ஆர்மி கேம்பில் இருந்து மூன்றாவது தெருவில் எனது வீடு

அவர்களில் பெரும்பாலனோருக்கு
என்னுடைய மகன் வயது தான் இருக்கும்.
அரும்பு மீசை,
பள்ளிக்கூடத்து சிரிப்பு,
கண்களுக்குள் ஒளிந்திருக்கும் குறும்புத்தனம்,
தூக்கமில்லாத கண்கள் மற்றும்
இனம் புரியா கோபம்.
அவர்களுக்குள் ஒரு சிறுவன் ஒளிந்திருக்கிறான்.

அன்றொரு நாள் கனவில்
இவர்களை நானே பிரசவித்ததாய் உணர்ந்தேன்.
எதிரி கொடி பறக்கும் ஆர்மி கேப்பில்
அவ்வபோது எழும் ஆரவாரத்தில்
என்றோ இறந்து போன எனது மகனின் குரலும் சேர்ந்தே
எனக்கு கேட்கிறது.
எனது ஜன்னலில் இருந்து தெருவில் கடந்து போகும்
ஒவ்வொரு சிறுவனின் முகத்தையும்
உற்று நோக்கியபடி கழிகின்றன எனது பகற்பொழுதுகள்.
அந்த பேய் நிற பழுப்பு யூனிபார்மினை கழற்றி எறிந்தபிறகு
அவர்களது வலிமையான தோள்களில் சாய்ந்து கொள்ள துடிக்கும்
எனது மனம்.

நாய் குட்டியை வருடுவது போல
அந்த துப்பாக்கி எமனை வருடியபடி இருப்பார்கள்.
மீசையை முறுக்குவது போல
அவ்வபோது அதை தோளில் சுமப்பதும்
பிறகு கழட்டுவதுமாக இருப்பார்கள்.
அந்த பூட்ஸ் காலில் ஒட்டியிருக்கும் மணல்
எங்கிருந்தெல்லாம் வந்திருக்கும் என யோசித்திருப்பேன்.

ஒவ்வொரு இரவும்
அவர்களது இராட்சஷ வாகனங்கள்
எனது கிராமங்களில் இருந்து திரும்பி வரும் போது
அவற்றின் சக்கரங்களில்
இரத்தக்கறை இல்லாமல் இருப்பதில்லை.

நடுநிசியில் இரத்தம் சொட்ட சொட்ட
தங்களில் ஒருவனை அவர்கள் சுமந்து வரும் போது
எனது மகனை நினைத்து பெருங்குரலெடுத்து
எனது அறைக்குள் தனிமையில் அழுவேன்.
எனது மகன்களுக்காக அழுவேன்.