மனிதர்கள் – முசுடு கிழவி

ராஜேஷ்வரியம்மாளை யாரோ கொன்றுவிட்டார்கள். இரவு நேரம் ஆளில்லாத சமயம் அவரைக் கழுத்து நெரித்துக் கொன்று, வீட்டிலிருந்து நகைகளையும் பணத்தையும் திருடிச் சென்றிருப்பார்கள் என்று போலீஸ் சந்தேகப்படுகிறது. குடித்தனங்கள் இருக்கிற வீட்டில் புதிதாய் ஓர் ஆள் உள்ளே நுழைந்திருக்க வாய்ப்பில்லை என்றும், இது யாரோ தெரிந்தவர்கள் செய்த வேலை என்கிற ஒரு கோணத்திலும் விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது.

ராஜேஷ்வரியம்மாளுக்கு அறுபத்தி ஐந்து வயதிற்கு மேலிருக்கும். எப்போதும் டல்லான ஒற்றை கலர் பழைய சேலை தான் அணிந்திருப்பார். நெற்றியில் பட்டையாய் விபூதி இருக்கும். கணவர் இறந்ததில் இருந்து குங்குமம் கிடையாது. பல்செட் அணிந்திருப்பதால் வயது பெரிதாய் தெரியாது. தெருவில் அவரை எல்லாரும் முசுடு கிழவி என்று தான் அழைப்பார்கள். ஆனால் அதை அவருக்கு முன்னால் அந்த பேரைச் சொல்ல யாருக்கும் தைரியம் கிடையாது. எல்லாரிடமும் வள் வள் என விழுவது தான் அவரது ஸ்டைல்.

சென்னையின் ஒரு பிரதான இடத்தில் நெருக்கடியான கட்டிடங்கள் மிகுந்த ஒரு வீதியில் அவருக்கு சொந்தமான ஒரு பெரிய கட்டிடம் இருந்தது. அந்த கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் ஒரு பெரிய வீட்டில் ராஜேஷ்வரியம்மாள் குடியிருந்தார். முதல் தளத்திலும் கீழேயும் அதே கட்டிடத்தை சின்ன சின்ன வீடுகளாய் பிரித்து பதினொரு வீடுகளை வாடகைக்கு விட்டு இருந்தார். பதினொரு வீடுகளுக்கும் இவர் தான் ராணி. சர்வதிகாரி என்று கூட சொல்லலாம். இரவு எத்தனை மணிக்கு விளக்கு அணைக்கபட வேண்டும் என்பதில் தொடங்கி டீவி ஆடியோ அளவு எது வரை அனுமதி என்பது வரை, விருந்தினர்கள் வந்தால் எத்தனை மணிக்கு கிளம்பி விட வேண்டும் என்று எக்கசக்க விதிமுறைகள் உண்டு.

ராஜேஷ்வரியம்மாள் குடியிருப்பிற்கு புதிதாய் குடி வருபவர்கள் ஆறு மாதங்கள் கூட தாங்குவது கஷ்டம் தான். ஒன்று அவர்களாகவே முசுடு கிழவியின் தொல்லை தாங்காமல் வேறு வீடு பார்த்து போய் விடுவார்கள். அல்லது முசுடு கிழவியே ஒரு நாள் நேராய், “யப்பா உங்க கூட என்னால தினமும் அல்லாடிட்டு இருக்க முடியாது. அடுத்த மாசத்துக்குள்ள வேற வீடு பார்த்துட்டு போயிடுங்க,” என்று முகத்தில் அறைந்தாற் போல சொல்லி விடுவார். அரிதாக ஒரு சில குடும்பங்கள் இந்த தொல்லையைத் தாங்கி கொண்டு வருடக்கணக்கில் அங்கேயே குடியிருப்பதும் உண்டு. அப்படி குடியிருப்பவர்களுக்கு இந்த விதிமுறைகள் எல்லாம் மனப்பாடம் செய்தாற் போல் தெரியும். இவற்றோடே வாழ பழகி விட்டவர்கள் அவர்கள்.

தெருவில் இருப்பவர்கள் எல்லாருக்கும் ராஜேஷ்வரியம்மாளை நன்றாக தெரியும். அவரைப் பற்றிய பேச்சு தான் அடிக்கடி ஓடிக் கொண்டு இருக்கும். சர்வதிகாரியாய் ஆட்சி செய்யும் ராஜேஷ்வரியம்மாள் ஒரு தனிக் கட்டை.

‘சொந்தங்களை எல்லாம் துரத்தி விட்டுட்டுச்சு,’ என்று இந்த தெருவிலே பல ஆண்டுகளாய் குடியிருப்பவர்கள் சொல்வார்கள். பல வருடங்களுக்கு முன்பே அவரது கணவர் இறந்து போய் விட்டார். குழந்தைகள் கிடையாது. கணவரின் தம்பிகள் இவரை ஏமாற்றி கட்டிடத்தை எழுதி வாங்க நினைத்ததினால் ஒருநாள் ருத்ர தாண்டவமாடி எல்லாரையும் துரத்தி விட்டாராம். பல வருடங்களுக்கு முன்னால் தூரத்து சொந்தக்காரர் பையன் ஒருவனை தத்து எடுத்து வளர்த்து வந்தார். அவனோ பனிரெண்டு வயதிலே எல்லா கெட்ட பழக்கங்களும் கற்று கொண்டு ரௌடி பசங்களோடு சுற்றி கொண்டு இருந்தான். ஒரு நாள் காணாமல் போனான். அவனாக ஓடி போனானா அல்லது கிழவி துரத்தி அனுப்பி விட்டாரா என்பது யாருக்கும் தெரியாது. கணவர்வழி சொந்தக்காரர்கள் யாராவது எப்போதாவது வருவார்கள். எல்லாரையும் கதவிற்கு வெளியிலே நிற்க வைத்து பேசி அனுப்புவார். ஒரு வேலைக்கார அம்மா மற்றும் ஓர் அட்டோ டிரைவருக்கும் மட்டும் தான் வீட்டிற்குள் அனுமதி. ராஜேஷ்வரியம்மாளுக்கு சொந்தமாக ஓர் ஆட்டோ உண்டு. அது பெரும்பாலான சமயம் எங்கும் ஓடாமல் வீட்டு காம்பவுண்டிற்குள்ளே தான் முடங்கி கிடக்கும். ஆட்டோ டிரைவரையும் ராஜேஷ்வரியம்மாளை சேர்த்து வைத்து கிண்டலடிப்பதும் டீக்கடைக்களில் சில சமயம் நடக்கும்.

வீட்டில் குடியிருக்கும் யாராவது ஒருவருக்கு அல்லது தெருவில் இருப்பவர்களுக்கு சம்பந்தமே இல்லாமல் கஷ்டக் காலத்தில் தானாகவே அஜராகி, “உன் புருஷன்கிட்ட சொல்லாத,” என்று பணத்தை கொடுப்பதும் உண்டு. யாராவது அவரிடம் கடன் கேட்டு போனால், அரை மணி நேரத்திற்கு மேலாக அர்ச்சனையும் அறிவுரையும் பிறகு வட்டியுடன் கடன் என்கிற நிர்பந்தத்துடன் உதவியும் கிடைக்கும். குடிப் பழக்கம் இருக்கிறவர்களுக்கு கடன் கிடையாது. அதோடு முக்கியமாக வாடகைக்கு வீடு கிடைக்காது. வாடகைக்கு குடியிருக்கும் பெண்கள், தங்கள் வீட்டில் கணவர் இல்லாத சமயங்களில் வேறு ஆண்களை உள்ளே அனுமதிக்க கூடாது. அது அப்பாவோ சகோதரனாகவோ இருந்தாலும் அதை முன்னரே ராஜேஷ்வரியிடம் சொல்லி விட வேண்டும். இருக்கும் விதிமுறைகளிலே இந்த ‘வேற்று ஆண்கள்’ விதிமுறை தான் மிகவும் முக்கியமானது. யாராவது ஒரு பெண் இதை கடைபிடிக்க தவறினாலும் அந்த குடும்பம் ஒரு மாதத்தில் காலி செய்து போக வேண்டியது தான். அப்பீலே கிடையாது.

ஞாயிற்று கிழமைகளில் ராஜேஷ்வரியம்மாள் தனியாகவோ அல்லது ஆட்டோ டிரைவருடன் தன் ஆட்டோவிலோ வெளியில் போவார். எங்கே போகிறார் என்று யாருக்கும் தெரியாது. ஆட்டோ டிரைவரும் சரி, அவரது வீட்டிற்கு வந்து போகும் வேலைக்கார அம்மாளும் சரி அந்த ஏரியாவை சேர்ந்தவர்கள் கிடையாது. அது போல அவர்கள் அவசியமில்லாமல் அந்த தெருவாசிகளிடம் ஒரு வார்த்தை அதிகம் பேசி பார்த்து இருக்க முடியாது.

போஸ்ட்மார்ட்டம் முடிந்து ஒரு வெள்ளைத்துணியால் சுற்றபட்டு ராஜேஷ்வரியம்மாளின் உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அவரது கணவரின் தம்பிமார்கள் குடும்பங்களுடன் வந்திருந்தார்கள். தெருவாசிகள் சிலர் அழுதார்கள். சொந்தக்காரர்கள் இந்த வீட்டை எப்படி பாகம் பிரிப்பது என தங்களுக்குள்ளாக சண்டையை தொடங்கி விட்டார்கள். ரெண்டு போலீஸ் கான்ஸ்டபிள்கள் ஓர் ஓரமாய் அமர்ந்து வருகிறவர்கள் யார், ராஜேஷ்வரியம்மாளுக்கு இவர் என்ன வகையில் சொந்தம் என்று குறிப்பு எழுதி கொண்டு இருந்தார்கள்.

யாரும் எதிர்பாராத வகையில் ஆட்டோ டிரைவர் ஒரு வக்கீலை அங்கு கூட்டி கொண்டு வந்தார்.

“அந்தம்மா எல்லாத்தையும் தெளிவா உயில் எழுதி வைச்சுட்டு போயிருக்கு. உங்க பேரைச் சொல்லுங்க, உங்களுக்கு எதாவது எழுதி வைச்சிருக்கான்னு நான் சொல்றேன்,” என்று சொந்தக்காரர்களிடம் சொன்னார் அந்த வக்கீல். அங்கு கூடியிருந்த உறவுகள் அத்தனை முகத்திலும் அப்போது தான் சோகத்தினை பார்க்க முடிந்தது.

“எங்க அண்ணன் பேருல இந்த சொத்து இருக்கு. இந்தம்மா இருக்கிற வரைக்கும் இத அனுபவிச்சுட்டு போகட்டும்னு விட்டுட்டு இருந்தோம். இப்ப இது நியாயபடி எங்களுக்கு சொந்தம். உயிலாவது மயிராவது,” என்று சத்தமாய் பேசினார் ஒரு கிழவர். ஆனால் அவருடைய அண்ணன் உயிருடன் இருந்த போதே சொத்து ராஜேஷ்வரி பெயரில் தான் இருந்தது என்பது அவருக்கு தெரியும். இருந்தும் சும்மா கத்தி பார்த்தார். பிறகு வேட்டியை சரியாக கட்டி கொண்டு விடுவிடுவென அங்கிருந்து கிளம்பி விட்டார்.

“மோசமான கிழவி தான். போகற காலத்துலேயும் யாருக்கும் உருப்படியா ஒத்தாசை செய்ய தோணாம போயிருக்கு பாரு.” உறவு பல மாதிரி திட்டி தீர்த்தது.

அடுத்து உயிலின் விவரம் இன்னும் சுவாரஸ்யமானது. எல்லாரும் ஆசைப்பட்ட அவரது வீட்டை அவரது சாதி சங்கத்திற்கு எழுதி வைத்திருந்தார் ராஜேஷ்வரியம்மாள். யாரும் எதிர்பாராத அளவு மிகப் பெரிய பணம் அவரது வங்கி கணக்கில் இருந்தது. தன்னுடைய வங்கி கணக்கில் இருக்கிற பணத்தை கிட்டத்தட்ட 78 பேருக்கு பிரித்து உயில் எழுதியிருக்கிறார். சிலர் இருபது ஆண்டுகளுக்கு முன்பு அங்கு குடியிருந்தவர்கள். பெரும்பாலானோர் எதோ ஒரு காலக்கட்டத்தில் கிழவியிடம் நல்ல பேர் வாங்கியவர்கள்.

“இவங்க எல்லாம் எங்க இருப்பாங்கன்னு இப்ப யாருக்குமே தெரியாது,” என்று ஒரு சொந்தக்காரர் ஆச்சரியப்பட்டார். ஆனால் வக்கீலிடம் தொடர்ந்து இவர்களது முகவரியை அப்டேட் செய்து தான் இருந்திருக்கிறார் ராஜேஷ்வரியம்மாள். இரண்டாயிரத்தில் தொடங்கி அதிகப்பட்சமாக இரண்டு லட்சம் வரை நபர்களுக்கு வங்கி கணக்கில் இருந்த பணம் சரியாக பிரித்து கொடுக்கபட்டு இருந்தது. உறவுக்காரர்கள் பெயர் ஒன்று கூட கிடையாது. பெரும்பாலானோர் வாடகைக்கு குடி இருந்தவர்கள். இரண்டு லட்சம் கொடுக்கபட வேண்டிய லட்சுமி என்கிற பெண், பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு பதினைந்து வயது சிறுமியாக இருந்த போது இரண்டு ஆண்டுகள் இங்கு தனது தாய் தந்தையுடன் குடி இருந்தவர். வக்கீல் தரப்பில் இருந்து அவருக்கு போன் செய்த போது அவருக்கு ராஜேஷ்வரியம்மாள் யார் என்கிற நினைவு வருவதற்கே சில நிமிடங்கள் ஆனது.

மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.


Comments
One response to “மனிதர்கள் – முசுடு கிழவி”
  1. Absolutely first rate and coeorp-bpttomed, gentlemen!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.