
பை முழுக்க சாவிகள்
மதுக்கடைகள் நிரம்பிய அந்தச் சாலைக்கு
நீங்கள் என்றாவது போயிருந்தால்
அவனைப் பார்த்திருப்பீர்கள்.
புழுதி பறக்கும் சாலையோரம்
தன் பை முழுக்க சாவிகளோடு
ஒன்றுக்கொன்று பேசும் உலோக சப்தத்தோடு
தன் வாழ்வைச் சுமையென சுமந்து
நடந்து கொண்டிருப்பான்.
அரிதாக அவன் உட்கார்ந்து இருக்கும் போது
எதேனும் சாவியை உருவாக்கி கொண்டிருப்பான்.
அல்லது துடைத்து கொண்டிருப்பான்.
அல்லது அப்படியாக பாவனை செய்து கொண்டிருப்பான்.
அவனிடம் யாரும் சாவி வாங்கியதில்லை.
தொலைந்து போன சாவிக்கு மாற்று ஒன்றை
உருவாக்க கேட்டதில்லை.
என்றாலும் சாவிகளுடன் தான்
அவன் வாழ்க்கை.
மழை பொழியும் நாள் ஒன்றில்
மரத்திற்குக் கீழே
அவன் குந்தி அமர்ந்திருக்கும் காட்சியினைக் கண்டால்
அவன் யாருக்கோ காத்திருக்கிறான் என தோன்றும்.
சாவிகளை ஒப்படைக்க
காலம் காலமாக அவன் காத்திருக்கிறான் என
நினைப்பீர்கள்.
மழை நின்ற பிறகு
அவன் தன்னை உதறி கொண்டு கிளம்புவான்.
அவன் வெறும் பிம்பம் தானா?
நம் பிரதிபலிப்பா?
மனம் கட்டமைத்த கற்பனை உருவமா?
தரையெல்லாம் உங்கள் சிந்தனைகள் ஓட
அவற்றை மிதித்தபடி
உலோக சம்பாஷணைச் சத்தத்தோடு கடந்து போவான்
பை முழுக்க சாவிகளோடு.
நன்றி:
ஓவியம் – Persistence of Memory – Salvador Dali
தங்கள்கவிதையைப் படிக்கப் படிக்க
என் கண் முன் அந்தச் சாவிக் காரன்
உலாவத் துவங்கி விட்டான்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
இதே போல் இங்கே ஊரில் ஒருவன் பேனாவோடு…