ஒவ்வொரு கொலைக்கும் காரணம் வேண்டும்

உனது கழுத்தினை அழுத்தி
நீ மூச்சு திணறி
இறந்து போவதைப் பார்க்க போகிறேன்.

உன்னோடு எப்போதும் இருக்கும்
அந்தச் சுகந்தம்
நீ இறந்த பிறகு எவ்வளவு நிமிடங்கள் நீடிக்கும்?

தேகத்தில் தேன் ஊற்றினாற் போல் இருக்கும்
அந்த ஜொலிப்பு
விளக்கு அணைவது போல் சட்டென அணையுமா?

குத்திட்ட கண்களைப் பார்ப்பதில்
இனி தயக்கமோ குற்றவுணர்வோ இருக்க போவதில்லை.
உதடுகளைக் கவ்வினாலும்
தடுக்க முடியாது உன்னால்.

இத்தனை வெறுப்பிற்கும் பெருங்காரணம்
ஒன்று நிச்சயம் இருக்க வேண்டும்.
அப்படி ஒரு காரணத்தைத் தேடி கொண்டு இருக்கிறேன்.
அது வரை உயிரோடு இருந்து விட்டு போ!