ராஜகுமாரியும் ஏழு தவளைகளும்

இளமையின் ஒளி சூழ பிரகாசிக்கிறாள் ராஜகுமாரி.
கண்களில் பரிவும் அன்பும்.
உதடுகளில் பூக்கிறது காமம்.

இரவு வானத்தில் தோன்ற போகிறது
அந்த அரிய ஒளிக்கீற்று.
உலகின் கடைசி தருணங்களை
கணத்திற்கு கணம்
மெதுவாக நகர்த்திட துடித்திடுவது போலொரு முத்தம்.

நீரின் சிலிர்ப்பை மறந்து
ஆவலாய் காத்திருக்கின்றன
ஒன்றை போலவே இருக்கும் அந்த ஏழு தவளைகளும்.
கல்லாக மாறி போயிருக்கின்றன அந்த காத்திருத்தல்.

எங்கோ கல் ஒன்று
சரிந்தோடி பள்ளத்தில் இருக்கும் நீரில் விழுந்து
அமைதியை குலைக்கிறது.
வானம் இருளினை விழுங்கி தயாராகிறது.