கவிஞன் ஒருவன்

உலகில் இது வரை
இப்படியொரு கவிஞன்
இருந்ததுமில்லை;
இருக்கப்போவதுமில்லை
என மொழி வாழும் காலம் வரை
தன் பெயர் நிலைக்க வேண்டுமென
விரும்பினான்.

திருமணம் மறுத்தான்.
வயிறு பிழைப்பிற்காக
சில மணி நேர வேலைத் தவிர
மற்ற நேரங்களில்
கவிதைகளிலே உழன்றான்.
இரவில் பேயானான்.
பகலில் ஏடானான்.

கண்களில் கவிதை.
கைகளில் எப்போதும்
ஒரு சொட்டு வார்த்தைச்
சொட்டி கொண்டே இருந்தது.

எனினும்
பாராட்டில்லை,
போற்றி புகழ்வார் யாருமில்லை.
புரவலருமில்லை.

எழுதினால் மட்டும் போதாது
விளம்பரப்படுத்த ஆட்கள் வேண்டும் என
பல நண்பர்களைப் பிடித்தான்.
முகநூலில் தேடி தேடி நட்பு சேர்த்தான்.
இலக்கிய விழாக்களுக்கு முதல் ஆளாய் அஜராகி
இறுதி ஆளாய் டாஸ்மாக் கடை வரை நின்று
கவிதைப் புராணம் வாசித்தான்.

‘உனக்கு எழுத தெரியவில்லை’ என
ஒரு முறுக்கு மீசை சொல்லி விட்ட
இரண்டாம் நாள்
தனது கவிதைகளையெல்லாம் ஓரம் கட்டி விட்டு
இலக்கிய கோட்பாடு நூற்களைத் தேடி தேடி
வாசித்தான்.
அன்றைய இன்றைய பிரபல கவிகளுடைய கவிதைகளையும்
தன் கவிதைகளையும் ஒப்பிட்டு பார்த்தான்.

எழுதியதை நூறு முறை திருத்த தொடங்கினான்.
திருத்தியதைக் கிழித்து விட்டு
கண்ணீர் விட்டு அழுதான்.

தன் எழுத்துகளைக் கொளுத்தி விட்டு
தூக்கில் தொங்கி விடலாமா என
யோசித்தான்.
அன்றிரவு துர்கனவு.
கண்களைக் கசக்கி எழுந்தவன்
அதைக் கவிதையாக்க
தாள் தேடினான்.