அவளும் அவளைப் பின்தொடரும் மிருகமும்
தினமும் நடக்கும் விஷயம் தான்.
தன் அறையிலிருந்து வெளியே வந்தவுடன்
அவளை அந்த மிருகம் பின்தொடரும்.
அரூபமானது! வக்கிரமானது! நிழல் போல!
சூடான மூச்சுக்காற்றினைப் பின்கழுத்தில் உணர்வாள்.
பின்புறத்தில் அதன் பார்வையின் சூடு எரிச்சலூற்றும்!
பழமொன்று கெட்டு போனதைப் போன்ற
அதன் வாடை எங்கும் நிரம்பி இருக்கும்!
நெருக்கடியான ஜனக் கூட்டத்தில் காதில்
எதாவது முணுமுணுத்து கொண்டே இருக்கும்.
ஆட்களற்ற தார் சாலையில் அவள் நடக்கும் போது
உயர்ந்து எழும்பி இருக்கும் கட்டிடங்களின்
ஜன்னல்கள் அதன் கண்களாய் மாறியிருக்கும்.
காலங்கள் கடந்தாலும் அது அன்னியமாகவே இருக்கிறது.
அவளுடைய பதட்டம் குறையவே இல்லை.
இந்த நிலை என்று மாறும்…?