சட்டைகள் யாரைத் தேர்ந்தெடுக்கும்?

ஷோரூமில் பார்ப்பதற்கும்
வாங்கி இரண்டொரு நாள் கழித்து பார்ப்பதற்கும்
சட்டைகள் வித்தியாசமாக தான்
காட்சியளிக்கின்றன.

பொருந்துமென நினைத்தது
பொருந்தாமல் போவதும்
பிடிக்காத சட்டை
பிறகு பிடித்தமானதாக மாறுவதுமென
முதல் பார்வை சரியானதாகவே இருப்பதில்லை.

இந்த வகை தான் பிடிக்கும் என்கிற தீர்மானங்கள்
நிலைப்பதும் இல்லை.

ஒரு பொழுதை தன் முதுகில்
ஏற்றி செல்லும் வலிமையுண்டு
சட்டைகளுக்கு.
அது எந்தச் சட்டை என அறியும்
நுட்பமில்லை மனிதர்களுக்கு.

ஒருவேளை சட்டைகளுக்கு…?