உன் கண்களில் தெரியும் என் பிம்பம்

என்னைச் சந்திக்கும் கண்களில்
எல்லாம் தேடுகிறேன் எனது பிம்பத்தை.
அக்கண்களின்
ஓர் அலட்சிய சுழிப்போ
துள்ளலோ
அமைதியோ
பதட்டமோ
எனக்கான இடம் என்ன என்பதைச் சொல்கிறது.
ஒரு வினாடி தான் எனினும்
அக்கண்கள் சொன்ன வார்த்தைகளை
உருட்டி கொண்டே இருக்கிறேன்
அது என்னை விட பெரிதாகும் வரை.
பெரிதான பின்பு
அது ஆயிரம் புனைவுகளை
தன்னுள் வைத்து இருக்கிறது.
ஒவ்வொரு புனைவும்
சுகம் துக்கம் பயம் காமம் சலிப்பு என
எவ்வளவோ உணர்வுகளைப் பொழிகிறது.
ஒவ்வொரு உணர்விலும்
பித்தன் போல
திளைக்கிறேன்
என்னைக் கடந்து போகும் நிழல்களை உணராமல்.