உன்னை போலவே ஒருவன்

இரட்டை பிறவி என எவரும் உங்களிருவரையும் நினைத்திட முடியும்.
ஆனால் நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் முதன்முறையாக சந்தித்தே
ஐந்து நிமிடங்கள் தாம் கடந்திருக்கும் என எவரும் யூகித்துவிட முடியாது.

அங்கங்களையும் ஒற்றுமைகளையும் அலசும் உங்கள் கண்களில்
ஆச்சரிய ரேகைகள் வற்றியவுடன்
எழுவது கோபமும் எரிச்சலுமாக இருக்கிறது.

அமைதியை தவிர வேறு வார்த்தைகளில்லை உங்கள் இருவருக்கும் மத்தியில்.

இவ்வளவு காலம் இது கனவு அல்லவா?
பலிக்க கூடாதென ஒவ்வொரு காலையிலும் நினைத்த கனவல்லவா பலித்து விட்டது.

இப்போது இருவரில் யார் பலியாக போகிறீர்கள்?
கனவா? கனவு கண்டவனா?