
சிறு துகளாக
இருந்தபடியே தான் இருக்கிறது.
Year: 2012
-
-
பிரபஞ்சம் நானே
காற்றில் சலசலக்கும் மரம்
சலசலப்பை உண்டாக்குகிறது
என்னுள்.
இலைகளின் மீட்டலை
உணர்கிறேன்
நரம்புகளில்.
காம்புகள் வளைவது
சப்திக்கிறது
என் எலும்புகள் ஊடாக.
எறும்புகளின் காலடிகளை
முதுகில் சுமக்கிறேன்.
சருகுகளை
ஆனந்தமாய்
உதிர்க்கிறேன்.
கவிழ்ந்த பூக்களின்
மகரந்தங்களோடு
காற்றில்
பரவுகிறது எனது விந்தணுக்களும்.
இது வெறுமையை உணர்ந்த கணம்;
கடவுளைக் கண்ட கணம்;
என் ஆதியை மீள்தொட்ட கணம்.
பிரபஞ்சம் நானே!
-
ரா வெக்கை
இரவு விளக்கு
சுவரெல்லாம் ஊர்ந்து
புது புது ஓவியங்களைத்
தீட்டி காட்டுகிறது.
உருவாகும் ஓவியங்கள் உருக்குலையும் முன்னே
என் நினைவலையில்
இருந்து
எதோ ஒரு சரடினை
இழுத்து
அறையெங்கும் தவழ விட்டு செல்கிறது.புகை மண்டிய பிறகு
கணவனின் குறட்டை மட்டுமே
எனது படுக்கையறையை நிரப்பி இருக்கிறது.
-

கண்ணாடி ரசமெல்லாம் வழிந்தோடி விட்டது
நீங்கள் மேற்கொண்ட எதோ ஒரு தொலைதூர பிரயாணத்தில்
சந்தேக வியாதி உங்களைத் தொற்றி கொண்டது.
உடலை உருக்கி விட்டதென சொல்கிறார்கள் எல்லாரும்.
நடை தள்ளாடுகிறது.
மயங்கி விழுகிறீர்கள் ஒருநாள்.மருத்துவமனையில் டாக்டர்கள் எல்லாரும் வேலையாக இருக்கிறார்கள்.
உடலெங்கும் விஷம் பரவி விட்டதென சொல்லி செல்கிறாள்
ஒரு நர்ஸ்.
பிழைக்க முடியுமென நம்புகிறீர்கள்.
எளிய காரியத்தைக் கடினமாக்கும் மருத்துவமனை மீது கோபம்.
உங்களை முக்கியமற்றவனாய் பார்க்கும் மருத்துவர்கள் மீது
அதிருப்தி.
சாவிற்கான முன்னேற்பாடுகளைக் கவனிக்க தொடங்குகிறார்கள்
உங்கள் சொந்தங்கள்.
பிழைத்து காட்டினால் தான்
இவர்களுக்குப் புரியும்.
உங்களது தலைமுடியாய் நீவி நீவி பார்க்கிறீர்கள்
ஒவ்வொன்றாய்.
எங்கே அது ஒளிந்து இருக்கிறது?
கண்ணாடி ரசம் வழியும் வரை
தேடல் தொடர்கிறது.நீண்ட நேரத்திற்குப் பிறகு
ஓர் இளம் டாக்டர் உங்களை நோக்கி வருகிறான்.
மேலோட்டமாக சோதித்து
உதடுகளைப் பிதுக்கி
தலையை ஆட்டி விட்டு விலகுகிறான்.பிழைத்து காட்டினால் தான் இவர்களுக்குப் புரியும்.
இந்த நோய் உங்களைக் கொன்று விடுமென நீங்கள் நம்பவே இல்லை.… …மேலும் வாசிக்க
-
உன் கண்களில் தெரியும் என் பிம்பம்
என்னைச் சந்திக்கும் கண்களில்
எல்லாம் தேடுகிறேன் எனது பிம்பத்தை.
அக்கண்களின்
ஓர் அலட்சிய சுழிப்போ
துள்ளலோ
அமைதியோ
பதட்டமோ
எனக்கான இடம் என்ன என்பதைச் சொல்கிறது.
ஒரு வினாடி தான் எனினும்
அக்கண்கள் சொன்ன வார்த்தைகளை
உருட்டி கொண்டே இருக்கிறேன்
அது என்னை விட பெரிதாகும் வரை.
பெரிதான பின்பு
அது ஆயிரம் புனைவுகளை
தன்னுள் வைத்து இருக்கிறது.
ஒவ்வொரு புனைவும்
சுகம் துக்கம் பயம் காமம் சலிப்பு என
எவ்வளவோ உணர்வுகளைப் பொழிகிறது.
ஒவ்வொரு உணர்விலும்
பித்தன் போல
திளைக்கிறேன்
என்னைக் கடந்து போகும் நிழல்களை உணராமல்.
-
பழுதாகிப் போன தண்ணீர் குழாய்
நம் வீடோ
அன்னிய இடமோ
பழுதாகிப் போன தண்ணீர் குழாய்
எப்போதும் பதட்டத்தை ஏற்படுத்துகிறது.
நினைவிற்கு வருகின்றன
சிறுசிறு சண்டைகளும்
அப்படியான சண்டைகளால்
என்றோ விட்டு போன உறவுகளும்.
தண்ணீர் குழாயைத்
திருகி திருகி சரி செய்ய பார்க்கிறேன்
என் பலங்கொண்ட மட்டும்.
-
ஒவ்வொரு கொலைக்கும் காரணம் வேண்டும்
உனது கழுத்தினை அழுத்தி
நீ மூச்சு திணறி
இறந்து போவதைப் பார்க்க போகிறேன்.உன்னோடு எப்போதும் இருக்கும்
அந்தச் சுகந்தம்
நீ இறந்த பிறகு எவ்வளவு நிமிடங்கள் நீடிக்கும்?தேகத்தில் தேன் ஊற்றினாற் போல் இருக்கும்
அந்த ஜொலிப்பு
விளக்கு அணைவது போல் சட்டென அணையுமா?குத்திட்ட கண்களைப் பார்ப்பதில்
இனி தயக்கமோ குற்றவுணர்வோ இருக்க போவதில்லை.
உதடுகளைக் கவ்வினாலும்
தடுக்க முடியாது உன்னால்.இத்தனை வெறுப்பிற்கும் பெருங்காரணம்
ஒன்று நிச்சயம் இருக்க வேண்டும்.
அப்படி ஒரு காரணத்தைத் தேடி கொண்டு இருக்கிறேன்.
அது வரை உயிரோடு இருந்து விட்டு போ!
-
ஹம் சத்தம்
சாலை விளக்குகளும்
எதிர் வரும் வாகனங்களின் விளக்குகளும்
கலந்து இணைந்த பிறகும்
தொடர்கிறது பயணம்.நிற்காமல் ஓடும் தார் சாலையும்
ஹம் சத்தமும்
வாகனத்தை இயக்குகின்றன.கண்கள் விழித்திருக்க
கனவுகள் தார் மணத்தோடு
புகையுருவில்
நடனமாடுகின்றன.எதோ துக்கம் இருக்கிறது.
அது பயணத்தின் முடிவில் காத்திருக்கிறது.
அது என்ன என்பது இப்போது நினைவில் இல்லை.
ஹம் சத்தத்தோடு
வெறுமை தரும் சோகம் இப்போதைக்குப் போதுமானது.
-

மனிதர்கள் – பைக்கில் பிரசவ வலியோடு
தெய்வாணை அந்தப் பெண்ணின் பெயர். பிரசவ வலியோடு மலைக்கிராமத்தில் இருந்து தொட்டில் கட்டி கீழே கொண்டு வரப்பட்டு இரண்டு ஆண்களுக்கு இடையில் பைக்கில் அமர்ந்து பயணித்து மருத்துவமனைக்குச் சென்றடைந்த தெய்வாணையின் கதை கேட்பவர்களைப் பதற வைக்கும்.
அவருக்கு இருபது வயதிருக்கும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கடம குட்டை என்கிற மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர். அந்த மலைக் கிராமத்திற்குச் சாலை வசதி கிடையாது. கிட்ட தட்ட ஒன்றரை மணி நேரம் மலை மீது நடந்து தான் அங்குச் சென்றடைய முடியும். மின்சாரமும் கிடையாது. அரசு தண்ணீர் தொட்டி கட்டி தந்தார்கள். என்றாலும் மலைக் கிராமத்து பெண்களின் பகல் நேரத்தின் பெரும்பொழுது தண்ணீரைச் சுமந்து வருவதிலே கழிந்து விடுகிறது. அரிசி எல்லாம் பணக்கார சாப்பாடு அவர்களுக்கு. கூழும் களியும் தான் உணவு.
கடம குட்டை போல முப்பதிற்கும் மேற்பட்ட கிராமங்கள் இப்படி அல்லல்படுகின்றன. நாகரீக உலகத்தின் சௌகரியங்கள் அனைத்தும் மறுக்கப் பட்டவர்கள் இவர்கள். யாராவது உடல்நிலை சரியில்லாமல் போனால் அவர்களைத் தொட்டிலில் கட்டி மற்றவர்கள் மலையில் இருந்து கீழே கொண்டு போய் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டிய நிலை.… …மேலும் வாசிக்க
-

சாதியை ஒழிப்பது எப்படி? – அம்பேத்கர்
சாதி உட்பிரிவுகளை முதலில் ஒழிக்க வேண்டும்
சாதிகளுக்கு இடையே நிறைய ஏற்ற தாழ்வுகளும் வேறுபாடுகளும் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலான சாதி உட்பிரிவுகளுக்கு இடையே ஏற்ற தாழ்வுகள் அதிகமில்லை. அதனால் முதலில் சாதி உட்பிரிவுகளை ஒழிப்பது தான் சரியான அணுகுமுறையாக இருக்கும் என ஒரு தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் இது சரியான அணுகுமுறை அல்ல. வட இந்தியாவிலோ அல்லது மத்திய இந்தியாவிலோ இருக்கும் பிராமணர்களை விட தென் இந்தியாவில் இருக்கும் பிராமணர்கள் சமூகத்தில் தாங்கள் உயர்ந்த இடத்தில் இருப்பதாக சொல்லி கொள்கிறார்கள். வட இந்தியாவில் இருக்கும் பிராமணர்கள் அல்லாத வைசியர்களும் கையாஸ்தாஸும் தான் தென்னிந்திய பிராமணர்களின் அந்தஸ்தில் இருப்பவர்கள் என்று சொல்ல முடியும். அது போலவே தென்னிந்தியாவில் இருக்கும் பிராமணர்கள் சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர்கள். ஆனால் காஷ்மீரிலோ பெங்காலிலோ பிராமணர்கள் அசைவ உணவினைச் சாப்பிடுகிறார்கள். குஜராத்தியர்கள், மார்வாடிகள், பனியாக்கள், ஜெயின் மக்கள் இவர்கள் தான் சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள். சாதி உட்பிரிவுகளிலே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.… …மேலும் வாசிக்க
