Tag: கவிதை

  • இரவு விளக்கு
    சுவரெல்லாம் ஊர்ந்து
    புது புது ஓவியங்களைத்
    தீட்டி காட்டுகிறது.
    உருவாகும் ஓவியங்கள் உருக்குலையும் முன்னே
    என் நினைவலையில்
    இருந்து
    எதோ ஒரு சரடினை
    இழுத்து
    அறையெங்கும் தவழ விட்டு செல்கிறது.

    புகை மண்டிய பிறகு
    கணவனின் குறட்டை மட்டுமே
    எனது படுக்கையறையை நிரப்பி இருக்கிறது.


  • நீங்கள் மேற்கொண்ட எதோ ஒரு தொலைதூர பிரயாணத்தில்
    சந்தேக வியாதி உங்களைத் தொற்றி கொண்டது.
    உடலை உருக்கி விட்டதென சொல்கிறார்கள் எல்லாரும்.
    நடை தள்ளாடுகிறது.
    மயங்கி விழுகிறீர்கள் ஒருநாள்.

    மருத்துவமனையில் டாக்டர்கள் எல்லாரும் வேலையாக இருக்கிறார்கள்.
    உடலெங்கும் விஷம் பரவி விட்டதென சொல்லி செல்கிறாள்
    ஒரு நர்ஸ்.
    பிழைக்க முடியுமென நம்புகிறீர்கள்.
    எளிய காரியத்தைக் கடினமாக்கும் மருத்துவமனை மீது கோபம்.
    உங்களை முக்கியமற்றவனாய் பார்க்கும் மருத்துவர்கள் மீது
    அதிருப்தி.
    சாவிற்கான முன்னேற்பாடுகளைக் கவனிக்க தொடங்குகிறார்கள்
    உங்கள் சொந்தங்கள்.
    பிழைத்து காட்டினால் தான்
    இவர்களுக்குப் புரியும்.
    உங்களது தலைமுடியாய் நீவி நீவி பார்க்கிறீர்கள்
    ஒவ்வொன்றாய்.
    எங்கே அது ஒளிந்து இருக்கிறது?
    கண்ணாடி ரசம் வழியும் வரை
    தேடல் தொடர்கிறது.

    நீண்ட நேரத்திற்குப் பிறகு
    ஓர் இளம் டாக்டர் உங்களை நோக்கி வருகிறான்.
    மேலோட்டமாக சோதித்து
    உதடுகளைப் பிதுக்கி
    தலையை ஆட்டி விட்டு விலகுகிறான்.

    பிழைத்து காட்டினால் தான் இவர்களுக்குப் புரியும்.
    இந்த நோய் உங்களைக் கொன்று விடுமென நீங்கள் நம்பவே இல்லை.…மேலும் வாசிக்க


  • என்னைச் சந்திக்கும் கண்களில்
    எல்லாம் தேடுகிறேன் எனது பிம்பத்தை.
    அக்கண்களின்
    ஓர் அலட்சிய சுழிப்போ
    துள்ளலோ
    அமைதியோ
    பதட்டமோ
    எனக்கான இடம் என்ன என்பதைச் சொல்கிறது.
    ஒரு வினாடி தான் எனினும்
    அக்கண்கள் சொன்ன வார்த்தைகளை
    உருட்டி கொண்டே இருக்கிறேன்
    அது என்னை விட பெரிதாகும் வரை.
    பெரிதான பின்பு
    அது ஆயிரம் புனைவுகளை
    தன்னுள் வைத்து இருக்கிறது.
    ஒவ்வொரு புனைவும்
    சுகம் துக்கம் பயம் காமம் சலிப்பு என
    எவ்வளவோ உணர்வுகளைப் பொழிகிறது.
    ஒவ்வொரு உணர்விலும்
    பித்தன் போல
    திளைக்கிறேன்
    என்னைக் கடந்து போகும் நிழல்களை உணராமல்.


  • நம் வீடோ
    அன்னிய இடமோ
    பழுதாகிப் போன தண்ணீர் குழாய்
    எப்போதும் பதட்டத்தை ஏற்படுத்துகிறது.
    நினைவிற்கு வருகின்றன
    சிறுசிறு சண்டைகளும்
    அப்படியான சண்டைகளால்
    என்றோ விட்டு போன உறவுகளும்.
    தண்ணீர் குழாயைத்
    திருகி திருகி சரி செய்ய பார்க்கிறேன்
    என் பலங்கொண்ட மட்டும்.


  • உனது கழுத்தினை அழுத்தி
    நீ மூச்சு திணறி
    இறந்து போவதைப் பார்க்க போகிறேன்.

    உன்னோடு எப்போதும் இருக்கும்
    அந்தச் சுகந்தம்
    நீ இறந்த பிறகு எவ்வளவு நிமிடங்கள் நீடிக்கும்?

    தேகத்தில் தேன் ஊற்றினாற் போல் இருக்கும்
    அந்த ஜொலிப்பு
    விளக்கு அணைவது போல் சட்டென அணையுமா?

    குத்திட்ட கண்களைப் பார்ப்பதில்
    இனி தயக்கமோ குற்றவுணர்வோ இருக்க போவதில்லை.
    உதடுகளைக் கவ்வினாலும்
    தடுக்க முடியாது உன்னால்.

    இத்தனை வெறுப்பிற்கும் பெருங்காரணம்
    ஒன்று நிச்சயம் இருக்க வேண்டும்.
    அப்படி ஒரு காரணத்தைத் தேடி கொண்டு இருக்கிறேன்.
    அது வரை உயிரோடு இருந்து விட்டு போ!


  • சாலை விளக்குகளும்
    எதிர் வரும் வாகனங்களின் விளக்குகளும்
    கலந்து இணைந்த பிறகும்
    தொடர்கிறது பயணம்.

    நிற்காமல் ஓடும் தார் சாலையும்
    ஹம் சத்தமும்
    வாகனத்தை இயக்குகின்றன.

    கண்கள் விழித்திருக்க
    கனவுகள் தார் மணத்தோடு
    புகையுருவில்
    நடனமாடுகின்றன.

    எதோ துக்கம் இருக்கிறது.
    அது பயணத்தின் முடிவில் காத்திருக்கிறது.
    அது என்ன என்பது இப்போது நினைவில் இல்லை.
    ஹம் சத்தத்தோடு
    வெறுமை தரும் சோகம் இப்போதைக்குப் போதுமானது.


  • தன்னுள் சோகத்தினை

    உருட்டி கொண்டே இருந்தான்.

    உருண்டு திரண்டு கடினமாகி

    பந்தாய் வடிவமெடுத்து நின்றது அது.

     

    ஆளற்ற மலைப்பிரதேசங்களில்

    அலைந்து

    சதை இறுகி

    எலும்புகள் துருத்தி

    கல்லும் மண்ணுமாய் மாறி போனான்.

     

    தன்னில் இருந்து விலகி பார்க்க முயன்றான்.

    சருகும் கல்லும் தூசியும் வானமும் நான் தான் என

    இயைந்து வாழ விழைந்தான்.

     

    பெருமழையையும் சூறாவளியையும் கொண்டு வந்தது

    அவனது சோகம்.

    விலக விலக அவனிடம் இருந்து கொண்டே இருந்தது அது.

    தன்னுள் நுழைந்து தேடும் போது

    தேடுபவனாய் மாறி போயிற்று.

     

    மழை ஓய்ந்த தினமொன்றில்

    ஓடையில் கால்கள் கிடக்க

    வானத்தில் பேசும் நட்சத்திரங்களை

    இமை கொட்டாமல் பார்த்தபடி

    அவனது உயிர் பிரியும் வரை

    வழி எதுவும் கிடைத்திருக்கவில்லை.


  • வருடங்கள் உருண்டோடி
    தனிமையிலே முதியவர்கள் ஆனோம்.
    முகத்தில் சுருக்கங்களுடன்
    எத்தனையோ எத்தனை வருத்தங்கள்.
    அவர் வருவதற்காக காத்து இருந்தோம்.
    எங்கள் இளமையை மீட்பதற்காக
    அந்த வருகை.
    மீண்டும் நாங்கள் இளைஞர்களாக மாறுவோம்.
    அதுவரை சலனமற்ற நீர்பரப்பில் பிரதிபலிப்போம்
    எங்கள் வருத்தங்களை.


  • முதல் முத்தத்தின் இனிமை.
    முதல் புணர்வின் சுவை.
    மறக்கவியலாத துரோகம்.
    இருளில் செய்த குற்றம்.

    நினைக்கும் போதெல்லாம்
    உடலினுள் பரவுகின்றன
    உணர்வலைகள்.
    முகங்கள்
    ஏனோ நினைவில் இல்லை.
    வலை வீசி தேடினால்
    சிக்குவது
    உருக்குலைந்து போன ஓவியங்களே.

    என் முகமும்
    மறந்து போயிருக்குமென நினைக்கையில்
    துளிர்க்கிறது
    பெருமூச்சோடு
    சிலசமயம் மகிழ்ச்சி.


  • கண்ணீரில் மிதந்து செல்கிறது ரயில்.
    சோகம் ததும்ப
    அது நகருகையில்
    வானத்தில் இருந்து
    மேகங்களாய் கீழ் இறங்குகின்றன
    கனவுகளும், ஆசைகளும், நிராசைகளும்.

    நிகழ் காலத்தில் ரயில்.
    கடந்த காலத்திற்கு அவற்றை இழுத்து செல்ல
    வலுவற்ற கரங்களால் பிரயத்தனபடுகின்றன மேகங்கள்.

    உருவாகிறது
    சோகத்தின் பெருமழை.