Category: தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்

  • ஒவ்வொரு முறையும்
    ஒரே மாதிரி தான் நிகழ்கிறது.

    அவனிடமிருந்து விலகி
    நான் முதலில் தேடுவது
    துண்டைத் தான்.
    எப்போதும்
    கைக்கெட்டும் தூரத்தில் எடுத்து வைக்க வேண்டும் என
    நினைத்தாலும்
    அது பிறகு மீண்டும் நிகழும் வரை
    நினைவிற்கு வருவதேயில்லை.

    காமம் வழிந்தோடிய பிறகான
    நிர்வாணம் மிகவும் அசௌகரியமானது.

    என் பின்னே அவனது பார்வையை உணர்ந்தபடி
    குளியலறைக்கு ஓடுவேன்.
    பிறகு இருவரும் அவசர அவசரமாய்
    துணிகளை தரையிலிருந்து தேடி எடுப்போம்.

    அறை வெக்கை மிகுந்ததாய் மாறியிருக்கும்.
    வெளியே சாலையில்
    வாகனங்களின் ஹாரன் சத்தம் அதிகரித்திருக்கும்.
    இவ்வளவு துணிகளா என ஆயாசத்தோடு
    உடைகளை இருவரும் அணிந்து கொண்டிருக்கும் தருணத்தில்
    படுக்கை உருகி
    என் கால் இடையே ஓடி
    கரைந்து போவதை வருத்தத்தோடு பார்த்து விட்டு
    மீண்டும் உடைகளை அவசரமாய் அணிந்து கொண்டிருப்பேன்.


  • சற்று முன்பு எனது வார்த்தைகளை திருடிச் சென்றவன்

    இதோ இந்த நகரின் ஏதோ ஓர் இருள்சந்தினுள்

    அதனை திறந்து பார்ப்பான்.

     

    எதை எடுத்து கொள்வான், எதை எறிந்து செல்வான் என தெரியவில்லை.

    திருடியவன் தன் வழியில் எங்காவது எதாவது கொட்டி இருக்கிறானா என

    என் பாட்டி பாதை எங்கும் தேட போய் விட்டாள்.

    மௌனத்தை வாயில் மென்றவாறு சலித்து கொள்கிறேன் நான்.


  • பக்கத்தில் படுத்திருக்கும் பெண்
    யாரென தெரியவில்லை.
    இருளை அகற்ற சுவிட்ச்
    எங்கிருக்கிறது என புரியவில்லை.
    இது என் வீடுமில்லை.
    இங்கு இதற்கு முன் வந்ததாய்
    ஞாபகமும் இல்லை. 

    என் துணிகளை தேடி
    தரையில் கைகளால் துளாவிய போது
    மீண்டும் வந்தது
    மண்டைக்குள் அந்த நெளியும் புழு.

    கண்கள் இருட்டின.
    காதிலிருந்து இரத்தம் வழிந்தது.
    அந்த புழு பெருத்து கொண்டு இருக்கிறது.
    உடலெங்கும் வலி வியாபித்தது.
    விஷ முற்கள் கடகடவென
    உடலெங்கும் முளைக்க தொடங்குகின்றன.

    முதுகு தண்டினில்
    மற்றொரு புழு இப்போது நகர தொடங்குகிறது.
    தரையில் படுத்து துடிக்கிறேன்.
    எழுந்து நின்றால் சற்று வலி குறையும் என
    எழுந்து நிற்கிறேன்.

    எதையும் அறியாமல் நிர்வாணமாய்
    தூங்கி கொண்டிருக்கும் அந்த பெண் யார் என
    இப்போதும் புலப்படவில்லை.

    காற்று தான் வலியை கொண்டு வருகிறதா?
    ஜன்னலில் எட்டி பார்த்தேன்.
    நான் நிற்பது கட்டாயம்
    பத்து அல்லது பதினைந்தாவது மாடியாவது இருக்கும்.
    இது கட்டாயம் என்னுடைய நகரமல்ல.…மேலும் வாசிக்க


  • கோலி குண்டுகளாய் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள்
    உருண்டோடும் பரந்த நகரத்து சாலை.
    எப்போதும் போல  இப்போதும் டிராபிக் ஜாம்.

    இந்த முறை காரணம் ஒரு கிழவி.
    பொறுமையில்லாமல் ஹாரண் ஓலி அலறுகிறது.
    சாலையை கடக்க வந்த கிழவி சாலையிலே அமர்ந்து விட்டாள்.
    பல பேர் கத்தி கொண்டிருக்கிறார்கள்.

    பைத்தியமா அவள்?

    சாலையில் என்னவோ செய்து கொண்டிருக்கிறாள்.
    அவளருகே அறுந்து போன மஞ்சள் பை.
    சாலையில் பையிலிருந்து கொட்டிய அரிசி.
    வசையொலி கூடியபடி இருக்கிறது.
    அரிசியை அள்ளி மீண்டும் பையினுள் திணித்து விடும்
    முனைப்பில் இருக்கிறாள் கிழவி.


  • மேகங்கள் திடீரென ஒரு நாள்
    வேகமாய் நகர தொடங்கி இருப்பதை கவனித்தேன்.

    ஆற்றுத்தண்ணீர் போல
    அந்த தண்ணீரில் கொப்பளிக்கும் நுரைகள் போல
    போர் விமானங்கள் போல
    சோகங்கள் போல
    ஓவியத்தின் மீது ஊற்றபட்ட தண்ணீர் போல
    மேகங்களின் அபரித வேகத்தை கண்டு
    எனக்கு பயமாக இருந்தது.

    தினமும் காலையில் கண் விழித்தவுடன்
    இன்றாவது மேகங்களின் போராட்டம்
    முடிவிற்கு வந்து விட்டதா என்கிற
    ஆர்வத்துடன் வீட்டிற்கு வெளியே வந்து
    பார்க்க தொடங்கினேன்.

    ஆனால்
    முடிவே இல்லாத நீண்ட கனவாக
    அது மாறி கொண்டிருந்தது.

    அப்போது தான் அது நடந்தது…