என்னுள் ஒரு குரல்

என்னுள் ஒரு குரல்

என்னுள் ஒரு குரல் எப்போதும்!

யாவருக்கும் அது அப்படித் தானென நினைத்திருந்தேன்!

சில சமயம் இரண்டாவது குரலொன்று!

யாரிடமாவது பேசும் போதும்

பேசுவதற்கு முன்பும்

அந்தக் குரல் பதில் சொல்லியிருக்கும் உள்ளுக்குள்!

அதைப் பிரதி எடுத்தாற் போல்

பெரும்பாலும் நான் பேசுவதில்லை!

பூச்சு பூசி தான் பேச வேண்டும்!

ஒரு நாள் வனத்தை அசைத்திடும் பெருமழைப் போல

தடதடவென விடாது பெய்து தீர்த்தாற் போல்

பேசி தீர்த்தது அக்குரல்!

பிறகு அமைதி

அமைதி

அமைதி!

பிறகு அக்குரல் ஒலிக்கவே இல்லை என்னுள்!

யார் பேசினாலும் நானாக பேச வேண்டியதிருக்கிறது.  

இப்போது என்னைப் பைத்தியம் என்கிறார்கள்!