உலகப்புகழ் புகைப்படங்களின் கதை – ஹிப்பி

அது ஹிப்பிகளின் பொற்காலம். கடற்கரையெங்கும் இளைஞர்கள் நிரம்பி இருக்கிறார்கள். பலருக்கு நீளமான தலைமுடி, தாடி. பெண்களோ எளிமையான உடையில். வெயில் மஞ்சளாய் மாறி கொண்டிருக்கிறது. கஞ்சா வாசனை எங்கும் அடிக்கிறது. மேடையில் இசை விழா அரங்கேறி கொண்டிருக்கிறது. ராக் இசை விழா. பார்ப்பவர்களின் நரம்புகளைப் பதம் பார்க்கும் ராக் இசை. போதைக் கண்ணிற்கு ஏற ஹிப்பிகள் இசையின் உலகிற்குத் தன்னை அர்ப்பணித்து கிடந்தார்கள். திடீரென யாரென தெரியாத ஓர் இளம் வயது பெண் மேடை மீது ஏறினாள். ‘எதைப் பற்றியும் கவலைப்படாத’ உடை. அலட்சிய உடல் பாவனை. இசையின் மயக்கத்தோடு மேடையில் தோன்றியவளுக்கு மேடை சங்கோஜமோ பயமோ இல்லை. இசையின் வலிய தாளங்களுக்கு நளினமாய் உடலை அசைத்து ஆடினாள். கூட்டம் கரகோஷமிட அவள் ஆடுவதைக் கேமரா புகைப்படமாய் எடுத்தது.

புகைப்படத்தின் உயிர்

20ம் நூற்றாண்டின் மிக முக்கியமான புகைப்படக்காரர் டென்னிஸ் ஸ்டாக். இரண்டாம் உலகப் போர் காரணமாக பள்ளி படிப்பைப் பாதியிலே நிறுத்தி விட்டு ராணுவத்தில் இணைந்தார். போர் முடிந்த பிறகு மேக்னம் நிறுவனத்திலே புகைப்படக்காரராய் இணைந்தார். மிக விரைவிலே அவரது புகைப்படங்கள் புகழ் பெற தொடங்கின. முக்கியமாக ஜேம்ஸ் டீன் என்றொரு சினிமா நடிகரின் புகைப்படம் மிக பெரிய புகழைப் பெற்று தந்தது.

உலகப்புகழ்-புகைப்படம்786
டைம்ஸ் சதுக்கத்தில் ஜேம்ஸ் டீன்

1955ம் ஆண்டு. ஜேம்ஸ் டீன் அப்போது தான் ஹாலிவுட்டில் அறிமுக நடிகர். அவருடைய கோபக்கார இளைஞன் பார்வையும், அலட்சிய உடல் மொழியும், கலைந்து கிடக்கும் தலைமுடியும் அவரது திரைப்படங்கள் வெளிவருவதற்கு முன்னரே அவரைப் பற்றிய எதிர்ப்பார்ப்பினை மக்களிடையே ஏற்படுத்தின. அக்காலக்கட்டத்தில் நியூ யார்க் நகரம் டைம்ஸ் சதுக்கத்தில் நடிகர்களுக்கான பட்டறை ஒன்று இயங்கி கொண்டிருந்தது. இங்குத் தான் அறிமுக நடிகர்களும் இயக்குனர் கனவில் இருப்பவர்களும் திரைப்பட கதாசிரியர்களும் குழுமி கிடப்பார்கள். அப்படி ஒரு மாலை நேரம் நடிகர்களுக்கான பட்டறையில் இருந்து வெளியே வந்து டைம்ஸ் சதுக்கத்தில் நடந்து போகிறார் ஜேம்ஸ் டீன். அவரது உடல் அளவை விட பெரிய அளவிலான ஓவர் கோட், பனி மூட்டம், மழையில் நனைந்து ஆளில்லாமல் வெறிச்சென இருக்கும் டைம்ஸ் சதுக்கம், கண்களில் ஓர் அலட்சிய பார்வை, வாயில் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட். இந்தப் புகைப்படம் ஜேம்ஸ் டீனின் குணாதிசயத்தை வெளிப்படுத்தும் படமாக மாறி போனது. போஸ் கொடுக்க வைத்து எடுக்கப்படும் புகைப்படங்களை விட இந்தப் புகைப்படத்திலே உயிர் இருந்தது.

புகைப்படம் எடுத்த போது அறிமுக நடிகராக இருந்த டீன் விரைவிலே தனது 24வது வயதில் ஒரு விபத்திலே இறந்து போனார். அவரது இறப்பிற்குப் பிறகு வெளிவந்த திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகின. ஜேம்ஸ் டீன் மறக்க முடியாத நடிகரானார். டைம்ஸ் சதுக்கத்தில் நடந்து செல்லும் ஜேம்ஸ் டீனின் புகைப்படம் அமரா புகழ் பெற்றது. உலகப்புகழ் புகைப்படங்களின் வரிசையில் இடம் பெற்று விட்டது ஜேம்ஸ் டீன் புகைப்படம்.

ஜேம்ஸ் டீனின் புகைப்படத்தினை எடுத்த புகைப்படக்காரர் டென்னிஸ் இதற்குப் பிறகு பரவலாக கவனம் பெற்றார். சினிமா நடிகர்களும் பிரபலங்களும் அவரது லென்ஸ் தங்கள் பக்கம் திரும்ப காத்திருந்தனர். 1968ம் ஆண்டு புகழ் உச்சியில் இருந்த டென்னிஸ் திடீரென ஒரு நாள் ஒரு சின்ன முட்டைமூடிச்சோடு கலிபோர்னியாவிற்குப் பயணப்பட்டார்.

கலிபோர்னியா அப்போது ஹிப்பிகளின் தலைநகரமாய் இருந்தது. அமெரிக்கா எங்கும் ஹிப்பிகளைப் பற்றிய பேச்சாகவே இருந்தது. இளைஞர்களிடையே பரவலான தாக்கத்தினை ஹிப்பிகள் உண்டு செய்து கொண்டிருந்தார்கள். ஹிப்பிகளைப் பற்றி, “போதை மருந்து அடிமைகள், சோம்பேறிகள், பாலியல் வக்கிரக்காரர்கள்,” என்று வயதானவர்கள் குறைச் சொல்லி கொண்டு இருந்தார்கள். இந்த ஹிப்பிகள் உண்மையில் எப்படிபட்ட வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதை அறிய டென்னிஸ் ஆசைப்பட்டார். அதற்காகவே தன் வழக்கமான வாழ்க்கையைச் சிறிது காலம் உதறி விட்டு கலிபோர்னியாவிற்குப் பயணப்பட்டார். அப்படி உதறி புறப்பட்டதே ஒரு ஹிப்பிதனம் தான் என்பதை அப்போது அவர் அறியவில்லை.

கலிபோர்னியா கல்லூரி
கலிபோர்னியா கல்லூரி

காதலியுங்கள் போரிடாதீர்கள்

60-களின் துவக்கத்தில் அமெரிக்காவில் இளைஞர்களிடையே தோன்றிய கலாச்சார இயக்கம் தான் ஹிப்பி. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு அமெரிக்கா வல்லரசாக தன்னை நிலைநிறுத்த தொடங்கியது. பொருளாதார அளவில் அமெரிக்காவின் மத்திய வர்க்கம் வளர தொடங்கியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகுப் பிறந்த குழந்தைகள் டீன் ஏஜிற்கு வந்த காலக்கட்டத்தில் உலகம் அவர்களுக்கு முன்பிருந்த தலைமுறையினரின் இளமைக் காலத்தைக் காட்டிலும் வேறு மாதிரியாக இருந்தது.

மனித உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வு பரவ தொடங்கியது. மனித உரிமைகளுக்காக சர்வதேச அளவில் குரல் கொடுக்கும் ஆம்னஸ்டி இண்டர்நெஷ்னல் தொடங்கப்பட்டது இக்காலக்கட்டத்தில் தான். சிறுபான்மையினர், ஓரின சேர்க்கையாளர்கள், வேற்று இனத்தவர்கள் போன்றவர்களின் உரிமைகளைச் சத்தமாக பேச தொடங்கியது சிவில் உரிமைகள் இயக்கம். ஆப்பிரிக்க அமெரிக்க (கறுப்பின) இளைஞர்கள் புது உத்வேகத்துடன் வலம் வர தொடங்கினார்கள். ஆப்பிரிக்க அமெரிக்க மக்களுக்காக அகிம்சை முறையில் போராடிய மார்டின் லூர்தர் கிங் (ஜுனியர்) அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்றார்.

வியட்நாம் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டம்
வியட்நாம் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

1961-ல் அப்போதைய ஜனாதிபதி கென்னடி அமெரிக்கர்களை அவர்களது வீடுகளில் பதுங்குக் குழிகளை அமைத்து கொள்ள யோசனை சொன்னார். அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான பனிப்போர் உச்சத்திற்கு வந்தது. இதற்கிடையில் மேலும் சில நாடுகள் அணுஆயுதங்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தன. அமெரிக்காவில் அணு ஆயுதங்களுக்கு எதிரான இயக்கம் வலு பெற ஆரம்பித்தது. விரைவிலே தொடங்க இருக்கும் அடுத்த உலகப் போர் அணு ஆயுத போராக இருக்குமென்றும் அது உலகினையே அழித்து விடும் என்றும் பரவலாக பயம் இருந்தது.

தொழில்நுட்பம் மிக பெரிய வளர்ச்சியைப் பெற்றது. ஊடகங்கள் பரவலாக எல்லாரிடத்தும் சென்றடைந்தது. நேரடி தொலைக்காட்சி ஒளிப்பரப்புகள் பிரபலமாக தொடங்கின. விண்வெளிக்குள் சோவியத் யூனியனின் யூரி காக்ரின் முதல் மனிதனாக பிரவேசித்தார். இதைத் தொடர்ந்து நிலவிற்கு மனிதனை அனுப்பும் முயற்சிகள் தொடங்கின. அடுத்தடுத்து மனிதர்கள் வெவ்வேறு கோள்களுக்குச் செல்வார்கள் என்றும் நட்சத்திரங்களுக்குப் பயணப்படும் நாள் வெகுத் தொலைவில் இல்லையென்றும் நம்பிக்கைக் குரல்கள் எழுந்தன. உலகினை, எதிர்காலத்தைக் குறித்த சிந்தனைகள் அடியோடு மாறி போயின.

இந்தச் சூழலில் வியட்நாம் போர் தொடங்கியது. கென்னடியின் கொலை மற்றும் பல மர்மமான சம்பவங்கள் அரங்கேறின. அமெரிக்க தேசிய போலீஸ் அமைப்பான எப்.பி.ஐயின் இயக்குனர் எட்கர் ஹுவரின் நம்ப முடியாத அதிகாரம் பற்றியும் அதைக் கொண்டு அவர் செய்த அதிகார எல்லைமீறல்கள் பற்றியும் தகவல்கள் மெள்ள மெள்ள ஊடகங்களில் வெளிவர தொடங்கின.

போருக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் துவங்கின. இச்சமயம் அமெரிக்காவில் தாக்கமேற்படுத்திய பழங்காலத்து கீழை நாட்டு இலக்கியங்களும் கலாச்சாரமும் அமெரிக்க இளைஞர்களை, “காதலியுங்கள் போரிடாதீர்கள்,” என பேச வைத்தன.

இளைஞர்களிடையே கஞ்சாவும் போதை மருந்தும் பரவலாக பயன்பாட்டிற்கு வந்தது. டாக்டர் டேவிட் ரூபன் எழுதிய ‘செக்ஸ் பற்றி நீங்கள் அறிய விரும்பிய ஆனால் கேட்க பயந்த விஷயங்கள்’ என்கிற புத்தகமும் அலெக்ஸ் கம்போர்ட் எழுதிய ‘பாலியல் இன்பம்’ என்கிற புத்தகமும் பாலியல் குறித்த பார்வையை மாற்றியமைக்க ஆரம்பித்தன.இந்தச் சமயத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட புதிய ‘பயன்பாட்டிற்கு எளிய’ கருத்தடை சாதனங்கள் பாலியல் சுதந்திரத்தை உருவாக்கின.

பாப் டையலான், பீட்டில்ஸ் என இசையோ புதிய உச்சத்தைத் தொட்டு கொண்டிருந்தது. ராக் வடிவமும் ராக் இசை திருவிழாக்களும் இளைஞர்களிடையே மிக பெரிய வரவேற்பினைப் பெற்றன.

பெண்களுக்கான சமத்துவ உரிமையைப் பற்றிய குரல்கள் அதிகமாய் எதிரொலிக்க ஆரம்பித்தன. அபார்ஷன் செய்து கொள்ளும் உரிமையைப் பற்றி பெண்கள் போராட்டம் நடத்தினர். ரெட் ஸ்டாக்கிங்ஸ் என்கிற பெண்கள் போராட்ட குழு ‘பிட்ச் மெனிவெஸ்டோ’ வெளியிடப்பட்டது. சில்வியா பாத் போன்ற பெண் கவிஞர்கள் புகழ் பெற தொடங்கினார்கள்.

ஆனந்தம் எங்கும் அலையோடியது. தனிமை வாட்டியது. போர் முரசு கொட்டியது. அமைதிக்கான இசை பரவியது. போதையே வாழ்க்கை என்றானது. புது லட்சிய கனவுகள் பிறந்தபடி இருந்தன. இந்தக் காலக்கட்டத்தில் தான் ஹிப்பிகள் தோன்றினார்கள். இந்தக் காலக்கட்டம் தான் ஹிப்பிகளை உருவாக்கியது.உலகப்புகழ்-புகைப்படம்787

எதிர் கலாச்சாரம்

உலகப்புகழ்-புகைப்படம்791
ஹிப்பிகளின் தினசரியை விற்கும் பெண்

ஹிப்பிகளை பொதுவாக அன்றிருந்த மைய கலாச்சார நீரோட்டத்திற்கு எதிரான எதிர் கலாச்சாரமென சொல்வார்கள். அன்றைய தாய் தந்தையரின் வாழ்க்கை முறை, அவர்களது கலாச்சார ஆன்மீக உணர்வுகள் இவற்றை வெறுத்து புதிய வாழ்க்கைமுறைக்குப் பயணப்பட விரும்பிய இளைஞர்களே ஹிப்பிகளாக தங்களைப் பிரகடனப்படுத்தி கொண்டார்கள். ராக் போன்ற வலிமையான இசையையும் கீழை நாட்டு இசை வாத்தியங்களையும் ரசிக்க ஆரம்பித்தார்கள். நீளமாக தலைமுடி வளர்த்தார்கள். தங்கள் பெற்றோர் முகம் சுளிக்கும்படி நாடோடித்தனமான உடைகளை அணிந்தார்கள். ஹிப்பிகள் சந்தித்து கொள்வதற்காகவே தனியிடங்கள் உருவாயின. சில இளைஞர்கள் கூட்டமாய் நாடோடி வாழ்க்கை வாழ தொடங்கினார்கள். மிக எளிமையான உடைமைகளோடு வாழ்ந்த அவர்கள் ஒரு ராக் இசை விழாவிற்காக மேற்கு எல்லைக்கு பயணப்படுவார்கள். பிறகு ஒரு போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்காக கிழக்கு எல்லைக்கு வருவார்கள். பெண்கள் ஆண்களுக்கு நிகரான உரிமைகளை எதிர்பார்த்தார்கள். ஹிப்பிகளால் உருவான பிரபலங்கள் மேலும் ஹிப்பித்தனத்தைப் பிரபலப்படுத்தினார்கள்.

அக்காலக்கட்டத்தில் எல்லா இளைஞர்களுமே இத்தகைய வாழ்க்கையில் இருந்தார்கள் என்றால் இல்லை. ஆனாலும் ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய மகனோ மகளோ ஹிப்பித்தனமாய் ஆகி விடக்கூடாது என பயப்படும்படியான சூழல் உருவாகி விட்டது.

ஹிப்பிகள் காலக்கட்டத்தில் தன் பதின்பருவத்தில் இருந்த எழுத்தாளர் பில் மான்கின் தன்னுடைய அனுபவத்தைச் சுவாரஸ்யமாக பதிவு செய்திருக்கிறார்.

அன்றைய பத்திரிக்கைகளும் ஊடகங்களும் தொடர்ச்சியாக ஹிப்பிகளைப் பற்றிய செய்திகளை வெளியிட்டு கொண்டிருந்தன. அவை பொதுவாக பெரிய செய்திகளாக இருக்காது. துணுக்குகளாக பெட்டி செய்திகளாக இடம் பெறும். ஹிப்பிகளைப் பற்றிய அதிர்ச்சியூட்டும் செய்திகள் முக்கியத்துவம் பெறும். அன்றைக்கு அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த இளைஞர்கள் பலரது கவனத்தை இத்தகைய செய்திகள் கவர்ந்தன. ஆனால் அவர்களும் அத்தகைய ஹிப்பித்தனமான வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் கார் பிடித்து சான் பிராசிஸ்கோ நகரத்திற்கோ அல்லது லாஸ் ஏஜெல்ஸ் நகரத்திற்கோ அல்லது நியூ யார்க் நகரத்திற்கோ போக வேண்டியது தான். ஆனால் அன்று பெற்றோருடன் வாழ்ந்து கொண்டிருந்த இளைஞர்களுக்கு அது சாத்தியமில்லாத விஷயமாக இருந்தது. அவர்கள் இன்னும் கடந்த காலத்திலே தாங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாய் நொந்து கொண்டிருந்தார்கள்.

நான் அட்லாண்டாவில் வசித்து கொண்டிருந்தேன். ஒரு நாள் ஒரு பத்திரிக்கையில் அட்லாண்டாவில் உள்ள ஒரு உணவு விடுதி பற்றி தகவல் வந்தது. அது ஹிப்பிகளின் ரகசிய சந்திப்பு இடம் என்று அந்தச் செய்தி துணுக்குச் சொன்னது. எனக்கு தாங்க முடியாத ஆச்சரியம். நானும் ஒரு நாள் அந்த உணவு விடுதிக்குப் போனேன். ஆனால் அங்கே ஹிப்பித்தனமாய் எதுவுமே இல்லை. எங்குமே ஒரு நீள தலைமுடி ஆண்ணைக் கூட பார்க்க முடியவில்லை. எதையோ ஆர்டர் கொடுத்து அதைச் சாப்பிட்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாக அலுப்புடன் அங்கே உட்கார்ந்திருந்து பிறகு ஏமாற்றத்துடன் வெளியே வந்தேன். வெளியே வந்தவுடன் என் கண்கள் சுற்றுமுற்றும் தேடின. ஒரு வேளை ஹிப்பிகள் இந்தத் தெருவில் எங்காவது ரகசியமாக சந்தித்து கொள்கிறார்களா என சிந்தித்தேன். எல்லா அட்லாண்டா தெருக்களைப் போலவே இருந்தது அந்தத் தெருவும்.

கிட்டத்தட்ட என் தேடலை நான் கைவிடலாமென நினைத்த தருணத்தில் ஒரு மின்னல் போல ஓர் ஆண் என்னைக் கடந்து சென்றார். அந்தக் காலக்கட்டத்தில் நான் நீளமாக தலைமுடி வைத்திருந்தேன். ஆனால் அந்த ஆணோ நம்ப முடியாத அளவு முதுகில் புரளும் அளவு கூந்தல் வைத்திருந்தார். நான் அவரைப் பார்த்து புன்னகைத்தேன். இரு விரல்களை உயர்த்தி காட்டினார். நானும் இரு விரல்களை உயர்த்தி காட்டினேன். ஒரு தலையசைப்போடு கடந்து சென்று விட்டார்.

எனக்கோ ஒரு ரகசிய அமைப்பில் சேர்ந்து விட்டாற் போல் உற்சாகம். ரகசிய போராளி போல் உணர்ந்தேன். எங்கள் உடையமைப்பும் தலைமுடியுமே இந்த அமைப்பின் உறுப்பினர்கள் நாங்கள் என்பதற்கான ஆதாரம்.

உலகப்புகழ்-புகைப்படம்788நகரத்திற்கு நடுவே ஒரு பூங்கா இருந்தது. அங்கே வார இறுதி நாட்களில் இசை விழாக்கள் நடக்கும். கூட்டம் கூட்டமாய் இளைஞர்கள் அங்கே குவிந்து இருப்பார்கள். பெரும்பாலும் அங்கே குவிவது என்னோடு பள்ளிக்கூடத்தில் படித்த ஏற்கெனவே அறிமுகமான இளைஞர்கள் தான். எல்லாருமே என்னைப் போல ஹிப்பிகளைச் சந்திக்க வந்தவர்கள் தான். இசை வாசிப்பதும் எங்களுக்கு அறிமுகமான உள்ளூர் குழுக்களாகவே இருப்பார்கள். ஆக அது ஓர் ஏமாற்றம் தான். சூரியன் மறையும் சமயம் எல்லாரும் எங்கள் வீட்டிற்குத் திரும்பி விடுவோம். திங்கட்கிழமை ஒவ்வொருவரும் தங்களுடைய பள்ளிக்கோ கல்லூரிக்கோ வேலைக்கோ போய் விடுவார்கள். வார இறுதி இசை விழாக்கள் தொடர்ந்தன. நீளமான மதிய பொழுதுகளில் அலுப்பினைத் தீர்ப்பதற்காகவாது இளைஞர்கள் குழுமி கொண்டே இருந்தார்கள். ஆனால் நாங்கள் எங்களை அறியாமலே ஹிப்பிகளாய் இருந்திருக்கிறோம் என அப்போது தெரியவில்லை.

ஒரு நாள் அப்படியொரு இசை விழாவில் உள்ளூர் இசைக் குழு ஒன்று வாசித்து கொண்டிருந்தது. அப்போது ஒரு வெள்ளை வேன் ஒன்று அங்கு வந்தது. வேன் கதவைத் திறந்து இறங்கியவர்கள் எல்லாருமே புதுமுகங்கள். எல்லாருமே மிக நீளமான தலைமுடியோடு இருந்தார்கள். இசை வாத்திய கருவிகளை இறக்க தொடங்கினார்கள். இரண்டாவது டிரம் வாத்தியம் இறங்கியதும் கூட்டத்தின் பார்வை அவர்களது பக்கம் திரும்பியது. உள்ளூர் குழு முடித்ததும் இவர்கள் தங்களுடைய கிடாரை சில நிமிடங்களில் டியூன் செய்து விட்டு வாசிக்க ஆரம்பித்தார்கள். இது வரை நாங்கள் கேட்டிராத பூளூஸ் ராக் இசை அது. ஜார்ஜியாவில் இருந்து வந்திருப்பதாய் அறிவித்த அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. எங்களுடைய ‘ஹிப்பி’ தாகம் தணிந்தது. அதே சமயம் மேலும் ஹிப்பி மீது மோகம் உண்டானது.

கலிபோர்னியா பயணம்

கலிபோர்னியாவிற்குப் பயணித்த புகைப்பட கலைஞர் டென்னிஸ் ஸ்டாக் ஹிப்பிகளின் உலகிற்குள் பிரவேசித்தார். அவர்கள் கூடுமிடம், வாழுமிடம், இசை விழாக்கள், கடற்கரை இடங்கள், ஆர்ப்பாட்டம் நடக்குமிடங்கள், கல்லூரிகள் என எல்லா இடங்களுக்கும் பயணித்தார். அவருடைய கேமரா அவசரமின்றி பொறுமையாக காத்திருந்து ஹிப்பி தருணங்களைப் பதிவு செய்ய ஆரம்பித்தது. கலிபோர்னியா பயணம் முடிந்ததும் டென்னிஸ் ஸ்டாக் தனது புகைப்படங்களை ‘கலிபோர்னியா பயணம்’ என்கிற தலைப்பில் புகைப்பட நூலாக வெளியிட்டார். அந்த நூலை விடுதலைக்கான பாடல் என வர்ணித்தார்.

Dennis-Stock
புகைப்பட கலைஞர் டென்னிஸ் ஸ்டாக்

டென்னிஸ் தனது நூலைக் குறித்து சொல்லும் போது, “கலிபோர்னியாவில் எப்போதுமே ஒருவித அதிர்வினைப் பார்க்க முடியும். ஒவ்வொரு காலக்கட்டத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியோ ஆன்மீக தேடலோ எதுவாகினும் அது கலிபோர்னியாவில் முதலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி பிறகே உலகம் முழுக்க பரவும். இத்தகைய இடத்திலே புகைப்படக்காரனுக்கு சர்ரியலிச புகைப்படங்கள் வசப்படும்.”

“ஹிப்பிகள் இயக்கம் இரண்டு முக்கிய சிந்தாந்தங்களை வைத்திருக்கிறது. ஒன்று மற்றவர்களை பற்றி அக்கறைப்படுதல். மற்றொன்று சாகசங்களுக்கான சுவை. ஹிப்பிகளைப் பற்றிய எனது புகைப்படங்கள் மேம்பட்ட வாழ்க்கைக் குறித்த தேடல். அவர்களது சாதனைகள் என்னை ஈர்க்கின்றன. அவர்களுடைய உள்ளுணர்வு எதிர் கலாச்சாரமாக இருக்கிறது. மனிதனின் அடிப்படை இயல்புகளை மீட்டெடுக்க அவர்கள் முனைகிறார்கள். நாம் ஒவ்வொருவரும் நம் பதின்பருவத்தில் ஒரு போராளி குணத்தோடு சுற்றியிருப்போம். ஒரு பார்வையில் ஹிப்பி இயக்கத்தினைப் பதின்பருவத்து போராளி குணத்திற்குத் திரும்புதல் என்றும் சொல்லலாம்.”

டென்னிஸின் நூலில் இருந்த புகைப்படங்களிலே அதிக தாக்கமேற்படுத்தும் புகைப்படமாக கொண்டாடப்பட்டது அந்தப் பெயர் தெரியாத இளைஞியின் மேடை நடனம் தான். 1968ம் ஆண்டு வெனீஸ் கடற்கரையில் நடந்த ராக் இசை விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. அவளுடைய உடல் மொழி ஹிப்பிகளைப் பற்றி ஒற்றை பதிவில் வெளிப்படுத்தி விடுகிறது. இந்தப் புகைப்படம் ‘எல்லைகள் இல்லாத பத்திரிக்கையாளர்கள்’ இருபத்தி ஐந்தாவது வருட விழா புத்தகத்தின் அட்டைப்படமாக அலங்கரித்தது. இன்று வரை உலகப்புகழ் புகைப்படங்களின் வரிசையில் தவறாமல் இடம்பெறுகிறது.

கரைந்து போன ஹிப்பிகள்

70-களின் துவக்கத்தில் ஹிப்பிகள் கரைய தொடங்கி விட்டார்கள். ‘பொருள் சார்ந்த வாழ்வு மீதும் பணம் மீதும் நாட்டம் இல்லாதவர்களாய் தங்களைக் காட்டி கொண்ட ஹிப்பிகள் அமெரிக்காவின் முதலாளித்துவத்திடம் சரண்டைந்தார்கள்,’ என ஜோசப் ஹுத் மற்றும் அண்டூரு போட்டர் தாங்கள் இணைந்து எழுதிய ‘விற்பனையான போராளிகள்’ என்கிற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்கள்.

உலகப்புகழ்-புகைப்படம்792ஹிப்பிகள் ஏற்படுத்திய தாக்கம் அவர்களது காலக்கட்டத்திற்குப் பிறகு வந்த கலை, இலக்கியம், இசை, பண்பாடு, கலாச்சாரம் என எல்லாவற்றிலும் பிரதிபலித்தது. அவர்களுடைய தாக்கத்தினைச் சர்வதேச சமூகத்தின் மைய நீரோட்டம் உள்ளிழுத்து கொண்டது; சிலவற்றை தன்னுடைய இயல்பாக மாற்றி கொண்டது. ஹிப்பிகளாக இருந்து பிறகு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய பலர் பல துறைகளில் தங்களுடைய சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார்கள். ஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸைக் குறிப்பிட்டு சொல்லலாம். அதிகாரத்திற்கு எதிராக இன்று இயங்கும் ஹேக்கர்கள், வணிகரீதியான மென்பொருட்களுக்கு எதிராக (இலவச) கட்டற்ற மென்பொருட்களை உருவாக்கும் மென்பொருள் வல்லுனர்கள் எல்லாம் ஹிப்பிகளின் தாக்கத்தால் உண்டானவர்களே என்று சொல்கிறார்கள்.

ஹிப்பிகளின் நகரமாய் இருந்த கலிபோர்னியா இன்று சில்லிகான் பள்ளத்தாக்கினைத் தன்னகத்தில் வைத்திருக்கிறது. கூகுளும் பேஸ்புக்கும் தங்கள் தலைமையகத்தை இங்குத் தான் வைத்திருக்கிறார்கள்.

ஒன்று கூடுங்கள்

காதல் என்பது நாம் பாடும் பாடல்.
பயம் என்பது நாம் எப்படி இறந்தோம் என்பதே.
நீங்கள் மலைகளைச் சுருள வைக்கலாம்;
தேவ தூதர்களை அழ வைக்கலாம்.
ஆனால்
பறவை ஏன் பறக்கிறது?
உங்களுக்குத் தெரியாது அது!

வாருங்கள் எல்லாரும்!
மற்றவர்களை நோக்கி புன்னகையுங்கள்!
ஒன்று கூடுங்கள்!
எல்லாரிடத்தும் அன்பு கொள்ளுங்கள்! இப்போதே!

சிலர் வருவார்!
சிலர் போவார்!
நம்மை இங்கு விட்டு சென்றவன் திரும்புகையில்
உங்கள் பயணமும் முடியும்.
ஒற்றைப்புல்லினால் மறைந்து போகும் சூரிய ஒளி.
அத்தகைய தருணமே நாம்.

வாருங்கள் எல்லாரும்!
மற்றவர்களை நோக்கி புன்னகையுங்கள்!
ஒன்று கூடுங்கள்!
எல்லாரிடத்தும் அன்பு கொள்ளுங்கள்! இப்போதே!

– ‘ஒன்று கூடுங்கள்’ பாடல். (எழுதியவர்: செட் பவர்ஸ்)

நன்றி

புகைப்பட கலைஞர் டென்னிஸ் ஸ்டாக்கின் புகைப்படம் தவிர மற்ற அனைத்தும் டென்னிஸ் எடுத்த புகைப்படங்களே. நியூ யார்க் டைம்ஸ் சதுக்க புகைப்படம் தவிர மற்ற அனைத்தும் அவருடைய ‘கலிபோர்னியா பயணம்’ தொகுப்பில் இருந்து.

உலகப் புகழ் பெற்ற புகைப்படங்களின் பின்னணியில் உள்ள உணர்ச்சிமிகு உண்மை கதைகள் அனைத்தையும் வாசியுங்கள்.


Comments
3 responses to “உலகப்புகழ் புகைப்படங்களின் கதை – ஹிப்பி”
 1. சாசலின் Avatar
  சாசலின்

  அருமையான பதிவு.

 2. NAVEENKUMAR. v Avatar
  NAVEENKUMAR. v

  அருமையான பதிவு சாய்ராம் …தகவலுக்கும் பகிர்தமைக்கும் மிக்க நன்றி …நல்வாழ்த்துகள்

 3. அருமை… எழுதிய விதமும், கவிதையும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.