• இணையத்தின் பாய்ச்சல் அசுரத்தனமாக இருந்தாலும் அதன் கிளை அம்சங்கள் மிக விரைவிலே அழிந்து விடுகின்றன என்பதை பற்றி ஏற்கெனவே இங்கே நாம் பேசியிருக்கிறோம். இதன் பின்னணியில் நமது வாழ்க்கை இன்று அதன் முந்தைய வெர்ஷன் 1.0லிருந்து புது வெர்ஷனான 2.0க்கு மாறி விட்டது என்றே தோன்றுகிறது. இதன் மூலம் வாழ்வின் பல அம்சங்கள் தனக்கான கால சக்கரத்தை இணையம் போலவே மாற்றி அமைத்து கொண்டுவிட்டன.


    கால சக்கரம் முன்பை விட வேகமாக இயங்குவதற்கு நவீன தொழில்நுட்பங்களின் வருகையும், தொலை தொடர்பு சாதனங்களின் புரட்சியும், உலகமெங்கும் இருக்கும் ஆயிரக்கணக்கான கலாச்சாரங்கள் ஒன்றாக சந்திப்பதுமே காரணம்.


    கண் மூடி திறப்பதற்குள் பழைய சமூகங்கள் குப்பையில் எறியப்பட்டு, outdated என அதன் மேல் லேபிள் குத்தபடுகின்றன. பூனையாக இருந்தாலும் இன்று கோடுகள் போட்டு கொண்டால் தான் life 2.0க்கு compatibleயாக இருப்போம். outdated லேபிள் குத்தபட்டு குப்பைக்கு போகாமல் இருப்பதே இன்றைய வாழ்வின் போராட்டம். Incompatible முத்திரையிலிருந்து தப்பிக்கவில்லையெனில் வறுமைக்கோட்டிற்கு கீழே நின்றவாறு அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் GDPயை அண்ணாந்து வேடிக்கை பார்க்க வேண்டியது தான்.


  • இறுக்கியும் பிழிந்தும் தளர்ந்தும்

    பல நட்புகள் பல காலங்களில்

    தோன்றி மறைந்த வனவெளி

    கானல் நீராய் உறவுகளை

    பகடை காய்களாய் கொண்டு விளையாடிய தருணங்கள்

    காற்றோடு மறைந்து போகும் பொழுதில்

    இடுகாட்டு சாம்பல்

    அழிந்து போன விளையாட்டின்

    சுவாரஸ்யங்களை சொல்லி மகிழும்.


  • உன் பார்வை என் முதுகெலும்பில் இருக்கிறது.
    புன்னகை கால்களை கட்டியிருக்கிறது.
    வாசம் புலன்களை வலுவிழக்க வைத்துவிட்டது.

    என்னை பற்றியே பேசி கொண்டிருக்கிறாய்
    என்பதாய் என் எண்ணம்.
    யாருமற்ற வீதிகளில் கூட உன் நிழல்
    என்னை பின்தொடர்வதாய் உணர்கிறேன்.

    தரையோடு நான் அழுந்தி போவதற்கு முன்
    என் சோகத்தையாவது ஏற்று கொள்.


  • ஒவ்வொருவரும் தமக்கான மனநிலை ஒன்றை அறிந்தோ அறியாமலோ உருவாக்கி கொண்டு அதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.


    எனக்கு ஒரு நண்பன் இருந்தான். சந்திப்பவர்களை எல்லாம் கேலி செய்து கொண்டிருப்பான். ஜோக்குகளை உதிர்த்தபடி இருப்பான். மாதக்கணக்கில் அவனோடு நட்பு பாராட்டிய பிறகு எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. அவனிடம் இருக்கும் ஜோக்குகளின் எண்ணிக்கை கட்டாயம் 50யை தாண்டாது. இந்த 50 ஜோக்குகளை தான் அவன் சந்திக்கும் நபர்களை பொறுத்தும் சூழுல் பொறுத்தும் மாற்றி மாற்றி சொல்லி கொண்டிருக்கிறான். இந்த 50 ஜோக்குகளை அவனிடமிருந்து பிடுங்கி விட்டால் அவனால் வாழவே முடியாதோ என்கிற அச்சம் எனக்கு தோன்றியது உண்மை. இதே போல இன்னொரு நண்பர். அந்த வாரத்து ஆனந்த விகடன் மற்றும் குமுதம் படித்து விட்டீர்களானால் அவர் பேசுவது முழுவதும் உங்களுக்கு ஏற்கெனவே கேள்விபட்ட விஷயங்களாகி விடும்.


    கவிஞனின் மனநிலையில் வாழ்வதென்பது நீங்கள் உங்கள் கற்பனை சக்தியை உயிர்ப்புடன் வைத்திருப்பது என நினைக்கிறேன். பைக்கை சர்வீஸ் செய்து தினம் தினம் துடைத்து, பார்க்கவே பளிச்சென வைத்திருப்பது போல உங்கள் கற்பனை சக்தியை வைத்திருப்பது. இப்படி இருப்பதனால் நமது புலன்கள் கூர்மையாகின்றன. வாழ்க்கையில் நாம் அன்றாடம் சந்திக்கும் விஷயங்களை/பிரச்சனைகளை வேறு கண்ணோட்டத்தில் பார்க்க தொடங்கிவிடுகிறோம். வேறு மனப்பாவத்தோடு அணுக தொடங்குவோம்.


    கவிஞனின் மனநிலையில் வாழ முடியுமா? வாழ்பவர்கள் உண்டா? அல்லது அப்படி வாழ முயற்சிப்பது தான் கவிஞனின் மனநிலையா?


  • இறந்த போன மனிதர்கள்
    உயிருடன் இருப்பதாய்
    பாவ்லா செய்கிறார்கள்.

    தெருவெங்கும் இவர்களது கூட்டம்
    தங்களை தாங்களே ஏமாற்றி கொண்டு.


  • நாய் முகம் போன்று அந்த வீட்டு முகப்பு.

    சரிந்தே விடுவேன் என பயமுறுத்தும் நான்கு அடுக்கு.

    படிக்கட்டுகளுக்கு கீழும் ஓர் அறை.

    பக்கத்து வீட்டுக்காரர்களின் இரண்டு மூன்று அடியையும்

    இணைத்து கொண்டு மூச்சு விட முடியாமல்

    பம்மி பெருத்திருக்கிறது கட்டிடம்.

    இல்லாத காருக்கு கட்டிய இடத்தில்

    ஒரு கிழவி வைத்திருக்கிறாள்

    300 ரூபாய் வாடகைக்கு ஒரு கடை.


    எல்லாம் ஆழ்ந்திருக்கிறது கும்பகர்ண தூக்கத்தில்.

    கிழவியருகே மட்டும்

    மிஞ்சியிருக்கிறது கொஞ்சம் உயிர்ப்பு.


  • புழுதி படிந்த சாலைகளின் ஓரத்தில்

    கிழிந்து போன டயர்கள்.

    சிதைந்த கட்டிடங்களின் தூசிக்கு கீழே

    உயிர்ப்புடன் இருக்கின்றன

    இறந்தவர்களின் ரகசியங்கள்.


    வேறு மனிதர்களே இல்லை.

    நாய்கள் மட்டும் சோம்பி கிடக்கின்றன.

    காதலியின் மண்டையோட்டை சுமந்தபடி

    சுற்றி கொண்டிருக்கிறேன் நான்.

    புழுக்கள் நெளிகின்றன

    என் விரல்களுக்கு இடையே.


    பிறக்கிறது புன்னகை.

    அழிவே ஆனந்தம்.

    புன்னகை மிதந்தபடி வருடி செல்கிறது

    அழிவின் சாட்சியங்களை.


  • மஞ்சள் வெயில் போர்த்திய வனத்தில்

    இரு பாதைகளுக்கு முன் நான் நின்றிருந்தேன்.

    எந்த பாதையை தேர்ந்தெடுப்பது?

    மனித கால்கள் படாத இலைசருகுகள் மிகுந்த பாதை

    நான் அப்போது தேர்ந்தெடுத்தது.

    தேர்ந்தெடுக்காத பாதையை பற்றிய

    சிந்தனைகளுடன் தான் பயணம் கழிந்தது.

    பாதைகள் இன்று எனக்கு பயனற்று போன சூழ்நிலையில்

    இப்போது

    பாதைகள் எல்லாம்

    சேருமிடம் ஒன்று தான் என

    தெரிந்தும் என்ன பயன்?

    (ராபர்ட் ஃபிராஸ்ட் எழுதிய The Road Not Taken கவிதையின் தாக்கத்தோடு எழுதபட்டது.)


  • வெக்கையடிக்கும் அறையின் ஒரு மூலை.

    அதில் பாதி திறந்து கிடக்கிறது ஒரு ஜன்னல்.

    பச்சை தென்னை கிளைகளும், கரும் காகங்களும்

    அதனுள்ளே நுழைந்து அவன் மனதை திசை திருப்ப தான் பார்க்கின்றன.

    அவன் பார்வையில் ஜன்னல் மூடப்பட்டு பல மாதங்களாகின்றன.


  • பறப்பதாய் கனவு கண்டது எப்போது?

    ஒரு குழந்தை புன்னகைத்ததை நினைவுபடுத்தி பார்த்தது எப்போது?

    கவிதை கிறுக்கி பார்த்தது,

    வாய்விட்டு சந்தோஷமாய் கத்தியது,

    முதல் முத்தத்தின் சுவையை நினைவுபடுத்தி பார்த்தது,

    எப்போது?

    கடைசியாய் எப்போது?