சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கிறது கடவுளின் செல்போன்


கறுப்பு எறும்புகள்.
முனைந்து கோலம் போடும் பெண்ணைப் போல
சுவற்றில் வரிசை கட்டி கொண்டிருக்கின்றன.
எறும்புகளைப் பார்ப்பதும்
பிறகு
அலுவலக வெள்ளைப் பலகையை பார்ப்பதுமாய் இருக்கிறேன்.
இன்று எனது கணவரின் பிறந்த நாள்.
இன்றாவது சீக்கிரம் போக வேண்டுமென நினைத்திருந்த போது தான்
வழக்கம் போல ஒரு குழப்பம்.

அவசரம்! எமர்ஜென்சி!

அலுவலக வெள்ளைப் பலகையை
எறும்புகள் மொய்த்திருப்பது போல இருக்கின்றன
அதில் எழுதப்பட்டிருக்கும்
என்னுடைய வேலைகள் மற்றும் கடமைகள்.

கடவுள் இன்றும் லேட் தான்.
வந்தவர் மதியத்திற்கு மேல்
எங்கு போனார் என்று தெரியவில்லை.
செல்போன் சுவிட்ச் ஆப் செய்யபட்டிருக்கிறது.
மிக அவசரமாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

கணவரிடம் என்ன பொய் சொல்வது என குழம்பியபடி அமர்ந்திருக்கிறேன்.
இன்னும் நானூறு வருடங்கள் உழைத்தாலும் கூட
இந்த மாத டார்க்கெட்டை
என்னால் சாதிக்க முடியுமா என்று தெரியவில்லை.

முதுகு வலி!

நான் அமர்ந்திருக்கும் பத்தாவது மாடி அறையின்
ஜன்னலுக்கு வெளியே
ரோஜா செடிகள் போல
ஒரு பிரம்மாண்ட மரத்தின் உச்சி தெரிகிறது.
அதன் மேல் அமர்ந்திருக்கிறது
என்னை விட பெரிதான ஒரு பருந்து.
இவ்வளவு உயரத்தில் இதை இங்கு பார்ப்பேன் என
நான் எதிர்பாரக்கவில்லை.

ம்கூம்! இந்த பாழாய் போன முதுகு வலி!
இந்த வாரமாவது ஒரு டாக்டரை போய் பார்க்க வேண்டும்.
இதை குறித்துக் கொள்ள வேண்டும் என
கம்ப்யூட்டர் நோக்கி திரும்பிய போது
இன்னும் படிக்கபடாத நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள்
என்னை பயமுறுத்துகின்றன.

பத்து நாட்கள் லீவு எடுத்தால் தான் மீண்டும் உயிர் பெற முடியும்.

ம்கூம்! இந்த கடவுள் எங்கே போனார்?
சுவற்றில் இருந்து வெள்ளைப் பலகையை நோக்கி
இன்னும் நிறைய எறும்புகள் நகர தொடங்கி விட்டன.

எனது செல் போனில் அடுத்து வர வேண்டிய அழைப்பு
ஒன்று எனது கணவராக இருக்க வேண்டும்
இல்லையெனில்
கடவுளாக இருக்க வேண்டும்.
மீண்டுமொரு கோபக்கார வாடிக்கையாளரிடம்
பேசும் சக்தி எனக்கில்லை.