கூனிக் குறுகு

கூனிக் குறுகு

வெளுத்த இரவு.
நான் பதுங்கியிருக்கவில்லை;
ஒளிந்திருக்கவில்லை;
நின்று கொண்டிருக்கிறேன்.

இரண்டடி முன் நகர்ந்தால்
வெட்ட வெளி வரும்.
ஆனால் நிழலிலே ஒதுங்கியிருக்கிறேன்
பயத்தோடு.

அந்தப் பயம் தேவையற்றது.
எனினும்
சருமத்தில் அலை அலையாய் அச்சவுணர்வு
படிந்து தான் இருக்கிறது.

அங்கே
யாரும் இருக்க போவதில்லை என்றாலும்
யாரோ காத்திருப்பது போல பிரமை.

வெட்டவெளிக்கு நான் வந்தால்
அது குற்றமாகாது.
யாரும் அதற்காக என்னைத் தண்டித்து விட முடியாது.
எனினும்
இந்தக் கணம்
சிறு பிழையும் வேண்டாம்
இப்படியே போகட்டும் என
இதயம் தடதடக்கிறது.

கறுப்பு வெள்ளையென
இரு புறமும் பேசும் மனம்
கூனிக் குறுகுகிறது
இந்தப் பயத்தை நினைத்து நினைத்து.

நன்றி

புகைப்படம்: Liu Bolin