மனிதர்கள் – திருமணம் வேண்டாம்

இந்த ரோடு தானா? இந்தக் குறுக்கு சந்தில் தான் அவளது அலுவலகம் இருக்கிறதா? நான் காரினைத் திருப்பலாமா வேண்டாமா என்கிற குழப்பத்தில் இருந்த போது, அவள் சாலையில் நடந்து வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவளைப் பார்த்ததும் உற்சாகமாகி வெளியே எட்டி பார்த்து கையசைத்தேன். அவள் முதலில் கவனிக்கவில்லை. பிறகு தலையை லேசாக ஆட்டி புன்னகைத்தாள். அந்தப் புன்னகை அப்படியே இருக்கிறது. இடையில் பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டதெனினும் அவளை நேற்று தான் பார்த்தது போல் இருக்கிறது.

மாறாத அதிகாரமிடுக்குடன் அவளது அலுவலக வாயில் வரை நடந்து போய் கார் எங்கே நிறுத்த வேண்டும் என்று சைகை காட்டினாள். நான் காரினை நிறுத்தி விட்டு வெளியே வரும்வரை கண்களால் என்னை எடை போட்டு கொண்டிருந்தாள்.

“என்ன எப்படி இருக்க?” என்றேன். அந்த ‘என்ன’ வழக்கமாய் ‘டி’யில் முடியும். பத்து வருடங்கள் கழித்து இப்போது அப்படி அழைக்க தயங்கி மென்று முழுங்கினேன்.

கண்கள் உற்று பார்த்து இருக்க, புன்முறுவலுடன், “வாடா, உள்ள வாடா,” என்று சொல்லி விட்டு அலுவலகத்திற்குள் நுழைந்தாள். அது பெரிய அலுவலகம் தான். ஆனால் என்னமோ எலிவளை போல குறுக்கி வளைத்து பாதையையும் அறைகளையும் கட்டியிருப்பது போல எனக்குத் தோன்றியது. அதோடு வாசலில் காவல்காரர் முதல் உள்ளே ரிஷப்சன் பெண் வரை என்னைக் கவனமாய் பார்ப்பது போல பிரமை.

நிலத்தடி தளத்தில் படிக்கட்டுகள் இறங்குமிடத்தில் இருந்தது அவளது கேபின். ஒரு நபர் மட்டுமே பொருந்தக்கூடிய கேபின். கண்ணாடி தடுப்புகளைத் தாண்டி வரிசையாய் தூரத்தில் தெரிந்த கேபின்கள் அவளுடையதை விட சிறியவைகளாக இருந்தன. அந்தப் பக்கம் இருக்கும் கேபின்களுக்கு எல்லாம் இவள் தான் மேலாளர் என சொல்லியிருக்கிறாள்.

தன் கேபினுள் சுழலும் நாற்காலியில் அவள் அமர்ந்தாள். ஒரு சேரினைப் பக்கத்தில் இருந்து இழுத்து அவளது கேபின் வாசலில் பாதி உள்ளே பாதி வெளியே என உட்கார்ந்தேன். இவ்வளவு நேரம் இல்லாத ஒரு சங்கடம் காலடியில் குறுகுறுத்தது.

ஒரு பென்சிலை எடுத்து விரல்களுக்கு இடையே வைத்தபடி அதன் நுனியை வாயில் வைத்து புருவங்களை உயர்த்தி குறும்பாய் முறைத்தாள்.

“எப்படி இருக்கிற? வேலையெல்லாம் எப்படி போகுது? வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?” என்றேன். கடகடவென இப்படி கேள்விகளை எழுப்பி விட்டால் உரையாடல் தானாக நகர தொடங்கி விடும் என்பது தான் ஐடியா. அவள் என்னைப் பற்றி நன்றாக அறிந்தவள் ஆயிற்றே. எனது பதற்றத்தைப் பார்த்து சிரித்தாள்.

“எல்லாம் நல்லா போகுது. ஐயா எப்படி இருக்கீங்க? பெரிய பிஸினஸ்மேன் ஆகிட்டீங்கன்னு கேள்விபட்டேன்.”

இருவரும் ஒரே நகரத்தில் தான் வாழ்கிறோம். ஆனாலும் கிட்டதட்ட பத்து வருடங்களாய் சந்தித்து கொள்ளவில்லை. எப்போதாவது நான் போனில் பேசுவேன். அவ்வளவு தான். இன்று காலை அவளாக போனில் பேசினாள். வழக்கமான விசாரிப்பிற்குப் பின் அலுவலகத்திற்கு அழைத்தாள். என்றும் அழைக்காதவள் கூப்பிட்டு விட்டாளே என்பதால் மற்ற வேலைகளை ஒதுக்கி விட்டு உடனே கிளம்பி வந்து விட்டேன். இப்போது அந்தப் பத்து வருட பிரிவிற்குப் பிறகான சந்திப்பு சங்கடப்படுத்துகிறது.

அவள் எப்போதுமே நேராக பேசுபவள். சடசடவென வார்த்தைகள் வந்து விழும். கோபமும் அன்பும் அதே மாதிரி தான். எனது குடும்பத்தைப் பற்றி விசாரித்தாள். தொழில் பற்றி கேட்டாள். குழந்தைகளின் படத்தைச் செல்போனில் காட்டினேன். என் மனைவியைப் பற்றி அதிகம் கேட்கவில்லை. நானும் அதிகமாய் மனைவி பற்றி சொல்லவில்லை.

“உன்னை மாதிரி கல்யாணம் பண்ணிக்காமலே இருந்திருக்கலாம்,” என்றேன்.

“ஏன்?”

“வீட்டு வேலையெல்லாம் செய்ய முடியல,” என்றேன் பொய் சலிப்புடன்.

“அட போடா நான் வீட்டு வேலை செய்யறதில்லைன்னு யாரு சொன்னா?”

“உங்க அம்மா தான் இருக்காங்களே.”

“அம்மா முன்ன மாதிரி இல்ல. ஹார்ட் பிராப்ளம் இருக்கு. கிட்டத்தட்ட படுத்த படுக்கை தான். அப்பா இன்னொரு பக்கம் உடம்பு சரியில்லாம இருக்காரு. இவங்களைக் கவனிச்சுக்கவே நேரம் சரியா இருக்கு.”

“அக்கா?”

“அவ ஹஸ்பெண்ட்டோட பக்கத்து தெருவுல இருக்கா. அவளையும் ரொம்ப கஷ்டபடுத்த முடியாது. ரெண்டு குழந்தைகளையும் பார்த்துக்கவே நேரம் சரியா இருக்கு அவளுக்கு.”

“அப்ப வீட்ல சமையல் எல்லாம் யார் செய்யறாங்க?”

“எல்லாம் நான் தான். காலையில் அஞ்சு மணிக்கு எழுந்திருச்சு ரெண்டு வேளைக்கும் சேர்த்து சமைச்சு வைச்சுட்டு டிரெயின் பிடிச்சு வந்து இன்னொரு பஸ் பிடிச்சு ஒன்பது மணிக்கு ஆபிஸ் வந்துடுவேன்.”

“சாயந்திரம்?”

“இங்க இருந்து அஞ்சரை மணிக்கு கிளம்பி பஸ் டிரெயின் ஜர்னியெல்லாம் முடிச்சு வீட்டுக்கு போக ஏழு மணிக்கு மேலாகிடும். அப்புறம் சமையல் வேலை முடிச்சவுடனே ஆள் அடிச்சு போட்டாப்ல சோர்வுல தூங்க வேண்டியது தான்.”

“வீக் எண்ட்?”

“துணி துவைக்கிறதுல தொடங்கி ஹாஸ்பிட்டல் போறது வரைக்கும் சனி ஞாயிறு கிழமை பிஸியாகிடும். எக்ஸ்டிரா டைம் கிடைச்சா தூங்கினா போதும்னு இருக்கும். அதுக்கு மேலே டைம் இருந்தா அக்கா வீட்டுக்குப் போய் கொஞ்சம் நேரம் இருப்பேன்.”

“பிரெண்ட்ஸ் யாரையும் பார்க்க மாட்டீயா?”

“எங்கடா! வீடு, ஆபிஸ், இதுக்கே நேரம் போதலை.”

“நீ ஏன் அவ்வளவு தூரத்துல வீட்ல இருந்து வர்ற. இங்க ஆபிஸ் பக்கத்துல வீடு பார்த்துக்க வேண்டியது தானே?”

“இங்க எல்லாம் வாடகை எவ்வளவு தெரியுமா? நான் சம்பாதிக்கிறதையெல்லாம் வாடகைக்கே அழ வேண்டியதிருக்கும்.”

“நல்லா தானே சம்பாதிக்கிறே?” என்றேன். என் குரலில் வேதனை படிந்தது.

“நல்லா தான் சம்பாதிக்கிறேன். ஆனா சொந்த வீட்டை விட்டுட்டு இங்க வந்து தங்குற அளவு இன்னும் பணக்காரி ஆகிடலை.”

அலுவலகத்தில் பணிபுரியும் மற்றொரு அள் அங்கு வந்தான். இருவரும் எதோ அலுவல் சம்பந்தமாக பேசினார்கள்.

முதல் பார்வையில் அவள் பத்து வருடங்களாக மாறவே இல்லை என்பது போல இருந்தாலும் இப்போது கவனிக்கும் போது அவளது தலைமுடியில் ஆங்காங்கே நரை இருப்பது சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது. எப்போதும் போலவே அந்த டைட்டான சூடிதார் தான் இன்னும் அணிகிறாள். அனாயசமாக கழுத்தில் எப்போதும் போலவே துப்பட்டா சுற்றி இருக்கிறது. இன்னும் அதே ஸ்டைல் கைப்பை தான் வைத்து இருக்கிறாளா என்று கண்களால் துழாவினேன். கம்ப்யூட்டர் மேஜையோரம் கிடந்த கைப்பை அதே ஸ்டைலிலானது தான். ஆனால் இப்போது சற்று விலையுயர்ந்த கைப்பையாக இருக்கிறது. ஆடைகளில் எதுவும் வித்தியாசமில்லை எனினும் எதோ அவளிடத்து மிஸ் ஆவது போல ஒரு உணர்வு. உடம்பு சற்றே சுருங்கி விட்டாற் போல பிரமை. அவள் தேகத்தில் மினுமினுப்பு குறைந்து விட்டது போல தோன்றியது.

அலுவலக ஆள் விலகி போனதற்குப் பிறகு அவள் கம்ப்யூட்டரை ஆன் செய்து ஒரு மின்னஞ்சலைத் தட்டச்சு செய்ய தொடங்கினாள். ஒரு விரலை மட்டும் என்னிடத்தே நீட்டி காத்திருக்கும்படி சைகை காட்டினாள். நான் காத்திருந்தேன். மின்னஞ்சல் பணியை முடித்ததும் என் பக்கம் சுழல் நாற்காலி திரும்பியது.

“கிழவியாயிட்ட நீ,” என்றேன். சொன்னவுடனே இப்படிச் சொல்லியிருக்க கூடாதென மனதிற்குள் என்னை நானே கடிந்து கொண்டேன்.

“நீ மட்டும் குமரனாவே இருக்கீயா?”

“ஆபிஸ்ல மத்தவங்ககிட்ட எப்படி பழகுவ?”

“வழக்கம் போல தான். வள் வள் தான். யாரும் நம்மகிட்ட பேசவே பயப்படுவாங்க.”

“இன்னும் வள் வள் தானா” என்று அவளைப் போலவே முகத்தைச் சுருக்கி காட்டினேன். அவள் சிரித்தப்படி காலால் செல்லமாய் என்னை இடித்தாள். படியில் ஏறி கொண்டிருந்தவர்கள் எங்களை ஆச்சரியமாய் பார்த்து கொண்டே போனார்கள். எப்போதும் சிடுசிடுவென இருக்கிறவ இன்னிக்கு யாரோ புது ஆள்கிட்ட சிரிச்சுட்டே பேசிட்டு இருக்காளே அப்படின்னு நினைக்கிறாங்களோ என்னமோ.

“இன்னும் நீ கல்யாணம் செய்யாதது பத்தி வீட்ல எதுவும் சொல்றதில்லையா?”

“யாரும் அதைப் பத்தி பேச கூடாதுன்னு ஸ்டிரிக்டா சொல்லிட்டேன்.”

“குட்,” என்றேன். சிறிது நேர பேச்சிற்குப் பின் அவளிடமிருந்து விடைப் பெற்று கிளம்பினேன். என் அலுவலகம் திரும்பிய பிறகு, ‘எனக்காக நேரம் ஒதுக்கியதற்கு நன்றி,’ என்று எஸ்எம்எஸ் அனுப்பினேன்.

‘டேய் ரொம்ப பண்ணாத,’ என்று பதில் வந்தது. ஏனோ அவளை நினைக்கும் போது சோகமாக இருந்தது.

“சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ,” என்று மெசேஜ் அனுப்பினேன். அவளிடம் இருந்து பதில் வரவில்லை.

Image: renjith krishnan / FreeDigitalPhotos.net

மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.


Comments
One response to “மனிதர்கள் – திருமணம் வேண்டாம்”
  1. Rajagopal Avatar
    Rajagopal

    nice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.