காந்தி வேண்டாம்! அகிம்சை வேண்டும்!

வன்முறை என்பது மனிதனோடு உடன் பிறந்ததாய் இருக்கிறது, பயத்தை போலவே.

துணிச்சல் மிகுந்தவனிடம் ஒளிந்து இருக்கிறது அபரிதமான பயம். பயந்தவனாய் வாழ்பவனிடமும் பதுங்கி இருக்கிறது அளவிற்கு அதிகமான வன்மம்.

காட்டில் வாழும் மிருகங்களில் எது வாழ தகுதியுடையவையோ அவை வாழ்கின்றன. மற்றவை காணாமல் போகின்றன. அந்த மிருகங்களில் ஒருவன் மனிதன். அவனுடைய இரத்தத்தில் அந்த வனத்தின் நெடி இன்னும் இருக்கிறது.

மிருகங்கள் வாழும் காட்டிற்கும் மனிதர்கள் வாழும் நகரங்களுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால் அடிப்படை நியதி இன்னும் அதே தான். தன்னில் வலியது பிழைக்கும். ஒரு சிறு திருத்தம். இங்கே வலிமை என்பது உடல் வலிமை மட்டுமல்ல.

காந்தி ஹிட்லருக்கு எதிராக அகிம்சை போராட்டம் நடத்தி இருந்தால் ஜெயித்து இருப்பாரா? காந்திக்கு முன்பு அகிம்சை போராட்டங்களே கிடையாதா? ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்ட முடியுமா? அப்படி காட்டியவர்கள் தான் எத்தனை பேர்?

உடலெங்கும் இரணங்களும், ஈக்கள் மொய்க்கும் புண்களும், சீழ் வழியும் உடலை தொட்டு சேவை செய்தவர் அன்னை தெரசா. ஆனால் அவரை போலவே இருந்து விட முடியுமா எல்லாராலும்?

ஆசையே அத்தனை துயரங்களுக்கும் காரணம் என்று சொன்னார் புத்தர். எவ்வளவு பேரால் ஆசையை துறந்து விட முடிந்திருக்கிறது?

உலகத்தில் உள்ள மதங்களும், கொள்கைகளும் புனிதங்களை நோக்கி, perfection-யை நோக்கி நகர்கின்றன. அந்த வண்ணத்தை தன் மீது பூசி கொண்டால், தான் சுமக்கும் குற்றவுணர்வு என்னும் சிலுவையின் எடை குறையும் என கூட்டம் வருகிறது.

புனிதங்கள் ஆராதிக்கதக்கவை. புனிதங்கள் கேட்க சந்தோஷமளிப்பவை. புனிதங்கள் நம் மீதான பாவங்களை கழுவும். ஆனால் யதார்த்தம் புனிதத்தை நோக்கிய மனதையும், பாவங்களின் சேற்றில் குளிக்க விரும்பும் உடலையும் கொண்டது.

காந்தி பற்றிய விமர்சனங்களையும் அவரது கொள்கை பற்றிய கேள்விகளையும் மறப்போம். புனிதம் பற்றி கனவு காண்பவர்கள் நம் சமூகத்திற்கு எப்போதும் தேவை என்பதே யதார்த்தம்.

நமக்கு காந்தி வேண்டாம். அகிம்சையாவது கிட்டுமா?


Comments
One response to “காந்தி வேண்டாம்! அகிம்சை வேண்டும்!”
  1. காந்தி வேண்டாம்! அகிம்சை வேண்டும்!…

    வன்முறை என்பது மனிதனோடு உடன் பிறந்ததாய் இருக்கிறது, பயத்தை போலவே. துணிச்சல் மிகுந்தவனிடம் ஒளிந்து இருக்கிறது அபரிதமான பயம். பயந்தவனாய் வாழ்பவனிடமும் பதுங்கி இருக்கிறது அளவிற்கு அதிகமான வன்மம். காட்டில் வாழும் மிருகங்களில் எது வாழ தகுதியுடையவையோ அவை வாழ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.