கண்ணாடி ரசமெல்லாம் வழிந்தோடி விட்டது

கண்ணாடி ரசமெல்லாம் வழிந்தோடி விட்டது

நீங்கள் மேற்கொண்ட எதோ ஒரு தொலைதூர பிரயாணத்தில்
சந்தேக வியாதி உங்களைத் தொற்றி கொண்டது.
உடலை உருக்கி விட்டதென சொல்கிறார்கள் எல்லாரும்.
நடை தள்ளாடுகிறது.
மயங்கி விழுகிறீர்கள் ஒருநாள்.

மருத்துவமனையில் டாக்டர்கள் எல்லாரும் வேலையாக இருக்கிறார்கள்.
உடலெங்கும் விஷம் பரவி விட்டதென சொல்லி செல்கிறாள்
ஒரு நர்ஸ்.
பிழைக்க முடியுமென நம்புகிறீர்கள்.
எளிய காரியத்தைக் கடினமாக்கும் மருத்துவமனை மீது கோபம்.
உங்களை முக்கியமற்றவனாய் பார்க்கும் மருத்துவர்கள் மீது
அதிருப்தி.
சாவிற்கான முன்னேற்பாடுகளைக் கவனிக்க தொடங்குகிறார்கள்
உங்கள் சொந்தங்கள்.
பிழைத்து காட்டினால் தான்
இவர்களுக்குப் புரியும்.
உங்களது தலைமுடியாய் நீவி நீவி பார்க்கிறீர்கள்
ஒவ்வொன்றாய்.
எங்கே அது ஒளிந்து இருக்கிறது?
கண்ணாடி ரசம் வழியும் வரை
தேடல் தொடர்கிறது.

நீண்ட நேரத்திற்குப் பிறகு
ஓர் இளம் டாக்டர் உங்களை நோக்கி வருகிறான்.
மேலோட்டமாக சோதித்து
உதடுகளைப் பிதுக்கி
தலையை ஆட்டி விட்டு விலகுகிறான்.

பிழைத்து காட்டினால் தான் இவர்களுக்குப் புரியும்.
இந்த நோய் உங்களைக் கொன்று விடுமென நீங்கள் நம்பவே இல்லை.
மனதைக் குவித்து தேடுகிறீர்கள்.
கண்ணாடி ரசமெல்லாம் வழிந்தோடி விட்டது.

நன்றி:
ஓவியம்: Doubt by David Fox.