மின்சாரம் இல்லை
வழக்கம் போல.
காற்றே இல்லாதது போலிருக்கிறது
இந்த அடுக்குமாடி குடியிருப்பிற்குள்.
ஆங்காங்கே பேட்டரி விளக்குகள்
மங்கலாய் எரிந்தபடி.
நிழல்கள் நீண்டு
இருளைத் தொட்டு
படர்ந்திருக்கின்றன.
வேர்வையில் முழுக்க நனைந்து
நடந்து கொண்டிருக்கிறேன்.
இரு புறமும் கதவுகள் தோன்றி தோன்றி மறைகின்றன.
சிவந்த கதவுகள்
பேட்டரி விளக்கு வெளிச்சத்தைச்
சிகப்பாக்குகின்றன.
அச்செந்நிற ஒளி
இருளில் கலக்கும் சமயம்
உதிரமாய் வண்ணம் கொள்கிறது.
மாடிப் படிகளில் ஏறி ஒவ்வொரு தளமாய் செல்கிறேன்.
பெரும்பாலும் ஓசைகளே இல்லை.
நான் பார்த்து இதுவரை
ஒரு கதவு கூட திறந்திருந்ததில்லை.
சில கதவுகளுக்குப் பின்னால்
யாரோ விசும்பும் சத்தம் கேட்கும்.
அல்லது அது பூனையின் ஒலியா?
ஒரு கதவிற்குப் பின்னால்
காதலர்களின் சண்டை சத்தம்.
பிறகு நானே ஒவ்வொரு கதவிற்கும்
ஒரு சத்தமிருப்பதாய் கற்பனைச் செய்து கொண்டேன்.
விருப்பம் போல ஒவ்வொரு கதவின் பின்னாலும்
ஒவ்வொரு சத்தத்தினைக் கேட்க தொடங்கினேன்.
மற்றப்படி
பெரும்பாலும் ஓசைகளே இல்லை.
ஓர் இளம் யுவதி தற்கொலைச் செய்து கொள்வதற்கு முன்
தனிமையில்
விசும்புகிற ஒலியினைக் கேட்டேன்
ஒரு கதவிற்கு அருகே.
மெள்ள தட்டினேன்.
மின்சாரம் இல்லாமல் செத்து கிடந்த
அழைப்பு மணி பொத்தானை அழுத்தினேன்
சலிப்புடனே.
தட்டல் சத்தம் மாடியெங்கும் இருளினைக் கிழித்தபடி இருந்தது.
ஆனால் வெளிச்சம் தோன்றவே இல்லை.
எதோ எதோ சொல்லி அழைத்தேன்.
காலால் உதைத்தேன்.
பிறகு வெறுப்புற்று அங்கிருந்து நகர்ந்து
நாலடி நடந்து
பிறகு மீண்டும் ஆக்ரோஷம் பொங்க
திரும்பி வந்து
மேலும் வலிமையுடன் தட்டினேன்.
நான் எழுப்பும் ஒவ்வொரு சத்தத்திற்கு இடையிலும்
வலிமையுடன் உறுமியது
மௌனம்.
Leave a Reply