• வெறுமையின் சூடு பரவி கொண்டிருக்கிறது.

    கண்களுக்கு எட்டிய தூரம் பாலைவனம்.

    தூசு காற்று அலை அலையாய் படையெடுக்கிறது.

    சூரியன் கூட வெப்பம் தாங்காமல் மஞ்சளாக மாறி விட்டான்.

    மணல்வெளி மணலாலே முழுங்கபடலாம்.

    மனம் முழுவதும் ஆக்கிரமித்திருக்கிறது தாகம்.

    நைந்து போன உடைகள் இன்னும் கிழிந்து தொங்குகின்றன.

    எலும்புகள் கெஞ்சுகின்றன.

    திருவல்லிகேணி சாந்தாராம் மேன்சன்.

    ரூம் எண் 18யை யாரோ தட்டுகிறார்கள்.

    ஒரு கணம் பாலை எண்ணங்களிலிருந்து விடுதலை.


  • மிகவும் சாதாரண உரையாடல் தாம்.

    பரஸ்பர நலம் விசாரிப்பு.

    பார்க்கலாமென சம்பிரதாய விடை பெறுதல்.

    பல மணி நேரம் கழித்து

    திருமண மண்டபத்தை காலி செய்து

    நாற்காலிகளை அடுக்கி கொண்டிருக்கிறார்கள்.

    மண்டபமெங்கும் நிறைந்திருக்கின்றன

    அவள் கண்களால் உரையாடியவற்றின்

    விளக்கவுரைகள்.


  • மண்ணை கூட உலர்த்தி விடும் எங்களூர் வெயிலில்

    நூறாண்டுகளுக்கு மேலாக எங்கள் வீட்டுக்கு எதிரில்

    கோயில் தூணில் வாளை சுமந்தபடி நிற்கிறது ஒரு வீரனின் சிற்பம்.

    முப்பாட்டனுக்கு அது தெய்வம்.

    பாட்டனுக்கு அது துரதிர்ஷடம்.

    அப்பாவுக்கு அது கல்.

    எனக்கு காதல் சின்னம்.

    ஒவ்வொருவரும் தங்களுக்கான பிரதியை எடுத்து கொள்ள

    சிற்பியின் பிரதி அவனோடே மாண்டு போனதோ?


  • வானத்தில் வெளிச்சத்தை ஊற்றியது மின்னல்.

    உனது ஜன்னல் கண்ணாடியில் மின்னி மறைந்தது உன் நிழல் உருவம்.

    எனக்கு மேலிருந்த தடுப்பு, பெருமழைக்கு இனியும் தாங்காது.

    உடலெங்கும் ஈரம்.

    அடுத்த மின்னலுக்கு காத்திருக்கிறேன்.

    நம் இருவருக்குமிடையே

    மழை கட்டி கொண்டிருக்கிறது சுவரை.


  • இளஞ்சூட்டு தென்றலில்

    மென்மையாய் வருடியபடி செல்லும் இறகாய்

    உன் காமம்.

    விறைக்க செய்யும் குளிரில்

    புயற்காற்றில் படபடத்து

    முகத்தில் அறையும் இலைச்சருகாய்

    எனது.


  • உன்னையும் என்னையும் பிரிப்பதாய்

    நான் நினைத்த சுவர்கள் தாம்

    இன்று நம்மிருவருக்கும் பொது.


  • சுற்றும் கடிகாரத்தில்

    சுற்றி கொண்டிருக்கிறேன்

    இலக்கு புரியவில்லை.


  • மனம் வெறுத்த பின்னரும்

    வெறுக்காது அபத்தம்.


  • 1999ம் வருடத்தின் பிற்பாதி.

    அப்போது தான் கல்லூரி முடித்து, ஆறாம்திணை இணைய இதழில் வேலைக்கு சேர்ந்திருந்தேன். இணையத்தை பற்றிய பேச்சு உச்சமடைந்திருந்த நேரமது. சென்னை நகரத்தில் பல இணையதளங்கள் எல்லா முக்கிய சாலைகளிலும் பெரிய விளம்பர பேனர்கள் வைத்திருப்பார்கள்.

    யாகூ குரூப்பில் கவிதைகள் பகிர்தலுக்கான ஓர் ஆங்கில குழுவில் இணைந்திருந்தேன். அந்த குழுவை தொடங்கியவர் ஒரு நாள் IMஇல் என்னை சந்தித்து, குழுவின் moderatorகளில் ஒருவராக என்னை சேர்த்தார். யாகூவில் கவிதைக்கான குழுக்களில் அதிக உறுப்பினர்கள் கொண்ட குழுக்களில் ஒன்று அது. அங்கு என்னுடைய சில கவிதைகளை ஆங்கிலத்தில் பதித்தேன். மற்றவர்களின் கவிதைகளுக்கு விமர்சனங்கள் எழுதினேன். சிலர் நட்பானார்கள்.

    நாஸ்டாக் சரிந்தது. நான் பணியை விட்டு விலகினேன். அப்புறம் வாழ்க்கையில் போராட்டம். முதலில் வேலைக்கு போராட்டம். அப்புறம் வேலையை தக்க வைக்க போராட்டம். இதில் கவிதை மனம் தொலைந்தது. இணையத்திற்கு நேரமில்லாமல் போனது.

    வருடங்கள் உருண்டோடின. எப்போதாவது அந்த யாகூ தளம் பக்கம் எட்டி பார்ப்பதுண்டு. இன்று நிதானமாய் அந்த தளத்திற்கு போனேன். வெறும் 262 உறுப்பினர்களே பட்டியலில் இருந்தார்கள். ஆனால் ஒருவர் கூட தளம் பக்கம் வருவதில்லை போல. ஒரே மாதத்தில் 1500 பதிவுகள் நடைபெற்ற இடத்தில் சில வருடங்களாகவே உருப்படியான ஒரு பதிவு கூட இல்லை. ஆறு மாதங்களுக்கு முன்பு நான் பதித்து சென்ற கவிதைக்கு ஒரு பதில் கூட இல்லை. Spam பதிவுகள் மிகுந்து கிடந்தன. குழுவை தொடக்கியவர் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் தானாய் பதித்து கொள்ளும் ஒரு பொது பதிவினை விட்டு சென்றிருக்கிறார். அந்த ஒரே பதிவு ஒவ்வொர்ரு செவ்வாய் கிழமையும் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருக்கிறது.

    பாழடைந்த பங்களாவினுள் நடந்து கொண்டிருப்பது போல ஒரு பிரமை. பலர் உலவிய அடையாளங்கள் இருக்கின்றன. எப்போதோ நடந்த சர்வர் கோளாறில், பதிவுகளுக்கான மறுமொழிகள் தனி தனியாய் பிரிந்து போய் விட்டன. அதனால் பல திரிகள் அர்த்தமற்ற திரிகளாய் தொங்கி கிடக்கின்றன. இணையம் தான் மிக சமீபத்திய தொழில்நுட்பம் என சொல்கிறார்கள். ஆனால் அதனுள்ளே ஒரு பாழடைந்த பங்களா உருவாகி விட்டதை கண்ட போது, இணையத்தினுள் கால சக்கரம் மிக வேகமாய் சுழன்று விடுகிறது என தோன்றியது.

    என்னுடைய கவிதைகளை தேடினேன். கிடைத்தன. ஆனால் எதுவும் ‘இப்போதைய எனக்கு’ சொந்தமானதில்லை. சிலவற்றை எடுத்து கொண்டேன். மற்றவற்றை அங்கே இடிபாடுகளுடன் விட்டு வந்தேன்.

    தளத்தை விட்டு வெளியே வந்த போது மனம் கனத்து விட்டது. தனியாய் ஒரு blogspot வனத்தில் அங்கிருந்து எடுத்து வந்த விதையை விதைத்து வைக்கிறேன். சுற்றும் முற்றும் பார்த்தால் யாருமில்லை. ஆனால் இந்த விதை மீண்டும் ஒரு தோட்டத்தை உருவாக்கும் என்கிற நம்பிக்கை மட்டும் மிகுந்திருக்கிறது!