கடும் தண்ணீர் தட்டுபாடு, அச்சுறுத்தும் மழைக்காலம், டெண்ட் கூரைகளை பெயர்த்தெடுக்கும் பலத்த காற்று, கழிவறைகள் வழிந்து வாழும் டெண்ட்களுக்கு இடையில் ஓடும் சுகாதாரமற்ற நிலை, இட நெருக்கடி, ராணுவத்தினர் செய்யும் சித்ரவதைகள், அவ்வபோது ராணுவத்தினரால் காணாமல் போகும் முகாம்வாசிகள், முடக்கபட்ட சுதந்திரம் என்று தற்போது இலங்கையில் உள்ள தமிழர் முகாம்கள் பெரும் அவல நிலைக்கு ஆளாகி இருக்கிறது. இதற்கு ஆதாரமாய் அங்கு நடக்கும் விஷயங்கள் பற்றிய நேரடி சாட்சியங்களை Human Rights Watch என்கிற சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனம் தனது அறிக்கையில் சமீபத்தில் வெளியிட்டது. அதன் சுருக்கம் கீழே கொடுக்கபட்டு இருக்கிறது.
இலங்கையில் இன்று இரண்டறை லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் முகாம்களில் சிறை வைக்கபட்டு இருக்கிறார்கள். ஐ.நாவின் கூற்றுபடி சரியாக 2,55,551 பேர். வவூனியா மாவட்டத்தில் உள்ள மானிக் முகாமில் தான் அதிகமானோர் தங்க வைக்கபட்டிருப்பதாக தெரிகிறது.
மானிக் முகாமிற்கு அருகே உள்ள ஒரு நதியில் இருந்து பைப்லைன் மூலமாக தான் தண்ணீர் முகாமிற்கு அளிக்கபட்டு வந்தது. ஆனால் அக்டோபர் ஐந்தாம் தேதி இதன் முக்கியமான பம்பிங் யூனிட் அணைக்கபட்டது. நதியில் மிக குறைவான அளவு நீரோட்டம் இருப்பதே இதற்கு காரணம் என சொல்லபட்டது. இதன் காரணமாக முகாம்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு இருக்கிறது. ஒரு குடும்பத்திற்கு முப்பது லிட்டர் தண்ணீர் தான் அளிக்கபடும் என நிபந்தனை செய்திருக்கிறார்கள். ஐ.நாவின் அகதிகளுக்கான நிறுவனம் ஒரு தனி நபருக்கு ஒரு நாளைக்கு பதினைந்து லிட்டர் தண்ணீர் கொடுக்கபட வேண்டுமென பரிந்துரை செய்தது மீறப்பட்டு இருக்கிறது.
முகாமில் உள்ள 38 வயதான ஜீவிதா, “இன்று காலை நான் என் குடும்பத்திற்காக இருபது லிட்டர் தண்ணீர் வாங்கினேன். என் குடும்பத்தில அஞ்சு பேர். நாளை காலை வரை வேற தண்ணீ கிடைக்காது. நாங்க குடிக்கிறதுக்கு, சமைக்கிறதுக்கு, துணி துவைப்பதற்கு, குளிப்பதற்கு எல்லாம் இவ்வளவு தண்ணீ தான். வேற கிடையாது. மூணு நாளா எங்க குடும்பத்துல யாருமே குளிக்கலை. கேம்ப் நிர்வாகிகளுக்கு இத பத்தி கவலையே கிடையாது,” என்று சொன்னார்.
முப்பது வயது ஆனந்தி தனது ஒரு வயது மகனுடன் முகாமில் இருக்கிறார். “இன்னிக்கு நாலறை மணி நேரமா கியூவுல நின்றிருந்தேன். அதுக்கு மேல நிற்க முடியல்லை. ரொம்ப அசதியாயிடுச்சு. நேத்து நடு ராத்திரியில் இருந்தே கியூவுல நின்னு காலையில ஒன்பது மணிக்கு தான் தண்ணீ கிடைச்சுது. முப்பது லிட்டர் கிடைச்சுது. எனக்கு பரவாயில்லை, நானும் என் மகனும் தான். ஆனா பத்து பேர் குடும்பத்துல இருந்தாலும் இவ்வளவு தண்ணீர் தான் குடுக்கிறாங்க. அவங்க பாடு இன்னும் கஷ்டம்,” என்கிறார் ஆர்த்தி.
முப்பத்தி இரண்டு வயதான மாதவி,” தண்ணீ கஷ்டத்துல மக்கள் ரொம்ப துவண்டு போயிட்டாங்க. இங்க ரொம்ப நிலைமை சிக்கலா இருக்கு. ஏழாம் தேதி திடீரென்று அரை மணி நேரம் தண்ணீ வந்தது. மக்கள் எல்லாம் பக்கெட்டை தூக்கிட்டு ஓடி போய் அடிதடி தள்ளுமுள்ளாகி பெரிய சண்டை ஆகிடுச்சு. ஒருத்தருக்கொருத்தர் வாய் தகராறு ஆகி கற்கள் எல்லாம் வீசிக்கிட்டாங்க. நாளைக்கு இதே நிலைமை இருந்தா இந்த முகாம் முள்வேலிகளை தூக்கி எறிஞ்சிட்டு எல்லாரும் நதிக்கு போய் நாங்களா தண்ணீர் பிடிப்போம்னு பேசிக்கிட்டாங்க,” என்று நடந்ததை சொன்னார்.
கடந்த இரண்டு வாரங்களாக வவூனியா மானிக் முகாம்களில் பலத்த காற்று அடிப்பதால் முகாம் கூரைகள் பல இடங்களில் அறுந்து விட்டது. ஐந்து பேர் கொண்ட குடும்பத்தில் வசிக்கும் குமரவேல் என்பவர்,” மரத்து கிளைகள் எல்லாம் பலத்த காத்துல உடைஞ்சு முகாம் கூரைங்க மேல விழுது. டென்ட்டிற்கு வெளியே தான் சமையல் செய்ய வேண்டியதிருக்கு. பலத்த காத்துனால தூசியும் மண்ணும் சாப்பாட்டுல விழுது. இங்க வாழறது ரொம்ப கடினமான விஷயம்,” என்கிறார்.
வவூனியாவில் உள்ள மானிக் முகாமின் இரண்டாவது பிரிவில் குமரவேல் தற்போது இருக்கிறார். இங்கு உள்ள இடப்பற்றாகுறை காரணமாக அவருடைய குடும்பத்தில் உள்ள ஐந்து பேர் மற்றும் வேறொரு குடும்பத்தை சார்ந்த நான்கு பேர் ஒரே டெண்ட்டில் வசிக்க வேண்டியதிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரைத்த அளவுகள்படி பார்த்தால் இந்த இரண்டாவது பிரிவில் 29,000 பேருக்கு குறைவாக தான் தங்க வைக்கபட முடியும். ஆனால் உண்மையில் இங்கு 52,000 பேர் வசிக்கிறார்கள். இரவுகளில் பெண்கள் டெண்ட்களில் தூங்குகிறார்கள். ஆண்கள் டெண்ட்டிற்கு வெளியே தூங்க வேண்டியதிருக்கிறது. அக்டோபர் மாதம் வழக்கமாய் வரும் மழைக்காலம் தொடங்கி விட்டால் தங்களது நிலை என்னாவாகும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்கிறார் குமரவேல். “போன மாசம் கடுமையா மழை பெய்ஞ்சுது. இங்க மழை தண்ணீ ஓடறதுக்கு வழியில்லை. அது அப்படியே தேங்கிடுது. அப்புறம் நாங்க நடக்கவே முடியாத நிலைமை வந்துடுது,” என்று கவலைபடுகிறார் குமரவேல்.
கடந்த கடும்மழை காரணமாக கழிவறையில் இருந்து மல கழிவுகள் டெண்ட் வழியாக ஓட தொடங்கி விட்டது. இத்தகைய அசாதாரண வாழ்க்கை சூழலில் முகாம்வாசிகள் ராணுவத்தினருடன் சில சமயம் மோதல்களில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வருகின்றன. செப்டம்பர் 26-ம் தேதி ராணுவத்தினர் இப்படி ஏற்பட்ட மோதலை முடிவிற்கு கொண்டு வருவதற்காக கூட்டத்தினை பார்த்து சுட்டிருக்கிறார்கள். இதில் இருவருக்கு காயமேற்பட்டு இருக்கிறது. ஒரு குழந்தையினை துப்பாக்கி குண்டு தாக்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதை பற்றி முகாம் நிர்வாகம், “கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள்,” என்று சொல்லியிருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்தது வேறு என்கிறார்கள் அங்குள்ள மக்கள்.
வவூனியாவில் உள்ள மானிக் முகாமில் முதல் பிரிவிற்கு இரண்டாம் பிரிவிற்கும் இடையில் தடுப்பு அமைக்கபட்டிருக்கிறது. Zone one & two என்று இவை அழைக்கபடுகின்றன. இந்த இரு பிரிவிற்கு இடையே உள்ள மக்கள் தங்களது உறவுகளை சந்திக்க சிலசமயம் அனுமதிக்கடுகிறார்கள். முதல் பிரிவில் சமையல் செய்ய விறகுகள் கிடைப்பதில்லை என்பதால் அதற்காகவும் மக்கள் இரண்டாம் பிரிவிற்கு போகிறார்கள். அன்று மாலை ஐந்தரை மணிக்கு இந்த பிரிவுகளுக்கு இடையிலான ரோட்டினை கடந்து போக அனுமதி வேண்டி மக்கள் நீண்ட கியூவில் நின்று காத்து இருந்தார்கள். அப்போது விறகுகளை சுமந்தபடி ரோட்டினை கடந்த ஒரு மனிதனை ராணுவத்தினர் எந்த காரணமும் இல்லாமல் தாக்க துவங்கியிருக்கிறார்கள். மக்கள் இதனை தடுக்க முயன்ற போது மேலும் ராணுவத்தினர் அங்கு கூடி முகாம் மக்களை அடித்து இருக்கிறார்கள். ஒரு ராணுவ வீரன் கையெறி குண்டினை கூட்டத்தின் மீது எறிவதாக தூக்கி காட்டியிருக்கிறான். அதற்கு அடுத்து நடந்த துப்பாக்கி சூட்டில் தான் இருவருக்கு காயமேற்பட்டு இருக்கிறது. இதற்கு பிறகு வேறொரு ராணுவ வீரன் முதலில் அடிபட்ட ஆள் கொணடு வந்த விறகு கட்டின் மேல் வெடிகுண்டினை பொருத்தி அதனை தனது செல்போன் கேமராவில் படமெடுத்து இருக்கிறான். இதனை தொடர்ந்து பத்தொன்பது பேர் கைது செய்யபட்டார்கள். அவர்களில் சிலர் மட்டுமே பிறகு விடுவிக்கபட்டார்கள். கைது செய்யபட்டவர்களை ராணுவத்தினர் கடுமையாக அடித்து சித்ரவதை செய்ததாக சொல்லபடுகிறது.
செப்டம்பர் 23-ம் தேதி இது போல வவூனியாவில் உள்ள மற்றொரு முகாமில் (பூந்தோட்டம் முகாம்) ராணுவத்தினர் முகாம்வாசிகளை அடித்து இருக்கிறார்கள். இதற்கு காரணம் அங்கு ஒரு முகாம்வாசி திடீரென ராணுவத்தினரால் வேறு இடத்திற்கு அழைத்து செல்லபட இருந்தார். அதனை மக்கள் தட்டி கேட்டார்கள். இதில் ராணுவத்தினரின் வாகனங்கள் அடிக்கபட்டன. இதன் காரணமாக மூன்று மணி நேரம் அங்கு கலவரச் சூழல் இருந்தது.
ஐக்கிய நாடுகள் சபை இலங்கை மானிக் முகாமில் நடந்த துப்பாக்கி சூட்டினை பற்றி தனக்கு அறிக்கை கொடுக்குமாறு கேட்டிருக்கிறது. இச்சூழலில் உலகமெங்கும் மனித உரிமை ஆர்வலர்கள் இந்த முகாம்கள் அனைத்தும் மூடப்பட்டு இங்குள்ள மக்கள் அனைவரும் சுதந்திரமாய் தங்களது ஊருக்கு செல்ல நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டுமென வற்புறுத்தியபடி இருக்கிறார்கள்.
தமிழக அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் பத்து பேர் கொண்ட குழு ஒன்று தற்போது இலங்கை முகாம்களை நேரடியாக பார்வையிட சென்றிருக்கிறது. கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், சுதர்ஸன நாச்சியப்பன், ஜே.எம்.ஆருண் உள்ளடக்கிய இந்த குழு இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள முகாம்களை பார்வையிட்டு இருக்கிறார்கள். நாளை அவர்கள் வவூனியா முகாம்களுக்கு செல்கிறார்கள். இந்த நிலையில் இந்த குழுவினர் கிழக்கு மாகாணத்திற்கு செல்வதற்கு கொடுக்கபட்டிருந்த அனுமதியினை இலங்கை அரசு ரத்து செய்து இருக்கிறது. இந்த குழுவினர் என்னென்ன கண்ணீர் கதைகளை நேரில் பார்க்க போகிறார்கள் என்பதையும் இவர்களது நேரடி பயணம் எத்தகைய மாற்றத்தை கொண்டு வரும் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Leave a Reply