வெக்கையுறவு

வெக்கையுறவு

ஒவ்வொரு முறையும்
ஒரே மாதிரி தான் நிகழ்கிறது.

அவனிடமிருந்து விலகி
நான் முதலில் தேடுவது
துண்டைத் தான்.
எப்போதும்
கைக்கெட்டும் தூரத்தில் எடுத்து வைக்க வேண்டும் என
நினைத்தாலும்
அது பிறகு மீண்டும் நிகழும் வரை
நினைவிற்கு வருவதேயில்லை.

காமம் வழிந்தோடிய பிறகான
நிர்வாணம் மிகவும் அசௌகரியமானது.

என் பின்னே அவனது பார்வையை உணர்ந்தபடி
குளியலறைக்கு ஓடுவேன்.
பிறகு இருவரும் அவசர அவசரமாய்
துணிகளை தரையிலிருந்து தேடி எடுப்போம்.

அறை வெக்கை மிகுந்ததாய் மாறியிருக்கும்.
வெளியே சாலையில்
வாகனங்களின் ஹாரன் சத்தம் அதிகரித்திருக்கும்.
இவ்வளவு துணிகளா என ஆயாசத்தோடு
உடைகளை இருவரும் அணிந்து கொண்டிருக்கும் தருணத்தில்
படுக்கை உருகி
என் கால் இடையே ஓடி
கரைந்து போவதை வருத்தத்தோடு பார்த்து விட்டு
மீண்டும் உடைகளை அவசரமாய் அணிந்து கொண்டிருப்பேன்.