புகையால் ஆன பாதை

ஓடி கொண்டிருக்கிறேன்
தூரத்தில்
மரங்களால் ஆன குகைக்குள்
தார் சாலையில்
பயணிக்கும்
பேருந்தினை நோக்கி.

என் கணவர் விழித்து கொள்ளலாம்.
குழந்தை அழது அவர் விழித்து கொள்ளக்கூடும்.
பக்கத்து இருக்கையில் இருப்பவர்கள்
நான் இல்லாததை அவருக்குச் சொல்லக்கூடும்.
இதோ என்னை நோக்கி
திரும்பும் என நினைத்தபடி
கரும்புகையை நோக்கி
ஓடுகிறேன்.

பதின்பருவத்திற்குப் பிறகு
இப்படி ஓடியதாய்
எனக்கு நினைவே இல்லை.

நின்றால்
அப்படியே ஒடிந்து விடுவேன்
என்பதாய்
அத்தனை சக்தியையும்
விரயமாக்கி
ஓடி கொண்டிருக்கிறேன்.

என்னையும்
புகையினையும்
மறந்து
சிறிதாகி கொண்டே
இதோ மறைந்து விட
போகிறது
அந்த வாகனம்.