பிரபஞ்சம் நானே

காற்றில் சலசலக்கும் மரம்
சலசலப்பை உண்டாக்குகிறது
என்னுள்.
இலைகளின் மீட்டலை
உணர்கிறேன்
நரம்புகளில்.
காம்புகள் வளைவது
சப்திக்கிறது
என் எலும்புகள் ஊடாக.
எறும்புகளின் காலடிகளை
முதுகில் சுமக்கிறேன்.
சருகுகளை
ஆனந்தமாய்
உதிர்க்கிறேன்.
கவிழ்ந்த பூக்களின்
மகரந்தங்களோடு
காற்றில்
பரவுகிறது எனது விந்தணுக்களும்.
இது வெறுமையை உணர்ந்த கணம்;
கடவுளைக் கண்ட கணம்;
என் ஆதியை மீள்தொட்ட கணம்.
பிரபஞ்சம் நானே!